Press "Enter" to skip to content

ஐடா சூறாவளி: இந்திய வம்சாவளியினர் பாதிப்புகளில் இருந்து மீள முடியாமல் தவிப்பு – கள நிலவரம்

  • சலீம் ரிஸ்வி
  • பி பி சி ஹிந்திக்காக, நியூயார்க்கிலிருந்து

பட மூலாதாரம், SALIM RIZVI/BBC

அமெரிக்காவில் கடந்த வாரம் வீசிய ஐடா சூறாவளி மற்றும் அடைமழை (கனமழை) நியூயார்க், நியூ ஜெர்சி ஆகிய மாகாணங்களின் பல பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தின.

சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கால் இந்த இரு மாகாணங்களில் குறைந்தபட்சம் 40 பேர் இறந்துள்ளனர்.

நியூயார்க்கில் 13 பேரும் நியூ ஜெர்சியில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர். நான்கு பேரைக் காணவில்லை.

நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் இந்திய வம்சாவளியினர் பலர் வாழ்கின்றனர். சூறாவளி தாக்கத்தால் அவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் புதன்கிழமை, இரவு சுமார் 8 மணியளவில், நியூயார்க் மற்றும் நியூஜெர்சியில் ஐடா சூறாவளி தாக்கத்தால் பலத்த மழை தொடங்கியது. இதனால், இரண்டு மணி நேரத்திற்குள், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல இடங்களில், நான்கு முதல் ஆறு அடி வரை தண்ணீர் நிரம்பியது.

நீரின் ஓட்டம் மிக வேகமாக இருந்ததால் வாகனங்களுடன் மக்கள் அடித்துச் செல்லப்பட்டனர். பல நகரங்களில் வெள்ள நீரில் மூழ்கிய மக்களின் உயிர்களைக் காவல்துறை மற்றும் மீட்புக் குழுக்கள் காப்பாற்றின. ஆனால் பலர் வெள்ளத்தில் சிக்கி இறந்தனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 56 வயதான சுனந்தா உபாத்யாய, கில் லேனில் நடந்து சென்றபோது வெள்ள நீரில் மூழ்கி இறந்ததாக நியூஜெர்சியில் உள்ள உட்பிரிட்ஜ் காவல்துறை தெரிவிக்கிறது. சுனந்தா உபாத்யாய புதன்கிழமை மாலை நெடு நேரம் வரை வேலை முடிந்து வீடு திரும்பாததால், அவரது கணவர், காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

தனது தேர் வெள்ளத்தில் சிக்கி விட்டதால், அதை அப்படியே விடுத்து, நடந்தே வீடு வர முயன்றதாகவும் வெள்ளப் பெருக்கு மிக அதிகமானதால் அதில் சிக்கி அவர் உயிரிழந்தார் என்றும் காவல்துறை தெரிவிக்கிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுக்கள் தேடியபோது, சுனந்தா உபாத்யாயவின் உடல் காலை 6.30 மணியளவில் ஐஸ்லினில் உள்ள கூப்பர் அவென்யூ பூங்காவிற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஐடா சூறாவளி

பட மூலாதாரம், SALIM RIZVI/BBC

இதேபோல், 31 வயதான தனுஷ் ரெட்டி, எடிசனில் வசிப்பவர், தெற்கு ப்ளேன்ஃபீல்ட் பகுதியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார். பல மைல்களுக்கு அப்பால் உள்ள பிஸ்கடவேயில் அவரது சடலத்தைக் காவல் துறையினர் மீட்டனர்.

தனுஷ் ரெட்டியும் அவரது கூட்டாளிகளும் தண்ணீரில் மூடிய காரில் இருந்து வெளியேற முயன்றபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவரது தோழர் வெள்ளத்தில் இருந்து காவல் துறையால் காப்பாற்றப்பட்டார். இதுவரை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று பேரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.

காணாமல் போன இரண்டு இந்திய வம்சாவளி இளைஞர்களைத் தேட, மீட்புக் குழுக்கள் இன்னும் முயற்சித்து வருகின்றன. பசேயிக்கில், 18 வயதான நிதி ராணா மற்றும் 21 வயது ஆயுஷ் ராணா ஆகியோர் புதன்கிழமை மாலை காரில் வெள்ளத்தில் சிக்கி பலமான நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டனர்.

பத்துக்கும் மேற்பட்ட தேடல் படகுகளுடன் மாகாணக் காவல் துறையின் விமானக் குழுக்களும் இவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பசேயிக் மேயர் ஹெக்டர் லோரா ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனவர்களைத் தேடும் பணி

ஐடா சூறாவளி

பட மூலாதாரம், Getty Images

ராணா குடும்பத்தினர் இவர்களைத் தேட சுவரொட்டிகளை ஆங்காங்கு ஒட்டி வருகின்றனர். சமூக ஊடகங்களிலும் இவர்கள் குறித்துத் தகவல் தருமாறு கோரப்பட்டுள்ளது. தகவல் தெரிவிக்க ஒரு தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 46 வயது மாலதி காஞ்சி, கடைசியாக நெடுஞ்சாலை 22 ல் உள்ள சிம்னி ராக் சாலை அருகே வெள்ளத்தில் சிக்கினார், அதன் பிறகு அவரைக் காணவில்லை. மாலதி காஞ்சியைக் கண்டுபிடிக்க உதவுமாறு அவரது குடும்பத்தினர் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாகாணத்தில் பெய்துவரும் அடைமழை (கனமழை) மற்றும் வெள்ளம் காரணமாக 27 பேர் உயிரிழந்ததாகவும், நான்கு பேர் காணாமல் போயுள்ளதாகவும் நியூஜெர்சி ஆளுநர் ஃபில் மர்ஃபி தெரிவித்துள்ளார்.

“ஓரிண்டு மாதங்களில் பொதுவாகப் பெய்யும் மழை இரண்டு மூன்று மணி நேரத்தில் பெய்துள்ளது” என்று மர்ஃபி கூறுகிறார்.

வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், இவ்வளவு குறைந்த நேரத்தில் இப்படியொரு அடைமழை (கனமழை) பெய்யும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

பொருட்சேதங்களே அதிகம்

அமெரிக்க சூறாவளி ஐடா

பட மூலாதாரம், SALIM RIZVI/BBC

எடிசனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யோஷிதா பென், தனது கணவருடன் மளிகைக் கடைக்குச் சென்றதாகவும் ஆனால் தேர் பல அடி ஆழ நீரில் சிக்கியதாகவும், அவர்கள் தேரை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு செல்ல நேர்ந்ததாகவும் கூறுகிறார். அவர்களது தேர் முற்றிலும் வீணாகிவிட்டதாகவும் இனி புதிய தேர் வாங்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்திற்கு மேல், பல மக்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள பொருட்சேதங்களையும் சந்தித்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களும் பல அடி உயர வெள்ள நீரில் மூழ்கின. கீழ்த் தளத்தில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் நாசமாகின.

இந்திய அமெரிக்கர் ஜெயேஷ் மேத்தா நியூ ஜெர்சியின் மான்வில்லே பகுதியில் ஒரு விருந்து அரங்கு நடத்தி வருகிறார். ஐடா சூறாவளியின்போது பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அவரது விருந்து மண்டப கட்டடம் முதலில் வெள்ளத்தில் மூழ்கியது, பின்னர் தீப்பிடித்தது.

தனது இழப்பு குறித்து ஜெயேஷ் மேத்தா கூறுகையில், “தீ எப்படி தொடங்கியது என்பது குறித்து விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. எரிவாயு, மின்சாரம் மற்றும் நீர் ஆகியவற்றின் கலவையால் தீ தொடங்கியதாக தெரிகிறது. வெள்ளம் காரணமாக தீயணைப்புப் படையினரும் தாமதமாகவே வந்தனர். என்னுடைய மொத்த சொத்தும் எரிந்து சாம்பலாயிற்று. ஒரு கரண்டி கூட மிச்சமில்லை” என்று வேதனையுடன் கூறுகிறார்.

ஸேஃப்ரன் என்ற விருந்து மண்டபத்தின் உரிமையாளர் ஜெயேஷ் மேத்தா, “நாங்கள் பெரும் இழப்பைச் சந்தித்தோம். கோவிட்டுக்குப் பிறகு சூடு பிடிக்கத் தொடங்கியிருந்த வர்த்தகம் இப்போது மொத்தமாக நஷ்டமானது. கோவிட்டுக்குப் பிறகு, நிலைமை சீராகத் தொடங்கியது. அதிக முன்பதிவுகள் காரணமாக திருமண விழாக்கள் எங்கள் பேங்கட் ஹாலில் நடந்து கொண்டிருந்தன. பலரும் முன்பதிவு செய்திருந்தனர். இப்போது முன்பதிவு செய்தவர்கள் தங்கள் பணத்தைத் திரும்பக் கேட்கிறார்கள். அரசாங்க உதவி எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை. இப்போது வரை அரசுத் தரப்பிலிருந்து ஒரு அழைப்பு கூட வரவில்லை.” என்றும் கூறுகிறார்.

அமெரிக்க சூறாவளி ஐடா

பட மூலாதாரம், SALIM RIZVI/BBC

இதேபோல், ரோஷெல் பார்க் பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டோனி பரோட்டின் கட்டடத்தில் பல அடி உயரத்துக்கு மழை வெள்ளம் புகுந்தது. இதனால் அவர் பெரும் பொருள் இழப்பையும் சந்தித்தார். அவரது கட்டடத்தில் பல நிறுவனங்களின் அலுவலகங்களும் உள்ளன. கன மழை காரணமாக கட்டடத்தின் கீழ் தளம் வெள்ளத்தில் மூழ்கியதாக அவர் கூறுகிறார்.

டோனி பரோட் இது குறித்து மேலும் கூறும்போது, “மழை நின்றபோது, நான் எனது கட்டடத்தைப் பார்வையிடச் சென்றேன். கீழ் தளத்தில் உள்ள லாபி பகுதி மற்றும் அடித்தளத்தில் வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பொருட்களும் பல அடி உயர வெள்ள நீரில் மூழ்கிவிட்டன. எனது காரும் தண்ணீரால் சேதமடைந்தது. எனக்கு சுமார் பத்து லட்சம் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது,” என்றார்.

22 ஆண்டுகளில் இல்லாத மழை

அமெரிக்க சூறாவளி ஐடா

பட மூலாதாரம், SALIM RIZVI/BBC

எடிசனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாவேஷ் தவே, கட்டுமானத் தொழில் செய்கிறார். அவரது வீடு மற்றும் அதைச் சுற்றியுள்ள அவரது மற்ற கட்டங்கள், பல அடி உயர வெள்ள நீரில் மூழ்கின. இதனால், பல பொருட்கள் வீணாயின.

பாவேஷ் தவே, “நான் 22 வருடங்களாக இங்கு வசித்து வருகிறேன், இன்று வரை இவ்வளவு அடைமழை (கனமழை)யை நான் பார்த்ததில்லை. தண்ணீர் மட்டம் மிக வேகமாக உயர்ந்து கொண்டிருந்தது, நாங்கள் அவசரமாகத் தப்பி, எதைக் காப்பாற்ற முடியுமோ அதைக் காப்பாற்றிக் கொண்டோம். ஆனால் நிறைய பொருள்கள் சேதமடைந்தன. எனது மொத்த சேமிப்பும் அழிந்துவிட்டது.” என்று கூறினார்.

பல கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மாற்றப்பட்டுள்ளன என்றாலும் இன்னும் நிறைய வேலைகள் மீதமுள்ளன என்று பாவேஷ் தவே கூறுகிறார். ஒரு சேமிப்பகத்தின் முழு தளமும் தண்ணீரில் மூழ்கியது. அதில் பல ஆயிரம் டாலர்களை இழந்ததாக அவர் கூறுகிறார்.

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செவ்வாய்க்கிழமை நியூ ஜெர்சி மற்றும் நியூயார்க் மாகாணங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதாகவும், அனைவருக்கும் நிவாரணம் கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

பருவ நிலை மாற்றம்

அமெரிக்க சூறாவளி ஐடா

பட மூலாதாரம், SALIM RIZVI/BBC

இந்தத் தருணத்தில், அதிபர் பைடன் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளப் பணியாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.

“புவி வெப்பமயமாதல் என்பது ஒரு உண்மை. நாம் அதில் தான் வாழ்கிறோம். பருவ நிலை மாற்றம் குறித்து நாம் செயல்பட்டே ஆக வேண்டும்.” என்று அவர் கூறினார்.

நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியிலும் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. குயின்ஸில், பல கட்டடங்களின் அடித்தளங்களில் வெள்ள நீர் புகுந்தது. நியூயார்க்கின் குயின்ஸ் பெருநகரத் தலைவர் டொனோவன் ரிச்சர்ட்ஸ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி வழங்குமாறு மாகாண மற்றும் மத்திய அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்க அரசு நிதி உதவி அறிவித்துள்ளது. இதுவரை பலருக்கு உதவி கிடைத்துள்ளது, ஆனால் இன்னும் பலர் உதவிக்காக காத்திருக்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »