Press "Enter" to skip to content

ஆப்கானிஸ்தான் அஷ்ரஃப் கனி அரசு வீழ்ந்த பரபரப்பான கடைசி சில மணி நேரங்கள்: தாலிபன்கள் பிடிக்கு காபூல் வந்தது எப்படி?

  • மொகமது மடி, அகமது காலித், சையது அப்துல்லா நிசாமி
  • பிபிசி நியூஸ்

பட மூலாதாரம், AP Images

ஆட்சியிலிருந்து விரட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் புதிய அரசு ஒன்றை அமைத்துள்ளனர்.

கல்வி, சர்வதேச முதலீடு, ஜனநாயகம் நிறைந்த எதிர்காலம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஒரு தலைமுறைக்கு மேற்கண்ட வரி நம்ப முடியாததாக இருக்கும்.

முந்தைய ஆப்கானிஸ்தான் நிர்வாகம் எப்படி இத்தனை வேகமாக விழுந்தது? முதல் நகரத்தைக் கைபற்றிய பிறகு காபூலுக்கு வந்து சேர தாலிபான்களுக்கு 10 நாட்கள் மட்டுமே தேவைப்பட்டன.

ஆனால் தலைநகரம் அவ்வளவு சீக்கிரம் விழுந்துவிடாது என்ற ஓர் எண்ணம் இருந்தது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஓர் ஒப்பந்தம் முடிவான பிறகே காபூல் வீழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று எல்லாம் மாறிவிட்டது.

சில மணி நேரங்களுக்குள்ளேயே அதிபரும் உயரதிகாரிகளும் மாயமாகிவிட்டனர். ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் சிலரும் காவல்துறை அதிகாரிகளும் சீருடையை மாற்றிக்கொண்டு தலைமறைவாகிவிட்டனர்.

மேலை நாடுகளின் ஆதரவைப் பெற்ற ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கு பல ட்ரில்லியன் டாலர் ராணுவ ஆதரவும் இருபது ஆண்டுகாலப் பயிற்சியும் கிடைத்திருந்தன. அவை எல்லாம் அப்படியே மாயமாகிவிட்டன.

அங்கு இருந்த உள்வட்டாரங்களில் பேசி, ஆப்கானிஸ்தான் அரசு வீழ்ந்த கடைசி சில மணி நேரங்களில் நடந்தவை என்ன என்பதை பிபிசி தொகுத்திருக்கிறது.

சனிக்கிழமை, ஆகஸ்ட் 14

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனியின் உள் வட்டாரங்கள் கொஞ்சம் யோசனையில் இருந்தன என்றாலும் யாரும் பெரிதாகக் கவலைப்படவில்லை என்று பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டது. தலைநகரைக் காப்பாற்றுவதற்கான ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு, அது ராணுவத் தளபதி ஹைபதுல்லா அலிசாய் மற்றும் அமெரிக்க ராணுவ உயரதிகாரி பீட்டர் வேல்சி ஆகியோருடன் விவாதிக்கப்பட்டது. திட்டத்தின் மையப்புள்ளி என்பது நகரத்துக்குள் நுழையாமல் தாலிபன்களைத் தடுப்பது.

நாட்டின் மிகப்பெரிய மாகாணமான ஹெல்மாண்டில் முன்பு இருந்த ஆப்கானிஸ்தான் ராணுவ தளபதி சமி சதாத், காபூலுக்கான புதிய பாதுகாப்புப் படைக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். தேவைப்பட்டால் சண்டையிடுவது என்றும், தாலிபான்களுடன் ஒரு அமைதி ஒப்பந்தத்துக்கு வருவது என்றும் திட்டமிடப்பட்டது. அது நடக்கவில்லை என்றால், குறைந்தது வெளியேறுவதற்கான அவகாசமாவது வேண்டும் என்பது காபூல் நிர்வாகத்தின் எண்ணம்.

அஷ்ரஃப் கனி, தற்காலிக பாதுகாப்பு அமைச்சர் பிஸ்மில்லா கான் மொகம்மாதி ஆகியோர் காபூலில் ஆகஸ்ட் 14ம் தேதி படையினரை சந்தித்த காட்சி.

பட மூலாதாரம், Reuters

தளபதி சதாத் தனது குழுவினரை சந்தித்தபோதே நாட்டின் வடக்குப் பகுதியில் தாலிபன்கள் மிகப்பெரிய நகரமான மஸார்-இ-ஷரீஃபைக் கைப்பற்றிவிட்டனர். கிழக்கு நகரமான ஜலாலாபாத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நுழையவும் தொடங்கியிருந்தனர். இரண்டு நகரங்களும் எதிர்ப்பின்றி வீழ்ந்திருந்தன.

கடைசி நகரமாக காபூல் நின்றுகொண்டிருந்தது.

கல்வித்துறையைச் சேர்ந்தவரும் உலக வங்கி அதிகாரியுமான அஷ்ரஃப் கனி, 2014 செப்டம்பரிலிருந்தே ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்தார். ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்குள் இருந்த விமர்சகர்கள், கடைசி வாரங்களில் காபூலை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த தாலிபன்களின் அச்சுறுத்தலைக் கணிக்க இவர் தவறிவிட்டார் என்று தெரிவிக்கின்றனர்.

முன்னாள் அதிபர் மொஹமத் நஜிபுல்லாவுக்கு நடந்ததது கண்டிப்பாக அவர் மனதுக்குள் ஓடியிருக்கும். தான் தப்பிச்சென்றதற்கான காரணங்களை சொல்லும்போது அந்த நிகழ்வையும் கனி குறிப்பிட்டார்.

காபூலை 1996ல் தாலிபான்கள் கைப்பற்றியபோது நஜிபுல்லாவும் சிறைபிடிக்கப்பட்டார். அவரை ஐ.நா கட்டடத்திலிருந்து இழுத்து வெளியில் கொண்டு வந்த ஜிகாதிகள், அவரை சித்தரவதை செய்து கொன்றனர். அவரது உடல் அதிபர் மாளிகைக்கு வெளியில் இருந்த ஒரு ட்ராபிக் விளக்கில் தொங்கவிடப்பட்டது.

ஞாயிறு காலை, 15 ஆகஸ்ட்.

ஆப்கானிஸ்தான் மாளிகையின் கடைசி சில மணிநேரங்கள்.

பொழுது விடிந்தவுடனேயே நகர எல்லைகளில் தாலிபன்கள் வந்துவிட்டார்கள் என்ற செய்தி கேட்ட காபூல் வாசிகள் கொஞ்சம் தர்மசங்கடத்துக்குள்ளானார்கள். வங்கிகளிலும் விமான நிலையங்களிலும் வரிசைகள் குவிந்தன. ஆனால் அதிபர் கனியின் உள் வட்டாரங்கள் தாலிபன்களால் வீழ்ச்சி வந்தாலும் அது உடனே நடக்காது என்று நம்பிக்கொண்டிருந்தன.

காபூலைச் சேர்ந்த 19ம் நூற்றாண்டு மாளிகையான ஆல்ர்க்கில் வழக்கம்போல பணியாளர்கள் வந்தனர்.

அதிபரின் முக்கிய அதிகாரிகளில் ஒருவரான சலாம் ரஹிமி அதற்கு முதல் நாள் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை முடித்திருந்தார் என்பதால் அங்கு நம்பிக்கை நிலவியது. தாலிபன்களை எப்படியோ தொடர்பு கொண்ட ரஹிமி, வலுகட்டாயமாக காபூலைக் கைப்பற்றப்போவதில்லை என்று தாலிபன்களிடம் ஒப்புதல் வாங்கியிருந்தார். அதற்கு பதில் உதவியாக அதிகாரப் பங்கீடு நடத்தப்போவதாகவும் உறுதியளித்திருந்தார். இதனால் வெளிநாட்டவர்களையும் அச்சுறுத்தலாக இருப்பவர்களையும் வெளியேற்றிவிடலாம் என்பதும் ஒரு திட்டமாக இருந்தது.

ஏற்கனவே ஒருங்கிணைந்த ஓர் அரசாங்கத்தை உருவாக்குவதற்காக கத்தாரில் நடந்துகொண்டிருந்த பேச்சுவார்த்தைக்கும் இதனால் அவகாசம் கிடைத்திருக்கும்.

காபூல்வாசிகளுக்கு நம்பிக்கை அளிப்பதற்காக, கனியின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அவரது குழு ஒரு காணொளியைப் பதிவிட்டிருந்தது. அதில், தனது அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பாதுகாப்பு பற்றி கனி உரையாடுவதாக ஒரு காட்சி இருந்தது. ஓர் அழகான மர மேசையில் அமர்ந்துகொண்டு தன் அமைச்சர்களுடன் அவர் ஒலிப்பெருக்கி ஃபோனில் பேசுகிறார். வெகு விரைவில் தாலிபனுடன் ஒரு ஒப்பந்தம் வந்துவிடும் என்று அந்த காணொளி தெரிவித்திருந்தது, ஆகவே காபூலில் எந்த ஒரு சண்டையும் நடக்காது என்றும் மறைமுகமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் எல்லா மூத்த அமைச்சர்களையும் திருப்திப்படுத்த இது போதுமானதாக இல்லை. தனது முக்கியக் குழுவில் இருக்கிற மற்ற உறுப்பினர்களை சமாதானப்படுத்துவது அதிபருக்குக் கடினமாக இருந்தது என்று சில தகவல்கள் கிடைத்துள்ளன. துணை அதிபாரான அம்ருல்லா சலே ஏற்கனவே காபூலில் இருந்து 30 மைல் தொலைவில் இருந்த பஞ்ஷிர் பள்ளத்தாக்குக்குத் தப்பிச் சென்றிருந்தார். பாதுகாப்பு அமைச்சர் பிஸ்மில்லா கானைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்தது.

இது நடந்துகொண்டிருக்கும்போதே முக்கிய ஆப்கன் தலைவர்கள் சிலர் இஸ்லாமாபாத்துக்குச் செல்லும் ஒரு விமானத்தைப் பிடிப்பதற்காக விமான நிலையத்தை நோக்கி விரைந்துகொண்டிருந்தனர். மக்களவைத் தலைவர் மிர் ரஹ்மான் ரமானியும் முன்னாள் துணை அதிபர் கரீம் காலிலியும் இந்தப் பட்டியலில் முக்கியமானவர்கள்.

தாலிபன்கள் தலைநகர் காபூலை கைப்பற்றிய ஆகஸ்ட் 15ம் தேதி காபூல் நகரில் அசிசி வங்கிக்கு வெளியே வரிசையில் நிற்கும் மக்கள்.

பட மூலாதாரம், Getty Images

இது வெளியேறுவற்கான பயணம் அல்ல என்று விவசாயத் துறை அதிகாரியான ஷாகிப் ஷ்ரீஃபி மறுப்புத் தெரிவித்தார்.

“ஆப்கானிஸ்தானில் சண்டையைத் தவிர்ப்பதற்காக வந்து மத்தியஸ்தம் செய்யுமாறு பாகிஸ்தான் அரசைக் கேட்க விரும்பினோம். ஆனால் கனி நாங்கள் செல்வதை விரும்பவில்லை. பாகிஸ்தானின் உதவியுடன் ஒரு ஒப்பந்தம் வந்துவிட்டால் அவரது அதிகாரம் போய்விடும் என்று பயந்தார். நாங்கள் செல்வதை வெறுத்தார்” என்கிறார்.

மக்களவை தலைவரை நாட்டை விட்டு வெளியேற அனுமதித்தால் பீதி கிளம்பும் என்பதால் அந்தப் பயணத்தைத் தவிர்க்குமாறு கனி கூறியிருக்கலாம் என்றும் சிலர் தெரிவிக்கிறார்கள்.

அவரும் மற்ற தலைவர்களும் விமான நிலையத்துக்குச் செல்லும் வழியில் நகரத்தின் எல்லா இடங்களிலும் பீதியாக இருந்ததாக ஷரீஃபி விவரிக்கிறார்.

“தாலிபன்கள் வாயிலை அடைந்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டோம். ஆனால் விரைவிலேயே அவர்கள் காபூலுக்குள் நுழைவார்கள் என்று நினைக்கவில்லை. முந்தைய இரவு பரபரப்பாக பதற்றமாக இருந்தோம். எங்கள் ஆயுதங்களை அருகில் வைத்துக்கொண்டு தூங்கினோம். மக்கள் பணம் எடுப்பதற்காக வங்கிகளில் வரிசையாகக் குவிந்துவிட்டார்கள். விமான நிலையங்களிலும் மக்கள் கூட்டம். ஒரே போக்குவரத்து நெரிசல்” என்று ஷரீஃபி விவரிக்கிறார்.

எந்த அளவுக்கு நெரிசல் என்றால் கடைசி 15 நிமிடங்கள் காரிலிருந்து இறங்கி நடந்து அவர் விமான நிலையத்தை அடைய வேண்டியிருந்தது.

விமான நிலையத்துக்கு வந்த பிறகு தாலிபன்களின் செயல்பாடுகள் பற்றிய உடனடித் தகவல்கள் அந்தக் குழுவுக்கு அனுப்பப்பட்டன.

“ஒவ்வொரு நிமிடமும் நகரத்தின் முக்கியப் பகுதிகளை அவர்கள் கைபற்றியது பற்றிய தகவல்கள் வந்துகொண்டே இருந்தன. அச்சமாக இருந்தது” என்கிறார்.

விமான நிலையத்துக்குள் எந்த ஒழுங்கும் இருக்கவில்லை.

மீதியிருக்கும் விமானங்களில் பயணச்சீட்டு வாங்குவதற்கு மக்கள் முண்டியடித்துக்கொண்டிருந்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாடகர்கள் மற்றும் பிற முக்கிய விருந்தினர்கள் வந்ததால் பட்டியலில் ஏற்கனவே பயணச்சீட்டு இருந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.

விரைவிலேயே எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும் எங்கோ கிளம்பி மறையத் தொடங்கினார்கள். அந்தந்த இடங்களில் யாரும் இருக்கவில்லை, பயணிகளை கவனிக்கவும் யாரும் இருக்கவில்லை. அவர்கள் வெளியில் குவியத் தொடங்கினர்.

ஒருவழியாக அரசியல்வாதிகள் குழு பாகிஸ்தானை நோக்கிச் செல்லும் விமானத்தில் ஏறியது. ஆனால் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுக்குழு விமானம் கிளம்பக்கூடாது என்று உத்தரவிட்டது.

“எந்த நேரமும் தாலிபான்கள் விமான நிலையத்தைக் கைப்பற்றி விடுவார்கள் என்று அச்சமாக இருந்தது. ஒருவேளை அவர்கள் விமானத்துக்குள்ளேயே நுழைந்துவிட்டால் இருக்கும் பொருட்களை வைத்து எங்களைத் தற்காத்துக்கொள்ளவும் தயாராக இருந்தோம். என்னிடம் இருந்த ஒரே பொருள் மடிக்கணினி மின்கலவடுக்கு (பேட்டரி)தான்”.

ஞாயிற்றுக்கிழமை பகல் நேரம்

அதிபர் மாளிகையிலும் நிலைமை மோசமாகிக்கொண்டிருந்தது. பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த உயரதிகாரிகளைத் தொலைபேசியில் அழைக்க கனி தீவிரமாக முயற்சி செய்துகொண்டிருந்தார். ஆனால் யாரையும் பிடிக்க முடியவில்லை.

ஆகஸ்ட் 15ம் தேதி ஃபேஸ்புக் காணொளியில் தோன்றிய அதிபர் அஷ்ரஃப் கனி.

பட மூலாதாரம், Facebook

ஒரு மூத்த அரசு அதிகாரி பிபிசியிடம் பேசினார். “ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் நொறுங்கியது போல இருந்தது. மூத்த அதிகாரிகள் கூட குழுக்களாகப் பிரிந்துவிட்டனர். எந்தக் குழுவுக்கும் இன்னொரு குழுவைப் பற்றித் தெரியவில்லை. மாளிகையிலிருந்து ஏதாவது ஒரு வழிகாட்டுதல் வரும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் ஒன்றும் வரவில்லை” என்கிறார்.

கனியைச் சுற்றி இருந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வந்தது. கனியைத் தவிர முக்கிய முடிவுகள் எடுத்துக் கொண்டிருந்தவர்கள் ஹம்துல்லா மோஹிப்பும் அவரது தலைமை அதிகாரி ஃபேசல் ஃபாஸ்லியும்.

மேலைக் கல்வி படித்த 38 வயதாகும் முன்னாள் ஆப்கானிஸ்தான் தூதுவரான மோஹிப், கனியின் முக்கிய அதிகாரிகளில் ஒருவர். எந்த ராணுவ பின்னணியும் இல்லாமல் இருந்தாலும் அவரையே 2018ல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக கனி நியமித்தார். முக்கிய ராணுவ முடிவுகள் எடுக்கும் பொறுப்பு அவரிடமே கொடுக்கப்பட்டது.

உயிருக்கு ஆபத்து என்று எச்சரிக்கை

பகல் நேரம் நெருங்கியதும் வெளியேறவேண்டும் என்று மோஹிப் வலியுறுத்தத் தொடங்கினார். ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக வெளியில் துப்பாக்கி குண்டுகளின் சத்தம் கேட்கத் தொடங்கியிருந்தது. கிளம்புவதற்கு கனி தயங்கினாலும் அவர் உயிருக்கு ஆபத்து என்று மோஹிப் தெரிவித்தார்.

“தாலிபன்கள் வந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் அவரை சிறைப்பிடித்து அவர்கள் கொன்றுவிடுவார்கள் என்றும் மோஹிப் கனியிடம் தெரிவித்தார். அவர் மிகவும் கவலையாக இருந்தார்” என்கிறார் மாளிகைக்குள் இருந்த ஒருவர்.

அதற்குள் காபூலுக்குள் குழப்பமான நிலை உருவாகியிருந்தது.

பிபிசியிடம் பேசிய ஒரு காபூல்வாசி,” அலுவலகத்தில் இருந்தேன். சுமார் 2 மணிக்கு நகரத்துக்குள் தாலிபான்கள் வந்துவிட்டதை செய்திகளில் பார்த்தேன். கூட வேலை செய்பவர்கள் கிளம்பத் தொடங்கினார்கள். யாரும் யாருடனும் பேசவில்லை. நான் அலுவலகத்தை விட்டுக் கிளம்பியபோது தெருக்கள் நெரிசலாக இருந்தன, கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. துப்பாக்கி சத்தம் கேட்டது, யாரைப் பார்த்தாலும் சந்தேகமாக இருந்தது” என்கிறார்.

மக்கள் உலங்கூர்தியில் ஏறுவதால் பைகள் தரையில் வீசப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். சிலரோ இவை காவலர்களுக்குக் கொடுக்கப்பட்ட லஞ்சம் என்றும் சொல்வதாகத் தெரிகிறது. பின்னாளில், ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து செய்தி ஒன்றை வெளியிட்ட கனி, தான் மிகப்பெரிய தொகையுடன் நாட்டை விட்டு வெளியேறியதாக வந்த செய்தியை மறுத்தார்.

ஆகஸ்ட் 15ம் தேதி காபூல் நகரில் தாலிபன்கள் நுழையத் தொடங்கியதால் நகரில் ஏற்பட்ட நெரிசல்.

பட மூலாதாரம், Getty Images

3.30 மணிக்கு மோஹிப், ஃபாஸ்லி, அதிபர் கனி ஆகியோர் உலங்கூர்தியில் மாளிகையை விட்டுக் கிளம்பினார்கள். முதலில் உஸ்பெகிஸ்தான் டெர்மெஸுக்குப் போய் அங்கிருந்து ஐக்கிய அரபு எமிரேட் சென்றனர். அடுத்த சில மணிநேரங்களில் அதிபரின் மர மேசையில் தாலிபான்கள் அமர்ந்திருந்த புகைப்படங்கள் உலக ஊடகங்களை வந்தடைந்தன. தாலிபான்கள் முகத்தில் ஒரு வெற்றியும் சிறிய வியப்பும் இருந்தது.

காலையில் கனி பேசியபோது மேசையில் இருந்த புத்தகம் அப்படியே இருந்தது. அதே பக்கத்தில் அடையாளமும் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் புதிய அத்தியாயத்தைத் தாலிபன்கள் துவக்கி வைத்திருந்தனர்.

விமான நிலையத்தில் முக்கிய அரசு அதிகாரிகள் காத்துக்கொண்டிருந்தனர். கனி தப்பித்த விஷயம் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

“அமைச்சர்கள் உட்பட சில முக்கிய அதிகாரிகளை என்னால் பார்க்க முடிந்தது. அடுத்த வாகனத்துக்காக அவர்கள் காத்திருந்தனர். எல்லாரும் கனி எங்கிருக்கிறார் என்று கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் அவர் எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை” என்கிறார் ஒரு அரசு உயரதிகாரி.

ஆகஸ்ட் 15ம் தேதி ஜலாலாபாத் மாகாணத்தில் ஒரு வண்டியில் தாலிபன் போராளிகள்.

பட மூலாதாரம், Getty Images

விமான நிலையத்தில், பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் PK6250, ஷரீஃபி மற்றும் அவரது குழுவினரோடு இன்னும் நின்றுக்கொண்டிருந்தது. நான்கரை மணிநேரமாக அவர்கள் காத்துக்கொண்டிருந்தனர். போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மௌனமாக இருந்தனர். விமான ஓட்டி ஒரு முடிவு எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

அனுமதி இல்லாமலே கிளம்பிய விமானம்

விமான நிலையத்தின் ராணுவ தளத்தில் சினூக் உலங்கூர்திகளும் அமெரிக்க ராணுவ விமானங்களும் தொடர்ந்து கிளம்பிக்கொண்டிருந்தன.

அதிகாரபூர்வ அறிவிப்பு இன்றியே கிளம்புவதாக விமானி மாக்ஸூத் பஜ்ரானி முடிவெடுத்தார். அந்த முடிவால் அவர் பாகிஸ்தானில் ஒரு கதாநாயகனாகக் கொண்டாடப்பட்டார். ஏற்கனவே கிளம்பிக்கொண்டிருந்த இரு ராணுவ விமானங்களைப் பின் தொடர்ந்து சென்றதாக உள்ளுர் ஊடகங்களில் அவர் தெரிவித்தார்.

அந்தக் குழுவினர் அடைந்த ஆறுதலை ஷரீஃபி விவரிக்கிறார்.

“ஒருவழியாகக் கிளம்பிவிட்டோம் என்பது எங்களுக்கு ஆறுதலாக இருந்தது என்றாலும் எப்போது இங்கு திரும்பி வருவோம் என்பது தெரியாததால் வருத்தமாக இருந்தது” என்கிறார்.

வெளியேறியது என் முடிவுப்படி அல்ல…

சில நாட்களில் ஃபேஸ்புக் லைவில் வந்த அதிபர் கனி, ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து பேசினார். “மனிதாபிமான அடிப்படையில்” அவர் அங்கு தங்கவைக்கப்பட்டிருந்தார். முக்கியமான நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறியதால் விமர்சனங்கள் வந்ததில் மனமுடைந்து பேசினார்.

“காபூலை விட்டு வெளியேறும் முடிவு என்னுடையது அல்ல. அது என் பாதுகாப்புக் குழுவின் முடிவு. நான் அங்கு இருந்திருந்தால் ரத்தக்களறி ஆகியிருக்கும். 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் நடந்தது மீண்டும் நடந்திருக்கும். மக்கள் முன்பு நான் தூக்கிலிடப்பட்டிருப்பேன். அது நாட்டுக்கே பேரிடராக மாறியிருக்கும்” என்றார்.

காபூலை தாலிபன்கள் கைப்பற்றிய வேகம் பலருக்கு ஆச்சரியமாக இருந்தாலும் நாட்டின் பிற இடங்களில் இதற்கான அறிகுறிகள் தெரிந்தே இருந்தன.

ஒரு தெற்கு மாகாணம் எபபடி வீழ்ந்தது என்பது பற்றிய விவரங்களை பிபிசி திரட்டியது.

ஆகஸ்ட் 15 அன்று காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம்.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய ஜாபுல் மாகாணத்தில் இருந்த தாலிபன் போராளி ஒருவர், 2014ல் அமெரிக்கா அங்கிருந்து விலகிய பின்பே ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு நிதி உதவி போதவில்லை என்கிறார்.

“அமெரிக்கப் படைகள் ஜாபுல் வந்தபோது, எல்லா சோதனைச்சாவடிகளிலும் அவர்களே இருந்தார்கள். ஆனால் அவர்கள் கிளம்பியபின்பு அந்த இடங்களை நிரப்ப ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் ஆட்களோ பணமோ இருக்கவில்லை. தாலிபன்கள் அவர்களுக்கு உதவி வரும் வழிகளை அடைத்துவிட்டு வேலை செய்ய முடியாதபடி ஆக்கினார்கள்” என்கிறார் ஜாபூலின் ஷிங்காய் மாவட்டத்தைச் சேர்ந்த தாலிபன் பேச்சுவார்த்தை அதிகாரி ஒருவர்.

ஏற்கனவே பல கிராமப்புறங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த தாலிபன்கள் ஒவ்வொரு சோதனைச் சாவடியாகக் கைப்பற்றினார்கள். ஆப்கானிஸ்தான் ராணுவம் பின் வாங்கியது. 2021 ஜூன் மத்தியில் ஜாபுலின் நிலை தாலிபான்களுக்கு சாதகமாக மாறியது.

“ஜிக்ராக்களுடன் ஒரு பழங்குடி பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்தோம். அது எங்கள் மரபு” என்கிறார்.

இரண்டு நாட்கள் நடந்த பேச்சுவார்த்தை ஜூன் 15ம் தேதி தொடங்கியது. இரண்டு பக்கத்திலிருந்தும் பலர் வந்திருந்தனர். முக்லிகள் என்று அழைக்கப்படும் உள்ளூர் தாலிபன் தலைவர் ஒருபுறமும் ஜாபுலின் துணை ஆளுநர் இனையதுல்லா ஹோடாக் மறுபுறமும் இருந்தார்கள். இரண்டு முக்கிய விஷயங்கள் பேசப்பட்டன. எப்படி ஆப்கானிஸ்தான் ராணுவத்தைப் பாதுகாப்பது, எப்படி ஆயுதங்களைப் பங்கிடுவது.

இரண்டாவது நாள் பேச்சுவார்த்தை முடிந்தது. ஆப்கானிஸ்தான் ராணுவத்தையும் ஆயுதங்களையும் தாலிபன்களிடம் ஒப்படைக்க மூத்தவர்கள் ஒப்புக்கொண்டனர். மாகாணத் தலைநகர் க்வாலாத்துக்கு அவர்கள் செல்ல அனுமதிப்பதாக தாலிபன் உறுதி அளித்தது.

ஒவ்வொருவருக்கும் 5000 ஆஃப்கானிகள் பணம், ஓர் ஆயுதம், ஊரிலிருந்து வெளியேற வண்டிகள் தரவும் தாலிபன்கள் ஒப்புக்கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் படையினர் ஜூன் 16ம் தேதி கிளம்பி க்வலாத் புறப்பட்டனர். ஜாபுலில் ஒவ்வொருவராக இதே போன்ற ஒப்பந்தத்துக்கு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது

சில நாட்களில் காபூல் வீழ்ந்தது.

Taliban fighters in the Laghman province, close to Kabul, August 15 2021

பட மூலாதாரம், Getty Images

பல ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆகஸ்ட் 15 என்பது மறக்க முடியாத நாள். அன்று அவர்கள் வாழ்க்கை புரட்டிப் போடப்பட்டது. எதிர்காலம் மாறியது

இரவு வந்தததும் மாற்றத்தை உணர்ந்ததாகச் சொல்கிறார் ஒரு ஆப்கானிஸ்தான் குடிமகன்.

“இதோ இப்போது இருட்டாகவும் அமைதியாகவும் இருக்கிறது. மிகவும் சோகமான இரவு இது. காபூல் மூச்சைப் பிடித்துக்கொண்டு காத்திருக்கிறது.”

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »