Press "Enter" to skip to content

பெண்ணின் உள்ளாடையில் இருந்த படி 6,400 கிலோமீட்டர் பயணித்த பல்லி

பட மூலாதாரம், RSPCA

பெண்களின் உள்ளாடையை விரும்பும் ஒரு பல்லி, பார்படாஸ் நாட்டிலிருந்து, பிரிட்டனில் இருக்கும் யார்க்‌ஷருக்கு விமானம் வழியாக பயணித்து வந்திருக்கிறது.

பார்பி என்றழைக்கப்படும் அந்த பல்லியை லீசா ரஸ்ஸல் என்கிற பெண்மணி, தெற்கு யார்க்‌ஷரில் இருக்கும் தன் வீட்டில், தன் பெட்டி படுக்கைகளை எல்லாம் பிரித்து மீண்டும் சரி செய்யும் போது கண்டுபிடித்தார்.

“அது நகரத் தொடங்கிய போது, நான் கத்தி கூச்சலிட்டேன். சுமார் 6,400 கிலோமீட்டர் பயணத்துக்குப் பிறகு இதை நீங்கள் உங்கள் மார்பக உள்ளாடையில் இருந்து எதிர்பார்க்கமாட்டீர்கள்”

தற்போது பார்பி பல்லி, விலங்குகளுக்கு எதிரான கொடுமையைத் தடுக்கும் ராயல் சொசைட்டி அமைப்பினரிடம் பத்திரமாக இருக்கிறது.

கரீபியன் தீவுக்கு விடுமுறைக்குச் சென்றிருந்த லீசா, வீட்டுக்கு வந்த பிறகு, கடந்த செவ்வாய்கிழமை தன் பொருட்களை எல்லாம் பிரிக்கத் தொடங்கியுள்ளார்.

இந்த மார்பக உள்ளாடையில் தான் பார்பி பல்லி பாதுகாப்பாக பயணித்திருக்கிறது.

பட மூலாதாரம், RSPCA

47 வயதான லீசா ரஸ்ஸல், தன் உள்ளாடையில் ஏதோ ஒட்டிக் கொண்டிருக்கிறது எனக் கருதி, தன் ஆடையை உதறியுள்ளார். பிறகு தான் அது பெண் பல்லி என கண்டுகொண்டார்.

“அந்த சிறிய பல்லிக்கு அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது. என் உள்ளாடைகளை நான் பெட்டியில் மேலேயே தான் வைத்திருந்தேன். வெளியே அதிக வெப்பம் நிலவியதால், நான் உள்ளாடையை அணிவது குறித்து யோசிக்கவில்லை” என்கிறார் அழகுக் கலை நிபுணர் லீசா.

மேலும் அந்த பல்லி எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என கூறியுள்ளார் லீசா ரஸ்ஸல்.

பார்பி பல்லி

பட மூலாதாரம், RSPCA

உலகப் புகழ் பெற்ற பார்பி பொம்மைகளைத் தொடர்ந்து இந்த பல்லிக்கு அப்பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. சுமார் 24 மணி நேரத்துக்கு மேல் ஆடைகளில் மிக பத்திரமாக இருந்திருக்கிறது அப்பல்லி.

விலங்குகளுக்கு எதிரான கொடுமையைத் தடுக்கும் ராயல் சொசைட்டி அமைப்பினர் இப்பல்லி பிரச்சனையை சமாளிக்க ஒரு ஆய்வாளரை நியமித்து உள்ளனர்.

இந்த பல்லி, பிரிட்டனின் பூர்விக உயிரினம் அல்ல (non-native species) என்பதால், இந்த பல்லியை பிரிட்டனில் விடுவிப்பது சட்ட விரோதமானது. மேலும் பிரிட்டனின் தட்பவெட்ப நிலையில் அது பிழைத்திருக்க முடியாது என விலங்குகளுக்கு எதிரான கொடுமையைத் தடுக்கும் ராயல் சொசைட்டியைச் சேர்ந்த சாண்ட்ரா ட்ரான்ஸ்ஃபீல்ட் கூறியுள்ளார்.

எனவே அப்பல்லி ஒரு பிரத்யேக ஊர்வன உயிரினங்களை பாதுகாப்பவரிடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அங்கு பார்பி பல்லி நலமாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »