Press "Enter" to skip to content

ஆப்கானிஸ்தான் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் தாலிபன் வெல்வதற்கு ட்ரோன் அனுப்பியதா பாகிஸ்தான்?

  • பிபிசி உண்மை கண்டறியும் குழு & பிபிசி உருது
  • பிபிசி செய்திகள்

பட மூலாதாரம், AFP

ஆப்கானிஸ்தான் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் தாலிபன்களுக்கு உதவி செய்வதற்காக பாகிஸ்தான் ட்ரோன்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற செய்திகளை பிபிசி கண்காணித்து வருகிறது, ஆனால், பாகிஸ்தானால் இந்த செய்தி மறுக்கப்பட்டிருக்கிறது.

ட்ரோன்கள் பற்றிய கூற்றுகள் என்ன?

தாலிபன் போராளிகள் காபூலின் வடகிழக்கில் உள்ள பஞ்ஷீர் மாகாணத்தை வெல்ல போராடி வருகின்றனர், தாலிபன்களை எதிர்க்கும் ஆப்கன் நாட்டின் கடைசி பகுதியாக இருந்து வருகிறது பஞ்ஷீர்.

தாலிபன்களுக்கு உதவும் வகையில், தாலிபன்களுக்கு எதிரான படைகள் மற்றும் நிலைகளின் மீது இலக்கு வைக்க, பாகிஸ்தானின் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுவதாக சமீபத்தில் சில குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளன.

“பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் உள்ள பஞ்ஷீர் பள்ளத்தாக்கை ட்ரோன்களால் குண்டுவீசி தாக்கியது” என பஞ்ஷீர் மாகாண ஆளுநர் கமாலுதீன் நிஜாமி கூறியதாக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் தாஜுதீன் சொரூஷ் கூறியுள்ளார்.

தாலிபன்களுக்கு எதிரான சில இலக்குகள் வானிலிருந்து தாக்கி அழிக்கப்பட்டதாகவும், அது போன்ற தாக்குதல் திறன்கள் பாகிஸ்தானிடம் மட்டுமே இருப்பதாகவும் சில செய்திகள் வெளியாகியுள்ளன.

தாலிபன்களுக்கு எதிரான படைகள் பாக் ட்ரோன்களால் இலக்கு வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Reuters

இது போன்ற சில செய்திகள், ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுவதற்கு இதுவே சாட்சி என்கிற ரீதியில் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகின்றன.

ஆப்கனின் உள்விவகாரங்களில் பாகிஸ்தானின் தலையீடு இருப்பதாக குற்றம்சாட்டி இரானிய மற்றும் இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு இருக்கின்றன. அப்படிப்பட்ட சில செய்திகளில் பாகிஸ்தான் ராணுவ தளவாடங்கள் மற்றும் உபகரணங்கள் என தவறான படங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இது போன்ற குற்றச்சாட்டுகள் மற்றும் செய்திகளை தாலிபன் மற்றும் பாகிஸ்தான் இருதரப்பும் மறுத்திருக்கின்றன.

“இவை அனைத்து பொய்” “இது இந்திய தரப்பிலிருந்து பரப்பப்படும் பகுத்தறிவற்ற பிரசாரம்” என பாகிஸ்தான் ஆயுதப் படையின் செய்தித் தொடர்பாளர் ஜெனரல் பாபர் இஃப்திகர் பிபிசியிடம் கூறியுள்ளார்.

“ஆப்கனில் நடக்கும் எந்த ஒரு சம்பவத்துக்கும், பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது பஞ்ஷீர் விவகாரமோ அல்லது மற்ற எந்த விவகாரமாகவோ இருக்கலாம்”

தாலிபன்களுக்கு பாகிஸ்தான் உதவி வருவதாக அமெரிக்கா உட்பட பலரும் குற்றம்சாட்டினர். ஆனால் அதை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறது.

ஆனால் பாகிஸ்தானின் ராணுவ மற்றும் உளவு அமைப்புகள் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தாலிபன் போன்ற குழுக்களோடு இன்னும் தொடர்பில்தான் இருக்கின்றன.

பாகிஸ்தானிடம் ட்ரோன்கள் இருக்கின்றனவா?

பாகிஸ்தானின் புராக் ட்ரோன்

பட மூலாதாரம், Getty Images

ஆம், இருக்கின்றன. கடந்த 2015 மார்ச்சில், உள்நாட்டில் வடக்கு வசீரிஸ்தான் பகுதியில் போராளி குழுக்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை எடுக்க ட்ரோன்களைப் பயன்படுத்துவதாக பாகிஸ்தானே ஒப்புக் கொண்டது.

பாகிஸ்தான் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புராக் என்கிற ட்ரோனை பயன்படுத்தியது. அது வானிலிருந்து தரையில் இருக்கும் இலக்கை தாக்கும், லேசர் உதவியோடு செயல்படும், ஏவுகனைகளை ஏவக் கூடிய திறன் படைத்தது.

துருக்கி அல்லது சீனா அல்லது இருநாடுகளிடமிருந்து தொலை தூரம் பறக்கும் ட்ரோன்களை பாகிஸ்தான் பெற்றுள்ளதாகவும் சில செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

கடந்த ஆண்டு பாகிஸ்தான் சீனாவின் விங் லூங் II ரக ட்ரோன்களை வாங்கியதாகவும் சில செய்திகள் வெளியாயின. அதே போல சீனாவின் CH – 4 ரக உளவு மற்றும் தாக்குதல் நடத்த பயன்படும் ட்ரோன்களை பாகிஸ்தான் வாங்கி இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.

CH-4A ரக ட்ரோன்களை உளவுப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும், அது தொடர்ந்து வானில் சுமார் 30 மணி நேரம் பறக்கும் என்றும், CH-4B ரக ட்ரோன் 345 கிலோ வெடி பொருட்களோடு சுமார் 14 மணி நேரம் வானில் பறக்கும் என்றும் ‘ஜேன்ஸ் டிஃபென்ஸ் வீக்லி’ என்கிற பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான சஞ்சிகை கூறுகிறது.

இதில் எந்த ரகத்தை பாகிஸ்தான் வைத்திருக்கிறது, அது செயல்பாட்டில் இருக்கிறதா இல்லையா என எதற்கும் தெளிவான விடை தெரியவில்லை. ஆனால் பாக் தரப்பு நீண்ட தூர ட்ரோன்கள் தங்களிடம் இல்லை என தொடர்ந்து மறுத்து வருகிறது.

இதெல்லாம் போக ஷாபர் 2 (Shahpar 2) ட்ரோன்களை வைத்திருக்கிறது பாகிஸ்தான். இந்த ரக ட்ரோன்களால் 14 மணி நேரம் வரை வானில் பறந்து கொண்டே உளவு பார்க்க முடியும், ஆயுதங்களைக் கொண்டு தாக்குதலும் நடத்த முடியும்.

ஆப்கனில் பாகிஸ்தான் ட்ரோன்களை பயன்படுத்தி இருக்குமா?

சீனாவின் சி ஹெச் 4 ட்ரோன்

பட மூலாதாரம், Getty Images

இப்போதைக்கு பாகிஸ்தான் ஆப்கானில் ட்ரோன்களைப் பயன்படுத்தியதற்கு எந்த வித வலுவான ஆதாரங்களும் இல்லை.

oryxspioenkop.com என்கிற வலைதளமோ பாகிஸ்தான் CH-4 ட்ரோன்கள் வைத்திருப்பதாகக் கூறுகிறது. கடந்த ஜூலை 12ஆம் தேதி, பாகிஸ்தானின் பவால்பூர் விமானப்படை தளத்துக்கு அருகில் நான்கு ட்ரோன்கள் நிற்பதாக கூகுள் எர்த் புகைப்படங்களில் பார்க்க முடிகிறது.

பாகிஸ்தானிடம் என்ன மாதிரியான ட்ரோன்கள் இருக்கின்றன என்பதை மதிப்பிட இந்த படங்கள் பயன்படலாம், ஆனால் பாகிஸ்தான் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் ட்ரோன்களைப் பயன்படுத்தியதாக பொருள் கொள்ள முடியாது.

லண்டனில் இருக்கும் ராயல் யுனைடெட் சர்வீசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஜஸ்டின் ப்ராங்க் சில சந்தேகங்களை முன் வைக்கிறார்.

பாகிஸ்தானில் ட்ரோன் இருப்பதைக் காட்டும் கூகுள் எர்த் படம்

சீனாவில் தயாரிக்கப்பட்ட CH-4 ட்ரோன்கள், சீன இயக்கத்தின் கீழ் இருக்கும் செயற்கை கோள்களின் உதவியோடு தான் தொலைதூர இலக்குகளை குறி வைக்கின்றன.

“பாகிஸ்தானின் எல்லை மீறலுக்கு உதவ சீனர்கள் தயக்கம் காட்டி இருக்கலாம்” என்கிறார் அவர்.

“CH-4 ட்ரோன்களுக்கு பூமியில் இருந்து நேரடியாக வானொலி தொடர்பு கொள்ளும் விதத்தில் இடையூறுகளின்றி இருக்க வேண்டும். அது மிகவும் சிக்கலானது, ஆனால் அது சாத்தியமில்லை என்று கூற முடியாது” என்கிறார் ஜஸ்டின்.

ஆப்கனில் தாக்குதல் நடத்துவதால் பாகிஸ்தானுக்கு அதில் என்ன ராஜீய பலன்கள் இருக்கின்றன? என கேள்வி எழுப்புகிறார் இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த பாதுகாப்பு பகுப்பாய்வாளர் முனைவர் மரியா சுல்தான்.

இப்போது இருக்கும் சூழலில் நேரடியாக ஆப்கன் விவகாரங்களில் தலையிடுவது பாகிஸ்தானுக்கு ராஜீய ரீதியில் எப்படி பலனளிக்கும் என தெளிவாகத் தெரியவில்லை என்கிறார் ஜஸ்டின்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »