Press "Enter" to skip to content

ராணி பூடிக்கா: ரோமானிய துருப்புகளை கதி கலங்கச் செய்த வீர மங்கையின் மெய்சிலிர்க்கும் வரலாறு

பட மூலாதாரம், Getty Images

(உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை ‘வரலாற்றுப் பதிவுகள்’ என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், பதிமூன்றாம் கட்டுரை இது)

பூடிக்கா (Boudica), கிபி 60இல் பிரிட்டனை ஒடுக்கி வந்த ரோமானிய ஆளுகைக்கு எதிராக கிளர்த்தெழுந்த பூரவீக பழங்குடி புரட்சிப்படையை வழிநடத்தி ரோமானிய வீரர்களை கதி கலங்கச் செய்த வீர மங்கையாக அறியப்படுகிறார்.

பூடிக்காவை தங்களுடைய இனம் காக்க வந்த சுதந்திரப் போராளியாக அவர் வாழ்ந்த காலத்தில் உள்ளூர் மக்கள் கருதினர். ரோமானியர்களை கிட்டத்தட்ட நாட்டை விட்டே வெளியேற்றும் கட்டத்துக்கு அவரது படைத் தலைமை கொண்டு சென்றதாக நம்பப்படுகிறது.

பிரிட்டிஷ் பெண்கள் வரலாற்றில் நீங்காத பெயராக இவர் உள்ளபோதும், அவரது தலைமையில் பூர்வீக பழங்குடியினர் நடத்திய படுகொலை கதைகளை கேட்கும்போது உண்மையிலேயே இப்படியொரு பெண்மணி வாழ்ந்திருப்பாரா என்ற சந்தேகங்களும் எழுகின்றன.

எனினும், பழங்கால வரலாற்றில் நிபுணத்துவம் பெற்ற ரோமானிய வரலாற்றாய்வாளர்களான டாசிட்டஸ் (கி.பி 56ல் பிறந்தவர்) கேஷஸ் டீயோ (கி.பி 163-ல் பிறந்தவர்) ஆகியோர், தங்களுடைய பல குறிப்புகளில் இந்த பெண்மணி பற்றி எழுதியுள்ளனர்.

அவற்றின் அடிப்படையில் பூடிக்காவின் படையினருக்கும் ரோமானிய படையினருக்கும் நடந்த மோதல்கள் பற்றி, அவர் வாழ்ந்த பல பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுடைய படைப்புகளில் எழுதியிருக்கிறார்கள். அவை பெரும்பாலும் ரோமானியர்களை மனதில் கொண்டே எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கணவரின் கோழைத்தனமும் மனைவியின் கோபமும்

பூடிக்கா வரலாறு

பூடிக்கா என்பதற்கு பழங்கால பிரிட்டிஷ் செல்டிக் பழங்குடி மொழிகளில் ஒன்றான பிரிட்டோனிக்கில் ‘வெற்றி’ என்று பொருள். வரலாற்றில் சிறு, சிறு பகுதிகளாக இடம்பெற்ற பூடிக்கா என்ற பெண் பற்றிய வரலாற்றாய்வாளர்களின் குறிப்புகள் மற்றும் கதைகளை இங்கே தொகுத்து வழங்கும்போது, அது அந்தக்காலத்தில் விடுதலைக்காக போரிட்ட ஒரு பூர்வீக சமூகத்தின் எழுச்சி வரலாறை நமக்கு உணர்த்துவதாக கொள்ளலாம்.

பூடிக்கா என்ற பெண்ணின் பெயர் வரலாற்றில் முதல் முறையாக கி.பி 60ல் அவரது கணவர் பிரசுட்டாகஸ் (Prasutagus) இறப்புக்கு பிறகே வெளிவரத் தொடங்கியது. பிரசுட்டாகஸ், ‘ஐசீனை’ (ICENI) பழங்குடி மக்களின் தலைவராக விளங்கினார். நவீன கால நார்ஃபொக், சஃபொக், வடகிழக்கு கேம்ப்ரிட்ஷையர் ஆகிய பகுதிகளில் அந்த சமூகத்தினர் வாழ்ந்தனர்.

அந்த காலத்தில் அதாவது கி.பி 43இல் பிரிட்டனை ரோமானியர்கள் ஆக்கிரமித்த பிறகு அதன் ஆளுகைக்கு அனுசரணையான ஆட்சியாளராக மாறினார் பிரசுட்டாகஸ்.

தங்களுடைய நிலத்தை எதுவும் செய்யாமல் விட்டு விட்டால், அரசியல் ரீதியாக ரோமானியர்களை ஆதரிக்கவும் பழங்குடிகளிடம் இருந்து தொகை வசூல் செய்து ரோமானிய ஆட்சியாளர்களுக்கு கப்பம் (பேரரசர்களுக்கு சிற்றரசர்கள் தொகை தருவது போன்றது) தருவதாகவும் அவர் உடன்பாடு செய்து கொண்டார். இதனால் ஐசீனை பழங்குடிகள் வாழ்ந்த பகுதிகள் ஒடுக்குமுறையில் இருந்து தப்பின.

ரோமானியராக இல்லாதபோதும் பிரசுட்டாகஸுக்கும் அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களுக்கும் ரோமானிய குடியுரிமைக்கு இணையான சலுகைகளை அதன் பேரரசு வழங்கியதாக நம்பப்படுகிறது. இவை பிரசுட்டாகஸின் குடும்பத்தினர், ஆடம்பரமாக வாழவும் லத்தீன் மொழி கற்றுப் பேசுபவர்களாகவும் உருமாற காரணமாயின.

ஆனால், இந்த ஆடம்பர வாழ்க்கை பிரசுட்டாகஸின் மறைவுக்கு பிறகு தொடரவில்லை. அவர் கி.பி 59இல் மரணம் அடைந்தபோது தனது சொத்துகளில் பாதியை அவர் ரோமானிய பேரரசுக்கு எழுதியிருந்தார். மீதமுள்ள சொத்துகளை தமது மனைவி பூடிக்ககாவுக்கு அல்லாமல் தமது மகள்களின் பெயரில் அவர் உயில் எழுதி வைத்திருந்தார்.

சொத்துகளை கைப்பற்றிய ரோமானிய பேரரசு

பூடிக்கா

பட மூலாதாரம், © Historical Pic. Archive/Corbis via Getty Images

அவர் ஏன் அப்படி செய்தார் என்பதற்கான குறிப்புகள் கிடைக்கப்பெறவில்லை.

ஒருவேளை தனக்குப் பிறகு தமது மகள்களுக்கு ஆளுகை செல்வதன் அடையாளமாகவோ அல்லது தனக்குப் பிறகு தமது மனைவி பூடிக்கா ரோமானிய பேரரசுக்கு விசுவாசமாக இருக்க மாட்டோர் என்று கருதியோ மகள்களின் பெயரில் பிரசுட்டாகஸ் உயில் எழுதி வைத்திருக்கலாம் என்று வரலாற்றாய்வாளர்கள் நம்புகின்றனர்.

ஆனால், பிரசுட்டாகஸ் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. அவர் இறந்தவுடன் அவர் வாழ்ந்த மாளிகையை ரோமானிய படையினர் ஆக்கிரமித்தனர். அவரது உறவினர்களை சிறைப்பிடித்தனர். ஐசீனை பழங்குடி ஆளுகையில் இருந்த அனைவரது பதவிகள் பறிக்கப்பட்டன. பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டன.

ஆனால் அத்துடன் ரோமானியர்கள் நிற்கவில்லை. பூடிக்காவக்கு கசையடி தண்டனை வழங்கப்பட்டது. அவரது இளம் பெண்கள் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். பிரிட்டொன் (Briton) மக்களும் ரோமானியர்களின் இந்த செயல்பாடுகளை கண்டித்தனர். பூடிக்காவுக்கும் அவரது குடும்பத்துக்கும் நேர்ந்த துயரத்தை ஐசீனை பழங்குடிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

பூடிக்காவை தங்களுடைய ராணியாக மட்டுமின்றி கடவுளின் அருள் நிறைந்த வடிவமாக அவர்கள் போற்றியதாகவும், தங்களுடைய பூமித்தாயின் மீதும் கலாசாரம் மற்றும் நம்பிக்கையின் மீதும் ரோமானியர்கள் தொடுத்த தாக்குதலாகவும் நடந்த சம்பவங்களை கருதியதாகவும் வரலாற்றாய்வாளர் டாசிட்டஸ் குறிப்பிடுகிறார். இந்த சம்பவங்களே அவர்கள் கிளர்ச்சிக்கு வழிவகுத்ததாகவும் அவர் எழுதியுள்ளார்.

ஆனால், கேஷஸ் டீயோ, ஐசீனை பழங்குடிகள் கிளர்ச்சிக்கு வேறு காரணங்களை தமது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

பிரசுட்டாகஸின் மறைவுக்குப் பிறகு பழங்குடி தலைவர்களுக்கு கொடுக்கப்பட்ட கடனை திருப்பிக் கேட்டு ரோமானிய ஆட்சியாளர்கள் நெருக்கடி கொடுத்ததாக கேஷஸ் குறிப்பிடுகிறார். பல கட்டங்களில் அந்த மக்கள் அவமானப்படுத்தப்பட்டதாகவும் அந்த நேரத்தில் ரோமானிய ஆளுகைக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தோன்றினாலும் அவர்கள் தங்களுக்கு தலைமை தாங்க ஒரு வழிகாட்டி தேவை என்று உணர்ந்ததாகவும் அவர் எழுதுகிறார்.

தலைமைக்கு வெற்றிடம் ஏற்பட்ட நேரத்தில், பூர்வீக மக்களால் மதிக்கப்பட்ட பூடிக்கா, தலைவியாகி ரோமானியர்களுக்கு எதிராக புரட்சிப்படையைத் திரட்டியதாக கூறுகிறார் கேஷஸ் டீயோ.

ஒடுக்குமுறைக்கு எதிராக திரண்ட பழங்குடிகள்

பூடிக்கா வரலாறு

பட மூலாதாரம், OXFORD ARCHAEOLOGY EAST

ஆயிரக்கணக்கான மக்களின் ஆதரவு பூடிக்காவுக்கு இருந்ததால், தென் பகுதியில் வாழ்ந்த ட்ரைனோவான்டெஸ் பழங்குடிகளும் ரோமானிய எதிர்ப்புக் குழுவுக்கு ஆதரவு கொடுத்தனர். இதற்கு ஒரு சுவாரஸ்யமான கி.மு வரலாறு உள்ளது.

இந்த ட்ரைனோவான்டெஸ் செல்டிக் பழங்குடியினர், கி.மு காலத்தில் பிரிட்டனின் சக்திவாய்ந்த பழங்குடிகளாக இருந்தனர். இவர்கள் வாழ்ந்த பகுதியை இரண்டாவது ஜூலையஸ் சீசர் ஆக்கிரமிக்க முயன்றபோது, அந்த சமூகத்தினர் ரோமானிய ஆளுகையுடன் கி.மு 55-54இல் உடன்பாடு செய்து கொண்டனர். ஆனால், பின்னாளில் அவர்களும் தங்களுடைய நிலங்களை ரோமானிய ஆட்சியாளர்களிடம் பறிகொடுத்தனர்.

கைப்பற்றப்பட்ட நிலங்களை ரோமானிய ஆட்சியாளர்கள், தங்களுடைய படை வீரர்களுக்குப் பிரித்துக் கொடுத்தனர். பிற்காலத்தில் கிளாடியஸ் பேரரசுக்கு (கி.பி 41-54ல் ரோமானிய பேரரசாக இருந்தவர்) மிகப்பெரிய மாளிகையை எழுப்ப தொகை செலுத்துமாறும் ட்ரைனோவான்டெஸ் பழங்குடிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

காலங்காலமாக தொடர்ந்த ரோமானியர்களின் வெறுப்புணர்வுதான் பூடிக்காவின் படைக்கு ட்ரைனோவான்டெஸ் சமூகத்தினரின் ஆதரவு கிடைக்கக் காரணமாக இருக்கலாம் என்று வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.

கி.பி 60இல் ரோமானிய படைகள், பிரித்தானியாவின் மேற்குப் பகுதிகளின் ஆக்கிரமிப்பில் மும்முரமாக இருந்தனர். வேல்ஸில் உள்ள ‘ஆங்கல்சே’ பகுதியில் செல்வாக்கு மிக்கவர்களாக விளங்கிய ‘ட்ரூயிட்ஸ்’ சமய தலைமையின் அரசியல் ஆதிக்கத்தை ஒடுக்குவதில் ரோமானியர்கள் முனைப்பு காட்டினர்.

அந்த நேரத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட பூடிக்கா புரட்சிப்படை, கண்ணில் பட்ட ரோமானியர்களையும் தங்களுடைய நிலப்பகுதிகளை ஆக்கிரமித்தவர்களையும் ஈவு இரக்கமின்றி வெட்டிச் சாய்த்ததாக வரலாற்றாய்வாளர் டாசிட்டஸ் கூறுகிறார்.

பழங்குடிகளின் வெறித்தனமான தாக்குதல்

பூடிக்கா வரலாறு

பட மூலாதாரம், SUFFOLK COUNTY COUNCIL

‘எதிர் தாக்குதல்’ நடத்த வலிமை குன்றியவர்களாக இருந்த ரோமானிய படை வீரர்கள், தாங்கள் வாழ்ந்த நிலத்தை அப்படியே விட்டு, விட்டு ஓடினர். ஊர் எல்லையில் உள்ள ஆலயங்களில் அவர்கள் தஞ்சம் அடைந்ததாக டாசிட்டஸ் குறிப்பிடுகிறார். ஆனால், அங்கும் பூடிக்கா படையினர் நுழைந்து படையினரை வெட்டிச் சாய்த்தனர் அல்லது உயிருடன் எரித்தனர்.

ரோமானிய படையினர் பலம் குன்றியிருந்ததை பயன்படுத்தி பூடிகாவின் படையினர், யாரும் எதிர்பாராத வகையில், எஞ்சிய வீரர்களை ரோமானிய பிரிட்டனின் மையப்பகுதியிலேயே எதிர்கொண்டார். ரோமானிய வசிப்பிடங்கள், நிலப்பகுதிகளை தீக்கிரையாக்கினர்.

எஸ்ஸெக்ஸில் உள்ள கோல்செஸ்டர் பகுதியில் இப்போதும் சில அடி அல்லது அரை மீட்டர் ஆழத்தில் பூமிக்கு அடியில் உள்ள பகுதி கருகிய நிலையில் இருப்பதை இதற்கு சான்றாக வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால், அங்கு பூமி கருகியதற்கு காரணம் பூடிக்காவின் படையினரா ரோமானியரா என்பது நிரூபிக்கப்படாத வரலாறாக பார்க்கப்படுகிறது.

அந்த காலத்தில் தேம்ஸ் நதிக்கரையில் அமைந்த புதிய ரோமானிய நகரான லண்டனியம், கமுலுடுனம் (தற்போதைய எஸ்ஸெக்ஸ் பகுதி) வர்த்தக பகுதியில், தங்களை தற்காத்துக் கொள்ள தேவைப்படும் பொருட்களை விட கொள்ளையடிப்பதற்கு ஏராளமான பொருட்கள் நிறைந்த இடமாக பூடிக்கா படையினரால் பார்க்கப்பட்டது.

அந்த நகரில் வாழ்ந்த சுமார் 30 ஆயிரம் பேர் கையில் கிடைத்த பொருட்களுடன் வசிப்பிடங்களை விட்டு ஓடினர். இந்த தகவல் நெடுந்தொலைவில் இருந்த ரோமானிய பிரிட்டன் ஆட்சியாளரின் செவிகளுக்கு எட்டியது.

கொடூர தாக்குதல்களின் உச்சம்

பூடிக்கா வரலாறு

பட மூலாதாரம், OXFORD ARCHAEOLOGY EAST

ஐசீனை பழங்குடி பெண்களின் மார்பகங்கள் அறுக்கப்பட்டு அவர்களின் வாயுடன் தைக்கப்பட்டது. பழங்குடிகளின் தோலுரிக்கப்பட்டு மரத்தூண்களில் மாட்டப்பட்டது, கொத்துக்கொத்தாக மனிதர்கள் அழிக்கப்பட்டது, இறை பலி என்ற பெயரில் நரபலி கொடுக்கப்பட்ட பழங்குடிகள், சொந்த மகள்களுக்கு நடந்த கூட்டுப்பாலியல் கொடூரம் என பல கொடுமைகளை பார்த்தவர் பூடிக்கா.

அத்தகைய கொடுமை புரிந்த ரோமானிய படையினர் தன் கண் முன்னே வீழ்த்தப்படுவதை பார்த்த மகிழ்ச்சியில் பூடிக்கா திளைத்ததாக கேஷஸ் டீயோ கூறுகிறார்.

இப்படியாக ரோமானிய பிரிட்டனின் இரண்டு பெரிய நகரங்கள் தீக்கிரையாக்கப்பட்ட பிறகும் பூடிக்கா படையினரின் பழிவாங்கும் வெறி தணியவில்லை.

தங்களுடைய முந்தைய தலைவனான பிரசுட்டாகஸ் போல, ரோமானிய பேரரசு அல்லது படையினர் எது செய்தாலும் அதை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் போக்கைக் கொண்டிருந்த பழங்குடிகளை தங்களுடைய எதிரிகளாக பூடிக்கா படையினர் பார்க்கத் தொடங்கினர்.

அப்படி ரோமானிய ஆளுகைக்கு ஆதரவாக இருந்த ‘கட்டுவெல்லாவ்னி’ பழங்குடிகள் அந்த கால பிரிட்டனின் தற்போதைய ஹெர்ட்ஃபோர்ஷையர் என்ற பகுதியில் வாழ்ந்தனர். அவர்களை இலக்கு வைத்து பூடிக்கா படையினர் வடமேற்கு திசை நோக்கி முன்னேறினர்.

அந்த பகுதிதான் ரோமானிய பிரிட்டனில், ரோமானியர்கள் குடியேறியிருந்த மூன்றாவது மிகப்பெரிய நகரம்.

கி.பி 60-61-ல் பூடிக்கா படையினர் தங்களை நோக்கி வருவதை அறிந்த கட்டுவெல்லாவ்னி பழங்குடிகள், தங்களை பாதுகாக்க ரோமானிய படையினரோ ஆட்சியாளர்களோ முன்வராததை அறிந்தனர். வேறு வழியின்றி வசிப்பிடத்தை விட்டு வெளியேறினர். அந்த நகரையும் பூடிக்காவின் கிளர்ச்சிக்குழு தீக்கிரையாக்கியதாக வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.

சிதறி ஓடிய ரோமானிய படையினர்

பூடிக்கா வரலாறு

பட மூலாதாரம், OXFORD ARCHAEOLOGY EAST

டாசிட்டஸ் கூற்றுப்படி, சுமார் 70 ஆயிரம் ரோமானியர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த மக்கள் பூடிக்கா கிளர்ச்சிக்குழு தலைமையிலான புரட்சிப்படையால் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டதாக கூட இருக்கலாம். ஆனால், ஒரு புரட்சி பழங்குடி குழுவால் தமது படையினர் ஆயிரக்கணக்கில் மடிவதை ரோமானிய ஜெனரல் சூட்டோனியஸ் பாலைனஸ் விரும்பவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனை ஆக்கிரமிக்க அனுப்பப்பட்ட துருப்புகள் குடும்பம், குடும்பமாக நீரோ ஆளுகைக்கே திரும்பி வந்ததை அவரால் ஏற்க முடியவில்லை.

பழங்குடி நிலங்களை ஆக்கிரமித்து அங்குள்ள மக்களை நாகரிகம் மிக்கவர்களாக மாற்ற முற்பட்ட ரோமானிய பேரரசின் நோக்கம் நிறைவேறாமல் பலவீனம் அடைவது குறித்து ஜெனரல் சூட்டோனியஸ் கவலை கொண்டார். அதுவும் ஒரு பெண்ணின் தலைமையில் எழுச்சி பெற்ற புரட்சிப்படையால் தமது படைகள் பலவீனம் அடைவதை, ‘மிகப்பெரிய அவமானம்” ஆக ரோமானிய பேரரசு கருதியது.

இதையடுத்து பூடிக்கா படையினரை எதிர்கொள்ள சூட்டோனியஸ் பாலைனஸின் பத்தாயிரம் துருப்புகள் தென்கிழக்கு பகுதியை நோக்கிப் புறப்பட்டனர்.

காடுகள் நிறைந்த திறந்தவெளி பிரதேசத்தில் துருப்புகள் வந்தபோது, பூடிக்காவின் படையினர் இரண்டு லட்சத்து முப்பதாயிரம் பேர்வரை இருந்ததாக அந்த நிகழ்வை தமது படைப்புகளில் பதிவிடுகிறார் கேஷஸ் டீயோ.

ரோமானிய துருப்புகளின் எண்ணிக்கை அளவில் சிறியதாக இருந்தாலும், போர் உத்தியில் அவர்களின் பாணி தொழில்முறை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட தாக்குதலின் வடிவமாக இருந்தது.

மறுமுனையில் பூடிக்காவின் பிரிட்டொன் (பூர்வகுடி மக்கள்) படையினர் வெறித்தனமான தாக்குதல்களில் வல்லவர்களாக இருந்தனர். ஆனால், அவர்களிடம் போர் தந்திர வழிமுறைகள் இல்லை. மனம் போன போக்கில் கண்ணில் பட்டவர்களை தாக்குவதே அவர்களின் இயல்பாக இருந்தது.

இந்த நிலையில், பூடிக்காவையும் அவரது லட்சக்கணக்கான படையினரையும் தங்களுக்கே உரிய போர் தந்திர உத்திகளைப் பயன்படுத்தி ரோமானிய படையினர் சுற்றி வளைத்து பலவீனமாக்கினர்.

எதிர் தாக்குதல் நடத்த முடியாத வகையில், பிரிட்டொன் மக்களின் குடும்பங்களை ரோமானியர்கள் கேடயமாக்கினர். தப்பிச்செல்ல வழியின்றி நாலா பக்கமும் சூழப்பட்ட பூடிக்கா படையினரை, கோமானிய படையினர் கொத்துக் கொத்தாக அழித்தொழித்ததாக கேஷஸ் டீயோ குறிப்பிடுகிறார்.

அப்படியென்றால் பூடிக்காவுக்கு என்ன ஆனது?

பூடிக்கா

இந்தக்கேள்வியை வரலாற்றாய்வாளர்கள் பலரும் எழுப்புகிறார்கள்.

பூடிக்கா வாழ்ந்த கால வரலாற்றுக் குறிப்புகளை எழுதிய கேஷஸ் டீயோ, “ரோமானியர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட பூடிக்கா, உடல் நலக்குறைவால் பின்னாளில் இறந்திருக்கலாம் என்றும் அவரது மகள்கள் வரலாற்றுச் சுவடுகளில் இடம்பெறாமல் போயிருக்கலாம்,” என்றும் குறிப்பிடுகிறார்.

வேறு சில ஆய்வாளர்கள், “போரில் தோல்வியுற்ற அல்லது பலவீனம் அடைந்த அதிர்ச்சியில் பூடிக்கா விஷம் அருந்தி தற்கொலை செய்திருக்கலாம்,” என்று அனுமானிக்கிறார்கள்.

பூடிக்காவின் பின்னால் எழுச்சியுடன் போரிட்ட பழங்குடிகள், இனப்படுகொலைக்கு நிகராக அழித்தொழிக்கப்பட்டிருக்கலாம் என்பது கேஷஸின் கூற்று.

இந்த மோதலுக்குப் பிறகு, பூடிக்காவின் துருப்புகள் ஆக்கிரமித்த ட்ரைனோவான்டெஸ் பகுதியும் ஐசீனையும் பூர்வகுடிகள் வாழ்ந்த பகுதிகள் முற்றிலுமாக அழிந்து போனது வரலாறு.

அந்த வரலாறுக்கு சான்றாக, இன்றும் அந்த பகுதிகளில் ரோமானியர்கள் தங்களுடைய படை பலத்தை எதிர்கால சந்ததிக்கு பறைசாற்ற கட்டிச் சென்ற மிகப்பெரிய கோட்டைகள் உள்ளன.

பூடிக்காவின் துணிச்சல் மிக்க வீரத்தால் ஈர்க்கப்பட்ட பல திரைப்படங்கள், புத்தகங்கள் பிற்காலத்தில் வெளிவந்தன. அவைதான் இன்றளவும், மறைந்து போன ஐசீனை பழங்குடிகளின் துணிச்சலை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.

இரும்பு யுகத்தில் ரோமானிய துருப்புகளை எதிர்கொண்ட முதல் வீர மங்கை பூடிக்கா கிடையாது. முதல் நூற்றாண்டில் தற்போதைய வடக்கு இங்கிலாந்தில் வாழ்ந்த பிரிகான்டீஸ் பழங்குடிகளின் பகுதியை கார்ட்டிமாண்டுவா என்ற ராணி ஆண்டிருக்கிறார். ஆனால், அவர் ரோமானிய பிரிட்டன் ஆளுகையுடன் சமாதானமாகி விசுவாசத்தை காட்டியதால் அவரது வீரம் வரலாற்றில் அதிகமாக பேசப்படவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »