Press "Enter" to skip to content

காதலுக்காக தன் அரச குடும்பத் தகுதியை விட்டுக்கொடுக்கும் ஜப்பான் இளவரசி

பட மூலாதாரம், Getty Images

பல ஆண்டு கால சர்ச்சைக்குப் பிறகு ஜப்பானின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மகோ (Princess Mako) தன் வகுப்புத் தோழரும், சாமானியருமான கெய் கொமுரு (Kei Komuro) என்பவரை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்.

அவர்கள் வரும் அக்டோபர் 26ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக ஜப்பானின் அரச குடும்ப விவகாரங்கள் முகமை (இம்பீரியல் ஹவுஸ்ஹோல்ட் ஏஜென்சி) கூறியுள்ளது.

கொமுரு மற்றும் இளவரசி மகோ கடந்த 2018ஆம் ஆண்டே திருமனம் செய்து கொள்ள தீர்மானித்திருந்தனர். ஆனால் கொமுருவின் குடும்பம் சில நிதி சார் பிரச்சனைகளை எதிர்கொண்டதால் திருமணம் ஒத்திப் போனது.

திருமணத்துக்குப் பிறகு இந்த ஜோடி அமெரிக்காவில் குடியேறவிருக்கிறது. அங்கு கொமுரு வழக்குரைஞராக பணியாற்றி வருகிறார்.

இந்த இளம் காதலர்கள் மீது அபரிமித ஊடக வெளிச்சம் பட்டதால், இளவரசி மகோ மன அழுத்தத்துக்கு ஆளானார் என்று ஜப்பானின் அரச குடும்ப விவகார முகமை கூறியுள்ளதாக, ஜப்பானின் க்யோடோ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

கொமுரு மற்றும் இளவரசி மகோ கடந்த 2012ஆம் ஆண்டு, டோக்யோவில் உள்ள சர்வதேச கிறிஸ்துவ பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக சந்தித்தனர்.

2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள நிச்சயித்துக் கொண்டனர். 2018ஆம் ஆண்டு திருமணம் நடப்பதாக இருந்தது. கொமுருவின் தாய் நிதி நெருக்கடியில் இருந்த விஷயம் வெளி வரத் தொடங்கியது. அவர் (கொமுருவின் அம்மா) தனக்கு முன்பு நிச்சயிக்கப்பட்டிருந்த நபரிடமிருந்து பெற்ற கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறப்பட்டது.

இவர்கள் திருமணத்துக்கு முன்பே, கடன் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என, இளவரசி மகோவின் தந்தை ஃபுமிஹிடோ கூறினார் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

ஜப்பானிய அரச குடும்பத்து வழக்கப்படி, அரச குடும்பத்திலிருந்து வெளியேறுவோருக்கு 150 மில்லியன் யென் (சுமார் 1.3 மில்லியன் அமெரிக்க டாலர்) பணம் கொடுப்பது வழக்கம். அதை இளவரசி மகோ பெறப்போவதில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

அதே போல, அவரது திருமணத்தில் ஜப்பானிய அரச குடும்பத்தின் வழக்கங்கள் சடங்குகள் பின்பற்றப்படப் போவதில்லை என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை இந்த இரு விஷயங்களையும் இளவரசி மகோ தவிர்த்தால், ஜப்பானிய அரச குடும்பத்திலிருந்து வெளியேறி பணத்தை பெறாத, சடங்குகளை மேற்கொள்ளாத முதல் பெண் ஆவார் மகோ.

போனிடெய்ல்' சிகை அலங்காரத்துடன் கெய் கொமுரு

பட மூலாதாரம், Getty Images

ஜப்பானிய சட்டப்படி, அந்நாட்டின் அரச குடும்பத்தை சேர்ந்த பெண்கள், பொது மக்களில் ஒருவரை திருமணம் செய்து கொண்டால், அப்பெண் தன் அரச குடும்ப தகுதியை இழந்துவிடுவார். ஆனால் ஒரு அரச குடும்பத்து ஆண், ஒரு வெகுஜன பெண்ணை திருமணம் செய்து கொண்டால், அவர் தன் அரச குடும்ப தகுதியை இழக்கமாட்டார்.

கொமரு சமீபத்தில் ‘போனிடெய்ல்’ சிகை அலங்காரம் செய்திருந்த படம் இணையத்தில் பரவியது. தோற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஜப்பானில், கொமரு இளவரசி மகோவை திருமணம் செய்து கொள்ள தகுதியானவர் அல்ல என்பதற்கு இந்த வகையான சிகை அலங்காரங்களே சாட்சி என சிலர் கருதுகின்றனர்.

கொமருவுக்கு ஜப்பானிய அரச குடும்பத்துடன் இருக்கும் நெருக்கம் காரணமாகத்தான் அமெரிக்க சட்டப் பள்ளியில் இடம் கிடைத்ததாகவும் சில தலைப்புச் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மகோ மற்றும் கொமரு இருவரும் திருமணத்துக்குப் பிறகு அமெரிக்காவில் வாழவிருப்பதால், அவர்களை செல்லமாக ஜப்பானின் ஹேரி மற்றும் மேகன் என்று அழைக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »