Press "Enter" to skip to content

மகாத்மா காந்தி முதல் பராக் ஒபாமா வரை – அமைதிக்கான நோபல் பரிசு குறித்த 7 சர்ச்சைகள்

பட மூலாதாரம், Getty Images

வெள்ளியன்று அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவர் யார் என்று அறிவிக்கப்படும். ஸ்வீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி, தொழிலதிபர், கொடையாளர் அல்ஃப்ரெட் நோபல் உருவாக்கிய நோபல் பரிசு ஆறு துறைகளுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் அதில் அதிக சர்ச்சைக்குள்ளானது அமைதிக்கான நோபல் பரிசுதான்.

இதோ அந்த சர்ச்சையான அமைதிக்கான நோபல் பரிசுகள் மற்றும் வழங்கப்படாமல் விடப்பட்ட அந்த ஒரு பரிசு குறித்த விவரம்.

பராக் ஒபாமா

ஒபாமா

பட மூலாதாரம், Getty Images

2009ஆம் ஆண்டு பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபோது பலரும் குழப்பம் அடைந்தனர். ஏன் ஒபாமாவேகூட குழப்பம் அடைந்தார்.

அவர் 2020ஆம் ஆண்டு தனது சுயசரிதையில், நோபல் பரிசு குறித்த அறிவிப்பை கேட்ட பிறகு “நோபல் பரிசா எதற்கு?” என்று தனக்கு தோன்றியதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த சமயத்தில் அவர் பதவியேற்று ஒன்பது மாதங்கள் மட்டுமே ஆகியிருந்தது. எனவே பலரும் அந்த முடிவு அவசரப்பட்டு எடுக்கப்பட்டு ஒரு முடிவு என கருதினர். அதாவது ஒபாமா பதவியேற்று 12 நாட்களில் அந்த விருதுக்கான பரிந்துரை செய்வதற்கான காலக்கெடு முடிவடைந்தது.

2015ஆம் ஆண்டு நோபல் இன்ஸ்டிட்யூடின் முன்னாள் இயக்குநர் கெய்ர் லுடென்ஸ்டட், அந்த விருது குறித்து குழு வருத்தப்பட்டதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

ஒபாமாவின் இரு பதவிகாலத்தில் ஆப்கானிஸ்தான், இராக், சிரியா போன்ற நாடுகளில் அமெரிக்க படைகள் சண்டையிட்டு கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

யாசர் அராஃபத்

யாசர் அராஃபத், இஸ்ரேலிய பிரதமர் யிட்சாக் ராபின் மற்றும் இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஷிமோன் பெரெஸ்

பட மூலாதாரம், Getty Images

ஒஸ்லோ அமைதி ஒப்பந்தம் ஏற்பட பணியாற்றியதற்காக 1994ஆம் ஆண்டு மறைந்த பாலத்தீனிய தலைவர் யாசர் அராஃபத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தது.

இவருடன் அப்போதைய இஸ்ரேலிய பிரதமர் யிட்சாக் ராபின் மற்றும் இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஷிமோன் பெரெஸ் ஆகியோருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த ஓஸ்லோ ஒப்பந்தம் இஸ்ரேல் பாலத்தீன பிரச்னையை முடிவுக்கு கொண்டுவரும் என்ற நம்பிக்கையை வழங்கியது.

ஆனால் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கியது குறித்து இஸ்ரேல் மற்றும் பிற நாடுகள் கேள்விகளை எழுப்பின.

நோபல் பரிசு குழுக்குள்ளேயே இது பல குழப்பத்தை ஏற்படுத்தியது.

குழுயை சேர்ந்த நார்வே நாட்டு அரசியல்வாதியான கரே க்றிஸ்டியான்சன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குழுயிலிருந்து வெளியேறினார்.

ஆங் சாங் சூச்சி

சூச்சி

பட மூலாதாரம், Getty Images

மியான்மரில் ராணுவத்திற்கு எதிரான வன்முறையற்ற அவரின் போராட்டத்திற்காக 1991ஆம் ஆண்டு சூச்சிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஆனால் 20 வருடம் கழித்து சூச்சியின் சொந்த நாட்டில் முஸ்லிம் ரோஹிஞ்சா மக்கள் கூட்டாக கொலை செய்யப்பட்டதற்கும் மனித உரிமை மீறல்களுக்கு உட்படுத்தப்பட்டதற்கும் எதிராக சூச்சி எதுவும் பேசாமல் இருந்த்தற்காக கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டார். ரோஹிஞ்சா மக்கள் கொல்லப்பட்டதை ஐநா ஓர் `இனப்படுகொலை` என்றே சொல்கிறது.

அவருக்கு கொடுத்த நோபல் பரிசை திரும்ப பெற வேண்டும் என்றும் கருத்துக்கள் வந்தன ஆனால் நோபல் பரிசில் அம்மாதிரியான விதிமுறைகள் இல்லை.

அபிய் அகமது

அபி அகமது

பட மூலாதாரம், Getty Images

2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எத்தியோப்பியாவின் பிரதமருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அண்டை நாடான எரித்ரியாவுடனான நீண்ட நாள் எல்லை பிரச்னையை தீர்க்க அவர் எடுத்த நடவடிக்கைகளுக்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டது.

ஆனால் கிட்டதட்ட ஒரு வருடம் கழித்து அந்த முடிவு சரியான முடிவுதானா என்று கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஆனால் எத்தியோப்பியாவில் உள்ள டிக்ரேயின் வடக்கு பகுதியில் படைகளை அமர்த்தியதற்காக அபிய் அகமது மீது சர்வதேச நாடுகள் பல விமர்சனங்களை வைத்ததே இதற்கு காரணம்.

அந்த சண்டையில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். ஐநா அதை மனதை தைத்த பேரழிவு என்று சொல்லியது.

வங்காரி மாத்தாய்

வங்காரி மாதாய்

பட மூலாதாரம், Getty Images

மறைந்த கென்ய செயற்பாட்டாளர் வங்காரி மாத்தாய்தான் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆப்ரிக்க பெண். இவருக்கு 2004ஆம் ஆண்டு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

ஆனால் பின்னாளில் அவர் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் குறித்து கூறிய ஒரு கருத்தால் அவரின் வெற்றி குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

கறுப்பின மக்களை அழிக்க எய்ட்ஸ் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஓர் உயிரியல் ஆயுதம் என்று அவர் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு எந்த ஆதரத்தையும் அவரால் வழங்க முடியவில்லை.

ஹென்ரி கிசிங்கர்

லெ டக் தோ பரிசை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.

பட மூலாதாரம், Getty Images

1973ஆம் ஆண்டு அப்போது அமெரிக்க வெளியுறவுச் செயலராக இருந்த ஹென்ரி கிசிங்கருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது

ஆனால் அமெரிக்க வெளியுறவு கொள்கை வரலாற்றில் மிக சர்ச்சையான பக்கங்களோடு தொடர்புடைய ஒருவருக்கு இந்த பரிசு வழங்கப்பட்டது பல கேள்விகளை எழுப்பியது.

கம்போடியாவில் ரகசிய குண்டு எய்தல், தென் அமெரிக்காவில் கொலை குற்றம் புரிந்த ராணுவத்திற்கு ஆதரவு போன்ற பல நடவடிக்கைகளோடு தொடர்புடையவராக இருந்தார் கிசிங்கர்.

இவரோடு வட வியட்நாமின் தலைவர் லெ டக் தோவிற்கும் பரிசு வழங்கப்பட்டது. வியட்நாம் போரை நிறுத்தும் ஒப்பந்தம் ஏற்படும் முயற்சியில் ஈடுபட்ட காரணத்திற்காக இவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டது. ஆனால் லெ டக் தோ பரிசை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.

நோபல் பரிசு குழுயை சேர்ந்த இருவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகினார். நியூயார்க் டைம்ஸ் இந்த செய்தியை குறிப்பிட்டு நோபல் போர் பரிசு என குறிப்பிட்டது

காந்திக்கு பரிசு இல்லை

காந்தி

பட மூலாதாரம், Getty Images

நோபல் பரிசு வழங்கப்பட்டு மட்டும் சர்ச்சை ஏற்படவில்லை.

அது வழங்கப்படாமலும் சர்ச்சை ஏற்பட்டது. ஆம் இந்திய சுதந்திர போராட்டத்தில் அகிம்சை முறையில் போராடிய காந்திக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை.

அமைதிக்கான நோபல் பரிசுக்காக காந்தியின் பெயர் பலமுறை பரிந்துரை செய்யப்பட்ட பின்னும் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை.

2006ஆம் ஆண்டு அப்போது நோபல் பரிசு குழுயின் தலைவராக இருந்த நார்வே நாட்டு வரலாற்றாளர் கெய்ர் லுடென்ஸ்டட், நோபல் வரலாற்றில் காந்தியின் சாதனைக்கு நோபல் பரிசு கிடைக்காத்து ஒரு மிகப்பெரிய புறக்கணிப்பு என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »