Press "Enter" to skip to content

உலகளவில் கணவர்களை காட்டிலும் மனைவிகள் குறைவாக பணம் ஈட்டுவது ஏன்? – வெளியான ஆய்வு

  • கீதா பாண்டே
  • பிபிசி

பட மூலாதாரம், Getty Images

உங்கள் கணவருக்கு சமமாக நீங்கள் சம்பாதிக்கிறீர்களா?

ஒரு புதிய உலகளாவிய ஆய்வு, தம்பதியினர் வாங்கும் ஊதியத்தில் உள்ள ஏற்றத்தாழ்வைப் பற்றி அலசியதில், பெரும்பாலான மனைவிகள் கணவர்களைவிட குறைவாகவே ஊதியம் பெறுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

உலக அளவில் 1973 முதல் 2016 வரை நான்கு தசாப்தங்களுக்கு 45 நாடுகளின் பொதுத் தரவுகளையும் ஆவணங்களையும் ஆராய்ந்ததில் இந்த முடிவுகள் தெரிய வந்துள்ளன.

ஒரு குடும்பத்திற்குள் பாலின ரீதியான ஊதிய ஏற்றத்தாழ்வு இருக்கிறதா என்று அலசும் முதல் உலகளாவிய ஆராய்ச்சி இது.

இந்திய மேலாண்மைக் கழகத்தைச் சேர்ந்த பொது திட்டவரைவியல் மையத்தின் பேராசிரியர்கள் ஹேமா சுவாமிநாதன் மற்றும் தீபக் மால்கன் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். 18 முதல் 65 வயது வரையிலான இருபால் தம்பதிகள் வசிக்கும் 2.85 வீடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. லக்சம்பர்க் ஊதிய ஆராய்ச்சி என்ற ஒரு தொண்டு நிறுவனத்தின்மூலம் தரவுகள் சேமிக்கப்பட்டன.

“பொதுவாக வறுமை என்று பேசும்போது அந்த மொத்த குடும்பமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதாவது, ஒரு குடும்பத்துக்குள், ஊதியங்கள் சேகரிக்கப்பட்டு பிறகு பகிர்ந்தளிக்கப்படுகின்றன என்ற ஒரு அனுமானத்தால் வரும் வழக்கம் இது. ஆனால் வீடு என்பது ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த அமைப்பு, அதை நாங்கள் புரிந்துகொள்ள விரும்பினோம்” என்று ஹேமா சுவாமிநாதன் விளக்குகிறார்.

இந்த ஆய்வு, குடும்பத்தை “கறுப்பு பெட்டி” என்று விவரிக்கிறது. “நாம் யாருமே அந்தப் பெட்டிக்குள் பார்ப்பதில்லை. எனவே உள்ளேயும் பார்த்தால் நம் புரிதல் மாறுமா என்று யோசித்தோம்” என்கிறார் ஹேமா சுவாமிநாதன்.

பணியிடம்

பட மூலாதாரம், Getty Images

பொதுவாக இந்திய வேலைக்களத்தில் பாலின ஏற்றத்தழ்வுகள் உண்டு என்பது அனைவரும் அறிந்ததுதான். இங்கு பெண்கள் வேலைக்குச் செல்வது குறைவு, அப்படியே இருந்தாலும் அவர்களில் முழுநேர வேலை செய்பவர்கள் இன்னமும் குறைவு.

இதுபற்றிய உலகளாவிய சூழலை இரு பேராசிரியர்களும் அலச விரும்பினார்கள். “டென்மார்க், ஸ்வீடன், ஐஸ்லாந்து, நார்வே, பின்லாந்து போன்ற நார்டிக் நாடுகள், பாலின சமத்துவத்தின் கலங்கரை விளக்கமாகக் கொண்டாடப்படுகின்றன. அந்த நாடுகளிலும் வீடுகளில் ஊதிய ஏற்றத்தாழ்வு உண்டா என்று தெரிந்துகொள்ள இந்த ஆய்வை மேற்கொண்டோம்” என்கிறார் ஹேமா சுவாமிநாதன்.

பொதுவான ஏற்றத்தாழ்வு, குடும்பத்துக்குள்ளே இருக்கும் ஏற்றத்தாழ்வு என்று இரு அளவீடுகளோடு உலக நாடுகளை இவர்கள் வரிசைப்படுத்தியிருக்கிறார்கள். எல்லா நாடுகளிலும் பல ஆண்டுகளாகவே பணம் படைத்த வீடுகளிலும் ஏழ்மையான வீடுகளிலும் இந்த ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்பதை அவர்களின் ஆய்வு கண்டறிந்திருக்கிறது.

“மிகவும் சமீபகாலத்தில் கிடைத்த தரவுகளின்படி, ஒரு குடும்பத்தில் ஆண் பெண் இருவருமே வேலைக்குப் போகிறார்கள் என்றால், அது எந்த நாடாக இருந்தாலும், எந்தப் பகுதியாக இருந்தாலும் பெண்களை விட ஆண்கள்தான் அதிகமாக சம்பாதிக்கிறார்கள். பாலின ஏற்றத்தாழ்வு உலக அளவில் மிகக் குறைவாக உள்ள நார்டிக் நாடுகளிலும் இந்த ஏற்றத்தாழ்வு உண்டு. உலக சாராசரியைவிட பெண்களின் பங்கு இந்த நாடுகளில் 50% குறைவு” என்கிறார் பேராசிரியர் மால்கன்.

வீட்டில் பணி

பட மூலாதாரம், Getty Images

இந்த ஏற்றத்தாழ்வுக்கான சில காரணங்கள் உலக அளவில் பொதுவானவை. ஆண்கள் பொருள் ஈட்டுபவர்கள் என்றும் பெண்கள் குடும்பத்தைப் கவனிப்பவர்கள் என்றும் பல கலாசாரங்களில் சொல்லப்படுகிறது. பல பெண்கள் குழந்தை பிறந்தபிறகு ஒரு இடைவெளியை எடுத்துக்கொள்கிறார்கள் அல்லது வேலையை விட்டுவிடுகிறார்கள். பல இடங்களில் பாலின ஊதிய இடைவெளி உள்ளது. ஊதியமில்லாத வீட்டு வேலையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பும் இன்றும் பெண்களின் கடமையாகவே பெரும்பாலும் இருக்கிறது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2018ஆம் ஆண்டு அறிக்கை, ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்கள் மூன்று மடங்கு அதிகமாக (76.2%) ஊதியமற்ற கவனிப்பு வேலைகளைச் செய்கிறார்கள் என்று தெரிவிக்கிறது. ஆசிய பசிபிக் நாடுகளில் இது 80 சதவிகிதமாக இருக்கிறது.

“இதுபோன்ற வேலைகள் இருப்பதால் ஊதியத்துடன் கூடிய வேலைத்தளங்களுக்குள் பெண்கள் நுழைவதும் முன்னேறுவதும் அதிக அளவில் தடைபடுகிறது” என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

ஒரு பெண்ணுக்கான சம்பளம் குறையும்போது, அது பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் குடும்பத்தின் பாலின சமத்துவத்திலும் பிரச்னைகளை ஏற்படுத்தி பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

“ஒரு பெண் வீட்டிற்குள் வேலை செய்வது யார் கண்ணுக்கும் தெரிவதில்லை. ஆனால் ஊதியம் அப்படியல்ல, அது கணக்கிடக்கூடிய ஒன்று. ஆகவே ஒரு பெண் அதிகமாக சம்பாதித்து அந்த வீட்டிற்குள் கொண்டு வரும்போது அவளுக்கு அந்தக் குடும்பத்தில் ஒரு குரல் கிடைக்கிறது. அவளது இருப்பை அது வலுப்படுத்துகிறது” என்கிறார் பேராசியர் ஹேமா சுவாமிநாதன்.

“அதிகமாக சம்பாதிக்கும் பெண், பேச்சுவார்த்தையின்போது தனக்கானவற்றை உரக்கக் கேட்க முடியும், அது ஒரு அதிகாரத்தைத் தரும். மோசமான சூழ்நிலையிலிருந்து வெளியேறும் பொருளாதார சுதந்திரத்தையும் அது தரும்” என்று அவர் விளக்குகிறார்.

பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

இந்த ஏற்றத்தாழ்வு நீண்டகால பொருளாதாரப் பாதுகாப்பையும் பாதிக்கிறது என்கிறார் பேராசிரியர் மால்கன். ஓய்வூதியத் திட்டங்கள் ஊதியத்தோடு தொடர்புடையவை என்பதால் அவர்களது முதுமைக்காலத்தில் வரும் பணம் குறைகிறது. ஊதியம் குறைவு எனும்போது சேமிப்பும் சொத்து சேர்ப்பதும் குறைகிறது.

இந்த அறிக்கை ஒரு ஆறுதலான அம்சத்தையும் கண்டறிந்திருக்கிறது – இந்த பாலின ஏற்றத்தாழ்வு 1973 முதல் 2016 வரையிலான 40 ஆண்டு காலகட்டத்தில் 20% வரை குறைந்திருக்கிறது.

“பெரும்பாலான உலக நாடுகளில் பொருளாதார முன்னேற்றமும் வளர்ச்சியும் ஏற்பட்டதால் பெண்கள் வேலைக்குச் செல்வது அதிகரித்திருக்கிறது. பெண்களுக்கான திட்டங்கள் வந்ததால் இடைவெளி குறைந்திருக்கிறது. ஒரே மாதிரியான வேலை என்றால் ஒரே மாதிரியான ஊதியம் கோரி பல இயக்கங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இவை எல்லாம் ஏற்றத்தாழ்வைக் குறைத்திருக்கின்றன” என்கிறார் பேராசியர் ஹேமா.

இது சற்று குறைந்திருந்தாலும் இப்போது இருப்பதே பெரிய ஏற்றத்தாழ்வுதான் என்று அவர் விளக்குகிறார்.

“அரசுகள் சொன்னதை செய்வதில்லை. வீட்டிலும் கவனிப்பிலும் ஊதியமின்றி வேலை செய்யும் பெண்களை நிறுவனங்கள் வேலைக்கு எடுப்பதில்லை. ஆகவே நாம் சில கேள்விகள் கேட்டாகவேண்டும். பெண்களின் வேலைக்கு அங்கீகாரம் இருக்கிறதா? குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் உதவியாக இருக்கும்படியான வேலைத்திட்டங்கள் நடைமுறையில் உண்டா? வீட்டு வேலையில் உதவி செய்யும்படி ஆண்களையும் வளர்க்கவேண்டியிருக்கிறது. அரசுகளும் சமூகமும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. இந்த ஏற்றத்தாழ்வு இப்படியே இருக்கக்கூடாது” என்கிறார் பேராசிரியர் ஹேமா சுவாமிநாதன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »