Press "Enter" to skip to content

சீனாவின் பருவநிலைக் கொள்கை பற்றி உலகம் ஏன் கவலைப்படவேண்டும்?

  • டேவிட் பிரௌன்
  • பிபிசி நியூஸ்

சீனாவின் கார்பன் உமிழ்வு அதிவேகமாக அதிகரிக்கிறது. மற்ற நாடுகளின் கார்பன் உமிழ்வு அளவு மிக சாதாரணமாகத் தோன்றும் அளவில் இது உள்ளது.

சீனாவின் கார்பன் உமிழ்வு அளவில் பெரிய அளவு குறையாமல் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் உலகம் வெல்ல முடியாது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

2030க்கு முன்பாக தங்கள் கார்பன் உமிழ்வு அளவு உச்சபட்ச அளவை எட்டிவிட வேண்டும் என்றும் 2060ல் கார்பன் சமநிலையை எட்டிவிட வேண்டும் என்பதும் சீனாவின் இலக்கு என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியுள்ளார். ஆனால், மிக அதீதமான இந்த இலக்கை சீனா எப்படி எட்டும் என்று அவர் கூறவில்லை.

காற்றுமண்டலத்தில் உமிழப்படும் கார்பன் அளவும், காற்று மண்டலத்தில் இருந்து மரங்கள் உள்ளிட்டவை உறிஞ்சிக்கொள்ளும் கார்பன் அளவும் சம நிலையில் இருப்பதுதான் கார்பன் சமநிலை எனப்படுகிறது.

அதிவேக வளர்ச்சி

எல்லா நாடுகளுக்குமே தங்கள் கார்பன் உமிழ்வு அளவை குறைப்பது சிக்கலாக உள்ளது. சீனா இதில் மிகப்பெரிய சவாலையே எதிர்கொண்டுள்ளது.

ஒரு சராசரி அமெரிக்கரால் உமிழப்படும் கார்பனைப் போல பாதி அளவு கார்பன்தான் ஒரு சராசரி சீனரால் உமிழப்படுகிறது.

ஆனால், சீனாவில் உள்ள 140 கோடி மக்கள் தொகையும், அதிவேக பொருளாதார வளர்ச்சியும் சேர்ந்து நாட்டின் ஒட்டுமொத்த உமிழ்வு அளவை மற்ற நாடுகளைவிட அதிகரித்துள்ளன.

Your device may not support this visualisation

உலகிலேயே கரியமில வாயுவை அதிகம் உமிழும் நாடாக 2006ல் ஆனது சீனா. தற்போது உலகெங்கிலும் உமிழப்படும் மொத்த பசுமை இல்ல வாயுக்களில் கால் பங்கு சீனாவில் இருந்துதான் வெளியாகிறது.

பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடக்கவுள்ள சிஓபி26 என்று பெயரிடப்பட்ட ஐ.நா. பருவநிலை உச்சி மாநாட்டில் சீனாவின் உமிழ்வு விஷயம் தீவிர பரிசீலனைக்கு உள்ளாகும் என்று தெரிகிறது.

அதாவது இந்த உமிழ்வுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான சீனாவின் வாக்குறுதிகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

2015ம் ஆண்டின் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிற நாடுகளைப் போலவே, தொழில்மயமாக்கலுக்கு முந்தைய நிலையை ஒப்பிட உலகின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரிக்கு மேல் அதிகரிக்காமல் தடுப்பதற்குரிய மாற்றங்களை செய்வதாக சீனா ஒப்புக்கொண்டுள்ளது.

2020ம் ஆண்டில் சீனா மேலும் வலுவான வாக்குறுதியை அளித்தது. ஆனால், பருவநிலை மாற்றம் தொடர்பான அந்த இலக்குகளை அடைய சீனா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் மிகவும் போதுமானவை அல்ல என்று கூறுகிறது ‘கிளைமேட் ஆக்ஷன் டிராக்கர்’ என்ற அமைப்பு. உலக அளவிலான விஞ்ஞானிகள் மற்றும் கொள்கை வல்லுநர்களைக் கொண்டது இந்த அமைப்பு.

Chart showing China's emissions 1990 to 2030.
Presentational white space

நிலக்கரியில் இருந்து விலகல்

சீனாவின் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவது சாத்தியம்தான் என்று கூறும் வல்லுநர்கள் ஆனால், அதற்கு தீவிரமான மாற்றங்கள் தேவை என்கிறார்கள்.

அந்நாட்டின் முக்கிய ஆற்றல் மூலாதாரமாக நிலக்கரியே நீண்ட காலமாக உள்ளது.

Chart showing China's dependence on coal
Presentational white space

நிலக்கரி பயன்பாட்டை 2026ல் இருந்து படிப்படியாக குறைத்துக்கொள்வதாகவும், வெளிநாடுகளில் நிலக்கரி மூலம் இயங்கும் திட்டங்களை கட்டமைக்கப்போவதில்லை என்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறுகிறார். ஆனால், அரசாங்கங்களும், செயற்பாட்டாளர்களும் இந்த நடவடிக்கை போதுமானது அல்ல என்கிறார்கள்.

மின்சார உற்பத்திக்கு நிலக்கரியைப் பயன்படுத்துவதை 2050 வாக்கில் முழுமையாக சீனா நிறுத்திவிடவேண்டும். அதற்குப் பதிலாக அணுசக்தி அல்லது புதுப்பிக்கவல்ல எரிசக்தி ஆகியவற்றைப் பயன்படுத்தவேண்டும் என்று பெய்ஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், நிலக்கரி மூலம் இயங்கும் மின்சார நிலையங்களை மூடுவதற்குப் பதிலாக 60க்கும் மேற்பட்ட இடங்களில் நிலக்கரி மூலம் இயங்கும் புதிய அனல் மின் நிலையங்களை சீனா அமைத்துவருகிறது. இந்த புதிய மின் நிலையங்கள் பலவற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட உலைகள் அமைக்கப்படுகின்றன.

Map showing new coal-fired power stations being built across China
Presentational white space

புதிதாக கட்டப்படும் அனல் மின் நிலையங்கள் பொதுவாக 30-40 ஆண்டுகளுக்கு செயல்படும்.

எனவே கார்பன் உமிழ்வை சீனா குறைக்கவேண்டுமானால், புதிய நிலக்கரி அனல் மின் நிலையங்களின் திறனைக் குறைக்கவேண்டும்; பழைய நிலையங்களை மூடவேண்டும் என்கிறார் ஆய்வாளர் பிலிப்பி சியாய்ஸ். பாரிசில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் என்விரோன்மென்ட் அன்ட் கிளைமேட் சயின்ஸ்’ கல்வி நிலையத்தை சேர்ந்தவர் இவர்.

சில மின் நிலையங்களில் புதிய தொழில்நுட்பங்களின் உதவியோடு மின் உற்பத்தித் திறனை அதிகரித்து, கார்பன் உமிழ்வு அளவை குறைக்க முடியும். ஆனால், இதை பெரிய அளவில் செய்வதற்கான தொழில்நுட்பம் இப்போதுதான் உருவாகிவருகிறது.

கரியமில வாயுவை அதிகம் உமிழ்வதன் மூலம் தனது பொருளாதாரத்தை மேம்படுத்தி வறுமையைக் குறைப்பது என்ற மேற்கத்திய நாடுகள் கடந்த காலத்தில் பின்பற்றிய உத்தியைப் பின்பற்ற தங்களுக்கு உரிமை உள்ளது என்கிறது சீனா.

குறுகிய காலக் கண்ணோட்டத்தில், வரும் குளிர்காலத்தில் மின்வெட்டு வருவதைத் தவிர்ப்பதற்காக நிலக்கரி சுரங்கங்களில் உற்பத்தியை அதிகரிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது சீனா. கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக பல கனரகத் தொழில்களில் தேவை அதிகரித்துள்ளதை அடுத்து நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களில் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

பசுமை ஆற்றலுக்கு மாறும் சீனா

2050 வாக்கில் 90 சதவீத மின்சாரம் அணு சக்தி மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் மூலங்கள் வழியாக வரவேண்டும் என்கிறார்கள் சிங்குவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் சோலார் பேனல், பெரிய மின்கலவடுக்கு (பேட்டரி)கள் போன்ற பசுமை தொழில்நுட்பங்களில் சீனா காட்டும் முனைப்பு உதவியாக இருக்கும்.

பல சீன நகரங்களில் இருக்கும் காற்று மாசுபாட்டினை கட்டுப்படுத்துவதற்காகவே சீனா இந்த பசுமைத் தொழில்நுட்பங்களை நோக்கிச் சென்றது சீனா.

ஆனால், இந்த புதிய தொழில்நுட்பங்கள் மூலம் லட்சக்கணக்கான சீனர்களுக்கு வேலைவாய்ப்பும் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்பும் இருப்பதாக சீன அரசு நம்புகிறது. இதன் மூலம் வெளிநாட்டில் இருந்து வரும் எண்ணெய், எரிவாயு இவற்றை நம்பி இருப்பதையும் குறைக்கலாம் என்று நினைக்கிறது அரசாங்கம்.

உலக அளவில் ஆற்றல் துறையில் ஏற்பட்டுவரும் இத்தகைய மாற்றங்களில் சீனா முன்னிலையில் இருக்கிறது என்கிறார் ஓவர்சீஸ் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த யூ கோ. “மேலும் மேலும் குறைந்த விலையில் பசுமை தொழில்நுட்பத்தை நாம் வழங்க முடிவதற்கான காரணங்களில் ஒன்று சீனா,” என்கிறார் அவர்.

Chart showing China's global lead in solar technology
Presentational white space

உலகில் எந்த நாட்டைவிடவும் அதிகமான சூரியவிசை மின்சாரத்தை தயாரிக்கிறது சீனா. அந்நாட்டின் மிக அதிகமான மக்கள்தொகையை வைத்துப் பார்க்கும்போது அது ஒன்றும் ஆச்சரியமான ஒன்று அல்ல. ஆனால், நாடு எதைநோக்கிச் செல்கிறது என்பதைக் காட்டுவதற்கான குறியீடு அது.

2020 ஆண்டு நிலவரப்படி உலகின் வேறு எந்த நாட்டைவிடவும் மூன்று மடங்குக்கும் அதிகமான காற்றாலைகளைக் கொண்டுள்ளது சீனா.

2030ல் பெட்ரோலியம் முதலிய நிலப்படிவு எரிபொருள் அல்லாத ஆற்றல் மூலங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவு மொத்த மின் உற்பத்தியில் 25 சதவீதம் இருக்கவேண்டும் என்கிறது சீனா. இந்த இலக்கினை முன்னதாகவே சீனா அடையும் என்று பல பார்வையாளர்களும் கூறுகிறார்கள்.

மின்சார வண்டி முனைப்பு

கார் விற்பனையில் மின்சார வண்டிகளின் விகிதம் எவ்வளவு உள்ளது என்ற அடிப்படையில் கணக்கிட்டால் உலகில் சீனா 7வது இடத்தில் உள்ளது. ஆனால், உண்மையான எண்ணிக்கையில் பார்த்தால், சீனாவில் உற்பத்தியாகிற, விற்பனையாகிற மின்சார கார்களின் எண்ணிக்கை வேறு எந்த நாட்டைவிடவும் மிகவும் அதிகம்.

தற்போது சீனாவில் விற்பனையாகும் 20 கார்களில் ஒன்று மின்சார கார்.

2035ம் ஆண்டில் சீனாவில் விற்பனையாகும் எல்லா கார்களும் முழுவதும் மின்சாரத்தில் இயங்குவதாகவோ அல்லது மின்சாரத்திலும், எண்ணெயிலும் இயங்குவதாகவோ இருக்கும் என தொழில்துறை பிரநிதிகளும், அரசு அதிகாரிகளும் கூறுகிறார்கள்.

Chart showing electric cars by market share
Presentational white space

கார்கள் மின்சாரத்தில் இயங்குவதாக மாறுவது எந்த அளவுக்கு கார்பன் உமிழ்வை குறைக்கும் என்பதை நேரடியாக சொல்லிவிட முடியாது. உற்பத்தி, கார்களை சார்ஜ் செய்வதற்கு எந்தவிதமான மின்சாரம் பயன்படுகிறது என்பதை எல்லாம்வைத்துதான் இதற்கான விடை இருக்கும்.

எப்படி இருந்தாலும், ஒரு மின்சார வண்டி தன் வாழ்நாளில் வெளியிடும் கார்பன் உமிழ்வின் அளவு கல்லெண்ணெய், டீசல் வண்டிகளின் உமிழ்வு அளவைவிட குறைவுதான் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மொத்த கார்பன் உமிழ்வு அளவில் கால் பங்குக்கு வண்டிகள் எண்ணெயை எரித்து வெளியிடும் புகையே காரணம் என்பதால் இந்த மாற்றம் மிக முக்கியமானது. அதிலும் சாலையில் செல்லும் வண்டிகளே பெரிய அளவில் உமிழ்கிறவை.

மீதம் உள்ள உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து உற்பத்தி செய்யும் மின்கலவடுக்கு (பேட்டரி) திறனைப் போல இரு மடங்கு மொத்த திறன் உள்ள மின்கலவடுக்கு (பேட்டரி)களை 2025ல் சீனா உற்பத்தி செய்யும்.

இதன் மூலம் முன்னெப்போதும் இல்லாத அளவில் புதுப்பிக்கவல்ல ஆற்றல் மூலம் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தை சேமித்துவைத்துப் பயன்படுத்த முடியும் என்று பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

பசுமையாகும் சீனாவின் நிலம்

பசுமை இல்ல வாயுகளை உமிழும் நிகர அளவு பூஜ்ஜியத்தை அடையும் என்று கூறுவதன் மூலம் சீனா உமிழ்வுகளே செய்யாது என்று பொருள் அல்ல.

தம்மால் முடிந்தவரை உமிழ்வுகளை சீனா கட்டுப்படுத்தும். மீதம் உள்ளவற்றை தாமே உறிஞ்சிக்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யும். பல்வேறு அணுகுமுறைகளை இணைத்து இந்த இலக்கை சீனா அடையும்.

தாவரங்கள் கரியமில வாயுவை உறிஞ்சிக்கொள்ளும் என்பதால், செடிகொடிகள் சூழ்ந்த பசுமைப் பரப்பின் அளவை அதிகரிப்பது நிகர உமிழ்வு அளவை குறைப்பதில் உதவும்.

இந்த விஷயத்திலும் சீனாவில் இருந்து வரும் செய்தி உற்சாகம் தருகிறது. மற்ற எந்த நாட்டைவிடவும் சீனா அதிவேகமாக பசுமையாகி வருகிறது. மண் அரிப்பு, மாசுபாடு ஆகியவற்றைக் குறைப்பதற்கான பல்வேறு காடுவளர்ப்புத் திட்டங்களின் மூலம் இது பெருமளவு சாத்தியமாகியுள்ளது.

Map showing China greening at a rapid rate.
Presentational white space

வயல்களில் ஆண்டுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட போகங்கள் விளைவிப்பதும் இதற்கு ஒரு காரணம். இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட போகம் விளைவதால் ஆண்டின் நீண்ட காலப்பகுதி நிலத்தில் பசுமை சூழ்ந்திருக்கும்.

அடுத்து என்ன?

இந்த முயற்சிகளில் சீனா வெற்றியடையவேண்டும் என்பதே உலகின் எதிர்பார்ப்பு.

“சீனா கார்பன் அளவை குறைக்காவிட்டால் நம்மால் பருவநிலை மாற்றத்தை வெல்ல முடியாது,” என்கிறார் லேன்செஸ்டர் சுற்றுச்சூழல் மையத்தை சேர்ந்த பேராசிரியர் டேவிட் டைஃபீல்டு.

நீண்டகால உத்திகளை செயல்படுத்துவதிலும், பெரிய அளவு மூலதனத்தை திரட்டுவதிலும் சீனாவுக்கு சில பெரிய சாதகங்கள் உள்ளன. ஆனால், இவற்றை செயல்படுத்துவதில் சீன அதிகாரிகள் பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »