Press "Enter" to skip to content

பாலியல் தொழிலை குற்றமாக்க சூளுரைத்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்

பட மூலாதாரம், Getty Images

பாலியல் தொழிலை குற்றமாக்குவேன் என்று சூளுரைத்திருக்கிறார் ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்.

வெலனிக்காவில் நடைபெற்று வந்த ஆளும் சோஷலிச கட்சியின் மூன்று நாள் மாநாட்டின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோ சான்செஸ், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்களின் நிலை அடிமைத்தனம் போல உள்ளது என்று குறிப்பிட்டார்.

ஸ்பெயினில் 1995ஆம் ஆண்டில் சட்டபூர்வமான தொழிலாக்கியது ஸ்பெயின் அரசு. அதைத்தொடர்ந்து 2016இல் ஐ.நா செய்த ஒரு மதிப்பீட்டில், ஸ்பெயினில் பாலியல் தொழில் உலகில் மட்டும் 3.1 பில்லியலன் பவுண்டுகள் அளவுக்கு பணப்புழக்கம் இருப்பதாக தெரிவித்தார்.

2009இல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், ஸ்பெயினில் மூன்றில் ஒருவர் பாலியல் உறவு கொள்ள பணத்தை செலவிடுவதாக கண்டறியப்பட்டது.

எனினும், அதே ஆண்டு வெளியான மற்றொரு ஆய்வுறிக்கையில், இந்த எண்ணிக்கை 39 சதவீதம் அளவுக்கு உயரலாம் என்று தெரிவித்தார். 2011ஆம் ஆண்டில் ஐ.நா நடத்திய ஆய்வில் உலகிலேயே தாய்லாந்து, பியூர்ட்டோ ரிகோவுக்கு அடுத்த நிலையில், மிகப்பெரிய பாலியல் தொழில் முகமையாக ஸ்பெயின் இருப்பதாக தெரிய வந்தது.

ஸ்பெயின் நாட்டில் தற்போது பாலியல் தொழில் ஒழுங்குமுறைப்படுத்தப்படவில்லை. அதனால் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் ஒரு பெண் கட்டண அடிப்படையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டால் கூட அவருக்கு தண்டனை பெற்றுத்தர சட்டத்தில் இடமில்லை. பொது இடங்களில் இத்தகைய தொழிலில் யாரும் ஈடுபடாதவரை சட்டம் இதில் தலையிட முடியாத நிலையே அங்கு நிலவுகிறது.

எனினும், பாலியல் தொழிலாளிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே தரகர் அல்லது முகவர் போல யாராவது செயல்பட்டால் அது சட்டவிரோதமாக கருதப்படும்.

ஸ்பெயின் நாட்டில் பாலியல் தொழில் குற்றமில்லை என்று அறிவிக்கப்பட்ட பிறகு, அந்த தொழில் உச்சபட்ச வளர்ச்சியை எட்டியிருக்கிறது. அந்த வகையில் ஸ்பெயினில் மட்டும் சுமார் மூன்று லட்சம் பெண்கள் முழு நேரமாக பாலியல் தொழிலைக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்பெயின் பாலியல்

பட மூலாதாரம், Getty Images

மேட்ரிட்டில் உள்ள பிபிசி செய்தியாளர் கய் ஹெட்ஜ்கோ, “2019இல் பாலியல் தொழிலில் சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்ட 896 பெண்களை காவல்துறையினர் மீட்டனர். அந்த பெண்களில் 89 சதவீதம் பேர் பாலியல் தொழிலுக்காக மாஃபியா கும்பல்களிடம் சிக்கியவர்கள்,” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்,” என்று கூறுகிறார்.

பாலியல் தொழில் என்பது பெண்களின் பாலியல் சதந்திரத்திர உணர்வை வெளிப்படுத்துவது கிடையாது என்று ஏபிஆர்ஏஎம்பி என்ற பாலியல் சுரண்டலுக்கு எதிரான அமைப்பு கூறியுள்ளது. இதுபோன்ற தொழில்கள் பெரும்பாலும் வன்முறை, விளிம்பு நிலை, பொருளாதார சிக்கல்கள், பாலியல் உணர்வைத் தூண்டும் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை ஆக உள்ளன என்கிறார் கய் ஹெட்ஜ்கோ.

ஸ்பெயின் நாட்டில் விருப்ப பாலியல் உறவு, பாலின அடிப்படையிலான வன்முறை தலைதூக்கியுள்ள வேளையில், இப்போது பாலியல் தொழிலை குற்றமாக்கப் போவதாக அந்நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் என்று சுட்டிக்காட்டுகிறார் பிபிசி செய்தியாளர்.

இதேவேளை, சிஏடிஎஸ் என்ற பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதரவான அமைப்பு, பாலியல் தொழிலுக்கு சட்டபூர்வ தடை விதிப்பதால் மட்டும் எல்லாம் சரியாகி விடாது என்று கூறுகிறது. இதுபோன்ற நடவடிக்கை, பாலியல் தொழிலை மேலும் ஆழமான பாதாளத்துக்கு கொண்டு சென்று விடும் என்று கூறுகிறது.

பாலியல் தொழிலை குற்றமாகக் கருதுவதன் மூலம் அதில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற்றப்பட்டால் பிறகு அவர்கள் வீதிகளில் நிற்கும் நிலையே வரும் என்று சிஏடிஎஸ் அமைப்பின் நாச்சோ பார்டோ கூறினார். அத்தகைய நிலை அபாயகரமானதாகவும் பாதிக்கப்படும் பெண்கள் மாஃபியாக்களிடம் சிக்கும் நிலையும் ஏற்படும் என்றும் சிஏடிஎஸ் அமைப்பு கூறுகிறது.

ஸ்பெயின் பாலியல்

பட மூலாதாரம், Getty Images

2019ஆம் ஆண்டில் பெட்ரோ சான்செஸ் தேர்தல் செயல்திட்டத்தில் பாலியல் தொழிலை சட்டவிரோதம் ஆக்குவேன் என்று உறுதியளித்திருந்தார். பெண் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் அவர் அந்த வாக்குறுதியை பயன்படுத்தியதாக விமர்சிக்கப்பட்டது.

பெட்ரோ வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பாலியல் தொழிலில் பெண்கள் ஈடுபடுத்தப்படுவது என்பது பெண்ணிய வன்முறையின் மிக கொடூரமான அம்சங்களில் ஒன்று என்றும் பெண்களுக்கு எதிரான மோசமான வன்முறை வடிவங்களில் ஒன்று என்றும் கூறப்பட்டிருந்தது.

எனினும், ஆட்சிக்கு வந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் பாலியியல் தொழிலுக்கு தடை விதிக்கும் எந்தவித சட்டமசோதாவையும் பெட்ரோஸ் அரசு தாக்கல் செய்யவில்லை. இப்படியொரு சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கலாக வேண்டுமானால், அதற்கு பெட்ரோஸின் பிஎஸ்ஓஇ கட்சி கூட்டு சேர்ந்துள்ள இடதுசாரி அணியினர் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இப்போதைக்கு கூட்டணி கட்சிகளின் அனுமதியை பெற்று இந்த மசோதாவை நிறைவேற்றுவது என்பது, பெட்ரோஸ் நிர்வாகத்துக்கு சுலபம் இல்லை என்றே தோன்றுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »