Press "Enter" to skip to content

துருக்கி: அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட 10 நாட்டு தூதர்களை ‘வரவேற்கப்படாத நபர்களாக’ அறிவிக்க எர்துவான் உத்தரவு

பட மூலாதாரம், AFP

துருக்கியின் அதிபர் ரிசெப் தயிப் எர்துவான், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட 10 நாடுகளின் தூதர்களை ‘Persona non grata’ (வரவேற்கப்படாத நபர்களாக) அறிவிக்க உத்தரவிட்டுள்ளார்.

‘Persona non grata’ என்பது சம்பந்தப்பட்டவர்களின் ராஜரீக ரீதியிலான அந்தஸ்தை நீக்கவல்லது, மேலும் அவர்கள் வெளியேற்றப்படலாம் அல்லது அந்நாட்டு தூதர்கள் அங்கீகரிக்கப்படாமல் போகலாம்.

அந்த தூதர்கள், துருக்கியின் செயற்பாட்டாளரான ஓஸ்மான் கவலாவை விடுதலை செய்யுமாறு அறிக்கை வெளியிட்ட பின் இந்த நடவடிக்கையை எர்துவான் எடுத்துள்ளார்.

கவலா நான்கு ஆண்டுகளுக்கு மேல், போராட்டங்களில் ஈடுபட்டது மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் இதுவரை தண்டிக்கப்படவில்லை.

அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஃபின்லாந்து, டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, நியூஸிலாந்து, நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளின் தூதரகங்கள் இணைந்து செயற்பாட்டாளர் கவலாவை விடுவிக்குமாறு இந்த வாரம் அறிக்கை வெளியிட்டனர். இதில் ஏழு நாடுகள் நேட்டோ அமைப்பில் துருக்கியோடு உறுப்பு நாடுகளாக இருப்பவை என்பதும் கவனிக்கத்தக்கது.

‘தி கவுன்சில் ஆஃப் யூரோப்’ என்கிற ஐரோப்பாவின் முக்கிய மனித உரிமைகள் அமைப்பு, செயற்பாட்டாளர் கவலாவை விடுவிக்குமாறு ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் கூறியதை நிறைவேற்ற துருக்கியை கடைசியாக எச்சரித்துள்ளது.

ரிசெப் தயிப் எர்துவான்

பட மூலாதாரம், Getty Images

எஸ்கிஷேஹிரில் சனிக்கிழமை ஒரு கூட்டத்தில் பேசிய துருக்கி அதிபர் ரிசெப் தயிப் எர்துவான் “வெளி விவகாரத் துறை அமைச்சருக்கு தேவையான உத்தரவுகளையும், என்ன செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளேன். அந்த 10 நாட்டு தூதர்களும் ‘வரவேற்கப்படாத நபர்களாக’ உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும்.”

தூதர்கள் துருக்கியைப் புரிந்து கொள்ள வேண்டும் அல்லது வெளியெற வேண்டும் என எர்துவான் கூறியதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுவரை இது தொடர்பாக அந்நாட்டு தூதர்களிடமிருந்து பெரிய எதிர்வினைகள் எதுவும் வரவில்லை. சம்பந்தப்பட்ட நாடுகள் தீவிரமாக ஆலோசித்து வருவதாக ஜெர்மனியின் வெளிநாட்டு விவகார அமைச்சகம் கூறியுள்ளது.

இது தொடர்பாக இதுவரை எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்புகளும் துருக்கி அதிகாரிகளிடமிருந்து வெளியாகவில்லை.

தங்கள் நாட்டு தூதர் வெளியேற்றப்படும் அளவுக்கு எதுவும் செய்யவில்லை என நார்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சகம் ராய்டர்ஸ் முகமையிடம் கூறியுள்ளது.

துருக்கியின் வெளிவிவகாரத் துறை அமைச்சகம், 10 நாட்டு தூதர்களையும் கவலா வழக்கு குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையை மறுக்க, கடந்த செவ்வாய்கிழமை அழைப்பு விடுத்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.

துருக்கி நாட்டுக் கொடி

பட மூலாதாரம், Getty Images

அந்த 10 நாட்டு தூதரகங்களும் துருக்கி செயற்பாட்டாளர் ஓஸ்மான் கவலா வழக்கு விசாரணையில் உள்ள தொடர் தாமதத்தை குறிப்பிட்டு விமர்சித்திருந்தன. இது ஜனநாயகத்தின் மீதும், சட்டத்தின் மீதும், வெளிப்படைத் தன்மையின் மீதான மரியாதையை சீர்குலைக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் ஓஸ்மான் கவலாவின் வழக்கில் விரைவாக ஒரு தீர்வு காணவும், அவரை உடனடியாக விடுவிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.

2013ஆம் ஆண்டு துருக்கியில் நடந்த போராட்டங்கள் தொடர்பான வழக்கிலிருந்து கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டார். ஆனால் 2016ஆம் ஆண்டு எர்துவான் அரசை கவிழ்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது தொடர்பான வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கவலா தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். எர்துவானை விமர்சிப்பவர்கள், இது தன் (எர்துவான்) மீதான எதிர் கருத்துகளை அடக்கும் பரவலான முயற்சிக்கு ஓர் உதாரணம் என்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »