Press "Enter" to skip to content

இந்தியாவும் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தான் தொடர்பாக தீவிரமாகச் செயல்படுவது ஏன்?

  • சரோஜ் சிங்
  • பிபிசி செய்தியாளர்

பட மூலாதாரம், PIB

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ஆசிய நாடுகளிடையே மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள சமீபத்திய சூழல் குறித்து விவாதிக்க இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு நாள் இடைவெளியில் சந்திப்புகளை நடத்தின.

இந்த சந்திப்பு இந்தியாவில் நவம்பர் 10ம் தேதி புதன்கிழமை நடைபெற்றது, இதில் ரஷ்யா, இரான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பிறகு, ‘ஆப்கானிஸ்தான் மீதான டெல்லி பிரகடனம்’ என்ற 12 அம்ச அறிக்கையும் வெளியிடப்பட்டது. ஆப்கானிஸ்தானின் நிலம் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் எந்த ஒரு நடவடிக்கை, பயிற்சி, திட்டமிடல் அல்லது நிதி உதவிக்கு பயன்படுத்தப்படக்கூடாது என்பதை இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எல்லா நாடுகளும் ஒருமனதாக ஒப்புக்கொண்டன.

ஆனால் சீனாவும் பாகிஸ்தானும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. மறுபுறம், ஆப்கானிஸ்தான் தொடர்பான கூட்டம் பாகிஸ்தானில் நவம்பர் 11ம் தேதி (வியாழக்கிழமையன்று) நடைபெற்றது. இதில் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனாவின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்தியாவில் நடந்த சந்திப்பில் கலந்து கொள்ள சீனா வரவில்லை. ஆனால் பாகிஸ்தானின் கூட்டத்திற்கு தனது பிரதிநிதியை அந்நாடு அனுப்புகிறது. அதேநேரம், இரண்டு கூட்டங்களிலும் பங்கேற்கும் ஒரே நாடு ரஷ்யா மட்டுமே.

இரு நாடுகளின் சந்திப்புகளின் ‘விருந்தினர் பட்டியல்’ வேறுபட்டு இருந்தாலும், அது நடக்கும் நேரம், சந்திப்புக்கள் மீதான அனைவரது ஆர்வத்தையும் அதிகரித்திருக்கிறது.

பாகிஸ்தான் சந்திப்பின் நிகழ்ச்சி நிரல்

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கடந்த மாதம் ஆப்கானிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். பாகிஸ்தானில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு தாலிபன் வெளியுறவு அமைச்சருக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், தாலிபன் அரசை இதுவரை பாகிஸ்தான் அங்கீகரிக்கவில்லை. ஆனால் தாலிபன் அதிகாரிகள் இஸ்லாமாபாத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிகின்றனர்.

இந்த இரண்டு சந்திப்புகளின் ‘விருந்தினர் பட்டியல்’ மற்றும் ‘ நடத்துபவர் பட்டியல்’ இரண்டிலிருந்தும் தெரியவரும் பொருள் என்ன?

“இந்த இரண்டு சந்திப்புகளும் தாலிபனுடனான இந்தியாவின் உறவு மற்றும் பாகிஸ்தானின் உறவை சுட்டிக்காட்டுகின்றன. இந்தியா பாகிஸ்தான் உறவுகள் எப்படி இருக்கிறது என்பது இந்த இரண்டு கூட்டங்களிலிருந்து தெரியவரும் மற்றொரு விஷயம். இந்தியாவில் நடந்த கூட்டத்தில் பங்கேற்க மறுத்த பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளுக்கும் மற்றும் தாலிபனுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பியது,” என்று இந்த கேள்விக்கு பதிலளித்த ஆப்கானிஸ்தானுக்கான முன்னாள் இந்திய தூதர் ராகேஷ் சூட் தெரிவித்தார்.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி

பட மூலாதாரம், KAY NIETFELD/POOL VIA REUTERS

இம்ரான் கான் அரசு, சமீபத்தில் தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தானுடன் (TTP) பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ள நிலையில் இந்த சந்திப்பு பாகிஸ்தானில் நடைபெற்றது. இம்ரான் அரசின் இந்த முடிவில், ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.

தெஹ்ரீக்-இ-தாலிபன், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்பாகும். 2014ம் ஆண்டு பெஷாவரில் உள்ள ராணுவப் பள்ளி மீதான தாக்குதலை இந்தக்குழுதான் நடத்தியது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 200 பேர் கொல்லப்பட்டனர்.

நிதி மற்றும் வர்த்தக விவகாரங்களுடன், தாலிபன் அரசுடனான உறவுகள், அகதிகள், பொது மக்களின் பயணம் தொடர்பான விஷயங்கள், பாகிஸ்தானில் நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டாக அந்நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கை கூறுகிறது.

இரு நாடுகளின் சந்திப்பு நிகழ்ச்சி நிரல் பற்றிப்பேசிய ராகேஷ் சூட்,” நிகழ்ச்சிநிரல் ஒன்றுதான். ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மையை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதுதான் அது,” என்று குறிப்பிட்டார்.

இருப்பினும், தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகான ‘ பிராந்திய பாதுகாப்பு நிலைமை’ குறித்து டெல்லி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று இந்தியா கூறியது. “பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. பாதுகாப்பு இருந்தால், ஸ்திரத்தன்மை இருக்கும். உறுதியற்ற தன்மையுடன், எந்த ஒரு நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது, மற்றவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது,”என்று கூறினார் ராகேஷ் சூட்.

மறுபுறம், “பாகிஸ்தானின் சந்திப்பின் விஷயம் ‘நல்லிணக்கம்’ அதாவது ‘தாலிபன்களுடன் உறவுகளை மேம்படுத்துவது’ பற்றியது,” என்று வெளியுறவு விவகாரங்களுக்கான மூத்த செய்தியாளரும், டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின் ராஜீய விவகார ஆசிரியரான இந்திராணி பக்ஷி கூறுகிறார்,

தாலிபனின் இடைக்கால அரசு ‘ அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கியதாக’ இல்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

அஜீத் தோவல்

பட மூலாதாரம், ANI

இந்தியாவின் கூட்டத்தில் என்ன நடந்தது?

ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் ஆட்சி காரணமாக ஏற்பட்ட சவால்கள், நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் தீவிரவாதம், போதைப்பொருள் உற்பத்தி, கடத்தல், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் விட்டுச்செல்லப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் ஏற்படும் சவால்களை சமாளிக்க பிராந்திய பாதுகாப்பு ஆகியவை குறித்தும் டெல்லி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

“இதுபோன்ற பலதரப்பு கூட்டம் ஆப்கானிஸ்தானின் வளர்ச்சியின் சவால்களை புரிந்து கொள்ளவும், அதை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி விவாதிக்கவும் உதவுகிறது. இது நீண்ட காலத்திற்கு அங்கு அமைதியை மீட்டெடுப்பதற்கு உதவும்,” என ரஷ்யாவின் பிரதிநிதி நிகோலாய் பெட்ருஷேவ், கூறினார்.

அதே நேரத்தில், தாலிபன் அரசு,அனைத்து தரப்பையும் ‘உள்ளடக்கியதாக’ இல்லை என இரானின் பிரதிநிதி குற்றம்சாட்டினார். “அகதிகள் பிரச்சனையாக இருந்தாலும் சரி, புலம்பெயர்ந்தோர் பிரச்சனையாக இருந்தாலும் சரி, எல்லா தரப்பினரும் அரசில் பிரதிநிதித்துவம் பெற்றால்தான் அனைத்திற்கும் தீர்வு காண முடியும்,” என்றார் அவர்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்தில் இதுபோன்ற பேச்சு வார்த்தை நடத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் இரான் இது போன்ற ஒரு கூட்டத்தை நடத்தியது.

அந்த இரண்டு கூட்டங்களிலும் இந்தியா இடம்பெறுவதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தானும் பங்கேற்கவில்லை.

இந்தியாவில் நடைபெற்ற கூட்டத்திற்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவி அளிப்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பில் கலந்துகொள்ள பாகிஸ்தானுக்கும் இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், ‘சூழ்நிலையை சீர்குலைப்பவர் அமைதியை நிலைநாட்ட முடியாது’ என்று கூறி, பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப் இந்த கூட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டார்.

தாலிபன் அரசு சார்பில் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தக்கி

பட மூலாதாரம், Getty Images

இந்திய கூட்டத்தில் தாலிபன்கள் இல்லை

டெல்லி கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் பற்றிய விவாதம், தற்போதைய தாலிபன் ஆட்சி தொடர்பானது. ஆனால் இந்திய கூட்டத்தில் கலந்துகொள்ள தாலிபனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட எந்த நாடும் தாலிபன் அரசை அங்கீகரிக்கவில்லை என்று இந்திய அரசு கூறுகிறது. இதற்கு முன்பும், ஆப்கானிஸ்தான் தொடர்பான பல கூட்டங்கள் தாலிபன்கள் இல்லாமல் நடத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித், இந்தியாவில் நடைபெற்ற சந்திப்பு குறித்து நம்பிக்கையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். “இதுபோன்ற சந்திப்புகள் ஆப்கானிஸ்தான் பிரச்சனையை நன்கு புரிந்துகொள்ள உதவும் என்று நான் நம்புகிறேன்,”என்று அவர் கூறினார்.

“இந்த கூட்டத்தில் தாலிபன்களை சேர்க்க இந்தியா விரும்பாததால் அவர்களுக்கு இந்தியா அழைப்பு அனுப்பவில்லை,”என்று இந்திராணி பக்ஷி குறிப்பிட்டார்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆப்கானிஸ்தானில் தாலிபன் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா அவர்களுடன் இரண்டு சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

முன்னதாக தோஹாவில் இந்திய தூதர் தாலிபன் பிரதிநிதியை சந்தித்து பேசினார். அதன்பிறகு, வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலர், ரஷ்ய தலைநகர் மக்கள் விரும்பத்தக்கதுகோவில் நடந்த பேச்சுவார்த்தைக்கு சென்றார். அங்கு தாலிபன் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இரண்டு வெவ்வேறு இடங்களில் தாலிபன்களுடன் இந்தியா ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ள போதிலும், இந்த முறை தாலிபனை விலக்கி வைத்தது ஏன்?

“தாலிபன் உடனான இந்தியாவின் உறவு, ரஷ்யாவின் உறவில் இருந்து மிகவும் மாறுபட்டது. கடந்த சில ஆண்டுகளாக தாலிபன்களுடன் ரஷ்யா தனது உறவை சிறப்பாக பராமரித்து வருகிறது. ஆனால் அங்கீகாரம் மட்டுமே கொடுக்கவில்லை. இதனால் மக்கள் விரும்பத்தக்கதுகோ கூட்டத்திற்கு அது தாலிபனுக்கு அழைப்பு விடுத்தது,”என்று இந்த கேள்விக்கு பதிலளித்த இந்திராணி குறிப்பிட்டார்.

“ஆனால், தாலிபன்களுடனான இந்தியாவின் வரலாறு ரஷ்யாவைப்போன்றது அல்ல. காந்தஹார் விமானக்கடத்தல் அனைவருக்கும் நினைவிருக்கும். தாலிபன் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தான், ‘பயங்கரவாதத்தின் கோட்டையாக மாறக்கூடாது’ என்பதுதான் இந்தியாவின் மிகப்பெரிய கவலை. தற்போது ஆப்கானிஸ்தான் மீதான இந்தியாவின் மட்டுப்படுத்தப்பட்ட ஆர்வம் இதுதான்,”என்கிறார் இந்திராணி.

“இந்தக் கவலையுடன், பேச்சுவார்த்தை மேசையில் தாலிபன்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்துவது பொருத்தமாக இருக்காது.”என்றார் அவர்.

ஆப்கானிஸ்தான் தொடர்பாக இந்தியாவில் நடந்த சந்திப்பு.

பட மூலாதாரம், ANI

இங்கு கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் , தாலிபன்களுடன் கூடவே கடந்த காலத்தில் இந்திய அரசு நல்லுறவு கொண்டிருந்த, அங்கு ஆட்சியில் இருந்த வேறு யாரையும் இந்தியா அழைக்கவில்லை.

“இது இந்தியாவின் தரப்பில் இருந்து ஒரு வகையான ‘அரசியல் சமநிலைப்படுத்தும் செயல்’. இந்தியா தாலிபன்களை அங்கீகரிக்கவில்லை . கூடவே அது ஆப்கானிஸ்தான் அரசியலில் வேறு எந்த தரப்புடனும் பேசவில்லை. அதாவது இந்தியா தாலிபனுக்கு ஆதரவாக இல்லை ஆனால் அதே நேரம் எதிராகவும் இல்லை,” என்று இந்திராணி தெரிவித்தார்.

இந்தியா உட்பட உலகின் எந்த நாடும் இதுவரை தாலிபன் அரசுக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை. ஆனால் அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகள் தாலிபன் அரசுடன் வெவ்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. சில நாடுகளின் தூதரகங்களும் ஆப்கானிஸ்தானில் இயங்கி வருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »