Press "Enter" to skip to content

COP26 மாநாடு: இறுதி முடிவு எட்டப்படாததால் தொடரும் பேச்சு வார்த்தைகள் – இழுபறியில் இருப்பது என்ன?

பட மூலாதாரம், Getty Images

கிளாஸ்கோவில் நடந்து வரும் COP26 காலநிலை மாநாடு அதன் திட்டமிடப்பட்ட நேரத்தைக் கடந்து, காலநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை சனிக்கிழமையும் தொடரவிருக்கிறது.

நிலக்கரி மற்றும் பிற புதைபடிம எரிபொருட்களுக்கான மானியங்கள், ஏழை நாடுகளுக்கு நிதி உதவி போன்ற விவகாரங்களில் இன்னும் ஒரு முடிவு எட்டப்படவில்லை.

சிறிய தீவு நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், உயரும் கடல் மட்டத்தால் தங்கள் நிலம் வேகமாக மறைந்து வருவதாக, வெள்ளிக்கிழமையன்று தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

நம்மால் இதைச் செய்ய முடியும் என்கிற ஊக்கம் வேண்டும் என மாநாட்டுத் தலைவர் அலோக் ஷர்மா வலியுறுத்தியுள்ளார்.

தொழிற்புரட்சிக்கு முந்தைய நிலைகளுடன் ஒப்பிடும்போது, பூமியின் வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்துவது காலநிலை மாற்றத்தின் மிக ஆபத்தான தாக்கங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதுதான் பெரும்பாலான நாடுகள் கையெழுத்திட்ட பாரிஸ் உடன்படிக்கையின் முக்கிய விஷயம்.

அந்த இலக்கை அடைய 2030ம் ஆண்டுக்குள் உலக அளவில் உமிழ்வை 45 சதவீதம் குறைக்க வேண்டும் மற்றும் 2050ம் ஆண்டில் உமிழ்வை பூஜ்ஜியமாக்க வேண்டும்.

பூமியின் வெப்பநிலை 2.0 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகரித்தால், கிட்டத்தட்ட அனைத்து பவளப்பாறைகளும் இறந்துவிடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நிலக்கரி மற்றும் பிற புதைபடிம எரிபொருட்களின் பயன்பாட்டை நிறுத்துவதற்கான ஒரு வரைவு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் உறுதியற்ற வாக்குறுதிகளும் அடங்கும்.

காலநிலை மாற்றம் - கார்பன் உமிழ்வு வாக்குறுதி வரைபடம்

இது பிரசாரகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. நிலக்கரியின் பெயர் இது போன்ற ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணங்களில் வெளிப்படையாகக் குறிப்பிடப்படுவது இதுவே முதல் முறை என சில பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பசுமையில்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்கான திட்டங்களை வெளிப்படுத்த அரசாங்கங்களுக்கு மிகவும் நெருக்கமான காலக்கெடு வழங்கவேண்டும் என இந்த திருத்தப்பட்ட வரைவுத் தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.

வளரும் நாடுகள் புதைபடிம எரிபொருட்களிலிருந்து வெளியேற, பணக்கார நாடுகள் அதிக பணத்தைக் கொடுக்க வேண்டும் என லண்டனிலிருந்து பேசிய பிரிட்டன் நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.

தன் தேசம் கண் முன்னே மூழ்கிக் கொண்டிருப்பதாக, துவாலு நாட்டின் காலநிலை அமைச்சர் வெள்ளிக்கிழமையன்று, மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். கடல் மட்ட உயர்வால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் துவாலுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

“இது நம்மில் பலருக்கு வாழ்வா சாவா போன்றதொரு தருணம். கிளாஸ்கோ மாநாடு காலநிலை தொடர்பான விஷயங்களை வரையறுக்கும் ஒரு முக்கிய தருணமாக இருக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நாம் இதில் நிச்சயம் தோல்வியடையக்கூடாது,” என செவெ பெனியு (Seve Paeniu) கூறினார்.

COP26 காலநிலை உச்சிமாநாட்டின் இறுதி முடிவுகளை ஏற்றுக்கொள்வதற்கான முறையான கூட்டம், சனிக்கிழமை பிற்பகலில் நடைபெறும் என அலோக் சர்மா கூறினார்.

காடு - காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், Getty Images

காலநிலை நிதி அல்லது காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட ஏழை நாடுகளுக்கு பணக்கார நாடுகள் வழங்குவதாகக் கூறிய நிதி உதவிப் பணம், சர்ச்சைக்குரிய புள்ளிகளில் ஒன்றாகவே தொடர்கிறது.

2009ம் ஆண்டில், வளர்ந்த நாடுகள் 2020ம் ஆண்டுக்குள் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு ஆண்டுக்கு $100 பில்லியன் வழங்குவதாக உறுதியளித்தன. ஆனால் அவ்விலக்கு எட்டப்படவில்லை.

COP26 மாநாட்டில் இதுவரை அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எல்லாம் ஒருபுறமிருக்க, கிளைமேட் ஆக்க்ஷன் டிராக்கர் என்கிற அமைப்பின் அறிக்கையின்படி, பூமியின் வெப்பநிலை உயர்வு, தொழில்துறைக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும் போது, இப்போதும் 2.4 டிகிரி செல்சியஸை நோக்கியே செல்வதாக கணித்துள்ளது.

இதுவரை COP26 மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டது என்ன?

உலக வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸாக கட்டுப்படுத்த அமெரிக்காவும் சீனாவும் இந்த தசாப்தத்தில் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டன.

அமேசான் மழைக்காடுகளின் தாயகமான பிரேசில் உட்பட 100க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் 2030ம் ஆண்டுக்குள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டு வருவோம் என உறுதியளித்துள்ளனர்.

2030ம் ஆண்டுக்குள் பசுமையில்ல வாயுக்களில் ஒன்றான மீத்தேன் வெளியேற்றத்தைக் குறைக்க அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் உலகளாவிய கூட்டாண்மையை அறிவித்துள்ளன. (வளிமண்டலத்தில் மீத்தேனை குறைப்பது புவி வெப்பமடைதலை விரைவாகக் குறைப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது)

40க்கும் மேற்பட்ட உலக நாடுகள் நிலக்கரியை விட்டு வெளியேற உறுதிபூண்டுள்ளன, ஆனால் சீனா மற்றும் அமெரிக்கா போன்ற உலகின் மிகப்பெரிய நிலக்கரி பயன்பாட்டாளர்கள் இதில் தங்களை பதிவு செய்து கொள்ளவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »