Press "Enter" to skip to content

தண்ணீர் பஞ்சம்: நீர் நெருக்கடியை சமாளிக்க தென் ஆப்பிரிக்காவில் மரங்களை வெட்டுவது ஏன்? சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்வதென்ன?

  • ஆண்ட்ரூவ் ஹார்டிங்
  • பிபிசி நியூஸ், கேப் டவுன்

ஒரு நகரத்தை வறட்சியிலிருந்து காக்க மரங்களை வெட்டுவது ஒரு வித்தியாசமான திட்டமாகத் தோன்றலாம், ஆனால் அத்திட்டம்தான் தென்னாப்பிரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான கேப் டவுனில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேப் டவுன் “டே ஜீரோ” என்றழைக்கப்படும் நிலையின் விளிம்பைத் தொட்டு மூன்று ஆண்டுகளாகிறது.

அப்போது, கடுமையான, எதிர்பாராத வறட்சியால் தண்ணீர் பஞ்சம் மேலோங்கியது. அது அனைத்து உள்ளூர் நீர் நிலைகளையும் கட்டாந்தரையாக மாற்றியது.

மரம் அறுக்கும் ரம்பத்தைக் கையில் ஏந்திய படி, இன்று டஜன் கணக்கிலான குழுக்கள், நீர் நிலைகளை சுற்றியுள்ள மரங்களை வெட்டுகின்றன. இதன் மூலம் அவர்கள் நீர்நிலைகளை பாதுகாக்க முயல்கிறார்கள்.

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த இது ஒரு வினோதமான முறையாகும். சூழலைக் காக்க இப்படி செய்யவேண்டியிருக்கும் என்று நாம் நினைக்கமாட்டோம்.

ஒரு சமீபத்திய காலைப் பொழுதில், அடர்ந்த பனி அடுக்குக்கு மேல், இரு தொழிலாளர்கள் செங்குத்தான பள்ளத்தாக்கில் தனித்து இருக்கும் பைன் மரங்களை வெட்ட நிதானமாக கீழே இறங்கினர்.

“பைன் மரங்கள் இப்பகுதியில் இயற்கையாக வளர்ந்ததல்ல. பைன் மரங்கள் அப்பிராந்தியத்தின் உள்நாட்டு தாவரங்களை விட அதிக தண்ணீரை பயன்படுத்துகின்றன. இந்த பசுமை உட்கட்டமைப்புப் பிரச்சனையைத்தான் நாம் சரிசெய்ய வேண்டும்” என விளக்குகிறார் கிரேட்டர் கேப் டவுன் வாட்டர் ஃபண்ட் சார்பாக தி நேச்சர் கன்சர்வென்சி பணிகளை ஒருங்கிணைக்கும் கொசினாதி நாமா (Nkosinathi Nama).

இப்பிராந்தியத்தைச் சாராத பைன் மரங்கள், ஆரம்பத்தில் மரத் தொழிலுக்காக கொண்டு வரப்பட்டன. அவை மெல்ல மலை முழுவதும் பரவி, கேப் டவுனின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்த, தாக்குபிடிக்கும் தன்மை அதிகம் இருக்கக்கூடிய மற்றும் குறைவாக நீரைப் பயன்படுத்தும் உள்ளூர் தாவரங்களை விட அதிக எண்ணிக்கையில் வளரத் தொடங்கின.

பைன், யூகலிப்டஸ் போன்ற இப்பிராந்தியத்தைச் சாராத மர இனங்கள், ஆண்டுக்கு 55 பில்லியன் லிட்டர் தண்ணீரை உறிஞ்சிக்கொள்கின்றன. இது அந்நகரத்தின் மொத்த ஓராண்டு தண்ணீர் நுகர்வில் இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு தேவையான நீர் என்பது குறிப்பிடத்தக்கது.

“நமது நீர் பிடிப்புப் பகுதிகள் புனரமைக்கப்பட வேண்டும், அவை எந்த சூழலையும் தாங்கி நிற்கும் எதிர்ப்புத் திறன் மிக்கதாக இருக்க வேண்டும் என்பது தான் டே ஜீரோவின் படிப்பினைகளில் ஒன்று,” என அவர் கூறினார்.

‘அச்சமடைந்த மக்கள்’

பிராந்தியத்தைச் சேராத மரயினங்கள்

தொடக்க காலத்தில் கொண்டு வரப்பட்ட ஐந்தாண்டு திட்டம் எல்லாம் கேப் டவுனில் ஏற்பட்ட 2018 நீர் நெருக்கடிக்கான பல எதிர்வினை நடவடிக்கைகளில் ஒன்று.

நகரின் நீர் ஆதாரங்களைப் பாதுகாத்தல் மற்றும் பன்முகப்படுத்தல், நிலத்தடி நீர்நிலைகளை எடுத்துக் கொள்வது, உப்புநீரை நன்னீராக்கும் ஆலைகளை நிறுவுவது போன்ற பணிகள் உட்பட, நீர் பயன்பாட்டின் அடிப்படையில் டே ஜீரோவின் அச்சுறுத்தலுக்கு மனிதர்கள் எப்படி பதிலளித்தனர் என்பதையும் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

“ஒரு நெருக்கடிக்கு பழகிக் கொள்ளும் குடிமக்களின் திறனை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம்” என்கிறார் கேப் டவுன் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் நிபுணர் மருத்துவர் கெவின் வின்டர்.

நகரத்தின் நீர் பயன்பாடு 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் வெறும் மூன்று வாரங்களுக்குள் கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்தது. நாள் ஒன்றுக்கு தோராயமாக 780 மெகாலிட்டரிலிருந்து 550 மெகாலிட்டருக்குக் கீழ் குறைந்துவிட்டது என அவர் சுட்டிக்காட்டினார். இது பொது ஒற்றுமையின் அசாதாரண வெளிப்பாடு.

“உண்மையில் மக்கள் மிகவும் பயந்தனர்… அது விரும்பிய விளைவைக் கொடுத்தது,” என்று அவர் கூறினார்.

கேப் டவுன் நகருக்கு வெளியே உள்ள கெய்லிட்ஷா டவுன்ஷிப்பில் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழுவில் பணிபுரியும் சமூக ஆர்வலர் சியாபோங்கா மைசா “பயம் வேலை செய்கிறது.” என ஒப்புக்கொள்கிறார்.

“ஒரு மொத்த நகரமாக தண்ணீர் இல்லாமல் போவது என்பது மிகவும் சோகமானது மற்றும் மிகவும் பயத்தை கொடுக்கக்கூடியது. தண்ணீரைச் சேமிக்க வேண்டும் என்கிற செய்தியை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் நகரம் சிறப்பாக செயல்பட்டது. நாங்கள் எங்கள் நீர் பயன்பாட்டை பாதியாகக் குறைத்தோம்.

“ஆனால் நீண்ட காலத்திற்கு நமக்கு இன்னும் முழுமையான மனநிலை மாற்றம் தேவை.” என்கிறார் சியாபோங்கா மைசா.

நீர்ப்பாசனம்

தி வாட்டர்ஸ்க்லூஃப் அணை

பட மூலாதாரம், AFP

அதன்பிறகான சில ஆண்டுகளில், தவிர்க்க முடியாமல் கேப்டவுனில் தண்ணீர் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆனால், 2014ம் ஆண்டில் பதிவான உச்சத்தை விட (ஒரு நாளைக்கு 1.2 பில்லியன் லிட்டர்) மிகக் குறைவாகவே தண்ணீர் பயன்பாடு அதிகரித்துள்ளது.

தண்ணீரைச் சேமிக்க கட்டாயப்படுத்தப்பட்ட அனுபவம், அல்லது அபராதம் விதித்தல் அல்லது பிற தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டிய அனுபவம், தெளிவாக பல குடும்பங்களில் நீண்ட காலத்துக்கு ஒரு நெடிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் நீர் மேலாண்மையில், விவசாயத்தின் பங்கை அதிகம் பாராட்டுவது மற்ற பாடங்களில் அடங்கும். உலகின் பல பகுதிகளைப் போலவே, தென் ஆப்பிரிக்காவிலும் சுமார் 70 சதவீத நீர் இருப்பு விவசாய நிலங்களுக்கு பாசனம் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

கேப் டவுனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் விவசாயிகள், பல மாதங்களுக்கு நகராட்சி தண்ணீரைப் பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த ஒப்புக்கொண்டனர்.

2018ம் ஆண்டின் இறுதியில், கேப் டவுன் நகரில் சராசரியை விட அதிகமான மழை பெய்துள்ளது. இதில் வழக்கமான பருவ மழையைத் தாண்டி பெய்த மழையும் அடக்கம்.

ஏழு ஆண்டு கால வறட்சி

காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், Getty Images

எதிர்காலத்தில் ஏற்பட உள்ள வறட்சியை சமாளிக்கும் வகையில் மேற்கு கேப் மாகாணம் வலுவான நிலையில் உள்ளது என்கிற நம்பிக்கை வளர்ந்து வரும் வேளையில், தென்னாப்பிரிக்காவின் மற்ற பகுதிகளும் இதே போன்ற பாடங்களைக் கற்றுக்கொண்டன என்பதற்கு சில சான்றுகள் உள்ளன.

மிகவும் ஏழ்மையான கிழக்கு கேப் மாகாணத்தில், விவசாயிகள் தங்களின் மோசமான ஏழு ஆண்டுகால வறட்சியை சமாளிக்க முடியாமல் போராடி வருகின்றனர். அதிக மக்கள் வாழும் பகுதியான நெல்சன் மண்டேலா பே பகுதி கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. அதற்கு கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தவறான மேலாண்மை, பரவலான ஊழல், முக்கிய நீர் உட்கட்டமைப்பை பராமரிக்கத் தவறியது போன்றவை காரணமென குறை கூறப்பட்டது.

“அதிர்ஷ்டவசமாக, கேப் டவுனின் தலைமை அந்த சமயத்தில் நிறைய நல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவர்கள் எல்லாவற்றையும் செய்தார்கள். மக்களைத் தங்களோடு அழைத்துச் சென்றனர், அதன் விளைவாக, பிரச்சனையை சமாளிக்க இது அவர்களுக்கு உதவியது” என க்குபெர்ஹா (Gqeberha) நகரத்தைச் சேர்ந்த தொழிலதிபரும் எதிர்க்கட்சி அரசியல்வாதியுமான குசெலி ஜேக் (Mkhuseli Jack) கூறினார்.

“இங்கு எல்லாம் நேர்மாறாக இருக்கிறது, ஏனென்றால் இந்த இடம் மிக சாதாரண தலைவர்களால் வழிநடத்தப்படுகிறது. மக்கள் இங்கு அரசியல்வாதிகள் சொல்வதை நம்பும் கட்டத்தைக் கடந்துவிட்டார்கள்.”

இந்த மாகாணத்தில் உள்ள சில சிறிய நகரங்களில் ஏற்கனவே குழாய்கள் வறண்டுவிட்டன, இந்நிலையில், பல சுற்றுப்புறங்களில் உள்ளூர் தொண்டு நிறுவனத்தால் செய்யப்படும் ஒழுங்கற்ற தண்ணீர் டிரக் டெலிவரிகளை நம்பியிருக்கும் நிலையில், சில மாதங்களுக்குள் இங்கு டே பூஜ்யம் சூழல் ஏற்படக்கூடும் என்று எச்சரிப்பதன் மூலம் க்குபெர்ஹா நகரம் இப்போது மக்கள் மனதை ஒருமுகப்படுத்த முயற்சிக்கிறது.

“எங்களுக்கு இரண்டு நாட்களாக தண்ணீர் இல்லை. எதிர்காலத்தைப் பற்றி நான் கவலைப்படுகிறேன், ஏனெனில் இந்த சூழல் மேலும் மேலும் மோசமாகும். அரசு எங்களைக் கவனிக்கவில்லை,” என கிழக்கு கேப் நகரத்தில் வசிக்கும் 53 வயதான எல்சி ஹான்ஸ் கூறினார்.

“அவர்கள் எங்களுக்கு இங்கே சில கழிவறைகளைக் கட்டிக் கொடுத்தனர், தண்ணீர் இல்லாததால் எங்களால் அவற்றைப் பயன்படுத்த முடியவில்லை.” என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »