Press "Enter" to skip to content

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் வரலாற்றுத் தீர்மானம்: மாவோ, டெங் வரிசையில் ஷி ஜின்பிங்

  • வையீ யிப்
  • பிபிசி நியூஸ்

பட மூலாதாரம், Reuters

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் மிக அரிதான வரலாற்றுத் தீர்மானத்தை இயற்றியதன் மூலம் அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் தனது பெயரை நிலைபெறச் செய்துவிட்டார் அந்நாட்டு அதிபர் ஷி ஜின் பிங்.

இப்படிப்பட்ட வரலாற்றுத் தீர்மானத்தை இதற்கு முன்பு கொண்டு வந்த பெருமை சீனக் குடியரசை நிறுவிய மாவோ, முன்னாள் அதிபர் டெங் ஷியாவோ பிங் ஆகியோருக்கு மட்டுமே உண்டு.

கட்சியின் நூறாண்டு கால வரலாற்றை சுருக்கி எழுதிய அந்த ஆவணம், இதுவரையிலான சாதனைகளையும், எதிர்காலத்துக்கான வழிகளையும் குறிப்பிடுகிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து இது போன்ற ஒரு வரலாற்றுத் தீர்மானம் நிறைவேற்றப்படுவது இது மூன்றாவது முறை. சீனக் குடியரசின் நிறுவனராக அறியப்படும் மாவோ முதல் முறையாக இப்படி ஒரு தீர்மானத்தை 1945ல் கொண்டுவந்தார். பிறகு 1981ம் ஆண்டு டெங் ஷியாவோ பிங் இப்படி ஒரு தீர்மானத்தை கொண்டுவந்தார்.

வியாழக்கிழமை நடந்த கட்சியின் 6வது பிளீனரி கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிளீனம் அல்லது பிளீனரி கூட்டம் என்பது சீனாவின் மிக மிக முக்கியமான அரசியல் கூட்டமாகும்.

இது போன்ற வரலாற்றுத் தீர்மானத்தை தருகிற மூன்றாவது அரசியல் தலைவராக ஷி ஜின் பிங் ஆகியிருப்பது , மாவோ, டெங் ஷியாவோ பிங் வரிசையில் அவரை வைப்பதற்கான நோக்கம் கொண்டது.

டெங் ஷியாவோ பிங் காலத்தில் தொடங்கி, ஜியாங் ஜெமின் காலத்திலும் முன்னெடுக்குப்பட்ட அதிகாரப் பரவலாக்க முயற்சிகளை பின்னுக்குத் தள்ளி மீண்டும் தனிநபர் மைய அரசியலை நோக்கி சீனா செல்கிறது என்பதற்கான அறிகுறியாக இது இருக்கலாம் என்று சில பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

நாட்டின் உயர் அரசியல் அதிகார அமைப்பான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது மையக் குழுவைச் சேர்ந்த 370 உறுப்பினர்கள், நான்கு நாள்கள் மூடப்பட்ட அறையில் நடந்த பிளீனரி கூட்டத்தில் பங்கேற்றனர்.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள கட்சியின் தேசிய மாநாட்டுக்கு முன்னதாக நடக்கும் முக்கியமான அரசியல் கூட்டம் இந்த பிளீனம். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள இந்த தேசிய மாநாட்டில் மூன்றாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஷி ஜின்பிங் முயற்சி மேற்கொள்வார்.

ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்கலாம் என்ற விதி 2018ம் ஆண்டு அகற்றப்பட்டது. வாழ்நாள் முழுவதும்கூட ஒருவர் பதவியில் நீடிப்பதற்கு இது வழிவிட்டது.

ஏன் இந்தத் தீர்மானம் மிக முக்கியமானது?

எல்லாவற்றையும்விட முக்கியமாக அதிபர் பதவியில் ஷி ஜின் பிங் நீடிப்பதற்கு இந்த தீர்மானம் வகை செய்கிறது.

“சீனாவின் தேசியப் பயணம் என்ற காவியத்தில் தம்மை ஒரு நாயகனாக வடித்துக்கொள்ள அவர் முயல்கிறார்,” என்கிறார் சீனா நெய்சன் (China Neican) என்ற செய்தி மடலின் ஆசிரியரான ஆடம் நி.

“சீனா மற்றும் கட்சி தொடர்பான பெருங்கதையாடலின் மையமாக தன்னை முன்னிறுத்தும் வரலாற்றுத் தீர்மானத்தை கொண்டுவந்ததன் மூலம் ஷி ஜின் பிங் தன் அதிகாரத்தைக் காட்டுகிறார். ஆனால், இந்த தீர்மானம் அவர் பதவியில் நீடித்திருக்க உதவும் ஒரு கருவியும்கூட,” என்கிறார் அவர்.

முந்தைய சீனத் தலைவர்களிடம் இருந்து ஷி ஜின்பிங்கை பிரித்து தனியே காட்டும் நடவடிக்கைதான் இந்த தீர்மானம் என்கிறார் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவர் சோங் ஜா இயான்

“முன்னாள் தலைவர்கள் ஹு ஜின்டாவ், ஜியாங் ஜெமின் ஆகியோர் இவ்வளவு தூரம் அதிகாரத்தை தங்களிடம் குவித்துக்கொள்ளவில்லை. இதே போல வாய்ப்பு வந்திருந்தாலும்கூட அவர்கள் இப்படி செய்திருப்பார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. நிச்சயமாக தற்போது, ஷி என்ற தனிமனிதருக்கு ஏராளமான முக்கியத்துவம் இருக்கிறது. இந்து எந்த அளவுக்கு முறைசார் வழியில் நிறுவனமயமாகிறது என்பதைத்தான் இப்போது எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்,” என்கிறார் சோங்.

இது போன்ற வரலாற்றுத் தீர்மானத்தை முன்பு நிறைவேற்றிய மாவோ, டெங் ஷியாவோ பிங் ஆகிய இருவருமே, முந்தைய காலத்தின் வழிமுறையில் இருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டவர்கள்தான்.

1945ல் இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய மாவோ அதன் மூலம் தன் தலைமைக்கு வலுக்கூட்டிக்கொண்டார். அதன் மூலம்தான் 1949ம் ஆண்டு மக்கள் சீனக் குடியரசினை உருவாக்கி அதனைரப் பிரகடனம் செய்யும் அதிகாரம் அவருக்கு கிடைத்து.

1978ம் ஆண்டு அதிகாரத்துக்கு வந்த டெங் ஷியாவோ பிங் 1981ம் ஆண்டு இரண்டாவது முறையாக இப்படி ஒரு வரலாற்றுத் தீர்மானம் கொண்டுவந்தார். 1966-1976 காலகட்டத்தில் நடந்த கலாசாரப் புரட்சியின்போது மாவோ செய்த பிழைகளை அந்த தீர்மானத்தில் அவர் விமர்சனம் செய்தார். கலாசாரப் புரட்சிக் காலகட்டத்தில் பல பத்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர். சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்துக்கான அடித்தளத்தை இட்டவரும் டெங் ஷியாவோ பிங்தான்.

ஷி கொண்டுவந்துள்ள தற்போதைய வரலாற்றுத் தீர்மானம், முதல் இரண்டு தீர்மானங்களைப் போல முந்தைய காலத்தின் வழிமுறையில் இருந்து துண்டித்துக்கொள்ளாமல், முன்பு இருப்பதன் தொடர்ச்சியைதான் வலியுறுத்துகிறது என்கிறார் ஆடம் நி.

ஆனால், சீனா ஓர் உலக சக்தியாக உருவாகியிருக்கும் காலகட்டத்தில் ஷி ஜின் பிங்கின் தீர்மானம் வந்திருக்கிறது. சில பத்தாண்டுகளுக்கு முன்புகூட சீனா இப்படி ஒரு சக்தியாக உருவெடுக்கும் என்று கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது.

“பொருளாதாரம், ராணுவம் ஆகியவற்றில் எட்டப்பட்ட வளர்ச்சி, உலகில் பெரிய சக்தியாக சீனாவுக்கு கிடைத்திருக்கிற அங்கீகாரம் அவற்றைத் திரும்பிப் பார்க்கிற நிலையில் நாடு இப்போது இருக்கிறது. உள்நாட்டில் எதிர்ப்பு எதுவுமே இல்லாத நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் தலைமையும் ஆழமாக வேரூன்றி நிற்கின்றன,” என்கிறார் சோங்.

“சில விஷயங்களில் ஷி தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி, தன்னையும் சீனாவையும் சாதனையின் உன்னத நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது,” என்கிறார் அவர்.

ஆனாலும், அரசியலில் ஆச்சரியங்கள் நிகழலாம். ஷி தன் தலைமையை நீண்டகாலம் தக்கவைத்துக்கொள்வார் என்று கூறுவதற்கு நிறைய ஆதாரங்கள் இருந்தாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

“சீனாவின் உயர்தட்டு அரசியல் என்பது ஊடுருவிப் பார்க்க முடியாதது. அதில் நமக்குத் தெரியாத விஷயங்கள் நிறைய உள்ளன,” என்கிறார் ஆடம் நி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »