Press "Enter" to skip to content

கருச்சிதைவு ஏற்படுமானால் பெண்களுக்கு சிறை: அமெரிக்காவில் ஏன் இப்படி?

  • ராபின்சன் லெவின்சன் கிங்
  • பிபிசி நியூஸ்

பட மூலாதாரம், STATE OF OKLAHOMA

அமெரிக்காவின் ஓக்லஹோமாவைச் சேர்ந்த 21 வயதான பூர்வகுடி அமெரிக்க பெண் கருச்சிதைவுக்குப் பிறகு ஆட்கொலைக்குரிய தண்டனை பெற்றபோது, மக்கள் கோபமடைந்தனர். ஆனால் இதுபோன்ற தண்டனை பெற்றது இவர் மட்டும் அல்ல.

பிரிட்னி பூலா 2020ஆம் ஆண்டு ஜனவரியில் மருத்துவமனையில் தனது கருவை இழக்கும்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த அக்டோபரில், தனது பிறக்காத குழந்தையை கருவிலேயே ஆணவ கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கருச்சிதைவு ஏற்பட்டது முதல் தனது கருவைக் கொன்றதற்காக சிறையில் அடைக்கப்படும் வரை அவர் எப்படி எல்லாம் நடத்தப்பட்டார் என்பது இணைய உலகிலும் பத்திரிகைகளிலும் அதிக விவாத தலைப்பாயின.

அமெரிக்காவில் கர்ப்ப இழப்பு விழிப்புணர்வு மாதத்தின் போது அவர் குற்றவாளி ஆக்கப்பட்டதாக சிலர் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டனர். மற்றவர்கள் இந்த வழக்கை The Handmaid’s Tale என்ற மார்கரெட் அட்வுட்டின் டிஸ்டோபியன் நாவலுடன் ஒப்பிட்டனர்.

அவர் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்தபோது, ​​தான் கர்ப்பமாக இருந்தபோது சட்டவிரோத மருந்துகளை பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டார்.

பின்னர், பிபிசியால் பெறப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கையில் பிரிட்னி பூலாவின் கருவில் வளர்ந்த சிசுவின் கல்லீரல் மற்றும் மூளையில் மெத்தம்ஃபெட்டமைன் என்ற போதை மருந்து தடயம் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

கருவில் சிசு இறந்த காரணத்தை மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர் தீர்மானிக்கவில்லை.

எனினும், மரபணு ஒழுங்கின்மை, நஞ்சுக்கொடி சீர்குலைவு அல்லது தாய்வழி மெத்தாம்ஃபெட்டமைன் பயன்பாடு ஆகியவை காரணிகளாக இருந்திருக்கலாம்.பூலாவின் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அவரது வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். அவரது வழக்கை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்த வழக்கறிஞர், சட்ட நடைமுறைகள் தொடர்வதால் மேற்கொண்டு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

ஆயினும்கூட, பூலாவின் கதை ஆயிரத்தில் ஒன்று மட்டுமே என்று நேஷனல் அட்வகேட்ஸ் ஆஃப் பிரக்னன்ட் வுமன் (NAPW) என்ற அமைப்பின் துணை நிர்வாக இயக்குநர் டானா சுஸ்மான் கூறுகிறார்.

“பிரிட்னியின் வழக்கு உண்மையில் மெய்சிலிர்க்க வைத்தது,” என்று சுஸ்மான் தெரிவித்தார். “இது மக்கள் நினைத்தது போல் அசாதாரணமானது அல்ல,” என்கிறார் அவர்.

இந்த அமைப்பு பூலாவின் முறையீட்டிற்கு உதவுகிறது, மேலும் அமெரிக்காவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு எதிரான கைதுகள் மற்றும் “கட்டாயத் தலையீடு” வழக்குகளைக் கண்காணித்து வருகிறது.

1973-2020ஆம் ஆண்டு வரை, NAPW அமைப்பு, இதுபோன்ற 1,600 வழக்குகளை கையாண்டுள்ளது. அதில் கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் பதிவான வழக்குகள் சுமார் 1,200.

இவற்றில் சில கருச்சிதைவுகள் கர்ப்பிணிகள் கீழே விழுவதால் ஏற்பட்டவை. வீட்டிலேயே பிரசவம் செய்தததால் கைது செய்யப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டவர்களில் அடக்கம். என்றாலும், பெரும்பான்மையானவர்கள் போதை மாத்திரைகளை பயன்படுத்தியவர்கள். மேலும் குறிப்பிட்ட நிறப் பெண்கள் அதிகமாக இந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீதான குற்றவியல் வழக்குகளின் சமீபத்திய வெளிப்பாடு, அமெரிக்காவின் ‘போதைப்பொருளுக்கு எதிரான போர்’ மற்றும் ஆளுமை இயக்கத்தின் நடவடிக்கைக்கு இடையிலான “தனித்துவ நிகழ்வின் அங்கம்” என்கிறார் சுஸ்மான்.

Protesters on both sides held rallies outside the court on Monday

பட மூலாதாரம், Getty Images

மனிதம் என்றால் என்ன?

1980களில், “கிராக் பேபி” என்ற சொல் போதை மருந்து பயன்படுத்தி வந்த தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகளை விவரிக்கப் பயன்படுத்தப்படத் தொடங்கியபோது, அது கலாசார விவாதத்தின் முன்னரங்கின் முதன்மையான பிரச்னையாக உருவெடுத்தது.

கர்ப்ப காலத்தில் போதைப்பொருள் பயன்பாடு பல எதிர்மறையான விளைவுகளுடன் தொடர்புடையது. கருச்சிதைவு மற்றும் பிரசவத்திற்கு அதிக ஆபத்து உடையதாக அது அமைகிறது.

ஆனால் கருவில் போதைப்பொருள் பயன்பாட்டின் உண்மையான தாக்கம் பரவலாக வேறுபடுகிறது. 1980களில் கோகைன் போதைப்பொருள் பயன்படுத்திய தாய்மார்களின் குழந்தைகள் தீவிர வளர்ச்சிக் குறைபாடுகளை எதிர்கொண்டதாகக் கூறும் ஆய்வுகள் பின்னர் நீக்கப்பட்டன.

அப்போதிருந்து, அடுத்தடுத்த போதைப்பொருள் தொற்றுநோய்கள் – மெத்தாம்ஃபெட்டமைன் பயன்பாடு முதல் ஓபியாய்டு நெருக்கடி வரை – இந்த சிக்கலை கவனத்தில் கொள்ளக்கூடியதாக மாற்றின.

அதே நேரத்தில், பல அமெரிக்க மாகாணங்கள் கருக்கலைப்பு செய்வதை மிகவும் கடினமாக்கும் சட்டங்களை இயற்றின.

மக்கள் கருக்கலைப்பை பல்வேறு காரணங்களுக்காக எதிர்க்கும் போது, ​​பெரும்பாலும் தார்மீக அல்லது மதம், வாதத்தின் ஒரு பகுதி ஆளுமையின் கருத்தை மையமாகக் கொண்டுள்ளது.

“ஆளுமை பற்றிய கருத்து உண்மையில் மிகவும் எளிமையானது,” என்று பர்சன்ஹுட் அலையன்ஸ் எஜுகேஷன் என்ற ஒரு சார்பு வாழ்க்கை அமைப்பின் தலைவர் சாரா குவேல் கூறினார்.

“மனிதர்கள் மனிதர்களே என்றும், நமது சமத்துவம் நமது மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் இந்த மனித ஆளுமை கூறுகிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை நாம் உயிரியல் ரீதியாக மனிதர்கள் என்ற அறிவியல் உண்மையை எதுவும் மாற்றவில்லை. எனவே, மனிதர்களாகிய நாம் சட்டத்தின் கீழ் சமமான பாதுகாப்பிற்கு தகுதியானவர்கள், ஏனென்றால் நாம் உள்ளார்ந்த, இயற்கை உரிமைகளை உடையவர்கள்,” என்கிறார் சாரா குவெல்.

கருக்கலைப்புக்கான அணுகலை ஒழுங்குபடுத்துவதற்கு அப்பாற்பட்ட சட்டங்களை முன்னோக்கி நகர்த்துவதற்கு இவரது ஆளுமை இயக்கம் உதவியது. அது ஒரு மாகாணத்தில் பிறந்த குடிமகனாகும் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை சிசுவில் இருக்கும்போதே அதற்கு நீட்டிக்க உதவுகிறது.

பர்சன்ஹுட் அலையன்ஸ் எஜுகேஷன் அமைப்பு, மருத்துவ உதவியினால் சிசுவை இறக்கச் செய்தல், கருவை அழிக்கும் ஆராய்ச்சி மற்றும் ஆள் கடத்தல் போன்ற விஷயங்களை நிராகரிக்கிறது.

போதைப்பொருள் பயன்படுத்தும் தாய்மார்கள் மீது சட்டம் வழக்குத் தொடர வேண்டுமா என்பது குறித்து இவரது அமைப்புக்கு எந்த நிலைப்பாடும் இல்லை என்று கூறும் அவர், “கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் போதைப்பொருளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் தீங்கிலிருந்து சிசுக்களை தங்களுடைய நடவடிக்கை பாதுகாக்கும்” என்கிறார்.

“ஆனால், எங்கள் சட்ட அமைப்பு பொறுப்பு மற்றும் பொறுப்புக்கூறல் பிரச்னைகளை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும், அது போதைக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்

சட்டங்கள் காக்கவா, தீங்கு விளைவிக்கவா?

23 மாகாணங்களில் உள்ள சிவில் குழந்தை நலச் சட்டங்களின் கீழ் கர்ப்ப காலத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவது குழந்தை துஷ்பிரயோகமாகக் கருதப்படுகிறது என்கிறது குட்மேச்சர் இன்ஸ்டிடியூட், சார்பு தேர்வு ஆராய்ச்சி நிறுவனம்.

அனைத்து அமெரிக்க மாகாணங்களிலும் பாதியில், போதை மருந்துகளைப் பயன்படுத்துவதாக சந்தேகிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களைப் பற்றி சுகாதார நிபுணர்கள் தெரிவித்தாக வேண்டும் என்ற விதி உள்ளது.

2006ஆம் ஆண்டில், அலபாமா மாகாணம் “ரசாயன பயன்பாட்டால் ஏற்படும் ஆபத்து” என்ற சட்டத்தை இயற்றியது, இதன்கீழ் ஒரு குழந்தை போதைப்பொருள் அல்லது போதை வஸ்துக்கு உட்படுத்தப்படுவது அல்லது நுகர்வது அல்லது கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளுடன் தொடர்பு கொள்வது என அனைத்தும் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டது.

அந்த மாகாணத்தைப் பொருத்தவரை, ரசாயன பொருள் அல்லது போதைப்பொருள் சாதனங்களுடன் தொடர்பு கொள்வது ஒரு குற்றமாகும். சட்டம் இயற்றப்பட்ட பத்தாண்டுகளில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் மீது குற்றம்சாட்டப்பட்டதாக ப்ரோ பப்ளிக்கா என்ற அமைப்பு நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டது.

டென்னசி மாகாணம் இதே வழியைப் பின்பற்ற முனைந்து, 2014ஆம் ஆண்டில் இதேபோன்ற சட்டத்தை நிறைவேற்றியது, ஆனால் சட்டம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காலாவதியானது. அது புதுப்பிக்கப்படவில்லை.

கலிபோர்னியா மாகாணத்தின் ஒரு பகுதியில், இரண்டு பெண்கள் கருவில் சிசு இருந்தபோது போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதால், அந்த சிசுக்களை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதில் ஒருவரான செல்சியா பெக்கர், $2m தொகைக்கு பிணை பெற முடியாததால், ஒன்றரை வருடங்கள் சிறையில் இருந்தார். அவர் மீதான கொலைக் குற்றச்சாட்டுகள் இந்த ஆண்டு கைவிடப்பட்டன.

அடோரா பெரெஸ் என்ற பெண் தன் மீதான கடுமையான கொலை குற்றச்சாட்டைத் தவிர்ப்பதற்காக குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதன் பிறகு, ஆணவ கொலைக்காக 11 வருட சிறைத்தண்டனையின் மூன்றில் ஒரு பங்கை அவர் அனுபவித்து வருகிறார். தற்போது அவர் மேல்முறையீடு செய்ய முயற்சித்து வருகிறார்.

அமெரிக்காவில் 38 மாகாணங்களில் “கருவை பாதிக்கும் குற்றங்களை தடுக்கும் சட்டங்கள்” உள்ளன. அந்த சட்டங்களைப் பயன்படுத்தியே செல்சியா, அடோரா போன்ற பெண்கள் மீதும் வழக்குத் தொடரப்பட்டது.

அடிப்படையில் இந்தச் சட்டங்கள், கர்ப்பிணிப் பெண்களுக்குத் தீங்கு விளைவிக்கும் நபர்களை தண்டிக்க உதவும் நோக்கத்துடனேயே உருவாக்கப்பட்டன.

கர்ப்பமாக இருந்த லாசி பீட்டர்சன், அவரது கணவரால் கொல்லப்பட்ட பிறகு 2004ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட கூட்டாட்சி சட்டத்தால் பலர் தூண்டப்பட்டனர்.

ஆனால் இந்தச் சட்டங்களில் பல தெளிவற்றவை ஆக இருந்தன. மேலும் கருச்சிதைவு அல்லது பிரசவத்திற்குப் பங்களித்த பெண்களின் நடத்தைகளைக் குற்றம் சாட்டுவதற்கு வழக்குரைஞர்களுக்கு இவை புதிய வாய்ப்பை ஏற்படுத்தின.

சில மாகாணங்களில் கரு எவ்வளவு வாரங்கள் வளர்ந்திருந்தால் அதை அழிக்க முடியாது என்பது பற்றிய தெளிவான விதிகள் உள்ளன – மற்ற மாகாணங்களில் அவ்வாறு இல்லை.

பெரும்பாலான மருத்துவர்கள் 20-24 வாரங்கள் வளர்ந்த சிசுவை உயிருள்ள ஜீவனாக கருதலாம் என்ற நம்பகத்தன்மையை வைக்கின்றனர்.

பூலா கருச்சிதைவுக்கு ஆளானபோது சுமார் 16 முதல் 17 வாரங்கள் கர்ப்பமாக இருந்தார் – ஒருவேளை அமெரிக்காவில் குற்றம்சுமத்தப்பட்ட பெண்களில் பூலா மிகவும் குறைந்த காலமே கர்ப்பிணியாக இருந்தவராக இருக்கலாம் என்கிறார் சுஸ்மான்.

இன்னும் கொடூரமான எதிர்காலம் வருமா?

கருச்சிதைவுக்குப் பதிலாக பூலா ஒருவேளை கருக்கலைப்பு செய்திருந்தால், ஓக்லஹோமாவில் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக இருப்பதால், அவர் மீது எந்தக் குற்றமும் சுமத்தப்பட்டிருக்காது.

ஆனால் உச்ச டெக்சாஸில் கருக்கலைப்புக்கு கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தடை விதிப்பது மற்றும் கருக்கலைப்புக்கு மேலதிக கட்டுப்பாடுகளை விதிப்பது போன்ற விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிடவிருப்பதால், இந்த விவகாரத்தில் கருவில் வளரும் சிசுக்களுக்காக குரல் கொடுப்பவர்கள், எதிர்காலம் இன்னும் மோசமாக அமையும் என்று கவலைப்படுகிறார்கள்.

கருக்கலைப்பு சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்ட நாடுகளில், கருச்சிதைவு ஏற்பட்டதற்காக பெண்கள் கைது செய்யப்பட்டு கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அப்படியொரு நிலை இங்கும் வந்தால், உள்ளூர் அதிகாரிகள் தங்களுடைய கர்ப்பத்தை வேண்டுமென்றே நிறுத்த முயன்றதாக பெண்கள் மீது குற்றம்சாட்டலாம்.

Flyer con el caso Manuela

பட மூலாதாரம், Getty Images

உலகின் கடுமையான கருக்கலைப்பு தடைகள் அமலில் உள்ள எல் சால்வடோரில் இதுபோன்ற ஒரு வழக்கு நடந்தது, இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படும் மனித உரிமைகளுக்கான அமெரிக்க நாடுகள் இடையிலான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் வரை இந்த வழக்கு சென்றுள்ளது.

கருச்சிதைவு ஏற்பட்டு சிகிச்சை பெற மருத்துவமனைக்குச் சென்ற 33 வயது மானுவேலா என்ற பெண்ணுக்கு கொலைக் குற்றத்திற்காக 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 2010ஆம் ஆண்டில் சிறையில் இறந்தார்.

எல் சால்வடோரின் சட்டங்கள், கருக்கலைப்பு செய்ததாக சந்தேகிக்கப்படும் பெண்களைப் பற்றி புகாரளிக்க வேண்டும் அல்லது மருத்துவர்கள் சிறைக்கு செல்ல நேரிடும் என்று வலியுறுத்துகின்றன.

எல் சால்வடோரின் இந்த சட்டங்கள் சர்வதேச மனித உரிமைச் சட்டத்தை மீறுவதாக உள்ளது என்று பாதிக்கப்பட்ட பெண்களின் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்த வழக்குகளின் அடிநாதம் என்னவென்றால், பெண்கள் தாயாகிவிட்டால், அவர்கள் கருவுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது என

பிரிட்டனில் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் பாலினம் மற்றும் குற்றவியல் சட்ட அறிஞர் எம்மா மில்னே கூறினார்.

ஆனால் உண்மை மிகவும் சிக்கலானது, எனும் மில்னே. பெரும்பாலும் பெண்கள் அவநம்பிக்கை மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர். அவர்களுக்கு உதவியும் ஆதரவும் தேவை என்கிறார்.

“பெண்கள் கர்ப்ப காலத்திலும் அவர்கள் கர்ப்பத்திற்கு முன்பும் அவர்களுக்கு உதவி மற்றும் ஆதரவை வழங்க அரசு தவறிவிட்டது என்பது அரசின் தவறு” என்று வாதிடுகிறார் மில்னே.

2012ஆண்டு கணக்கெடுப்பின்படி, அமெரிக்க கர்ப்பிணிப் பெண்களில் சுமார் 6% பேர் சட்டவிரோத மருந்துகளைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறார்கள், அதே நேரத்தில் 8.5% பேர் மது அருந்துகிறார்கள் மற்றும் 16% பேர் சிகரெட் புகை குடிக்கிறார்கள்.

அமெரிக்க மருத்துவ சங்கங்கள் கர்ப்ப காலத்தில் போதைப்பொருள் பாவனையை சிறுவர் துஷ்பிரயோகம் என வகைப்படுத்துவதை எதிர்க்கின்றன, மேலும் போதைப் பழக்கம் உள்ள பெண்கள் சிகிச்சை பெற வேண்டும், சிறை தண்டனை அல்ல என்று வாதிடுகின்றனர்.

அமெரிக்க மருத்துவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷனின் கூற்றுப்படி, “போதைப் பழக்கம் என்பது ஒரு குற்றச் செயலுக்குப் பதிலாக சிகிச்சைக்கு ஏற்ற ஒரு நோயாகும். சட்டத்தின் கீழ் பிறக்காதவர்களுக்கு சம உரிமைகளை வழங்குவது எளிதானது அல்ல என்று மருத்துவ நெறிமுறைகளில் நிபுணரும் ஹார்வர்ட் சட்டப் பள்ளியின் துணை டீனுமான ஐ. க்ளென் கோஹன் கூறுகிறார்.

கருக்கள் மனித இனத்தைச் சேர்ந்தவை என்பதை யாரும் மறுக்கவில்லை. [கேள்வி] அவர்கள் [சட்டத்தின் கீழ்] நபர்களா இல்லையா,” என்று அவர் கேட்கிறார்.

சட்டம் கருவுக்கு ஆளுமையை வழங்கினாலும், அந்த ஆளுமை உரிமைகள் தாயின் சுயநிர்ணய உரிமையை முறியடிக்க வேண்டுமா?

பெண்கள் உரிமைகள் வழக்குரைஞர்கள் இது ஒரு “வழுக்கும் சரிவு” என்று கவலைப்படுகிறார்கள், இது கர்ப்பிணிப் பெண்களின் சுயாதீனத்தைப் பறிக்க வழிவகுக்கும்.

போதைப்பொருள் பாவனையால் கருவுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு பெண்ணை கைது செய்ய முடியுமானால், அவர் பீர் குடித்தால் என்ன செய்வது? அவர் வேகமாக வாகனம் ஓட்டினால் என்ன செய்வது?

“போதை மருந்து எடுத்தார் என்ற ஒரே காரணத்துக்காக கைது செய்யப்படுகிறார் என்றால், அதன் பிறகு என்ன நடக்கும் என்ற கேள்வியே எழுகிறது,” என்கிறார் மில்னே.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »