Press "Enter" to skip to content

COP26 பருவநிலை மாநாடு: “காலம் கடக்கிறது, கையெழுத்திடுங்கள்” – உலக நாடுகளுக்கு அழைப்பு

பட மூலாதாரம், Getty Images

உலகளாவிய பருவநிலை மாற்றத்தை தடுக்க இணைந்து செயல்படும் விவகாரத்தில் தீர்மானத்தை எட்டும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நடவடிக்கையில் முக்கிய நாடுகள் இடையே சில விஷயங்களில் கருத்தொற்றுமை எட்டப்படாததால் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

கிளாஸ்கோவில் உள்ள பிரதிநிதிகள் பருவநிலை மாற்றத்தின் மிகக் கடுமையான தாக்கங்களைத் தவிர்க்கும் நோக்கத்தில் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கான இறுதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.வறிய நாடுகளுக்கு கார்பன் உமிழ்வைக் குறைக்க நிதியுதவி மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சேதங்களுக்கு பணம் செலுத்துதல் போன்ற பிரச்னைகளில் உள்ள வேறுபாடுகளை களைவதற்கு பேச்சுவார்த்தையில் பங்கெடுத்துள்ள நாடுகளின் பிரதிநிதிகள் உடன்படாததால் சலசலப்பு நிலவுகிறது.

இதனால் மாநாட்டில் பங்கெடுத்த தலைவர்கள் முடிவை எட்ட ஏதுவாக, உச்சி மாநாட்டின் இறுதி நிகழ்வை சில மணி நேரத்துக்கு தள்ளிவைத்திருக்கிறார் அதன் தலைவர் அலோக் சர்மா.

முன்னதாக, கூட்டத்தில் பேசிய அவர், “சமமான தொகுப்புதவி என்பதே இங்கு முன்வைக்கப்பட்ட யோசனை. ஒவ்வொருவருக்கும் அதன் மீது கருத்து தெரிவிக்க வாய்ப்புள்ளது. எல்லோருக்கும் எல்லா அம்சங்களும் பிடிக்காமல் போகலாம். ஆனால், ஒட்டுமொத்த இது உலக நலனுக்கான தொகுப்புதவி. இந்த நோக்கத்தில் நாம் விஷயங்களை முன்னெடுக்க வேண்டும்,” என்றார்.

“நாம் அனைவரும் இறுதியில் ஒரே ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். உலக வெப்பநிலை உயர்வை 1.5C ஆகக் கட்டுப்படுத்தும் பாரிஸ் உடன்படிக்கை இலக்கை எட்டுவதற்கு இந்த வரைவு ஒப்பந்தம் உதவும்,” என்று அவர் மேலும் கூறினார்.”இன்று வரையிலான கூட்டு நடவடிக்கை, பாரிஸில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை விட குறைவாக உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். நாம் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளோம், நாம் ஒன்று கூடி செலுத்தும் கடின உழைப்பு மூலம் ஒரு வெற்றிகரமான தீர்வை எட்ட வேண்டும். உலகம் நாம் துணிவுடன் முடிவெடுக்க வேண்டும் என விரும்புகிறது,” என்று சர்மா கூறினார்.

தாமதமாகும் கூட்டம்

A man walks along a submerged road in Thailand after heavy rainfall caused flooding

பட மூலாதாரம், Getty Images

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் COP26 எனப்படும் பருவநிலை உச்சி மாநாடு வெள்ளிக்கிழமை இரவே முடிவதாக இருந்தது. ஆனால், கூட்டத்தில் சில விஷயங்களில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால் வரைவு தீர்மானத்தை எட்டுவதில் இழுபறி நீடித்தது.

இந்த நிலையில், இந்த உச்சி மாநாட்டை இன்றை நிறைவு செய்வதாக அலோக் குமார் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, நியூசிலாந்து நாட்டின் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான துறையின் அமைச்சர் ஜேம்ஸ் ஷா, மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட வரைவு ஒப்பந்தத்தை தமது நாடு வரவேற்கிறது என்று தெரிவித்தார்.

“இந்த வரைவு ஒப்பந்தம், இன்னும் வரைவு நிலையிலேயே இருப்பதால் அதில் இடம்பெறும் சில வரிகளை மாற்றலாம் என்றும் சமமான தொகுப்புதவி என்ற வார்த்தையின் தொனி பற்றி இறுதியில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று கூறினார்.

பருவநிலை மாநாடு

பட மூலாதாரம், Reuters

இறுதி நிகழ்வையொட்டி நடந்த விவாதங்களிலும் கலந்துரையாடல்களிலும் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளே அதிகமாக காணப்பட்டனர்.

முதல் விஷயமாக, வளரும் நாடுகளுக்கு உதவ பணம் தரும் விவகாரத்தில் தங்களுக்கான வரம்பு என்ன என்பதை அறிய விரும்புவதாக அமெரிக்கா வலியுறுத்திப் பேசி வருகிறது.

இரண்டாவதாக வறிய நிலையில் உள்ள நாடுகளுக்கு நிதியுதவி செய்வது தொடர்பான விவாதம் நடந்தபோது, அது ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது என்று பேசப்பட்டது. மூன்றாவதாக, பாதிக்கப்படும் வளரும் நாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை இரட்டிப்பாக்குவதால் மட்டும் பிரச்னை எப்படி தீரும்? இதில் சம்பந்தப்பட்ட எல்லோருமே ஈடுபாடு காட்டாதவரை எப்படி தீர்வு கிடைக்கும் என்ற முழக்கத்தை வளர்ந்த நாடுகள் அனைத்துமே முன்வைத்துள்ளன.

பிரச்னைக்கு என்ன காரணம்?

பருவநிலை மாநாடு

பட மூலாதாரம், Getty Images

இந்த வரைவு ஒப்பந்தம் தொடர்பாக ஏன் உலக நாடுகளின் தலைவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்? அதில் என்ன இருக்கிறது?

அது தொடர்பாக உச்சிமாநாட்டில் நடந்த நிகழ்வுகளின் நினைவூட்டலை இங்கே தொகுத்தளிக்கிறோம்:

  • பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப வளரும் நாடுகளுக்கு உதவுவதற்காக இரட்டிப்பு நிதியுதவி வழங்குவதற்கான உண்மையான அர்ப்பணிப்பு தேவை என்ற வரியை ‘உதவி வழங்க சம்பந்தப்பட்ட நாடுகளை வலியுறுத்துவது’ என்ற குரலை தணிக்கும் வகையில் மாற்ற விவாதிக்கப்பட்டது.
  • 2030ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை குறைக்கும் இலக்குகளை அடுத்த ஆண்டுக்குள் புதுப்பிக்கும் அறிவிப்பை உலக நாடுகள் வெளியிட கேட்டுக் கொள்ளப்படுகின்றன.
  • “தணிக்கப்படாத நிலக்கரி சக்தி மற்றும் திறனற்ற புதைபடிவ எரிபொருள் மானியங்களை” படிப்படியாக அகற்றுவதற்கான நடவடிக்கையை தொடங்க அழைப்பு விடுக்கப்பட்டன (தடுக்கப்படாத நிலக்கரி என்பது கார்பன் பிடிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாமல் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரி).
  • ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர்களுக்கு மேல் வளரும் நாடுகளுக்கு “கணிசமான அளவில் ஆதரவை அதிகரிக்க” வேண்டியதன் அவசியத்தை மாநாடு வலியுறுத்துகிறது.
  • பருவநிலை மாற்றம் ஏற்கெனவே ஏற்படுத்திய சேதத்திற்கான இழப்பீடு தொடர்பான நிதி குறித்த விவாதத்தை தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்த அம்சங்கள் மீதே உலக நாடுகள் பலவும் மாறுபட்ட கருத்தை கொண்டிருப்பதால் அதை இறுதி செய்யும் நடவடிக்கைக்கான பேச்சுவார்த்தையில் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதை பார்க்கும்போது இந்த உச்சிமாநாட்டில் இறுதி ஒப்பந்தம் ஏற்படுமா என்பதே தெளிவற்று உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »