Press "Enter" to skip to content

பிரான்சின் கடைசி ராணி கொடூரமாக கொல்லப்பட்ட வரலாறு தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images

(உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை ‘வரலாற்றுப் பதிவுகள்’ என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், 22வது கட்டுரை இது)

பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்னர் அந்த நாட்டின் கடைசி ராணி மரியா அட்டவ்னெட் (1755 – 1793) புரட்சியாளர்களால் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டார். செல்வச் செழிப்புடன் வாழ்ந்த அவர் அந்த நாட்டில் முடியாட்சி ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொது மேடையில் சிரச்சேதம் செய்யப்பட்டார். அவர் வாழ்க்கை குறித்து உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்?

மரியா அட்டவ்னெட் 1755ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி ஆஸ்திரியாவின் வியன்னாவில் உள்ள ஹாஃப்பர்க் அரண்மனையில் அரச குடும்பத்தில் பிறந்தார்.

புனித ரோமானிய பேரரசர் பிரான்சிஸ் மற்றும் பேரரசி மரியா தெரீசாவுக்கு 15ஆவது குழந்தையாக பிறந்தார் மரியா அட்டவ்னெட். இந்த தம்பதிக்கு 16 குழந்தைகள் இருந்தனர், அவர்களில் மரியா, தனது பதினான்காம் வயதில், பிரெஞ்சு சிம்மாசனத்தின் வாரிசான பெர்ரி கோமகன் மற்றும் பிரான்சின் இளவரசர் லூயி – அகஸ்டேவை ப்ராக்ஸி மூலம் (இரண்டு நபர்களில் குறைந்தபட்சம் ஒருவரின் முன்னிலையில் இல்லாமல் நடைபெறும் திருமணம்) 1770ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகள் இருந்தனர்: மேரி தெரேஸ் சார்லோட், லூயி ஜோசஃப், லூயி சார்ல்ஸ் மற்றும் சோஃபி ஹெலன் பீட்ரைஸ் அவர்களின் பெயர்.

மரியாவின் ஆரம்பகால வாழ்க்கை

1755ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவின் சீமாட்டியாக பிறந்த மரியா அட்டவ்னெட், தனது குழந்தைப் பருவத்தை வியன்னாவின் ஷான்ப்ரூன் அரண்மனை மற்றும் ஹோஃப்பர்க் அரண்மனையில் கழித்தார்.

Short presentational grey line
Short presentational grey line

பேரரசி மரியா தெரீசா மற்றும் ரோமானிய பேரரசர் முதலாம் பிரான்சிஸ் ஆகியோரின் 15வது குழந்தையான இவர், ‘மரியா அட்டவ்னெட்’ எனப் பெயரிடப்பட்டு, ‘அட்டோயின்’ என்று குடும்பத்தாரால் அழைக்கப்பட்டார். உடன்பிறப்புகளுடன் தமது குழந்தைப் பருவத்தை வியன்னாவின் வண்ணமயமான சூழலில் இவர் கழித்தார், அதே நேரத்தில் இவர்களின் தாய் அவர்களின் எதிர்காலத்தை நேர்த்தியாக வகுத்தெடுத்தார். மரியாவின் கல்வி அக்கால அரச குடும்பத்துப் பெண்ணுக்குக் கொடுக்கப்பட்டதைப் போல அமைந்தது. பாடுவது, நடனம் கற்பது, இசை வாசிப்பது எப்படி என அவருக்கு பயிற்றுவிக்கப்பட்டது. அவர் தனது மூத்த சகோதரி மரியா கரோலைனாவின் காரியதரிசி போலவும் செயல்பட்டார். இந்த சகோதரிகள் மரியாவின் பிந்தைய வாழ்நாள் முழுவதும் நெருக்கமான தோழிகள் போல வாழ்ந்தனர்.

லூயி வாரிசுடன் திருமணம்

1756ஆம் ஆண்டில் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியா வெர்சாய்ஸ் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. ஏழு ஆண்டு போர் (1754-63) முடிந்த பிறகு இரு நாடுகளும் ஒருவரையொருவர் ஆதரிப்பதை அந்த ஒப்பந்தம் உறுதி செய்தது. அந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் இருந்த பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு காலனிகளுக்கு உரிமை கோரி ஐரோப்பாவின் வலுவான சக்திகளுக்கு இடையே தொடர்ச்சியாக போர்கள் நடந்தன.இந்த காலகட்டத்தில் இரு குடும்பத்துக்கும் இடையே ஒரு திருமண கூட்டணி இருந்தால், இந்த ஒப்பந்தம் தழைத்தோங்கும் என்று நினைத்தனர்.

அதன் விளைவாக, 14 வயதான மரியாவை பதினைந்தாம் லூயி மன்னரின் வாரிசான, அவரது மூத்த பேரன் லூயி-அகஸ்டேவுக்கு ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளாமலேயே ப்ராக்ஸி முறை மூலம் 1770ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி திருமணம் செய்து வைக்கப்பட்டது.

1770ஆம் ஆண்டு மே 14ஆம் தேதிதான் மரியா, தனது கணவரை முதல் முறையாக சந்தித்தார். இந்த ஜோடிக்கு 1770ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி வெர்சாய்ஸ் அரண்மனையில் அதிகாரபூர்வமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமண ஜோடியின் காட்சியை பிரெஞ்சு வீதிகளில் சுமார் ஐம்பதாயிரம் பொதுமக்கள் காத்திருந்து ரசித்தனர். அந்த நிகழ்வில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் கிட்டத்தட்ட முப்பது பேர் வரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர் என்பது வரலாறு.

அந்த மரணங்களை மறக்கடிக்கும் அளவுக்கு கூட்டத்தில் இருந்தவர்கள், மரியா அட்டவ்நெட்டின் அழகை வியந்து பேசினர். வேறு சிலர், அவரது ஆஸ்திரிய பாரம்பரியம் மற்றும் அவரது நிச்சயிக்கப்பட்ட எதிர்காலத்தை கணித்துப் பேசினர் என்கிறார் வரலாற்றாய்வாளர் எமிலி பிராண்ட்.

மரியா அட்டவ்னெட்

பட மூலாதாரம், Getty images/ Hulton Archive

வெகு விரைவிலேயே ஆடம்பரமான பிரெஞ்சு அரச குடும்பத்து வாழ்க்கை முறைக்கு பழக்கமாகி விட்ட மரியா, சூதாட்டங்களில் கலந்து கொள்வதிலும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதிலும் ஆர்வம் காட்டினார்.

இருப்பினும், இவரது கணவர் பொது விவகாரங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தம்பதி தங்களின் திருமணத்தை முடிக்க முயன்றதாக கூறப்பட்ட விவகாரம், அரசவையிலும் பொதுவெளியிலும் விவாதப்பொருளானது.அதற்குள் மன்னர் லூயி பெரியம்மை நோயால் 1774ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி இறந்தார். இதனால் மரியாவின் கணவர் பதினாறாம் லூயி அரியணையை ஏற்க, 19 வயதே ஆன மரியா அட்டவ்னெட் நாட்டின் ராணியாக மகுடம் சூடினார். அதுவரை மரியாவின் எதிர்காலம் உறுதி செய்யப்பட்ட வாழ்க்கையாகவே இருந்தது.

ஆனால், பதினாராம் லூயி (மரியாவின் கணவர் லூயி அகஸ்டே) அரசவைக்கு தலைமை தாங்கிய அடுத்த சில வாரங்களிலேயே நாட்டில் கலவரம் வெடித்தது. இதை விவரித்த வரலாற்றாய்வாளர் எமிலி பிராண்ட், “ஆண்டுக்கணக்கில் மக்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த அதிக வட்டி, பொய்த்துப்போன நிதிக் கொள்கைகள், பசி, பட்டினி நிலைமை மக்களை கோபமூட்டின,” என்று குறிப்பிடுகிறார்.

Short presentational grey line
Short presentational grey line

மரியா அட்டவ்னெட்டின் குழந்தைகள்

மேரி

பட மூலாதாரம், Getty Images/ Heritage Images

ராணியாக இருந்த மரியாவின் முதல் மூன்று ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லாமல் கழிந்தன. தனது மகளின் நுட்பமான நிலையை உணர்ந்த அவரது தாய் மரியா தெரீசா, அந்த நிலையை மறக்கடிக்கும் வகையில் மக்கள் மீது செல்வாக்கு செலுத்தி செயல்படுவது பற்றிய அறிவுரைகளை அட்டவ்னெட்டுக்கு வழங்கினார். மேலும் பாரிஸில் உள்ள தூதரிடம் இருந்து தனது மகளின் நடத்தை பற்றிய ரகசிய தகவல்களையும் திரட்டினார்.1777ஆம் ஆண்டு வாக்கில், அப்போதைய ரோமானிய பேரரசராக இருந்த மரியாவின் சகோதரர் ஜோசப் – தங்கையை பார்க்க அவரது அரண்மனைக்கே சென்றார். தனது தங்கையும் அவரது கணவரும் ஏன் இன்னும் தங்களுக்கான சந்ததியை தொடங்கவில்லை என்பதை அறிவது அவரது நோக்கமாக இருந்தது.

பாலியல் உறவு கொள்வதில் முன்னனுபவம் இல்லாதது, இருவர் மீதும் பரஸ்பரம் நாட்டம் இல்லாதது போன்றவை அதற்கு காரணம் என்பதை ஜோசப் கண்டறிந்ததாக எமிலி பிராண்ட் பதிவு செய்கிறார். ஆனால், ஆச்சரியமூட்டும் வகையில் அவர் தங்கையை பார்த்துச் சென்ற அடுத்த சில நாட்களிலேயே மரியா அட்டவ்னெட் கருத்தரித்தார்.

1778ஆம் ஆண்டு டிசம்பரில் மரியா தனது முதல் குழந்தையான மேரி தெரேஸ் சார்லோட்டைப் பெற்றெடுத்தார். ஒரு மகன், லூயி-ஜோசப், அக்டோபர் 1781ஆம் ஆண்டிலும், 1785 (லூயிஸ் சார்லஸ்) மற்றும் 1786 (சோஃபி ஹெலீன் பீட்ரைஸ்) ஆகியோரை பெற்றார்.

“ராணி தனது முதல் மகனான லூயி-ஜோசப்பை பெற்றெடுத்தபோது எல்லா தரப்பினருக்கும் அது ஒரு நிம்மதியாக இருந்தது, இருப்பினும், துரதிருஷ்டவசமாக, மரியாவின் தாய் அதைப் பார்க்க உயிரோடில்லை,” என்று எமிலி பிராண்ட் கூறுகிறார்.

Short presentational grey line
Short presentational grey line

மரியாவை ஏன் பிரெஞ்சுக்காரர்கள் விரும்பவில்லை?

1780களில் பிரான்ஸ் மோசமான நிலையில் இருந்தது. அதன் விளைவாக தானியத்தின் விலை அதிகரித்தது. அரசாங்கமும் பெருகி வரும் நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டது.

இந்த சிக்கலான நேரத்திலும் அரண்மனை அந்தப்புறத்தில் மரியா தொடர்ந்த ஆடம்பரமான வாழ்க்கை பொதுவெளியில் விமர்சனத்துக்கு உள்ளானது. ராணியின் ஊதாரித்தனமான செலவுகள் மீதான மக்களின் வெறுப்பை வெளிப்படுத்தும் ஏராளமான துண்டு பிரசுரங்கள் மற்றும் நையாண்டி குறிப்புகள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டன.இதற்கிடையில், மரியா தனது நெருங்கிய தோழனான ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஹான்ஸ் ஆக்செல் வான் ஃபெர்சனுடன் தொடர்பு வைத்திருப்பதாக ஆபத்தான வதந்திகள் பரவின. அந்த வதந்தி மரியாவின் குழந்தைகளின் தந்தைவழி குறித்த கேள்விகளை எழுப்பி சலசலப்பை ஏற்படுத்தின.1783ஆம் ஆண்டில், வெர்சாய்ஸ் அரண்மனையின் மைதானத்தில் ஒரு ஒதுங்கிய விவசாய கிராமத்தை உருவாக்கத் தொடங்கியபோது மரியா சொகுசு வாழ்கை புதிய உச்சத்தை எட்டியது.

அரண்மனை அந்தப்புறத்தில் இருந்து விலகியிருக்கும் வகையில் அதன் மைதானத்திலேயே ஒரு பண்ணை வீடு, குடிசை வீடுகள், மில் மற்றும் பண்ணை விலங்குகள் பொருத்தப்பட்ட, Le Hameau de la Reine (அல்லது ‘The Queen’s Hamlet’) ராணி மற்றும் அவரது நெருங்கிய தோழிகள் அடங்கிய வசதிகள் அங்கு உருவாக்கப்பட்டன.

அங்கு தமது சக தோழிகளுடன் மரியா, ஆடு மேய்க்கும் பெண்களைப் போல வேடமிட்டு, பண்ணையைச் சுற்றி நடப்பார். மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் பால் கறப்பது போன்ற வேடமிட்டுக் கொண்டிருப்பார்கள். மரியா கிராமத்தை நிலைநிறுத்தவும் விலங்குகளை பராமரிக்கவும் வேலையாட்களை நியமித்தார். நாடு வறிய நிலையில் இருக்கும்போது தன்னையும் சாமானிய மக்களில் ஒருவராக காட்டிக் கொள்ள இவ்வாறு அவர் நாடகமாடியதாக ஒரு விமர்சனம் எழுந்தது.

இதற்கிடையில், அரசரின் சகோதரர், கவுன்ட் ஆஃப் ப்ரோவென்ஸ் மற்றும் அவரது உறவினர் உட்பட பலரும் அரசாங்க விஷயங்களில் அழுத்தம் கொடுப்பதில் லூயி கடைப்பிடிக்கும் அணுகுமுறையால் அதிருப்தி அடைந்தனர்: வளர்ந்து வரும் அரசாங்கக் கடனை எவ்வாறு சரிசெய்வது என்பதில் லூயி உறுதியற்றவராக இருந்தார். இந்த அழுத்தத்துக்கு மேலும் வலி தரும் வகையில் மறுபுறம் ராணியின் ஆடம்பர வாழ்க்கை இருந்தது.

மேரி

பட மூலாதாரம், Getty Images/ Hulton Archive

பிரபுக்களிடமிருந்து வந்த அழுத்தத்தை எதிர்கொண்டு, 1788ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி 175 ஆண்டுகால எஸ்டேட்ஸ் ஜெனரலின் முதல் கூட்டத்திற்கு உத்தரவிட்டார் – மதகுருமார்களின் (முதல் எஸ்டேட்) பிரதிநிதிகளின் பொதுச் சபை; பிரபுக்கள் (இரண்டாம் எஸ்டேட்), மற்றும் சாதாரண மக்கள் (மூன்றாவது எஸ்டேட்) என அந்த கூட்டம் நிரம்பி வழிந்தது.

அத்தகைய ஒரு கூட்டம் கூட்டி விவாதிக்கப்பட்டால் அது பிரான்சின் அதிகரித்து வரும் கடனைச் சமாளிப்பதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க வாய்ப்பளிக்கும் என்று லூயி நம்பினார்.இருப்பினும், பிரான்சின் நிதி நிலைமை முன்னேறாத நிலையை அடைந்த பிறகு, மூன்றாவது எஸ்டேட் எஸ்டேட்ஸ் ஜெனரலிடமிருந்து பிரிந்து, மன்னரின் அதிகாரம் இல்லாமல் ஆட்சி செய்வதற்கான திட்டங்களை செயல்படுத்தும் புதிய யோசனை அதில் கிளம்பியது.

உணவுப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் ராணியின் அதீத வாழ்க்கை முறை ஆகியவற்றாலும் மன்னரின் தயக்கத்தாலும் விரக்தியடைந்த முதல் மற்றும் இரண்டாவது எஸ்டேட்களின் பிரதிநிதிகள் இந்த யோசனைக்கு ஆதரவாக இருந்தனர்.

மரியா அட்டவ்னெட் மற்றும் பிரெஞ்சு புரட்சி

மேரி

பட மூலாதாரம், Universal History Archive

1789ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி, அரச குடும்பத்தின் மீதான பொது எதிர்ப்பு உச்சத்தை எட்டியது. மேலும் பாரிஸில் உள்ள ஒரு சிறையான பாஸ்டிலை – கோபமான ஆயுதமேந்திய கும்பல் தாக்கியது.

முடியாட்சியின் முழுமையான அதிகாரத்தின் குவியலாக அந்த சிறைச்சாலை பார்க்கப்பட்டது. அதனாலேயே அதன் சுவர்களைத் தாக்கிய நிகழ்வு, பிரெஞ்சு முடியாட்சியின் வீழ்ச்சி மற்றும் பிரெஞ்சு புரட்சியின் தொடக்கமாக அமைந்தது. பல வாரங்களுக்குப் பிறகு, ஆயிரக்கணக்கான மக்கள் வெர்சாய்ஸ் அரண்மனையைச் சுற்றி வளைத்தனர். அரசியல் சீர்திருத்தங்கள் மற்றும் ஆட்சி செய்யும் விதத்தில் மாற்றங்களை கோரி அவர்கள் முழக்கமிட்டனர்.

முடியாட்சியை எதிர்த்த இந்த புரட்சிகர சக்திகள் பின்னாளில் பாரிஸில் உள்ள டுயிலரீஸ் அரண்மனையின் சுவர்களுக்குள் அரச குடும்பத்தினரை சிறை வைத்தன.பாரிஸில் புரட்சிகர நடவடிக்கையில் அதிகமான மக்கள் இணைந்ததால், முடியாட்சி பற்றிய பொதுக் கருத்து மேலும் மோசமடைந்தது, 1791ல் மரியா தனது குடும்பத்துடன் பிரான்சை விட்டு வெளியேறி ஆஸ்திரியாவில் தஞ்சம் அடைய திட்டமிட்டார். இருப்பினும், குடும்பத்துடன் தப்பிக்க முயன்றபோது அனைவரும் பிடிக்கப்பட்டு மீண்டும் பாரிஸுக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்கள் திரும்பி வந்ததும் வீதிகளில் அதிருப்தி மக்கள் கூட்டத்தை எதிர்கொண்டனர்.அரசியல் எதிரிகளின் அழுத்தத்திற்கு மத்தியில், 1791 செப்டம்பரில் பதினாறாம் லூயி ஒரு அரசியலமைப்பு சார் ஆட்சியை உருவாக்க ஒப்புக்கொண்டார், மேலும் தனது அரசியல் அதிகாரத்தை பிரெஞ்சு பேரவையுடன் பகிர்ந்து கொள்வதாக உறுதியளித்தார். ஆனாலும் அவரது முயற்சி கிளர்ச்சியைத் தணிக்கத் தவறியது.

Short presentational grey line
Short presentational grey line

1792ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி புரட்சியாளர்களின் கும்பல் டூயிலரீஸ் அரண்மனைக்குள் நுழைந்தது, அங்கு அரச குடும்பம் கண்காணிப்பில் வைக்கப்பட்டது. மன்னர் லூயி மற்றும் மரியாவை அவர்கள் சிறைப்பிடித்தனர்.

பிரெஞ்சுப் புரட்சியை எதிர்க்கும் எவரையும் ஒழிக்க குடியரசு கட்சி அரசு உறுதியாக இருந்தது. இதன் விளைவாக, மரியாவின் நெருங்கிய தோழிகளில் ஒருவரான இளவரசி டி லம்பால்லே உட்பட, நாடு முழுவதும் அரச குடும்பத்துடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான அரச வம்சத்தினர், பிரபுக்கள் மற்றும் மக்கள் சிரச்சேதம் செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்.

ராஜாவும் ராணியும் இப்போது சிறைப்பிடிக்கப்பட்டு விட்ட நிலையில் கூடிய தேசிய மாநாடு முடியாட்சியை ஒழிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் பிரான்ஸ் அதிகாரபூர்வமாக குடியரசாக அறிவிக்கப்பட்டது.1792ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி, பிரான்சின் பேரவை கூடி முடியாட்சியை ஒழிக்க ஆதரவாக வாக்களித்தது. நான்கு மாதங்களுக்குப் பிறகு, புதிய குடியரசு கட்சியின் உறுப்பினர்களால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், பதினாறாம் லூயி தேசத்துரோக குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து 1793ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி பாரிஸில் உள்ள பிளேஸ் டி லா கான்கார்டில் அவர் சிரச்சேதம் செய்யப்பட்டார்.

மரியா மீது என்ன குற்றம்சாட்டப்பட்டது?

1793ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி, பல மாத சிறைவாசத்திற்குப் பிறகு, மரியா விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரும் தேச துரோக குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். ஆனால் உண்மையில் மரியா அட்டவ்னெட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவரை நேரடியாக குற்றவாளியாக்க வலுவான குற்றங்கள் இல்லை என்று பதிவிடுகிறார் வரலாற்றாய்வாளர் எமிலி பிராண்ட்.

ஆனாலும், “ஆயிரக்கணக்கான பிரெஞ்சு ஆண்களின் மரணத்திற்கு அவரே பொறுப்பு என்று கூறப்பட்டது. கணவரை சரியாக கையாளவில்லை என்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. தனது மகனுடனேயே அவர் உறவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. தன் மீதான எல்லா குற்றச்சாட்டுகளையும் நிதானமாகவே அவர் கேட்டார். காரணம், தப்பிப்பதற்கு அவருக்கு எந்த வழியும் கிடைத்திருக்கவில்லை,” என்கிறார் எமிலி பிராண்ட்.

சிரச் சேதம் செய்யப்பட்ட மரியா அட்டவ்னெட். 1973 அக்டோபர் 16.

பட மூலாதாரம், Getty Images/ Heritage Images

மரியா அட்டவ்னெட் எப்படி இறந்தார், அவருக்கு எவ்வளவு வயது?

விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, தனது 37ஆம் வயதில், மரியா அட்டவ்னெட் தனது கணவருக்கு ஏற்பட்ட அதே விதியை அனுபவித்தார்: பொதுவெளியிலேயே அவரது சிரச்சேதமும் நடந்தது. மரண தண்டனைக்கு முன்பு தனது மைத்துனிக்கு அவர் எழுதிய இறுதிக் கடிதத்தில், 19ஆம் நூற்றாண்டில் தான் போற்றப்பட வேண்டிய அமைதியான கண்ணியம் மற்றும் தாய் அன்பு இரண்டையும் வெளிப்படுத்தி எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில், “ஒருவரின் மனசாட்சி ஒன்றுமில்லாமல் மற்றவரைப் பழிக்கும்போது நான் அமைதியாக இருக்கிறேன். … என் அன்பான குழந்தைகளைப் போலவே நான் உன்னை முழு மனதுடன் அரவணைக்கிறேன். கடவுளே, அவர்களை என்றென்றும் விட்டுவிடுவது இதயத்தை பிளக்கச் செய்கிறது! உங்களை பிரிகிறேன்!” என்று மரியா குறிப்பிட்டிருந்தார்.இறப்பதற்கு முந்தைய இறுதி தருணங்களில், மரணதண்டனை நிறைவேற்றுபவரிடம் மன்னிப்புக்காக மரியா மன்றாடியதாக எமிலி பிராண்டு கூறுகிறார். ஆனாலும், அவரது குரலுக்கு தண்டனையை நிறைவேற்றுபவர் செவி சாய்க்காவில்லை. சரியாக அவரது கழுத்துப் பகுதியில் கத்தி விழுந்து அவரது தலை துண்டிக்கப்பட்டபோது, சுற்றிலும் நின்று வேடிக்கை பார்த்த மக்கள் கூட்டம் ஆரவாரம் செய்தது,

முன்பக்கத்தில் இருந்த சிலர் தங்கள் கைக்குட்டையால் மரியாவின் உடலில் வழிந்தோடிய ரத்தத்தை துடைக்க விரைந்தனர். அந்த நாளின் பிற்பகுதியில், ஒரு புரட்சிகர நாளிதழ் ஒன்றில், “உலகம் சுத்திகரிக்கப்பட்டது!” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது.

“மரியாவின் மரண தண்டனை, அடக்குமுறை மீதான சுதந்திரத்தின் வெற்றியாகப் பாராட்டப்பட்டது” என எமிலி பிராண்ட் கூறுகிறார்.

மரியாவின் தலைக்கு என்ன ஆனது?

ராணியின் தலை விழுந்த பிறகு, அது உடனடியாக கூட்டத்திற்கு காட்டப்பட்டது, அதைப் பார்த்து கண்ணீரிலேயே மக்கள் சிலர் எதிர்வினையாற்றினர். மரணத்திற்குப் பிறகு, அவது உடல் பாரிஸில் உள்ள L’église de la Madeleine என்ற அடையாளம் தெரியாதோரின் உடல்கள் வீசப்படும் கல்லறை பகுதியில் தூக்கி வீசப்பட்டது.19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரான்சில் முடியாட்சியின் மறுசீரமைப்பின் போது பதினாறாம் லூயி மற்றும் மரியாவின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதை வரலாறு பதிவு செய்துள்ளது.

இந்த தம்பதியின் எச்சங்கள் 1815ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி அன்று செயின்ட் டெனிஸ் தேவாலயத்தில் முறையாக புதைக்கப்பட்டன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »