Press "Enter" to skip to content

COP26: புதிய பருவநிலை ஒப்பந்தம் கிளாஸ்கோவில் நிறைவேறியது – சாதித்தது என்ன?

  • பால் ரின்கன்
  • அறிவியல் பிரிவு ஆசிரியர், பிபிசி நியூஸ் தளம்

பட மூலாதாரம், Reuters

புவியில் வாழும் உயிர்களை அச்சுறுத்திவரும் ஆபத்தான பருவநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவது தொடர்பாக புதிய உலகளாவிய ஒப்பந்தம் நிறைவேறியது.

பிரிட்டன் நாட்டின் கிளாஸ்கோ நகரில் கடந்த இரண்டு வாரங்களாக நடந்துவந்த சிஓபி26 என்று அறியப்படும் ஐ.நா. பருவநிலை உச்சி மாநாட்டின் இறுதியில் இந்த ஒப்பந்தம் வடிவம் பெற்றது.

நிலக்கரி பயன்பாட்டை குறைப்பதற்கு வெளிப்படையாக ஒப்புக்கொண்ட முதல் பருவநிலை ஒப்பந்தம் இதுதான். பசுமை இல்ல வாயுக்களை உமிழும் மோசமான புதைபடிவ எரிபொருள் நிலக்கரி என்பது குறிப்பிடத்தக்கது.

பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுவதை அவசரமாக குறைக்கவேண்டும் என்றும் இந்த ஒப்பந்தம் வலியுறுத்துகிறது. அத்துடன் பருவநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை எதிர்கொள்ள ஏழை நாடுகளுக்கு பணக்கார நாடுகள் நிதியுதவி செய்யவேண்டும் என்றும் இந்த ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொழிற்புரட்சிக் காலத்துக்கு முந்தைய நிலைமையோடு ஒப்பிடும்போது புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியசுக்கு மேல் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பது பருவநிலை மாற்றம் தொடர்பான தாரக மந்திரமாக மாறியுள்ளது.

ஆனால், இந்த அளவில் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த போதுமான வாக்குறுதிகள் இந்த புதிய பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை.

இந்தியா எதிர்ப்பு

நிலக்கரி பயன்பாட்டை படிப்படியாக ஒழிக்கவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளும் பிரிவுகள் தொடக்க நிலை பேச்சுவார்த்தைக்கான வரைவு அறிக்கைகளில் இடம் பெற்றிருந்தன. ஆனால், இந்தியா தலைமையில் பல நாடுகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. இதையடுத்து ஒப்பந்தம் பல திருப்பங்களுக்குப் பிறகு நிறைவேறியது.

தங்கள் வறுமை ஒழிப்பு, வளர்ச்சித் திட்டங்கள் போன்றவை நிறைவேறாத நிலையில் எப்படி வளரும் நாடுகள் தங்கள் நிலக்கரி, புதைபடிவ எரிபொருள்களுக்கான மானியத்தை ஒழிக்க வாக்குறுதி அளிக்க முடியும் என்று இந்தியாவின் பருவநிலை மாற்ற அமைச்சர் பூபேந்தர் யாதவ் கேள்வி எழுப்பினார்.

இறுதியில் நிலக்கரி பயன்பாட்டை ‘படிப்படியாக ஒழிப்பது’ என்ற வாசகத்துக்குப் பதிலாக ‘படிப்படியாக நிலக்கரி பயன்பாட்டை குறைப்பது’ என்ற வாசகத்தை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டன. ஆனால், இதற்குப் பல நாடுகள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டன.

ஆனால், அடுத்தடுத்து நடந்துவிட்ட நிகழ்வுகளுக்கு தாம் மிகவும் வருந்துவதாக மாநாட்டுத் தலைவர் அலோக் சர்மா தெரிவித்தார்.

கார்பன் உமிழ்வு வரைபடம்

ஒப்பந்தத்தை முழுமையாக காப்பாற்றவேண்டியது இன்றியமையாதது என்று மாநாட்டுப் பிரதிநிதிகளிடம் கூறியபோது அவர் கண் கலங்கிவிட்டார்.

எதிர்காலத்தில் வரலாற்றை திரும்பிப் பார்க்கும்போது, பருவநிலை மாற்றத்தை முடிவுக்குக் கொண்டுவருவதன் தொடக்கமாக கிளாஸ்கோ மாநாடு இருக்கும் என்றார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

“பருவ நிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வரும் ஆண்டுகளில் நிறைய செய்யவேண்டி இருக்கிறது. ஆனால், முன்னோக்கி வைத்த ஒரு பெரிய அடியாக இந்த ஒப்பந்தம் இருக்கிறது. நிலக்கரி பயன்பாட்டை குறைத்துக்கொள்வதற்கு ஒப்புக்கொண்ட முதல் சர்வதேச ஒப்பந்தமாக இது இருக்கிறது. இது மிகவும் முக்கியம்,” என்றார் அவர்.

இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய முடிவை எடுப்பதாக கிளாஸ்கோ மாநாடு இருந்துவிடாது என்பது தெரிந்ததே என்று பருவநிலை மாற்றத்துக்கான ஐ.நா. தூதர் ஜான் கெர்ரி கூறினார். ஆனால், முதல் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என பொருள்படும்படி அவர் கருத்து தெரிவித்தார்.

நிறைவுக் கூட்டத்தில் பங்கேற்ற மாநாட்டுத் தலைவர் அலோக் சர்மா.

பட மூலாதாரம், Getty Images

“புவிக்கோள் ஒரு நூலிழையில் தொங்கிக்கொண்டிருக்கிறது. பருவநிலை பேரழிவின் கதவை நாம் இன்னும் தட்டிக்கொண்டிருக்கிறோம். எனவே அவசரகால முனைப்புக்கு செல்லவேண்டும். இல்லாவிட்டால், நிகர பூஜ்ஜிய உமிழ்வு நிலையை அடைவதற்கான வாய்ப்பு பூஜ்ஜியம்தான்,” என்று தெரிவித்தார் ஐ.நா. தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ்.

கார்பன் உமிழ்வை மேலும் பெரிய அளவு குறைப்பதற்கான வாக்குறுதிகளை அளிப்பதற்காக அடுத்த ஆண்டு உலக நாடுகள் மீண்டும் கூட வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்களை முழுமையாக நிறைவேற்றினால்கூட அது புவி வெப்பநிலை 2.4 டிகிரி செல்ஷியசுக்கு மேல் உயராமல் பாதுகாப்பதற்கு மட்டுமே போதுமானது. ஆனால், இலக்கு என்னவோ 1.5 டிகிரியை தாண்டாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதுதான்.

புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஷியசுக்கு மேல் அதிகரிக்குமானால், பல பத்து லட்சம் மக்கள் கடும் வெப்பம் போன்ற தீவிர விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

line

ஒப்பந்தத்தில் எட்டப்பட்ட முக்கிய மைல்கல்கள்

  • 1.5 டிகிரிக்கு மேல் புவி வெப்பநிலை உயராமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற இலக்கை எட்டுவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டங்களை அடுத்த ஆண்டு மீண்டும் மறுபரிசீலனை செய்வது.
  • முதல் முறையாக நிலக்கரி பயன்பாட்டை குறைப்பதற்கு ஒப்புக்கொண்ட சர்வதேச ஒப்பந்தம்.
  • வளரும் நாடுகளுக்கு மேலும் அதிக நிதியுதவி.
line

“நாம் ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத்தில் நிலக்கரி மற்றும் புதைபடிம எரிபொருள் தொடர்பில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழி மிகவும் மென்மையாக இருப்பது குறித்து எங்கள் தீவிர அதிருப்தியை வெளிப்படுத்த விரும்புகிறோம். 1.5 டிகிரி இலக்கினை அடைவதற்கு இது உதவாது. அந்த இலக்கை அடைவதை இது கடினமாக்கும்,” என்று சுவிட்சர்லாந்து சுற்றுச்சூழல் அமைச்சர் சிமோனெட்டா சொம்மாருகா தெரிவித்தார்.

நிலக்கரி தொடர்பான வாக்கியம் மென்மையாக இருந்தாலும், முதல் முறையாக இது போன்ற ஒரு ஐ.நா. ஆவணத்தில் நிலக்கரி பயன்பாட்டை குறைக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், இந்த ஒப்பந்தம் ஒரு வெற்றி என்று பல பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

உலகில் கரியமில வாயு உமிழ்வில் 40 சதவீதம் நிலக்கரியால் நிகழ்கிறது. எனவே புவி வெப்பநிலை 1.5 டிகிரிக்கு மேல் உயராமல் தடுக்கவேண்டும் என்ற முயற்சியில் நிலக்கரி தொடர்பான விவாதம் மைய இடத்தைப் பிடிக்கிறது.

1.5 டிகிரி இலக்கை அடைவதற்கு 2030ல் உலக அளவிலான கார்பன், பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வு 45 சதவீதம் குறைந்திருக்க வேண்டும். 2050 அளவில் நிகர உமிழ்வு பூஜ்ஜியமாக இருக்கவேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »