Press "Enter" to skip to content

சிரிய வான்வழித் தாக்குதல்: 2019ல் நடத்தப்பட்ட அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல் சட்டப்படி சரி – நியாயப்படுத்தும் அமெரிக்க ராணுவம்

பட மூலாதாரம், Getty Images

சிரியாவில் கடந்த 2019ம் ஆண்டு, டஜன் கணக்கிலான மக்களைக் கொன்ற வான்வழித் தாக்குதல் “சட்டபூர்வமானதுதான்” என அமெரிக்க ராணுவம் தன் தரப்பை நியாயப்படுத்தியுள்ளது.

அந்த வான்வழித் தாக்குதலில் இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ எஸ் குழு போராளிகள் மீதான தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டனர்.

இறந்தவர்களில் 16 பேர் ஆயுதமேந்தியவர்கள் என்றும், நான்கு பேர் பொதுமக்கள் என்றும் அமெரிக்கா அடையாளம் கண்டது.

60 பேர் யார் (பொதுமக்களா, ஆயுதமேந்திய வீரர்களா) என வகைப்படுத்த முடியவில்லை. இறந்தவர்களில் பலரும் பொதுமக்களாக இருக்க அதிக வாய்ப்புள்ளது என செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

இந்த வான்வழித் தாக்குதல் குறித்து ஒரு தனி விசாரணை நடத்தப்படவில்லை. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு செய்தி, அமெரிக்க இராணுவம் இந்த தாக்குதலை மூடிமறைப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

2019ம் ஆண்டு மார்ச் 18ம் தேதியன்று கிழக்கு சிரியாவில் உள்ள பாகுஸ் நகரில் வான்வழித் தாக்குதல்கள் நடந்தது.

ட்ரோன் காட்சிகள் பொதுமக்கள் இருப்பதைக் காட்டிய போதும், அமெரிக்க ஜெட் விமானங்கள் ஒரு பெரிய மக்கள் கூட்டம் மீது மூன்று குண்டுகளை வீசின என்கிறது நியூயார்க் டைம்ஸ் செய்தி.

தாக்குதலுக்குப் பிறகு உடனடி பின்விளைவுகள் தொடர்பான எச்சரிக்கைகளை அமெரிக்க ராணுவ கமாண்டர்கள் புறக்கணித்ததாகவும் மற்றும் பாதுகாப்பு துறையின் ஆய்வாளர் ஜெனரலால் நடத்தப்பட்ட விசாரணையில் இத்தாக்குதல் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என நியூயார்க் டைம்ஸ் செய்தி கூறுகிறது. மேலும் இத்தாக்குதல் தொடர்பாக தனிப்பட்ட முழுமையான விசாரணை இதுவரை நடத்தப்படவில்லை என்றும் கூறுகிறது.

“தலைமை இந்த விவகாரத்தை மறைப்பதாகவே தோன்றுகிறது. யாரும் இதில் எதையும் செய்ய விரும்பவில்லை,” என அந்த சம்பவத்தில் பணியாற்றிய ஒரு அதிகாரி ஜினி டாடே கூறினார். அவர் தனது வேலையை விட்டுவிலக கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் பத்திரிகையிடம் கூறினார்.

அமெரிக்க சென்ட்ரல் கமாண்ட் இக்குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.

வான்வழித் தாக்குதல் -கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

அவ்வமைப்பு பிபிசிக்கு கொடுத்த ஓர் அறிக்கையில், தாக்குதலின் போது அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் இல்லை என்பதை அமெரிக்க ராணுவத்துக்கு உறுதியளிக்கப்பட்டதாக கூறியுள்ளார் கமாண்டின் செய்தித் தொடர்பாளர் கேப்டன் பில் அர்பன்.

அதன் பிறகுதான், அடையாளம் தெரியாத அமெரிக்க கூட்டாளியால் இயக்கப்பட்ட ட்ரோனிலிருந்து அதி உயர் தெளிவுத்திறன் கொண்ட காணொளி மூலம் பொதுமக்கள் இருந்ததைக் அமெரிக்கா தெரிந்து கொண்டது.

அந்த ஆளில்லா விமானம் படம்பிடித்த காட்சிகள் மூலம்தான், தங்கள் குண்டுகளால் 16 போராளிகள் மற்றும் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா முடிவுக்கு வந்தது. ஆனால் அத்தாக்குதலில் “இறந்த 60க்கும் மேற்பட்டோர் யார் என உறுதியாகக் கூற முடியவில்லை”.

“பல ஆயுதம் தாங்கிய பெண்களும், குறைந்தது ஒரு ஆயுதமேந்திய குழந்தையும் காணொளியில் பார்க்க முடிந்தது. அது தான் இந்த உறுதியற்றதன்மைக்கான காரணம். மேலும் ஆயுதம் ஏந்தியவர்கள் யார், ஆயுதம் இல்லாதவர்கள் யார் என தீர்மானமாக வகைப்படுத்த முடியவில்லை. தாக்குதலின் போது கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் போர்வீரர்களாக இருக்கலாம். இருப்பினும் இந்த இரு தாக்குதல்களாலும் கூடுதலாக பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்க அதிக வாய்ப்பு உள்ளது.” என அச்செய்தியறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் “இந்த இரண்டு தாக்குதல்களும் சட்டப்படி சரியான தற்காப்பு தாக்குதல்கள்தான் எனவும்” மற்றும் “எந்த ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும்” ஒரு விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார் கேப்டன் அர்பன்.

வான்வழித் தாக்குதல் -கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் ஆய்வாளர் ஜெனரல் அலுவலகம் நடத்திய விசாரணையில் சிரிய தாக்குதலை மூடிமறைக்க முயன்றதாக நியூயார்க் டைம்ஸ் பத்திகையின் குற்றச்சாட்டுக்கு அவர் பதிலளிக்கவில்லை.

சிரிய ஜனநாயகப் படைகள் (எஸ்டிஎஃப்), அமெரிக்காவுடன் கூட்டணியமைத்து மார்ச் 2019 தொடக்கத்தில் பாகுஸ் மீதான இறுதித் தாக்குதலைத் தொடங்கியது.

கட்டடங்கள், கூடாரங்கள், சுரங்கப்பாதைகளில் ஏராளமான பொதுமக்களும் தங்கியிருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, அக்கூட்டணி தங்கள் தாக்குதலின் வேகத்தை குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பல ஐ.எஸ் போராளிகள், அவர்கள் மத்தியிலிருந்து கொண்டு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர், தற்கொலை குண்டுதாரிகளையும் தேர் குண்டுகளையும் கொண்டு தாக்கினர்.

பாகுஸ் நகரத்தின் வீழ்ச்சி இஸ்லாமிக் அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய திருப்பம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »