Press "Enter" to skip to content

ஜோ பைடன் – ஷி ஜின்பிங் மெய்நிகர் சந்திப்பில் விவாதித்தது என்ன?

பட மூலாதாரம், Reuters

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் முதல் முறையாக மெய்நிகர் காணொளி மூலம் நவம்பர் 15ம் தேதி, திங்கட்கிழமை சந்தித்துக் கொண்டனர்.

இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பிரச்னைகள், மனித உரிமை மீறல்கள், தைவானை சீனா அச்சுறுத்துவது போன்ற பல பிரச்னைகளில் உலகின் இருபெரும் பொருளாதாரங்களுக்கு மத்தியில் பதற்றம் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த சந்திப்பு நடந்தது.

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு மத்தியிலான போட்டி வெளிப்படையான மோதலாகி விடாமல் இருப்பதை உறுதி செய்யும் பொறுப்பு இரு நாடுகளுக்கும் இருப்பதாக ஜோ பைடன் கூறினார்.

கூட்டத்தில் என்ன பேசப்பட்டது?

ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

இருவரும் ஒருவரையொருவர் அன்புடன் வாழ்த்திக் கொண்டனர். தனது “பழைய நண்பர்” ஜோ பைடனைப் சந்திப்பதில் மெத்த மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார் சீன அதிபர் ஷி ஜின்பிங்.

நீங்களும் நானும் முறையாக ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டதில்லை என்றாலும், நான் முறையாக பேசத் தொடங்க வேண்டும் என்று கருதுகிறேன் என பைடன் கூறியதாக ராய்ட்டர்ஸ் கூறுகிறது.

இருவரும் எப்பொழுதும் ஒருவரோடொருவர் நேர்மையாகவும், எதார்த்தமாகவும் பேசிக் கொண்டோம் எனவும் கூறினார் பைடன்.

“மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு நாங்கள் ஒருபோதும் எங்கள் விவகாரங்களிலிருந்து பின்வாங்கியதில்லை,” என்றும் கூறினார்.

இரு நாடுகளும் தங்களுக்கு மத்தியிலான தொடர்புகளை மேம்படுத்த வேண்டும் மற்றும் சவால்களை இணைந்து எதிர்கொள்ள வேண்டும் என சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறினார்.

பருவநிலை மாற்றம், கொரோனா பெருந்தொற்று போன்ற உலகளாவிய சவால்களை சமாளிக்க சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உறவுகள் மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார்.

கடந்த வாரம் கிளாஸ்கோவில் நடந்த காலநிலை மாநாட்டில், காலநிலை மாற்றத்துக்கு தீர்வு காண்பதற்கான கூட்டுப் பிரகடனத்தை அமெரிக்காவும் சீனாவும் இணைந்து வெளியிட்டது, போட்டி நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

“மனித இனம் ஓர் உலக கிராமத்தில் வாழ்கிறது, நாம் ஒன்றாக பல சவால்களை எதிர்கொள்கிறோம். சீனாவும் அமெரிக்காவும் தங்களது தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.” என ஷி கூறினார்.

பிரச்னைகள் என்ன?

அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

தைவான் இரு நாடுகளுக்கிடையிலான வளர்ந்து வரும் சர்ச்சையின் ஒரு புள்ளியாக உள்ளது. தைவானை, சீனா தன் அங்கமாகவே பார்க்கிறது சீனா. ஆனால் தைவான் நாடோ, தன்னை ஒரு இறையாண்மை கொண்ட தனி நாடாக பார்க்கிறது.

தைவானை பாதுகாக்கும் விவகாரத்தில் அமெரிக்கா தனது குரலை அழுத்தமாக பதிவு செய்து வருகிறது.

சீனா தைவானை தாக்கினால், அமெரிக்கா பாதுகாக்கும் என பைடன் கடந்த மாதம் கூறியதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

இது நீண்டகாலமாக அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் “ராஜரீக ரீதியிலான தெளிவின்மை” நிலவி வந்ததிலிருந்து விலகி, வாஷிங்டன் உண்மையில் என்ன செய்யப் போகிறது என்பதை தெளிவுபடுத்துவதாக அமைந்தது.

இணையப் பாதுகாப்பு, வர்த்தகம், அணு ஆயுத பரவல் தடை போன்ற விஷயங்களும் இச்சந்திப்பில் இடம்பெற்றன.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் ஜனவரி 2021-ல் பொறுப்பேற்றதிலிருந்து, சீன அதிபர், பைடனோடு பேசுவது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இரு நாட்டு தலைவர்களுக்கு மத்தியிலான சந்திப்பு சில மணி நேரங்களுக்கு நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, சீன அதிபர் ஷி ஜின்பிங் கிட்டத்தட்ட இரு ஆண்டுகளாக சீனாவை விட்டு வெளியேறவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உறவு இரு தரப்பினருக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. டொனால்ட் டிரம்பின் ஆட்சியில் மோசமடைந்த சீனா உடனான உறவை மேம்படுத்த, அந்நாடு, அமெரிக்காவின் புதிய நிர்வாகத்துக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »