Press "Enter" to skip to content

ஆங் சான் சூ ச்சி நிலை பற்றி பிபிசிக்கு மியான்மர் ராணுவம் பேட்டி

பட மூலாதாரம், Reuters

ராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு மூலம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட மியான்மார் தலைவர் ஆங் சான் சூ ச்சி தவறாக நடத்தப்படவில்லை என மியாமர் ராணுவம் பிபிசியிடம் கூறியுள்ளது.

76 வயதான அவர், கடந்த பிப்ரவரி மாத ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு இதுவரை பொதுவெளியில் காணப்படவில்லை.

மியான்மரில் பல்வேறு காரணங்களுக்காக 11 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த அமெரிக்க பத்திரிகையாளர் டேனி ஃபென்ஸ்டர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

அவரின் விடுவிக்கப்பட்ட சில நாட்களில் மியான்மர் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் சா மின் டுன் பிபிசிக்கு அளித்துள்ள நேர்காணல் முக்கியத்துவம் பெறுகிறது.

அந்த நேர்காணலில் ஆங் சான் சூச்சி தடுப்புக் காவலில் நன்றாக கவனித்துக் கொள்ளப்படுகிறார் என ராணுவ செய்தித்தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

மியான்மர் நாட்டில் ராணுவம் நிகழ்த்திய ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு டஜன் கணக்கான பத்திரிகையாளர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

“ஆங் சான் சூ ச்சி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தாலும், அவர் மக்களோடு ஒரு வீட்டில் வாழ அனுமதித்துள்ளோம்” என்று கூறினார். அவர் விரும்புவதை எல்லாம் கொடுக்க நாங்கள் முயற்சிக்கிறோம் என்று கூறினார்.

ஆங் சான் சூச்சி, காலனியாதிக்க காலத்து ரகசிய சட்டங்களை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதே போல அவர் மீது ஊழல் வழக்குகள் மற்றும் சட்ட விரோதமாக வாக்கி டாக்கிகளை வைத்திருந்ததாகவும் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார்.

ஆங் சான் சூச்சி மேலும் ஒரு வழக்கை எதிர்கொள்வதாக அந்நாட்டின் அரசு ஊடகம் செவ்வாய்கிழமை அறிவித்தது. 2020ம் ஆண்டில் நடந்த தேர்தலில் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் அதன் பேரில் அவரது கட்சி வெற்றி பெற்றதாகவும் ராணுவம் கூறுகிறது.

ஆங் சான் சூச்சி

பட மூலாதாரம், Reuters

ஆங் சான் சூச்சி நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோதும், வெகு குறைவாகவே அவர் தரப்பு வாதங்கள் கேட்கப்பட்டன. அவரை விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது.

பிபிசி நேர்காணலில் பேசிய மேஜர் ஜெனரல் சா மின் டுன், மியான்மர் அதிகாரிகள் அமெரிக்க பத்திரிகையாளர் டேனி ஃபென்ஸ்டரை விடுவிக்க உள்ளது குறித்தும் பேசினார். பத்திரிகையாளர் டேனியின் விடுவிப்புக்கு பிரதிபலன் எதுவும் பெறவில்லை என்றும் அவர் கூறினார்.

டேனிக்கு சில வாரங்களுக்கு முன்புதான், குடியேற்ற சட்டங்களை மீறியது, சட்டவிரோத சேர்க்கை, ராணுவ எதிர்ப்பை ஊக்குவித்தது என பல்வேறு குற்றங்களுக்காக 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் தண்டனை விதிக்கப்பட்ட சில நாட்களுக்குள் அவர் திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டார்.

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், தேச துரோக வழக்கு மற்றும் தீவிரவாத வழக்குகளில் டேனி நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.

ஆட்சிக் கவிழ்ப்புக்குப் எதிராக போராடிய போராட்டக்காரர்கள் 5,000 பேர் விடுவிக்கப்படுவார்கள் என, மியான்மர் அரசு கடந்த மாதம் கூறியது.

இதுவரை குறைந்தபட்சமாக 7,291 பேர் கைது செய்யப்பட்டதாக அசிஸ்டன்ஸ் அசோசியேஷன் ஃபார் பொலிடிகல் ப்ரிசனர்ஸ் அமைப்பின் தரவுகள் கூறுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »