Press "Enter" to skip to content

பருவநிலை மாற்றம்: இந்தியா கிளாஸ்கோ மாநாட்டில் தீவு நாடுகளுக்குத் துரோகம் செய்துவிட்டதா?

  • நவீன் சிங் காட்கா
  • சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி உலக சேவை

பட மூலாதாரம், Getty Images

கிளாஸ்கோ பருவநிலை உடன்பாட்டில் அதிக கவனம் பெற்ற இரு நாடுகள் இந்தியாவும் சீனாவும். காரணம், “ஃபேஸ் அவுட்” என்று செல்லப்படும் நிலக்கரியை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்கிற உறுதிமொழியை இவ்விரு நாடுகளும் எதிர்த்தன.

“ஃபேஸ் அவுட்” என்பதற்குப் பதிலாக “ஃபேஸ் டவுன்” அதாவது பயன்பாட்டு அளவை குறைத்துக் கொள்கிறோம் என்று இரு நாடுகளும் ஒப்புக் கொண்டிருக்கின்றன. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இரு நாடுகளின் இந்த முடிவால் ஏற்கெனவே திட்டமிட்டபடி, பூமியின் வெப்பநிலை உயர்வை 1.5 செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த முடியுமா என்பதில் ஏமாற்றமும் கவலையும் ஏற்பட்டிருக்கிறது.

“சீனாவும் இந்தியாவும் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு விளக்க வேண்டும்” என்று COP26 தலைவர் அலோக் ஷர்மா கூறினார். எனினும் செய்து கொண்ட உடன்பாடு “வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது” என்றும், “1.5 செல்சியஸ் உயர்வு என்ற இலக்கை எட்டக்கூடியது” என்றும் கூறினார்.

கிளாஸ்கோ உடன்பாட்டின் முந்தைய வரைவுகளில் ஃபேஸ் அவுட் என்ற பதம் இடம்பெற்றிருந்தது. அதாவது கார்பன் தணிப்பு தொடர்பான தொழில்நுட்பம் இல்லாத நிலக்கரி பயன்பாட்டை படிப்படியாக நிறுத்திவிட வேண்டும் என்பது அதன் பொருள்.

அதன் பிறகு என்ன நடந்தது?

கிளாஸ்கோ உச்சி மாநாட்டின் தொடக்கத்தில் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, 2070-ஆம் ஆண்டுக்குள் நிகர கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாகக் குறைத்துவிடுவோம் என்று அறிவித்தார். 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு பில்லியன் டன் கார்பன் உமிழ்வைக் குறைக்கவும், எரிசக்தியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின்பங்கை 50% ஆக உயர்த்தவும் உறுதியளித்தார்.

அப்போது மோதியின் லட்சிய அறிவிப்புகளுக்கு வரவேற்பு கிடைத்தது. ஆனால், உடன்பாட்டில் கூறப்பட்ட உறுதியான மொழியை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலான இந்தியாவின் தலையீடு லட்சிய அறிவிப்புகளுக்கு முரணாக இருக்கின்றன.

இந்தியாவோடு எல்லையில் பதற்றத்தைக் கொண்டிருக்கும் சீனா, இந்த இறுதிப் பேச்சுவார்த்தை முழுவதும் இந்தியாவுடன் மிகவும் நட்பாகவே நடந்து கொண்டது.

மோதி

பட மூலாதாரம், Getty Images

உச்சிமாநாடு வெள்ளிக்கிழமை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. உடன்பாடு இறுதி செய்வதில் தாமதமானதால், சனிக்கிழமை இரவு வரை நீடித்தது.

பருவநிலை உடன்பாட்டில் கையெழுத்திட்ட நாடுகளுக்கு பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான பொதுவான பொறுப்பு உள்ளது, ஆனால் அவை பொருளாதார வளர்ச்சியின் நிலைகளைப் பொறுத்தவரை, வெவ்வேறு திறன்களைக் கொண்டுள்ளன என்று இறுதி நாளில் சீனா வாதிட்டது.

1.5 டிகிரி செல்சியஸ் இலக்கை அடைய பல்வேறு நாடுகளின் முயற்சிகளை, வறுமையை ஒழிப்பதற்கான அந்தந்த நாடுகளின் திட்டங்களின் பின்னணியில் பார்க்க வேண்டும் என்று சீனா கூறியது.

இதை இந்தியா ஒப்புக்கொண்டது. “வளரும் நாடுகள் நிலக்கரி மற்றும் புதைபடிம எரிபொருள்களுக்கான மானியங்களை முற்றிலுமாக நிறுத்துவது குறித்த வாக்குறுதிகளை எப்படி அளிக்க முடியும்? வளரும் நாடுகள் இன்னும் தங்கள் வறுமை ஒழிப்புத் திட்டங்களைச் நிறைவேற்ற வேண்டும்” என இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் கூறினார்.

“கார்பன் தணிப்பு தொழில்நுட்பம் இல்லாத நிலக்கரி பயன்பாட்டை படிப்படியாக நிறுத்திவிடுவது” என்ற சொற்கள்தான் விவாதத்துக்கு வழிவகுத்தன. ஒருமித்த கருத்து எட்டப்படாமல், எந்த இறுதி உடன்பாடும் ஏற்றுக்கொள்ளப்படாது. உச்சிமாநாடு தோல்வியடையும்.

எனவே, உடன்பாட்டை ஏற்றுக் கொள்வதற்கான இறுதி அமர்வுக்கு முன்னதாக அதை இறுதி செய்வதற்கு மூத்த பேச்சுவார்த்தைப் பங்கேற்பாளர்கள் தடுமாறினர்.

அமெரிக்க பருவநிலை மாற்றச் சிறப்புத் தூதர் ஜான் கெர்ரியுடன் பேசிய சீனக் குழுவின் தலைவர் ஷி ஷென்ஹுவா உள்ளிட்டோர் மீது ஒளிக்கருவிகள் (ஒளிக்கருவி (கேமரா)க்கள்) திரும்பின. சீனப் பிரதிநிதிகள் ஷர்மாவுடன் பேசுவதையும் காண முடிந்தது.

பிறகு இந்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், சர்மாவுடன் பேசினார். இறுதி அமர்வு தொடங்குவதற்காக அனைவரும் காத்திருந்தபோது, இருவரும் குறைந்தது இரண்டு முறையாவது பேசினர்.

பூபேந்தர் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

அப்போது, இந்தியா ஒரு கருத்தை முன்வைப்பதற்கான அனுமதியைக் கோரியது. இறுதி வரைவு உரையில் உள்ள “Phasing out coal” என்ற சொற்றொடரை “Phasing down coal” என்று மாற்ற வேண்டும் என அவர் கூறினார்.

பின்னணியில் சில குரல்களைத் தவிர அவரது சொற்களை அனைவரும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஒப்பந்தம் முடிவடைந்தவுடன், பல்வேறு நாடுகள் இந்த மாற்றம் குறித்து தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்த மேடைக்கு வந்தன. 1.5 செல்சியஸ் இலக்கை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டுமானால் “நிலக்கரியை படிப்படியாக அகற்றுவது” அவசியம் என வாதிட்டனர்.

“நாம் நிலக்கரியை படிப்படியாகக் குறைக்க வேண்டியதில்லை, நிலக்கரியை படிப்படியாக அகற்ற வேண்டும்” என சுவிட்சர்லாந்து கூறியது.

“நிலக்கரியை அகற்ற நீங்கள் எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறீர்களோ, அவ்வளவு சுமையை இயற்கை சூழல் மற்றும் உங்கள் பொருளாதாரத்தின் மீது சுமத்துகிறீர்கள்” என ஐரோப்பிய ஒன்றிய தூதர் ஃபிரான்ஸ் டிம்மர்மன்ஸ் கூறினார்.

அவர் அப்படிக் கூறியதும் பலத்த கரகோஷம் எழுந்தது.

“1.5 டிகிரி செல்சியஸ் இலக்கை எட்ட முடியாமல் போனால், எங்களுக்கு மரண தண்டனையாக அமையும்” என பல சிறிய தீவு நாடுகள் வாதிட்டன.

ஷர்மாவின் கண்ணீர் ததும்பியநிலையில், இத்தகைய திடீர் நிகழ்வுகளுக்காக மன்னிப்புக் கோரினார்.

ஆனால் இதை வளர்ந்த நாடுகள் சிறப்பாகக் கையாண்டிருக்கலாம் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

எண்ணெய் மற்றும் எரிவாயுவை விட்டுவிட்டு, நிலக்கரிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது இந்தியா மற்றும் சீனா போன்ற வளரும் நாடுகளை பாரபட்சமாகப் பாதிக்கும் என்று ஆக்சன் எய்ட் அமைப்பின் பிராண்டன் வூ கூறினார்.

“நிலக்கரி மட்டுமல்ல, அனைத்து புதைபடிம எரிபொருட்களையும் குறிப்பிட்டிருந்தால் “படிப்படியாக அகற்றுவதை” நாங்கள் விரும்பியிருப்போம்” என கிரீன்பீஸ் இந்தியாவின் மூத்த பருவநிலை பரப்புரையாளர் அவினாஷ் சஞ்சல் கூறினார்.

“பணக்கார மற்றும் ஏழை நாடுகளிடையே இருக்கும் நம்பிக்கையின்மையை பலவீனமான வரைவு உடன்பாடு பிரதிபலிக்கிறது. ஏனெனில் முந்தைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை” என்று அவர் கூறினார்.

புதைபடிம எரிபொருட்களிலிருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறிவிடும்படி அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், ஆனால் வளர்ந்த நாடுகள் நிதி மற்றும் தொழில்நுட்பம் தந்து உதவுவதில்லை என்றும் இந்தியா போன்ற வளரும் நாடுகள் வாதிடுகின்றன.

சோலார்

பட மூலாதாரம், Getty Images

“இந்த வரைவு உடன்பாட்டில் தணிப்பு (உமிழ்வு குறைப்பு) பற்றி பல வரிகள் உள்ளன. நாடுகள் என்ன செய்ய வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் என்ன சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் வரவிருக்கும் உயர்மட்ட கூட்டங்களின் விவரங்கள் போன்றவையும் கூட இருக்கின்றன. ஆனால் நிதி தொடர்பாக எதுவும் இல்லை. இதை எப்படி பாரபட்சமற்றது என்று அழைக்க முடியும்?” என பூபேந்தர் யாதவ் கூறினார்.

கார்பன் உமிழ்வில் சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது, ஆனால் அதன் தனிநபர் உமிழ்வு அமெரிக்காவை விட ஏழு மடங்கு குறைவு என்று உலக வங்கியின் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.

இந்தியாவின் பொருளாதாரத்திற்கு ஆற்றல் பாதுகாப்பு கொண்ட எதிர்காலம் அவசியம். நாடு தொற்றுநோயிலிருந்து மீண்டு வருகிறது. மந்தமான பொருளாதார வளர்ச்சியால் தவிக்கிறது. பொருளாதாரத்தை மீட்பதற்கான இலக்கின் ஒரு பெரிய பகுதியாக நிலக்கரி உள்ளது.

“மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் கார்பனைக் குறைப்பது என்பது சவாலாக உள்ளது” என்கிறார் இந்தியாவின் உலக வளக் கல்வி நிறுவனத்தின் எரிசக்தி நிபுணர் சிராக் கஜ்ஜர்.

“புதுப்பிக்கத் தக்க எரிசக்தியுடனான இந்தியாவின் சாதனை மிகவும் திடமானது. அதன் இலக்கு 2010 ஆம் ஆண்டில் 20 ஜிகா வாட்களாக இருந்தது, 2016 ஆம் ஆண்டில் 175 ஜிகாவாட்டை நோக்கிச் சென்றது. எனவே, இந்தியா சரியான கொள்கையை வகுத்தால், புதுப்பிக்கத் தக்க எரிசக்தி அதிவேகமாக வளரும்”

அது நடந்தால், இந்தியா நிச்சயமாக பாராட்டுகளைப் பெறும். புவி வெப்பமடைதலை எதிர்த்துப் போராடுவதற்கான முக்கிய உறுதிமொழி என்று பரவலாகக் கூறப்படுவதை நீர்த்துப் போகச் செய்ததற்காக இப்போது விமர்சனத்தைப் பெற்றிருக்கிறது.

இருப்பினும், பூபேந்தர் யாதவ் அதை வேறுவிதமாகப் பார்க்கிறார்.

“கிளாஸ்கோவில் உச்சிமாநாட்டில் இந்தியாவுக்கு வெற்றி கிடைக்க கடினமாக உழைத்த முழுக் குழுவிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »