Press "Enter" to skip to content

’பருவநிலை மாற்றம் நல்லதா’ – சமூக வலைதளங்களில் வலம் பொய்யான கூற்றுக்களும், உண்மையும்

  • ரேச்சல் ஷ்ரேர் மற்றும் கேய்லின் டெவ்லின்
  • பிபிசி உண்மை பரிசோதிக்கும் குழு

பட மூலாதாரம், SCIENCE PHOTO LIBRARY

கிளாஸ்கோவில் நடைபெற்ற COP26 பருவநிலை உச்சி மாநாட்டில் உலக தலைவர்கள் ஒன்றுகூடி பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசித்த அதே நேரத்தில் பருவநிலை மாற்றம் குறித்து பல போலி செய்திகளும் சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இவ்வாறு கடந்த வருடம் வெளியான சில கூற்றுகளையும் உண்மையான ஆதாரங்களையும் நாங்கள் ஆராய்ந்தோம்.

கூற்று: `சூரியனின் குறைவான ஆற்றல் தினம் புவி வெப்பமடைதலை குறைக்கும்`

பலரும் நீண்ட காலமாக கடந்த நூற்றாண்டில் வெப்பநிலை அதிகரித்ததற்கு மனித நடவடிக்கையை காட்டிலும் அது பூமியின் இயற்கை சுழற்சி என்று தவறாக தெரிவித்து வருகின்றனர்.

சமீப மாதமாக இந்த கூற்றின் புதிய வடிவங்களை நாம் காண்கிறோம்.

சூரியன் குறைந்து செயல்படும் நிகழ்வின்போது வெப்பநிலை இயற்கையாக குறைந்துவிடும் என பலரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஆதாரம் அவ்வாறு சொல்லவில்லை.

`சூரியன் குறைந்து செயல்படும் நிகழ்வு` என்பது சூரியன் தனது இயற்கை சுழற்சியின் ஒரு பங்காக குறைவான ஆற்றலை வெளியிடும்.

COP26 மாநாடு

பட மூலாதாரம், Getty Images

இந்த நூற்றாண்டில் இது நிகழலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன அதேபோன்று அந்த நிகழ்வால் தற்காலிகமாக 0.1 – 0.2 செல்சியஸ் வரை பூமி குளிர்ச்சியடைலாம். ஆனால் மனித நடவடிக்கைகளால் ஏற்கனவே பூமியின் வெப்பம் கடந்த 200 வருடங்களில் 1.2 செல்சியஸ் அளவில் அதிகரித்துள்ளது. அது தொடர்ந்து அதிகரிக்கும் இதுவே இந்த நூற்றாண்டின் முடிவில் 2.4 செல்சியஸாக இருக்கும். எனவே அந்த தற்காலிக குளிர்ச்சியால் எந்த பயனும் இல்லை.

அதேபோன்று சூரியனின் இயற்கை சுழற்சியால் வெப்பம் அதிகரிக்கவில்லை என்பது சமீபமாக தெரியவந்தது. ஏனென்றால் பூமிக்கு அருகில் உள்ள வளிமண்டல அடுக்கு வெப்பமடைந்துள்ளது. சூரியனுக்கு அருகில் உள்ள வளிமண்டல அடுக்கு குளிர்ச்சி அடைந்துள்ளது.

பொதுவாக ஸ்ட்ரேட்டோஸ்பியர் என்று அழைக்கப்படும் வளி மண்டலத்தின் இரண்டாம் அடுக்குக்கு புவியின் வெப்பம் கடத்தப்படும். ஆனால், கரியமில வாயு போன்ற பசுமைக்குடில் வாயுக்கள் கூரைபோல அமைந்து வெப்பம் வெளியேறுவதைத் தடுக்கின்றன.

புவியின் வெப்பம் சூரியனால் அதிகரிக்கிறது என்றால் வளிமண்டலத்தின் மொத்த அடுக்குகளும் ஒரே சமயத்தில் குளிர்ச்சியாகவோ அல்லது வெப்பமாகவோ இருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூற்று: பருவநிலை மாற்றம் நல்லது

புவி வெப்பமயமாதலால் பூமியின் பல குளிரான பகுதிகள் வெப்பம் அடைந்து வாழத் தகுந்த இடமாக மாறும் என்று கூறி புவி வெப்பமயமாதல் நல்லது என்றும் பலர் கூறுகிறார்கள்.

ஆனால் இந்த வாதம் பல சமயங்களில் எதிர்த்தரப்பு வாதங்களை புறந்தள்ளிவிட்டு வைக்கப்படுவதாகும்.

சரி அப்படியே இந்த கூற்றுபடி உலகின் குளிரான பகுதிகள் வாழ தகுந்ததாக மாறினாலும் இதே இடங்களில் வெப்பத்தால் அதீத மழையும் ஏற்படலாம். அது வாழ்வாதாரத்தை பாதிக்கும்.

அதேபோன்று உலகின் பிற பகுதிகள் வெப்பம் அதிகரிப்பதால் வாழ தகுதியற்ற இடமாக மாறும். கடல் மட்டம் உயரும். இது பெரும் ஆபத்தே.

வெள்ளம்

பட மூலாதாரம், Getty Images

சிலர் அதிக குளிரால் உயிரிழக்கலாம். லேன்செட் சஞ்சிகையில் வெளியான தகவல்படி 2000 – 2019 ஆண்டுக்கு இடையில் வெப்பத்தால் உயிரிழந்ததைக் காட்டிலும் அதிகம் பேர் குளிரால் உயிரிழந்தனர். இருப்பினும் அதிக வெப்பத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் எல்லாவற்றையும் விஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூற்று: பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கை மக்களை ஏழையாக்கும்

பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்ப்பவர்கள் இவ்வாறு கூறுகின்றனர். புதைபடிவ எரிபொருள் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமாக உள்ளது. ஆனால் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த அதன் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். எனவே புதைபடிவ எரிபொருளின் பயன்பாட்டை நிறுத்தினால் அது வாழ்வதற்கான செலவை அதிகரிக்கும் இது ஏழைகளையே பாதிக்கும் என்கின்றனர். ஆனால் உண்மை இதுவல்ல.

புதைபடிவ எரிபொருளால் வாகனங்கள் அதிகரித்தன. தொழிற்சாலைகள் மற்றும் தொழில்நுட்பம் வளர்ந்தன. இதுவே மனிதர்கள் வேகமாக வளர்ச்சியடைய காரணமாக இருந்தது. மனிதர்கள் அதிகமான வியாபாரத்தில் ஈடுபட்டனர் அது அவர்களை பணம் படைத்தவர்களாக மாற்றியது.

COP போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

ஆனால் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை நிறுத்துவதால் நாம் கற்காலத்திற்கு சென்றுவிடுவோம் என்று பொருள் அல்ல. நம்மிடம் இப்போது வேறு விதமான தொழில்நுட்பங்கள் உள்ளன.

பல இடங்களில் புதைபடிவ எரிபொருளால் கிடைக்கும் மின்சாரத்தை காட்டிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் கிடைக்கும் மின்சாரம் விலை குறைந்து கிடைக்கிறது.

மறுபுறம் நாம் 2050ஆம் ஆண்டுக்குள் பருவநிலை மாற்றத்துக்கு தீர்வு காணவில்லை என்றால், சர்வதேச பொருளாதாரம் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை பேரழிவுகளால் 18 சதவீத அளவில் சுருங்கிவிடும். இந்த அழிவு ஏழைகளையே அதிகம் பாதிக்கும்.

கூற்று: புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நீண்டகாலத்திற்கு சார்ந்திருக்க இயலாது

இந்த வருடம் அமெரிக்காவில் காற்றாலை மின்சாரத்தில் ஏற்பட்ட இடையூறால் நகர் முழுவதும் மின்சாரம் அற்று இருண்டுபோனதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் உலா வந்தது. ஆனால் அது டெக்ஸாஸில் உள்ள மின் பகிர்மான அமைப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக நடந்த சம்பவம். அமெரிக்காவை சேர்ந்த பல பழமைவாத ஊடகங்கள் அதற்கு காரணம் காற்றலையே என்று கூறின.

இந்த கூற்று அறிவுசார்ந்தது அல்ல என்கிறார் பிரிட்டனில் உள்ள துர்ஹாம் ஆற்றல் இன்ஸ்டியூட்டின் நிர்வாக இயக்குநர் ஜான் க்ளூயாஸ். வெனிசுவேலா எண்ணெய் நிறைந்த ஒரு நாடு ஆனால் அங்குதான் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது என்கிறார் அவர்.

காற்றாலை

பட மூலாதாரம், Getty Images

அதேபோன்று காற்றாலை பறவைகளையும், வெளவால்களையும் கொல்கிறது என்று சிலர் கூறுகின்றனர் ஆனால் புதைபடிவ எரிபொருளால் இயங்கும் ஆலைகள்தான் இதை விட பல மடங்கு அதிக எண்ணிக்கையிலான விலங்குகளை கொல்கின்றன.

காற்றாலைகளால் சில பறவைகள் கொல்லப்படுவது உண்மைதான்.

பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான எல்எஸ்இ ஆய்வு இன்ஸ்டிட்யூட், பருவநிலை மாற்றத்தால் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பை தணிக்க பல தொண்டு நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன என்கிறது. அதேசமயம் காற்றாலைக்கு ஏற்ற இடங்கள் மற்றும் திட்டமிடல் மூலம் ஆபத்துக்களை குறைக்க திட்டமிட்டு வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »