Press "Enter" to skip to content

காடுகளை இன்னும் அழித்துக்கொண்டிருக்கும் நாடுகள் எவை?

  • உண்மைப் பரிசோதனைக் குழு
  • பிபிசி நியூஸ்

பட மூலாதாரம், Getty Images

பல உலக நாடுகளின் தலைவர்கள் 2030 வாக்கில் காடுகள் அழிப்பை நிறுத்தவும், மீண்டும் காடு வளர்க்கவும் உறுதி அளித்துள்ளனர்.

ஆனால், 15 ஆண்டுகளில் பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் காடழிப்பு மிக அதிக அளவில் உள்ளது. மற்ற இடங்களிலும் காடழிப்பை நிறுத்துவது சவாலான ஒன்றாகவே உள்ளது.

பிரேசில்: தொடரும் சட்டவிரோத மரம் வெட்டுதல்

பரந்து விரிந்துள்ள அமேசான் மழைக்காடுகளில் 60 சதவீதம் பிரேசில் நாட்டுக்குள் வருகின்றன. தீங்கு விளைவிக்கிற கரியமில வாயுவை உறிஞ்சுவதில் இந்த அமேசான் மழைக்காடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்த காடுகள் இப்படி இந்த கரியமில வாயுவை உறிஞ்சிக்கொள்ளாவிட்டால், அது வளிமண்டலத்தில் கலந்துவிடும். பிரேசிலில் காடு அழிப்பு நடவடிக்கைகள் 2006ம் ஆண்டு முதல் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் மீண்டும் காடழிப்பு அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (INPE) தெரிவித்துள்ளது.

பிரேசில் காடழிப்பு

அக்கழகத்தின் சமீபத்திய அறிக்கையில் கடந்த ஆண்டு மட்டும் 22 சதவீதம் காடழிப்பு அதிகரித்துள்ளதாகவும், 13,235 சதுர கி.மீ. காடுகள் அழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசானில் சுரங்கத் தொழிலை ஊக்குவிப்பது, காடுகளை அழித்து அங்கே விவசாயம் செய்ய ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அந்நாட்டின் அதிபர் சயீர் போல்சனாரோ விமர்சனத்துக்கு உள்ளாகிறார்.

சுற்றுச்சூழல் சட்டங்களை மீறும் மரம் வெட்டிகள் மற்றும் விவசாயிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் அரசு முகமைகளுக்கான நிதியை போல்சனாரோ குறைக்கிறார். சட்ட விரோதமாக மரம் வெட்டுவோரிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராதம் 2020ம் ஆண்டில் 20 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.

மிகத்துல்லியமான புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை. ஆனால், சமீபத்திய ஆய்வுகளின்படி பிரேசிலில் நடந்த காடழிப்பு மற்றும், வாழிட அழிப்பு ஆகியவற்றில் 94 சதவீதம் சட்டவிரோதமாக செய்யப்பட்டவை.

ஆனால், அமேசான் காடுகள் அழிக்கப்படுவது பிரேசிலில் மட்டும் நடப்பதில்லை. அதன் அண்டை நாடான பொலிவியாவிலும் இது நடக்கிறது.

முக்கிய நாடுகளின் வன அழிப்பு விவரங்கள்

காங்கோ படுகை: வேளாண்மை மற்றும் சுரங்கம்

காங்கோ படுகை என்பது உலகின் இரண்டாவது பெரிய மழைக்காடு ஆகும். இந்தப் படுகை பாதிக்கு மேல் காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டுக்குள் வருகிறது.

பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களை நடத்தும் சட்டவிரோத மரம் வெட்டும் நடவடிக்கையால்தான் காடழிப்பு நடக்கிறது என சுற்றுச்சூழல் பிரசார அமைப்பான கிரீன்பீஸ் தெரிவிக்கிறது.

பிழைப்புநிலை வேளாண்மை (குடும்பத்தின் தேவையை நிறைவு செய்ய மட்டும் செய்யப்படும் வேளாண்மை), எரிபொருளாகப் பயன்படும் கரி தயாரிப்புக்காக காடுகளை அழித்தல், நகர்ப்புற விரிவாக்கம், சுரங்கத் தொழில் ஆகிய வேறு அச்சுறுத்தல்களும் நிலவுகின்றன.

காங்கோவில் காணாமல் போகும் வன பரப்பு

கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 5 லட்சம் ஹெக்டேர் முதன்மைக் காடுகள் அழிக்கப்பட்டதாக குளோபல் ஃபாரஸ்ட் வாட்ச் என்ற அமைப்பு கூறுகிறது.

பொதுக்காடுகளில் அறுவடை செய்வதற்கான குத்தகை ஒதுக்கீடுகளை தணிக்கை செய்ய கடந்த மாதம் உத்தரவிட்டார் அதிபர் ஃபெலிக்ஸ் ஷிசேகெடி. 14 லட்சம் ஹெக்டேர்கள் தொடர்பான உத்தரவு ஒன்றும் அதில் அடக்கம். இது தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டுகளும் வந்தன. இதை செயற்பாட்டாளர்கள் வரவேற்றனர்.

மரம் வெட்டுவது தொடர்பாக 2002ம் ஆண்டு முதல் இருந்துவந்த தடை உத்தரவு ஒன்று இந்த ஆண்டு தொடக்கத்தில் ரத்து செய்யப்படுவது தொடர்பாக ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இத்தனை காலம் அது செயல்படுத்தப்பட்டதே இல்லை.

இந்த ஆண்டு தொடக்கத்தில் காடுகளைக் காக்கவும், காட்டு பரப்பளவை 8 சதவீதம் அதிகரிக்கவும் அளிக்கப்பட்ட ஒப்புதலுக்கு முரண்பாடாக அமைந்துள்ளது இது.

இந்தோனீசியா – பாமாயில் தோட்டங்கள்

இந்தோனீசியாவில் காணாமல் போகும் வன பரப்பு

கடந்த இரு தசாப்த காலங்களில் உலகில் காடழிப்பு அதிகம் நடந்த 5 நாடுகளில் இந்தோனீசியாவும் ஒன்று.

2002 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் இந்த நாட்டில் 97.5 லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிவை சந்தித்துள்ளதாக குளோபல் ஃபாரஸ்ட் வாட்ச் அமைப்பு கூறுகிறது.

காடுகள் அழிப்புக்கு முக்கியக் காரணமாக உள்ள பாமாயில் தோட்டத் தொழில் மீது நடவடிக்கை எடுப்பதாக 2014ல் உறுதி அளித்தார் அதிபர் விடோடோ.

அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்களின்படி 80 சதவீத காட்டுத் தீ இதற்காகவே மூட்டப்படுகிறது. 2016ல் அதிகபட்சமாக 9.29 லட்சம் ஹெக்டேர் காடுகள் காணாமல் போயின. ஆனால், அதன் பிறகு காடழிப்பு விகிதம் குறைந்துவந்தது.

2020ல் ஆண்டு காடழிப்பு 2.70 லட்சம் ஹெக்டேராக குறைந்தது. 2019ல் அதிபர் விடோடோ புதிதாக காடுகளை அழிக்கும் திட்டங்களுக்கு மூன்றாண்டு தடை விதித்தார். 6.6 கோடி ஹெக்டேர் காடுகள் தொடர்பானது இந்த தடை. இந்த ஆண்டு இந்த தடை காலவரையறை இன்றி நீட்டிக்கப்பட்டுள்ளது.

காடழிப்பை நிறுத்த என்ன திட்டம் உள்ளது?

இந்தோனீசிய வன அழிப்பு

பட மூலாதாரம், Getty Images

புவி வெப்பநிலை அதிகரிப்புக்கு முக்கியக் காரணமான கரியமில வாயுவை பெரிய அளவில் காடுகள் உறிஞ்சிக்கொள்கின்றன. எனவே, மரங்களை வெட்டுவது பருவநிலை மாற்றத்தில் பெரிய தாக்கத்தை செலுத்தும்.

1990 முதல் 42 கோடி ஹெக்டேர், அதாவது 100 கோடி ஏக்கர் காடுகள் அழிவை சந்தித்துள்ளன என்கிறது ஐ.நா. இதற்கு முக்கியக் காரணம் வேளாண்மை.

சமீபத்தில் நடந்த காலநிலை மாநாட்டில், 2030 வாக்கில் காடழிப்பை தடுத்து நிறுத்தவும், காடுகளை வளர்க்கவும் 100க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் வாக்குறுதி அளித்தனர்.

இதற்கு முன்பே காடுகளைக் காக்க முயற்சிகள் நடந்துள்ளன. காடழிப்பை 2020ல் பாதியாகக் குறைக்கவும், 2030ல் நிறுத்தவும் 2014ம் ஆண்டே ஒரு திட்டத்தை அறிவித்தது ஐ.நா.

2030 வாக்கில் காடுகளின் பரப்பளவை உலக அளவில் 3 சதவீதம் அதிகரிக்க ஒரு புதிய இலக்கு 2017ல் நிர்ணயிக்கப்பட்டது.

1990-2020 வரை இழந்த வன பரப்பு வரைபடம்

ஆனால், காடழிப்பு தீவிரமாக நடந்துவந்தது என்கிறது 2019ல் வெளியான அறிக்கை ஒன்று. இது பருவநிலை மாற்றத்துக்கு எதிராகப் போராடுவதற்கு ஒரு சவாலாக உருவாகியிருப்பதாகவும் அது கூறுகிறது.

இயற்கையாகவோ, மரம் நட்டதாலோ சில இடங்களில் மறு காடு வளர்ப்பு நடந்துள்ளது. கரியமில வாயுவை முழுமையாக உறிஞ்சும் அளவுக்கு மரங்கள் பக்குவமடைய பல ஆண்டுகளாகும்.

பிபிசி உண்மை சரிபாக்கும் குழு

கடந்த பத்தாண்டில் ஆண்டுதோறும் 47 லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிந்துள்ளன. பிரேசில், காங்கோ ஜனநாயக குடியரசு, இந்தோனீசியா ஆகிய நாடுகளில் இந்த அழிவு அதிகம் நடந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »