Press "Enter" to skip to content

ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கியை வழங்க ஒப்புக்கொண்ட தாலிபன்கள்

பட மூலாதாரம், Reuters

ஆப்கானிஸ்தானில் அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு சம்பள பாக்கி வழங்கப்படும் என்று தாலிபன்கள் தெரிவித்துள்ளனர் என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

சென்ற ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் ஆப்கானிஸ்தான் அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு மூன்று மாதமாக வழங்கப்படாமல் இருக்கும் சம்பளம் , இன்று (சனிக்கிழமை) முதல் வழங்கப்படும் என ஆப்கானிஸ்தான் நிதியமைச்சகம் கூறியுள்ளது என்று தாலிபன் செய்தித் தொடர்பாளர் சபிகுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியவாத அமைப்பான தாலிபன் ஆட்சிக்கு வந்தபின்பு, ஆப்கானிஸ்தான் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் சம்பள பாக்கியை வழங்குவதற்கான பணம் எங்கிருந்து வரும் என்று அவர் தெரிவிக்கவில்லை.

ஆப்கானிஸ்தான் அரசுக்கு சர்வதேச செலாவணி நிதியம், உலக வங்கி உள்ளிட்ட பன்னாட்டு முகமைகள் அளித்துவந்த நிதியுதவியும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் கல்வித் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பன்னாட்டு அமைப்புகள் மூலம் சம்பளம் வழங்கத் தயார் என்று ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் தெரிவித்திருந்தன.

அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்பு ஆகஸ்ட் மாத மத்தியில் தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் அரசை கைப்பற்றினர். அந்நாட்டு அதிபராக இருந்த அஷ்ரஃப் கனியும் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி வெளிநாட்டுக்கு சென்று விட்டார்.

தாலிபன் அரசை அங்கீகரிக்காத மேற்குலக நாடுகள் ஆப்கனிஸ்தான் உடன் பெரும்பாலான பொருளாதார தொடர்புகளையும் வர்த்தகத்தையும் முடக்கி வைத்துள்ளன.

1996-2001 காலகட்டத்தில் தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் ஆட்சியில் இருந்தனர். 2001இல் அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் ஒசாமா பின்லேடன் உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கு தாலிபன் அரசு புகலிடம் அளிப்பதாக அமெரிக்கா அந்நாடு மீது படையெடுத்தது.

அப்போது ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட தாலிபன்கள், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் புதிய அரசு ஒன்றை அமைத்துள்ளனர். எனினும் இதற்கு பன்னாட்டு அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை.

வெளிநாட்டு பணத்துக்கு இருக்கும் தடை

ஆப்கன்

பட மூலாதாரம், Getty Images

ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பணத்தை பயன்படுத்த தாலிபன்கள் இந்த மாதத் தொடக்கத்தில் தடை விதித்தனர்.

மோசமான நிலையில் உள்ள ஆப்கன் பொருளாதாரத்தை இந்த முடிவு மேலதிக பாதிப்புக்கு உள்ளாக்கும் வாய்ப்புள்ளது.

பொருளாதார சூழ்நிலை மற்றும் தேசிய நலனை கருத்தில் கொண்டு ஆப்கானியர்கள் அனைவரும் ‘ஆப்கனி’ நாணயத்தை, தங்களது அனைத்து வர்த்தகங்களிலும் பயன்படுத்த வேண்டும் என்று தாலிபன்கள் நவம்பர் மாத தொடக்கத்தில் தெரிவித்தனர்.

ஆப்கானிஸ்தான் வர்த்தகர்களால் பன்னாட்டுச் சந்தைகளில் வர்த்தகம் செய்ய அமெரிக்க டாலர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் ஆப்கானியர்கள் வர்த்தகம் செய்வதற்கு அமெரிக்க டாலரே பயன்படுத்தப்பட்டது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »