Press "Enter" to skip to content

இஸ்ரேல் – பாலத்தீன மோதல்: கிழக்கு ஜெருசலேம் பகுதியில் பாலத்தீனர் துப்பாக்கிச் சூடு

பட மூலாதாரம், EPA

ஜெருசலேம் பழைய நகரத்தில் இன்று நடந்த துப்பாக்கி தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் மற்றும் குறைந்தது மூன்று பேர் காயமடைந்துள்ளனர் என்று இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலை நடத்திய பாலத்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இவர் நடத்திய தாக்குதலில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இன்னொருவர் தீவிரமான காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் இஸ்ரேல் காவல் அதிகாரிகள் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்றும் இஸ்ரேல் அரசு தெரிவிக்கிறது.

இஸ்ரேல் மற்றும் பாலத்தீன தரப்பினர் இடையே அடிக்கடி மோதல் நடக்கும் கிழக்கு ஜெருசலேம் எல்லைச் சுவர் ஒன்றுக்கான நுழைவாயில் அருகே இந்த தாக்குதல் நடந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் தான் அல்-அக்சா மசூதி அமைந்துள்ளது. இது இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதே வளாகத்தில் யூதர்களின் புனித தலமான டெம்பிள் மவுண்ட் எனும் யூத வழிபாட்டுத் தலமும் அமைந்துள்ளது.

இன்று துப்பாக்கி தாக்குதலில் ஈடுபட்ட நபர் 42 வயதாகும் பாலத்தீனர் என்றும் அவர் கிழக்கு ஜெருசலேம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் இஸ்ரேலிய தரப்பு தெரிவிக்கிறது.

ஃபாதி அபு ஷ்காய்தாம் என்று இஸ்ரேல் மற்றும் பாலத்தீன ஊடகங்களால் அடையாளப்படுத்தப்படும் இந்த நபர் தங்கள் அமைப்பின் அரசியல் பிரிவைச் சேர்ந்தவர் என்று ஹமாஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

Al Aqsa compound in Jerusalem"s old city

பட மூலாதாரம், EPA

இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல் என்றும் இது 32 அல்லது 36 நொடிகள் மட்டுமே நடந்தது என்றும் இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஒமர் பர்-லேவ் தெரிவிக்கிறார்.

தம்மை ஒரு பழமைவாத யூதர் போல காட்டிக் கொண்ட அந்த நபர் துப்பாக்கி தாக்குதலில் ஈடுபட்டார் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

ஜெருசலேம் பகுதியில் இஸ்ரேல் மற்றும் பாலத்தீன தரப்புகளுக்கு இடையே வன்முறை சம்பவங்கள் நிகழ்வது வழக்கம்.

அவற்றில் பெரும்பாலும் கத்தியே தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும். ஆனால் இதுபோன்ற துப்பாக்கி தாக்குதல்கள் மிகவும் அரிதாகவே நடக்கும்.

இந்தத் தாக்குதல் காரணமாக தங்கள் நாட்டு பாதுகாப்பு படையினரை தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறு தாம் அறிவுறுத்தி உள்ளதாக நஃப்டாலி பென்னெட் தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஜெருசலேம் – ஏன் முக்கியம்?

இஸ்ரேல் - பாலத்தீன மோதல்

பட மூலாதாரம், Getty Images

இஸ்ரேல் – பாலத்தீன மோதலின் மையமாக கிழக்கு ஜெருசலேம் உள்ளது. இந்த பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று இரு தரப்பினரும் கூறுகின்றனர்.

1967ஆம் ஆண்டு நடந்த மத்திய கிழக்கு போருக்குப் பின்பு கிழக்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.

1980-ஆம் ஆண்டு இஸ்ரேல் அரசு கிழக்கு ஜெருசலேமை தங்களுடன் இணைத்துக் கொண்டது.

ஜெருசலேம் நகரம் தங்களது தலைநகரம் என்று இஸ்ரேல் கருதுகிறது. ஆனால் சர்வதேச நாடுகள் பலவும் இதை அங்கீகரிக்கவில்லை.

எதிர்காலத்தில் அமையக் கூடும் என்று தாங்கள் நம்பும் சுதந்திர நாட்டுக்கு கிழக்கு ஜெருசலேம்தான் தலைநகராக அமையும் என்று பாலத்தீனர்கள் கூறுகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »