Press "Enter" to skip to content

இரண்டாம் உலகப் போரில் இறந்த ஆஸ்திரேலியர்: 80 ஆண்டுகளுக்கு பின் அடையாளம் தெரிந்தது – வரலாற்றை தேடித் தந்த அறிவியல்

பட மூலாதாரம், Reuters

இரண்டாம் உலகப்போர் காலத்தில் தாக்குதலுக்குள்ளாகி மூழ்கிய ஆஸ்திரேலிய கடற்படைக் கப்பலில் இருந்த பயணியின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

1941ம் ஆண்டு எச்.எம்.ஏ.எஸ் சிட்னி எனும் கப்பல் ஜெர்மன் போர்க் கப்பல் ஒன்றால் இந்தியப் பெருங்கடல் பகுதியில் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.

போர்க் காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றான இந்த நிகழ்வின்போது கப்பலில் இருந்த 645 பேரும் உயிரிழந்தனர்.

ஆனால் இந்த கப்பல் மூழ்கியதால் உயிரிழந்தவர்களில் ஒரே ஒருவரது உடல் மட்டுமே மூன்று மாத காலத்துக்கு பிறகு கிடைத்தது.

ஆஸ்திரேலிய நிர்வாகத்தின் கீழ் இருக்கும் கிறிஸ்துமஸ் தீவின் கரையோரம் ஓர் இளம் ஆணின் உடல் ஒதுங்கியது. ஆனால், அவரது அடையாளம் சென்ற வாரம் வரை அறியப்படவில்லை.

அவரது உடல் எச்சங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் கிடைத்த முடிவுகள், கரை ஒதுங்கியது தாமஸ் வெல்ஸ்பை கிளார்க் என்பதும், உயிரிழந்த சமயத்தில் அவருக்கு வயது 20 என்பதும் தெரியவந்துள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவிக்கிறது.

இந்த கப்பல் மூழ்குவதற்கு வெறும் நான்கு மாதங்களுக்கு முன்புதான் எச்.எம்.ஏ.எஸ் சிட்னியில் பணியில் சேர்ந்துள்ளார் தாமஸ் கிளார்க்.

2008ஆம் ஆண்டு எச்.எம்.ஏ.எஸ் சிட்னி கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் உயிரிழந்தவரின் உடல் எச்சங்கள் எதுவும் கிடைக்கவில்லை. கிடைத்த ஒரே ஒருவரது உடலின் அடையாளம் தெரியவில்லை என்பதால் அவர் ‘unknown sailor’ (அடையாளம் தெரியாத கடல் பயணி) என்று அழைக்கப்பட்டார்.

1941இல் தாமஸின் உடல் கிடைத்த பொழுது அவர் கப்பற்படை சீருடையில் இருந்தார். சூரிய வெப்பம் பட்டு அவரது உடல் வெளிறிப் போயிருந்தது.

எச்.எம்.ஏ.எஸ் சிட்னியில் போர்க் கப்பல்

பட மூலாதாரம், Royal asutralian navy

ஆஸ்திரேலியாவின் மேற்கே 1,500 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிறிஸ்துமஸ் தீவில் அவரது உடல் முதலில் புதைக்கப்பட்டது. பல ஆண்டுகள் கழித்து அவரது உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு ராணுவ மரியாதையுடன் ஆஸ்திரேலிய பெருநிலப்பரப்பில் புதைக்கப்பட்டது.

தாமஸ் கிளார்க் மேய்ச்சல் நிலத்திற்கு உரிமை கொண்டிருந்த ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் ஆஸ்திரேலிய கடற்படையில் கணக்காளராக பணியாற்றுவதற்கு அவருக்கு பயிற்சி வழங்கப்பட்டிருந்தது என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அவருக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள் என்றும் அவர்களும் இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஆஸ்திரேலியாவுக்காப் பணியாற்றினார்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

தாமஸின் அடையாளம் தெரிந்தது எப்படி?

தாமஸின் உடலிலிருந்து கிடைத்த அவரது பல், பல ஆண்டுகளாக டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் வந்த முடிவுகள் தற்போது அவரது சந்ததியைச் சேர்ந்த குடும்ப உறவுகளின் டிஎன்ஏ உடன் ஒத்துப் போனது.

கடந்த வாரம், கிறிஸ்துமஸ் தீவின் கரையோரம் இரண்டாம் உலகப் போர் காலத்தில் கிடைத்த உடல் தாமஸ் வெல்ஸ்பை க்ளார்க்தான் என அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது என்று ஆஸ்திரேலிய அரசு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

“பல பத்தாண்டுகளாகி இருந்தாலும் தாமஸை அடையாளம் கண்டுபிடிக்க முடிந்தது நவீன அறிவியல் மற்றும் தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கு ஒரு சான்று,” என ஆஸ்திரேலியாவின் முன்னாள் படையினர் விவகாரங்களுக்கான அமைச்சர் ஆன்ட்ரூ மெக்கீ தெரிவித்துள்ளார்.

எண்பது ஆண்டுகள் ஆகியிருந்தாலும் நாட்டுக்காகப் பணியாற்றிய ஆண்கள் மற்றும் பெண்களின் அடையாளங்களை அறிந்து, அவர்கட்கு மரியாதை செய்ய நாங்கள் தீவிரமாக முயற்சித்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »