Press "Enter" to skip to content

‘கொரோனா தடுப்பூசியால் எய்ட்ஸ்’ என்று கூறி சிக்கலில் மாட்டிக்கொண்ட பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ – உச்ச நீதிமன்றம் விசாரணை

பட மூலாதாரம், Getty Images

‘கொரோனா தடுப்பூசிகள் எய்ட்ஸ் தொற்றும் வாய்ப்பை அதிகரிக்கும்’ என தவறான கருத்து வெளியிட்டது தொடர்பாக, அதிபர் சயீர் பொல்சனாரூவுக்கு எதிரான விசாரணையைத் தொடங்கியது பிரேசில் நாட்டின் உச்ச நீதிமன்றம்,

கடந்த அக்டோபர் மாதம், ஒரு சமூக வலைத்தள நேரலையில் இப்படி ஒரு கருத்தைக் கூறினார் சயீர் பொல்சனாரூ. அதிபர் இவ்வாறு கூறியபின் ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் ஆகிய தளங்கள் தங்களின் பொய் செய்திகள் கொள்கைகளின் கீழ் அவரை தற்காலிகமாகத் தடை செய்தன.

அதிபர் சயீர் பொல்சனாரூ கொரோனா தடுப்பூசிகளின் செயல் திறன் குறித்து அடிக்கடி கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே அவர் கொரோனாவைக் கையாண்ட விதம் குறித்த ஒரு விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.

கடந்த அக்டோபர் 24ஆம் தேதி நடத்தப்பட்ட நேரலை நிகழ்ச்சி ஒன்றில், “கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் உடலில் எதிர்பார்த்ததை விட அதிவேகமாக எய்ட்ஸ் வளர்வதாக அறிக்கைகள் கூறுகின்றன” என்று கூறினார் சயீர் பொல்சனாரூ. அக்கருத்தை விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கடுமையாக மறுத்தனர்.

இதுவரை சயீர் பொல்சனாரூ தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுத்து வருகிறார். அதே போல தாம் கூறியது, ஒரு பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்ததை கூறியதாக தம வாதத்தை நியாயப்படுத்தினார்.

சயீர் பொல்சனாரூ, சமூக வலைத்தளங்களில் பரவலாக செய்தியைக் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் பயன்படுத்தினார் என வெள்ளிக்கிழமை, உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்சாண்ட்ரே டி மொரேஸ் கூறினார். மேலும் விசாரணைக்கும் அழைப்புவிடுத்தார்.

அதிபர் சயீர் பொல்சனாரூ கூறிய கருத்துகள், போலி செய்திகளை உருவாக்குவதற்காக விசாரிக்கப்படும் அவருடைய ஆதரவாளர்கள் குழுவோடு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பதை உறுதி செய்யுமாறு வழக்குரைஞர் அகஸ்டோ அரஸ்ஸிடம் கூறியுள்ளார் நீதிபதி டி மொரேஸ்.

ஆஃபீஸ் ஆஃப் ஹேட் என உள்ளூர் ஊடகங்கள் அழைக்கும் குழு, கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொடர்ந்து தவறான செய்திகளை பரப்பியது. மேலும் ஒரு ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடக்க வேண்டும், அது சயீர் பொல்சனாரூவுக்கு பிரேசில் நாட்டை ஆட்சி செய்ய அதீத அதிகாரத்தைக் கொடுக்கும் என்பது போன்ற செய்திகளும் பரப்பியது.

தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

இக்குழு தொடர்பான விசாரணையில், பிரேசிலியன் வலதுசாரிக் கட்சியான லேபர் கட்சியின் தலைவர் மற்றும் சயீர் பொல்சனாரூவின் கூட்டாளியான ராபர்டோ ஜெஃபர்சன் கைது செய்யப்பட்டார். அதிபரின் ஆதரவாளர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்.

பொல்சனாரூ கடந்த சில மாதங்களாக பல பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறார், பல்வேறு அரசியல் நெருக்கடிகளில் அவரது புகழ் மங்கிக் கொண்டிருக்கிறது.

பெருந்தொற்றை கையாண்ட விதத்துக்காக, அவர் மீது வழக்கு தொடுக்க பிரெசில் நாட்டின் செனட்டர்கள் வாக்களித்தனர். மனிதத்தன்மைக்கு எதிரான குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடுக்க சிறப்பு செனட் விசாரணைக்குழு ஆதரவளித்தது நினைவுகூரத்தக்கது.

ஆனால் அதிபர் சயீர் பொல்சனாரூவோ தாம் எந்தவித குற்றத்தையும் செய்யவில்லை என்று தொடர்ந்து கூறி வருகிறார்.

இதுவரை பிரேசிலில் 22.1 மில்லியன் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதில் 6.15 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். உண்மையில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை இதை விட மிக அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபோது, அப்பிரச்னையை சயீர் பொல்சனாரூ குறைத்து மதிப்பிட்டார் என்பதும் நினைவுகூரத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »