Press "Enter" to skip to content

“உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக சீனா இனப்படுகொலை நிகழ்த்தியுள்ளது”

  • ஜோயல் குன்டர்
  • பிபிசி

பட மூலாதாரம், David Cliff/Anadolu Agency via Getty Images

ஷின்ஜியாங்கில் உய்கர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சீனா இனப்படுகொலையில் ஈடுபட்டதாக, பிரிட்டனில் அமைக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற தீர்ப்பாயம் மேற்கொண்ட விசாரணையின் இறுதி அறிக்கையின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

உய்கர் மக்களுக்கு எதிராக சீன அரசு கருத்தடை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதே, இந்த முடிவுக்கு வருவதற்கான முதன்மைக் காரணம் என, அத்தீர்ப்பாயம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த விசாரணையை தலைமையேற்று நடத்திய புகழ்பெற்ற பிரிட்டிஷ் வழக்குரைஞர் சர் ஜப்ரி நைஸ் கூறுகையில், நீண்ட கால விளைவாக உய்கர் முஸ்லிம்கள் உள்ளிட்ட இன சிறுபான்மை மக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், திட்டமிட்ட, முறையான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ஷின்ஜியாங்கில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான துன்புறுத்தல்களுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் முதன்மை பொறுப்பிலிருந்து நழுவியுள்ளனர் என, தீர்ப்பாயம் நம்புவதாக, அவர் தெரிவித்தார்.

இத்தீர்ப்பாயத்தில் வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இத்தீர்ப்பாயத்தின் இறுதி அறிக்கை, சட்ட அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை. மேலும், இதன் முடிவுகள் அமைச்சர்களைக் கட்டுப்படுத்தாது. எனினும், சீனாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை சேகரித்து, இனப்படுகொலை விவகாரத்தில் சுதந்திரமான முடிவை எட்டுவோம் என, அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மனித உரிமை மீறல் தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் சீன அரசு மறுத்துள்ளது. தீர்ப்பாயத்தின் அறிக்கை குறித்து, சீனாவின் தரப்பில் பிபிசியிடம் பேசிய செய்தித்தொடர்பாளர் ஒருவர் “அத்தீர்ப்பாயம் போலியானது” எனவும், “மக்களை திசைதிருப்பவும், தவறாக வழிநடத்தவும் ஒரு சில சீன எதிர்ப்பு சக்திகளால் பயன்படுத்தப்படும் அரசியல் கருவி” எனவும் தெரிவித்தார்.

சர் ஜப்ரி மேலும் கூறுகையில், ஜின்ஜியாங்கில் படுகொலைகள் நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் இல்லை எனவும், ஆனால், இனப்படுகொலை நோக்கத்துடன் கருத்தடை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், உய்குர் மக்களுக்கு எதிராக துன்புறுத்தல்கள், பாலியல் வன்புணர்வு போன்ற குற்றங்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக, அத்தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

கன்மேலாய்வுட்டிவ் கட்சியின் முன்னாள் தலைவரும், சீனாவுக்கான நாடாளுமன்றங்களுக்கு இடையிலான கூட்டணியின் இணைத்தலைவருமான இயன் டன்கன் ஸ்மித், இத்தீர்ப்பாயத்தின் முடிவுகள் குறித்து பிபிசியிடம் கூறுகையில், சீனா இனப்படுகொலையில் ஈடுபட்டதாக பிரிட்டன் குற்றம்சாட்டும் நேரம் இது எனத் தெரிவித்தார்.

“தகுதிவாய்ந்த நீதிமன்றத்தால் சாட்சியங்கள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என பிரிட்டன் அரசு கூறியுள்ளது. இதைவிட, தகுதிவாய்ந்த நீதிமன்றம் வேறு இல்லை,” என தெரிவித்தார்.

“குழப்பம் ஏற்படுத்துவதை இனியாவது அரசு நிறுத்த வேண்டும். சீனாவுடனான நமது உறவில், ஜின்ஜியாங்கில் நிகழ்ந்த இனப்படுகொலை அதிகாரம் செலுத்த வேண்டும்.”

கன்மேலாய்வுட்டிவ் கட்சி எம்.பி நுஸ் கானி, தீர்ப்பாய முடிவு முன்மாதிரியானது என தெரிவித்தார்.

“இந்த தீர்ப்பாயம் மிக உயர்ந்த சட்ட தரநிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள், சந்தேகங்களுக்கு இடமில்லாமல், இனப்படுகொலை செய்யும் நோக்கம் இருந்தது என்பதற்கான போதுமான ஆதாரங்கள் இருப்பதைக் காட்டுகிறது” என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்

“இந்த இனப்படுகொலை, குறிப்பாக பெண்களை குறிவைத்து, குழந்தைகள் பிறப்பதைத் தடுத்ததற்கான ஆதாரங்கள் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளன.”

சீனாவின் வடமேற்கில் அமைந்துள்ள ஜின்ஜியாங்கில் வாழ்ந்துவரும் உய்கர் மற்றும் மற்ற மதச்சிறுபான்மையினருக்கு எதிராக சீன அரசு இனப்படுகொலையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

குறைந்தபட்சம் 10 லட்சம் உய்குர் உள்ளிட்ட முஸ்லிம் சிறுபான்மையினர் நீதிமன்றங்களுக்கு அப்பாற்பட்ட முகாம்கள், சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு அடைத்து வைக்கப்பட்டு வெளியில் வந்த சிலரும், ஜின்ஜியாங்கில் வசிப்பவர்களும், துன்புறுத்தல், கட்டாய கருத்தடை, பாலியல் துன்புறுத்தல் போன்றவை நிகழ்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட விசாரணைகளில் இத்தீர்ப்பாயம், முன்னாள் சிறைவாசிகள் மற்றும் நிபுணர்கள் உள்ளிட்ட 70 சாட்சியங்களை விசாரித்தது.

அவர்களுள் உய்குர் மொழியியல் அறிஞர் அப்துவெலி ஆயுப்பும் ஒருவர். அவர், ஜின்ஜியாங்கில் தன் குடும்பம் அனுபவித்த துன்புறுத்தல்கள் குறித்தும் பயங்கரவாதத்தைத் தூண்டுவதாக குற்றம்சாட்டி 15 மாதங்கள் தன்னை சிறையில் அடைத்தது குறித்தும் சாட்சியம் அளித்தார். உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக சீன அரசு கூறும் பொதுவான குற்றச்சாட்டு, அவர்கள் பயங்கரவாதத்தைத் தூண்டுகிறார்கள் என்பதே.

இனப்படுகொலை குறித்த தீர்ப்பாயத்தின் முடிவுகள் மிகவும் ஊக்கமளிப்பதாக ஆயுப் பிபிசியிடம் தெரிவித்தார்.

“சீன அரசு எனக்கு தண்டனை வழங்கியது. தீர்ப்பாயத்தின் முடிவுகள் மூலம், இப்போது அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என நம்புகிறேன். உய்கர் இனத்தினராக இருப்பதன் காரணமாகவே பல உய்குர் மக்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அவ்வாறு அடக்குமுறைகளில் ஈடுபட்டவர்கள், சிறை செல்லும் நேரமிது,” என தெரிவித்தார்.

ஷின் ஜின்ஜியாங்

பட மூலாதாரம், Getty Images

சீனா மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டில் சர்வதேச சமூகம் வேறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளது. சீனா இனப்படுகொலையில் ஈடுபட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. பிரிட்டன், கனடா, நெதர்லாந்து, லித்வானியா ஆகிய நாடுகள் சீனாவை குற்றம்சாட்டி, தங்கள் நாடாளுமன்றங்களில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

ஆனால், பிரிட்டன் அரசு, சீனா இனப்படுகொலை செய்ததாக குற்றம்சாட்ட மறுத்துவிட்டது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இனப்படுகொலை என்பது குற்றவியல் நீதிமன்றத்தால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டிய சட்டப்பூர்வ அதிகாரம் கொண்ட வார்த்தை என வாதிட்டார்.

கட்டாய இடமாற்றம் மற்றும் கருத்தடை மூலம் உய்குர் மக்களின் எண்ணிக்கையைக் குறைத்து அவர்களின் கலாச்சாரத்தை அழிக்க சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதற்கான அறிக்கைகளின் வாயிலாகவே, இனப்படுகொலை குற்றச்சாட்டு எழுந்துள்ளது

அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் மனித உரிமை கண்காணிப்பகம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிக்கையில், ஜின்ஜியாங்கில் நடைபெறும் குற்றங்களுக்கு சீன அரசே காரணம் என குற்றம் சாட்டியது. ஆனால், அதனை இனப்படுகொலை என அழைப்பதை அமெரிக்கா நிறுத்திக்கொண்டது. ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பும் தனது அறிக்கையில் இதே முடிவுக்கு வந்தது.

உலகளவிலான செயற்பாட்டாளர்களைக் கொண்டுள்ள குழுவான உலக உய்குர் காங்கிரஸ் அமைப்பின் வலியுறுத்தலின்படி, சர் ஜிப்ரேவால் அமைக்கப்பட்டதே இந்த உய்குர் தீர்ப்பாயம். உய்குர் காங்கிரஸ் அமைப்பின் தலைவர் டொல்குன் ஈசா பிபிசியிடம் கூறுகையில், தீர்ப்பாய முடிவுகள், உய்குர் மக்களுக்கு வரலாற்று சிறப்புவாய்ந்த நாள் என தெரிவித்தார்.

“உய்குர் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை குறித்து இனி சர்வதேச சமூகம் அமைதியாக இருக்க முடியாது” என தெரிவித்தார். மேலும், “1948 இனப்படுகொலை மாநாட்டில் கையெழுத்திட்ட அனைத்து நாடுகளும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது கடமையாகும்.”

எந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றங்களும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளாததால், தீர்ப்பாயம் அமைக்கப்பட்டதாக, சர் ஜப்ரி தெரிவித்தார்.

சீனா உறுப்பினராக இல்லாததால், இதுகுறித்து விசாரிக்க முடியாது என, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது.

ஐநா பாதுகாப்புக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வழக்கை மட்டுமே சர்வதேச நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்க முடியும். ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் சீனா வீட்டோ அதிகாரத்தைக் கொண்டுள்ளது.

“உள்நாட்டு அல்லது சர்வதேச அல்லது ஏதேனும் அமைப்பு இந்த சிக்கல்களைத் தீர்க்க முயன்றிருந்தால், இந்த தீர்ப்பாயத்தை அமைக்க தேவை இருந்திருக்காது,” என சர் ஜப்ரி தெரிவித்தார்.

சீனாவில் அடுத்தாண்டு நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ராஜரீக முறையில் புறக்கணிப்பதாக, அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில், தீர்ப்பாயத்தின் இறுதி அறிக்கை வெளியாகியுள்ளது.

இதனிடையே, அமெரிக்கா, கனடாவைப் போல பிரிட்டன், ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்காது என, போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »