Press "Enter" to skip to content

ஆப்கன் பள்ளி மாணவிக்கு மலாலா எழுதிய கடிதம்

பிபிசியின் 100 பெண்கள் தொடரின் ஒரு பகுதியாக, ஆப்கானை சேர்ந்த நான்கு பெண் தலைவர்களை, தங்கள் தொழில் அல்லது ஆர்வத்தை, ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் தொழில் அல்லது ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ளும் நான்கு பெண்களோடு கடிதத்தில் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டோம்.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற, மலாலா யூசஃப்சாய். பெண்கள் கல்வி கற்கும் உரிமைக்காகக் குரல் கொடுத்தமைக்காக, அவர் 2012-ம் ஆண்டு பாகிஸ்தானில் தாலிபன்களால் தலையில் சுடப்பட்டார். இங்கு, மலாலாவுக்கு ஆப்கனில் தாலிபன்களால் கைப்பற்றப்பட்ட பிறகு நான்கு மாதங்களாகப் பள்ளிக்குச் செல்லமுடியாத நிலையிலிருக்கும் 17 வயதான ரோஹிலா (பாதுகாப்பு கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடிதம் எழுதியுள்ளார்.

மாணவி ரோஹிலா. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றிய பிறகு, மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து பெண்கள் ஒதுக்கப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்.

அன்புள்ள மலாலா,

தினமும் காலையில் எழுந்தவுடன், பள்ளிக்குத் தாமதமாகிவிட்டதாக நினைக்கிறேன். பிறகுதான் வேதனையோடு என் பள்ளி மூடப்பட்டுவிட்டது நினைவுக்கு வருகிறது. என்னுடைய பள்ளி எங்கள் வீட்டிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நான் என்னுடைய சகோதர சகோதரிகளுடன் ரிக்ஷாவில் செல்வேன். ஒவ்வொரு நாள் காலையிலும் சிறுவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்ல ரிக்ஷா வருவதைப் பார்க்கிறேன்.

என்னுடைய பகுதியில் பள்ளிகள் திறக்கப்படும், என் நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களோடு மீண்டும் ஒருமுறை அரட்டை அடிக்கமுடியும் என்ற நம்பிக்கையில் நான் தினமும் செய்திகளைப் பார்க்கிறேன். ஆனால் உண்மையில், என் வயதுடைய பெண் குழந்தைகளுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று யாருக்கும் தெரியாது. அடிப்படையான கல்வி உரிமை, நாங்கள் பெண்கள் என்ற காரணத்தினால் பறிக்கப்படுவதை வேதனையோடு உணர்கிறேன்.

என்னுடைய முன்னாள் பெண் ஆசிரியர்களைப் பற்றி நான் கவலையோடு இருக்கிறேன். தம் குடும்பத்திற்கு ஒரே ஆதாயமாக இருக்கும் அவர்களுக்குப் பல மாதங்களாகச் சம்பளம் கிடைக்கவில்லை.

என் நண்பர்களைப் பார்க்க ஏக்கமாக இருக்கிறது. என்னுடைய நட்புக் குழுவில் மிகச் சிலரே இணைய வசதியைப் பெற்றுள்ளார்கள். இணைய வழியில் ஆங்கிலம் படிக்கவும் எனக்கு நானே கற்பித்துக்கொள்ளவும் என்னால் முடிந்தவரை முயல்கிறேன். ஆனால், ஆசிரியர் இல்லாமல் மிகவும் கடினமாக இருக்கிறது.

எங்கள் அறிவியல் ஆய்வகத்தில் மீண்டும் பரிசோதனைகளைச் செய்துபார்க்க, ஒருமுறை நான் ரசித்த பேச்சுப் போட்டியில் கலந்துகொள்ள ஆசைப்படுகிறேன். நான் என்னுடைய பள்ளியை பிரதிநிதித்துவப்படுத்தி மற்றொரு பள்ளிக்கு எதிரான போட்டியில் வென்றபோது மிகவும் பெருமையாக உணர்ந்தேன்.

வகுப்பறை

பட மூலாதாரம், Getty Images

எனக்கு மிகவும் பிடித்த பாடங்களில் சிறந்து விளங்கப் பாடுபட வேண்டுமென்று எப்போதுமே உணர்ந்தேன். நான் குழந்தையாக இருந்தபோது, என் அப்பா எனக்கு ஆங்கிலத்தில் கார்ட்டூன் துணுக்குகளைக் கொண்டுவருவார். தொலைக்காட்சியில் அறிவியல் நிகழ்ச்சிகளைப் பார்க்க ஊக்குவித்தார். அதனால்தான் இவை இப்போது எனக்குப் பிடித்த பாடங்கள்.

எதிர்காலத்தில், நான் அறிவியல் மற்றும் ஆங்கிலம் படித்து வெற்றிகரமான வாழ்க்கையைப் பெற விரும்புகிறேன். வெளிநாட்டில் படிக்க உதவித்தொகை பெற்று, நிபுணத்துவம் மற்றும் அனுபவத்துடன் என்னுடைய நாட்டிற்குள் திரும்பி வரவேண்டும் என்று நான் கனவு காண்கிறேன்.

ஆனால், ஆப்கானிஸ்தான் உலகின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், என்னுடைய கல்வியைத் தொடர வேண்டுமென்ற என் கனவுகள் இப்போது பயனற்றதாக உணர்கிறேன்.

எங்களின் பல ஆண்டு கால கடின உழைப்பு வீணாகாது, இந்த உலகமும் சர்வதேச சமூகமும் எங்களை மறந்துவிடாது என்று நம்புகிறேன். உலகம் எங்களுக்காக குரல் கொடுக்கும் என்று நம்புகிறேன்.

அன்புடன்

ரோஹிலா.

ஆப்கானிஸ்தான் உள்ள வரைபடம்

பட மூலாதாரம், Getty Images

மலாலா யூசுப்சாய், லாப நோக்கமற்ற மலாலா நிதியத்தின் இணை நிறுவனர். இந்த நிதியம், ஒவ்வொரு பெண்ணும் பயமின்றி கல்வி கற்கவும், தங்கள் வாழ்வை வழிநடத்தும் புதிய உலகை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அன்புள்ள ரோஹிலா,

நீ தனியாக இல்லை என்பதை நீ அறியவேண்டும் என விரும்புகிறேன்.

பாகிஸ்தானில் துப்பாக்கி ஏந்திய ஆண்கள் பெண்களுக்கான பள்ளிகளை மூடுவதைப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. நாளை என்ன வரும் என்று தெரியாமல் இருப்பது, வகுப்பறைக்கு மீண்டும் வரமாட்டேனோ என்று பயப்படுவது எப்படியிருக்கும் என்று எனக்குத் தெரியும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபன்கள் காபூலை கைப்பற்றியபோது, நான் மருத்துவமனையில் இருந்தேன். அவர்களுடைய தோட்டாவால் ஏற்பட்ட காயத்தைச் சரிசெய்ய, கடந்த ஒன்பது ஆண்டுகளில் இது எனக்கு ஆறாவது சிகிச்சை.

ஆப்கன் பெண்களும் சிறுமிகளும் சம உரிமை கோரி தெருக்களில் போராடுவதை செய்திகளில் பார்த்தேன். வரலாறு மீண்டும் மீண்டும் நடப்பதைப் பார்த்து என் மனது வலித்தது.

மலாலா யூசஃப்சாய்

பட மூலாதாரம், Getty Images

எல்லா பெண்களும் பள்ளிக்குச் சென்றால், எல்லா துறைகளிலும் நாம் தலைமைப் பதவிகளை ஏற்கமுடியும். நமக்காக நாம் சிறப்பாக வாதிடலம். நம்முடைய உலகத்தை மேம்படுத்த உதவலாம். அதிகம் படித்த பெண்கள் பங்களிப்பு, தடுப்பூசி உருவாக்கம் அல்லது காலநிலை தீர்வுகளைக் கண்டறிதல் போன்றவற்றின் செயல்பாட்டை விரைவுபடுத்த உதவும். நான் இந்த எதிர்காலத்தைப் பார்க்க விரும்புகிறேன்.

ஒவ்வொரு நாளும் கல்விக்காகவும் சமத்துவத்திற்காகவும் நான் போராடும்போது, உன்னைப் பற்றி நினைப்பேன். உன்னுடைய அறிவியலின் மீதுள்ள ஆர்வத்தோடும் எனக்குக் கிடைத்ததைப் போன்ற ஒரு தந்தையோடும், நீ படித்து, வழிநடத்துவதைப் பார்க்க விரும்புகிறேன். உன் கதையைத் தொடர்ந்து பகிவும், இதில் தொடர்ந்து செயல்பட அழைப்பு விடுக்கவும் உறுதியளிக்கிறேன்.

நான் உன்னிடம் கேட்பதெல்லாம், உன் மீதான நம்பிக்கையை ஒருபோதும் இழந்துவிடாதே. உனக்குள் கேட்கும் குரலை நம்பு. உன்னால் எதையும் சாதிக்கமுடியும்.

மலாலா யூசுப்சாய்

தயாரிப்பு: ஜார்ஜினா பியர்செ, லாரா ஓவன், கவூன் காமுஷ், சுஹல் அஹத்

தொகுப்பு: வலெரியா பெரஸோ

படங்கள்: ஜிலா டஸ்ட்மால்சி

கூடுதல் படங்கள்: ஜோய் ரக்ஸஸ்

பிபிசி 100 பெண்கள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »