Press "Enter" to skip to content

காஷ்மீர் படுகொலைகள்: உறவினர்களின் உடலுக்காகக் காத்திருக்கும் குடும்பங்கள்

பட மூலாதாரம், Getty Images

நவம்பர் மாதத்தின் ஒரு குளிரான மாலையில், இந்திய நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரில் இரண்டு குடும்பங்கள் தங்கள் குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள் இருவரின் சடலங்களுக்காகக் காத்திருந்தன. அவர்களின் சடலங்களை இரண்டாவது முறையாக அடக்கம் செய்வதற்காக அவர்கள் காத்திருந்தார்கள்.

அல்தாஃப் பட் மற்றும் முதாசிர் குல் ஆகியோர் பாதுகாப்புப் படையினரால் ஒருமுறை புதைக்கப்பட்டார்கள். அவர்கள் ஸ்ரீநகரில் கிளர்ச்சியாளர்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் கூறினர்.

குல், கிளர்ச்சியாளர்களுடன் தொடர்புடையவர் என்றும் பட் துப்பாக்கிச் சூட்டுக்கு இடையே சிக்கியவர் என்று கூறப்பட்டது.

ஆனால், அவர்கள் இருவருமே, குண்டுகளில் இருந்து தப்பிக்க பாதுகாப்புப் படையினரால் கேடயமாகப் பயன்படுத்தப்பட்டதாக அவர்களுடைய குடும்பத்தினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

போராட்டங்களுக்குப் பிறகு, அதிகாரிகள் அவர்களுடைய உடல்களைத் தோண்டி எடுத்து குடும்பங்களிடம் திருப்பிக் கொடுக்க ஒப்புக்கொண்டார்கள். அந்தப் பகுதியில் இது ஓர் அரிய நடவடிக்கை.

அதோடு, குற்றச்சாட்டுகளை விசாரிப்பதாகவும் கூறியுள்ளனர். இது குடும்பத்தினருக்கு சற்று ஆறுதலை அளித்தது.

“கடந்த 30 ஆண்டுகளில் யாருக்குமே நீதி கிடைக்கவில்லை. அதை எப்படி எதிர்பார்க்க முடியும்?” என்று கேட்கிறார் பட்டின் அண்ணன் அப்துல் மஜீத்.

உலகின் மிகவும் ராணுவமயமாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான காஷ்மீரில், உள்ளூர் மக்களிடம் பாதுகாப்புப் படையினர் அத்துமீறி நடந்துகொள்வதாக நீண்டகாலமாகக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீரை முழுமையாக உரிமை கோருகின்றன. ஆனால், இரு நாடுகளுமே காஷ்மீரின் ஒரு பகுதியைத்தான் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா நிர்வகிக்கும் பிராந்தியத்தில் ஆயுதமேந்திய கிளர்ச்சி நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான உயிர்கள் போயின.

இந்த காலகட்டத்தில், இந்திய பாதுகாப்புப் படைகள் பொதுமக்களை கிளர்ச்சியாளர்கள் என்று முத்திரை குத்துவதாகவும் சிலநேரங்களில் பதவி உயர்வுக்காக சட்டத்திற்குப் புறம்பான கொலைகளைச் செய்வதாகவும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இதுவரை குற்றம் சாட்டியுள்ளன.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு கூட்டாட்சி நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட ஆகஸ்ட் 2019 முதல் நிலைமை மோசமாகிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

சோகத்தில் உறவினர்கள்.

பட மூலாதாரம், MUKHTAR ZAHOOR

“2019-ம் ஆண்டு முதல், பாதுகாப்புப் படையினர் பல முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில் சோதனைச் சாவடிகளில் வழக்கமான துன்புறுத்தல் மற்றும் தவறாக நடந்துகொள்வது, தன்னிச்சையாக காவலில் வைப்பது, சித்திரவதை செய்வது, சட்டத்திற்குப் புறம்பாக கொலை செய்வது உட்பட பல கொடுமைகளை, கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதாகச் சொல்லிக்கொண்டு செய்கிறார்கள்,” என்று மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் குல்தீப் கோடா பிபிசியிடம் பேசியபோது, “போலி எதிர்ப்படுதல் (என்கவுண்ட்டர்) கொலைகள் என்று குடும்பங்கள் அடிக்கடி சொல்பவற்றுக்கான ஆதாரங்கள் போலியானவை. இது, பாதுகாப்புப் படையின் பணியை சட்டவிரோதமாக்குகிறது,” என்றார்.

ஆனால், அடிப்படைத் தகவல்களுக்குக் கூட குடும்பங்கள் போராடுகின்றன என்று பிரச்சாரகர்கள் கூறுகிறார்கள்.

2017-ம் ஆண்டில், ஆர்வலர் முகம்மது அஹ்சன் உண்டூ காஷ்மீர் மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். 1989-ம் ஆண்டு முதல் இந்திய ஆட்சிக்கு எதிராக வன்முறை கிளர்ச்சியைத் தொடங்கிய நேரத்தில், நடத்தப்பட்ட சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் குறித்த விசாரணை விவரங்கள் அனைத்தையும் கோரினார்.

ஓராண்டு கழித்து அவருக்குப் பதில் கிடைத்தது: 1989 முதல் 2018-ம் ஆண்டுக்கு இடையில் 506 விசாரணைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில் ஒரு விசாரணை மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது.

பல வழக்குகள்… பதில்களே இல்லை…

ஜூலை 2020-ல், தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகளை கொன்றதாக இந்திய ராணுவம் அறிவித்தது.

அவர்கள் தொலைதூரப் பகுதிகளில் ரகசியமாகப் புடைக்கப்பட்டனர். 2020-ம் ஆண்டில், கொரோனா கட்டுப்பாடுகளை மேற்கோள் காட்டி, பாதுகாப்புப் படையினர் கிளர்ச்சியாளர்களின் உடல்களை அவர்களுடைய குடும்பங்களுக்குத் திருப்பி அனுப்புவில்லை. ஆனால், இது பதற்றத்தை அதிகரிக்கும் அளவுக்குப் பெரிய இறுதிச் சடங்குளைத் தவிர்க்கவே என்று பாதுகாப்புப் படையினர் கூறுகின்றனர்.

நீதி கோரும் போராட்டக்காரர்கள்.

பட மூலாதாரம், Getty Images

இந்நிலையில், மூன்று பேரின் ஒளிப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அவர்களுடைய குடும்பத்தினருக்கும் சென்றடைந்தது. குடும்பத்தினர், அவர்கள் காணாமல் போன தொழிலாளர்கள் என்று கூறியுள்ளனர்.

பொதுமக்களின் சீற்றத்திற்குப் பிறகு தொடங்கப்பட்ட ஆரம்பக்கட்ட ராணுவ விசாரணையில், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட அதிகாரி வரம்பை மீறியது கண்டறியப்பட்டது. இது ஒரு சர்ச்சைக்குரிய சட்டமாகும். இது வாரன்ட் இல்லாமல் கைது செய்யவும் சில சூழ்நிலைகளில் சுட்டுக் கொல்லும் அதிகாரத்தையும் படையினருக்கு வழங்குகிறது.

2020 டிசம்பரில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு புகாரில், ஒரு ராணுவ அதிகாரி மற்றும் இரண்டு பொதுமக்கள் மீது கடத்தல் மற்றும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.

புகாரில் சம்பந்தப்பட்டிருந்த பொதுமக்கள் மீதான வழக்கு உள்ளூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால், முக்கியக் குற்றவாளியான அதிகாரியின் நிலை தெளிவாக இல்லை. மக்கள் மற்றும் ஊடகங்கள் அணுகமுடியாபடி, ராணுவ நீதிமன்றத்தில் அவர்மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த வழக்கின் நிலை குறித்த பிபிசியின் கேள்விகளுக்கு ராணுவத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி பதில் அளிக்கவில்லை.

தகவல் பற்றாக்குறை மட்டும் ஒரே சவால் இல்லை.

2020 டிசம்பரில் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட இளைஞரின் உறவினர்கள் போராடியபோது, அவர்கள்மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமாகும். இதில் பிணை பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

42 வயதான முஷ்டாக் அகமது வானி, பள்ளி மாணவரான தன்னுடைய மகனுக்கு கிளர்ச்சியாளர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லையென்று பிபிசியிடம் தெரிவித்தார்.

அகமது வானி தன்னுடைய வீட்டின் அருகே ஒரு கல்லறையைத் தோண்டி வைத்துக்கொண்டு, தொலைவில் புதைக்கப்பட்ட தன் மகனின் உடலைத் திருப்பித் தருமாறு கோரி வருகிறார்.

ஸ்ரீநகர் துப்பாக்கிச் சூடு

சமீபத்தில் ஸ்ரீநகர் வழக்கில், ஒரு கட்டடத்தில் கிளர்ச்சியாளார் இருப்பது பற்றிய தகவல் கிடைத்ததாகக் காவல்துறையினர் கூறுகின்றனர்.

பட் கட்டிடத்திற்குச் சொந்தமானவர். குல் அதில் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்தார்.

“வளாகங்கள் சோதனை செய்யப்பட்டன. ஆனால், எந்த கிளர்ச்சியாளர்களும் கண்டுபிடிக்கப்படவில்லை,” என்று ஜம்மு-காஷ்மீர் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அவர் இந்தச் சம்பவம் பற்றிப் பேச அதிகாரம் இல்லாதவர் என்பதால் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள அவர் விரும்பவில்லை.

புகைப்படங்கள்.

பட மூலாதாரம், MUKHTAR ZAHOOR

கிளச்சியாளார் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் மேல் தளத்திலுள்ள பூட்டிய அறைகளைத் திறந்து பார்க்க, குல்லுக்காக வேலை செய்துகொண்டிருந்த பட், அமீர் மாக்ரே ஆகியோரும் குல்லும் அனுப்பப்பட்டதாக அவர் கூறினார். மூன்று பேரையும் ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் பின்தொடர்ந்தனர்.

“15 நிமிடங்களுக்குள், நாங்கள் இரண்டு துப்பாக்கிச் சத்தங்களைக் கேட்டோம். எங்க ஆட்கள் பதிலடி கொடுத்தார்கள்,” என்று காவல்துறை அதிகாரி கூறினார். “அப்போது ஒருவர் ரிவால்வரைப் பிடித்துக்கொண்டு கட்டிடத்திலிருந்து வெளியே ஓடினார். நாங்கள் அவரைச் சுட்டோம்.”

பின்னர் அந்த நபரை, காவல்துறையினர் பிலால் பாய் என்றும் அவர் ஒரு வெளிநாட்டு கிளர்ச்சியாளர் என்றும் அடையாளாம் கண்டனர்.

மாக்ரே மற்றும் பட் ஆகியோரின் உடல்கள் படிக்கட்டுகளின் அடிப்பகுதியில் கிடந்தன. மாக்ரேயின் கையில் ரிவால்வர் இருப்பதைக் கண்டதாக அந்த அதிகாரி கூறினார்.

மாக்ரேயின் குடும்பத்தினரும் அவர் ஒரு நிரபராதி என்றும் அவருடைய உடலை தங்களுக்குத் திருப்பிக் கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டனர். குல்லின் உடல் மேல் தளத்தில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி கூறினார்.

ஆனால் இதை நேரில் கண்ட சாட்சி, இதைப் பற்றி கேள்வி எழுப்பினார். அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.

காஷ்மீர் படுகொலை

பட மூலாதாரம், SPECIAL ARRANGEMENT

துப்பாக்கிச் சூட்டுக்கு சற்று முன்பு, சாதாரண உடையில் இருந்தவர்கள் அந்த இடத்தைச் சுற்றி வளைத்தார்கள், என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

அந்தப் பகுதியிலிருந்த பொதுமக்களிடம் சோதனை நடத்திய அவர்கள், கைபேசிகளை எடுத்துக்கொண்டு, அருகிலுள்ள கடையில் இருக்குமாறு கூறினார்கள்.

கட்டிடத்தின் உரிமையாளரான பட், அறையிலிருந்து மூன்று முறை வெளியே அழைக்கப்பட்டதாக அந்த நபர் கூறினார். பின்னர், பட் குல்லை தன்னுடன் மாடிக்கு வரும்படி கூறினார்.

“அப்போது நாங்கள் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டோம்.”

பாதுகாப்பு கவசங்கள் இன்றி பொதுமக்கள் ஏன் கட்டிடத்திற்குள் அனுப்பப்பட்டனர் என்று அவர் கேட்கிறார்.

“என் சகோதரரின் 3 வயதே ஆன இளைய குழந்தை, அவனுடைய தந்தையை அழைத்து வருமாறு கேட்டுக்கொண்டேயிருக்கிறான். அவரை நான் எங்கிருந்து கொண்டு வருவேன்?” என்கிறார் பட்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »