Press "Enter" to skip to content

மேற்குத் தொடர்ச்சி மலை: மாதவ் காட்கில் பரிந்துரைகளை நீர்த்துப் போகச் செய்கிறதா கஸ்தூரி ரங்கன் அறிக்கை?

  • க. சுபகுணம்
  • பிபிசி தமிழ்

பட மூலாதாரம், Getty Images

சமீபத்தில், இந்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், இணையவழிக் கூட்டம் ஒன்றை நடத்தியது. அந்தச் சந்திப்பில், மேற்குத்தொடர்ச்சி மலையின் சூழலியல் பாதுகாப்பிற்காக, கஸ்தூரி ரங்கன் குழு சமர்ப்பித்த அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்துப் பேசப்பட்டது.

ஆனால், கூட்டத்தில் கலந்துகொண்ட கர்நாடக முதலமைச்சர், அந்தப் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு அமல்படுத்த முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஏ.என்.ஐ செய்தியின்படி, கூட்டத்தின்போது, “மேற்குத்தொடர்ச்சி மலையை உணர்திறன் மிக்க சூழலியல் மண்டலமாக (Ecologically Sensitive Zone) அறிவிப்பது அப்பகுதி வாழ் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். அதனால் கர்நாடக அரசும் அப்பகுதியில் வாழும் மக்களும் இந்த அறிக்கையை அமல்படுத்துவதை எதிர்க்கிறது,” என்று கூறினார்.

கர்நாடக வனத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி பிபிசி தமிழுக்கு இதுகுறித்துப் பேசியபோது, “கர்நாடகா ஏற்கெனவே, காட்டுயிர் சரணாலயங்கள், பாதுகாக்கப்பட்ட காடுகள் போன்ற கஸ்தூரி ரங்கன் அறிக்கையின் சில பரிந்துரைகளை அமல்படுத்தியுள்ளது. ஆனால், மக்களை காட்டு நிலங்களில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.”

“இந்த விஷயத்தில்கூட, நாங்கள் காட்டுக்குள் வாழ்ந்த பலருக்கும் மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொடுத்துள்ளோம். ஆனால், பெரும்பான்மையான பழங்குடிச் சமூகங்கள் உட்பட லட்சக்கணக்கான மக்களை வெளியேற்ற எங்களால் முடியாது. பாரம்பரியமாகக் காடு சார்ந்து வாழும் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களை எப்படி எங்களால் வெளியேற்ற முடியும்?” என்று கேட்கிறார்.

இந்நிலையில், கஸ்தூரி ரங்கன் குழுவுக்கும் முன்பே மாதவ் காட்கில் தலைமையிலான குழு மேற்குத்தொடர்ச்சி மலையைப் பாதுகாப்பதற்கான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்தது. அதை நீர்த்துப் போகச் செய்து உருவாக்கப்பட்டதே இந்த அறிக்கை என்றும் சூழலியல் ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.

இரண்டு அறிக்கைகளும் என்ன சொல்கின்றன? மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்புக்காக இந்த அறிக்கைகளின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகளும் விமர்சனங்களும் தொடர்ந்து எழுவது ஏன்?

கஸ்தூரி ரங்கன் தலைமையிலான ஆய்வுக்குழு

மேற்குத்தொடர்ச்சி மலை மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் ஒவ்வோர் ஆண்டும் தொடர்கதையாகவே இருந்து வருகின்றன. இவற்றைத் தவிர்க்க என்ன செய்யவேண்டும், என்ன மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கண்டறிய இந்திய அரசு பல ஆண்டுகளுக்கும் முன்பே முயன்றது.

அதற்காக, சூழலியலாளார் பேராசிரியர் மாதவ் காட்கில் தலைமையில் 13 பேர் கொண்ட ஆய்வுக்குழுவை அமைத்தது. அந்த ஆய்வுக்குழு, 2011-ம் ஆண்டு இந்திய அரசிடம் 522 பக்கங்களுக்கு ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தது.

அந்த ஆய்வறிக்கை, மேற்கு மலைத்தொடரில் எங்கெல்லாம் என்னென்ன சூழலியல் பிரச்னைகள் இருக்கின்றன, அவை அதன் சுற்றுச்சூழல் சமநிலையை, மக்களின் வாழ்வியலை எப்படிப் பாதிக்கின்றன என்று முழுமையாக ஆராய்ந்து, அதைச் சரிசெய்ய எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை அறிவுறுத்தியது.

ஆனால், அந்த அறிக்கையை இந்திய அரசாங்கமும் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாநிலங்களின் அரசுகளும் நிராகரித்தன.

மேற்குத்தொடர்ச்சி மலை

பட மூலாதாரம், Getty Images

பின்னர், ஆய்வாளர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மற்றுமொரு குழுவை நியமித்தது. அவர்கள் 2013-ம் ஆண்டு சமர்ப்பித்த அறிக்கையை இந்திய அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால், கர்நாடகம், கேரளம் போன்ற பெரும்பாலான மாநில அரசுகள் அந்தப் பரிந்துரைகளையும் கூட ஏற்றுக்கொள்ளவில்லை.

மாதவ் காட்கில் தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையிலிருந்து பல பரிந்துரைகளை நீர்த்துப்போகச் செய்து கொண்டுவரப்பட்டதே கஸ்தூரி ரங்கன் ஆய்வறிக்கை என்று சூழலியல் ஆர்வலர்கள் விமர்சித்தார்கள்.

இருப்பினும், இதில் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளையாவது அமல்படுத்தினால், மேற்குத் தொடர்ச்சி மலை ஓரளவுக்குப் பாதுகாக்கப்படும் என்றும் கூறுகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆய்வுகள் நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், அந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது.

கஸ்தூரி ரங்கன் ஆய்வறிக்கையின் பரிந்துரைகள் என்ன?

  • கஸ்தூரி ரங்கன் குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கை, மேற்குத் தொடர்ச்சி மலையின் 37 விழுக்காடு பகுதியை உணர்திறன் மிக்க சூழலியல் மண்டலமாக அறிவிக்குமாறு பரிந்துரைக்கிறது.
  • அதில், 20,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவு கர்நாடகாவின் எல்லைக்குள் அமைந்துள்ளது. அதோடு, கிரானைட் போன்றவற்றுக்கான அகழ்விடங்கள், சுரங்கங்கள், சிவப்பு வகைப்பாட்டில் வரும் தொழிற்சாலைகளுக்கு முற்றிலுமாகத் தடை விதிக்குமாறு வலியுறுத்தியது.
  • மேலும், வளர்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் முன்பே, அவை காடு மற்றும் காட்டுயிர்களிடையே என்ன மாதிரியான பின்விளைவுகளைக் கொண்டுவரும் என்பதை ஆய்வு செய்யவேண்டும்.
  • புதிதாக அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டங்களை மேற்குத் தொடர்ச்சி மலையில் அனுமதிக்கக்கூடாது. ஆனால், நீர்மின் திட்டங்களுக்கு சில கட்டுப்பாடுகளோடு அனுமதி வழங்கலாம்.
  • கட்டுமானத் திட்டங்களைப் பொறுத்தமட்டில், 20,000 சதுர மீட்டர் வரை அனுமதி வழங்கலாம்.
  • காட்டு நிலங்களைத் திசை திருப்புவதை, சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளலாம்.

மாதவ் காட்கில் ஆய்வறிக்கை பரிந்துரைத்தது என்ன?

  • மாதவ் காட்கில் குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கை, மேற்கு மலைத்தொடர் முழுவதையுமே மூன்று சூழலியல் மண்டலங்களாகப் பிரிக்கவேண்டும் எனப் பரிந்துரைக்கிறது. சூழலியல் மண்டலம் 1-ல் மேலதிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், சூழலியல் மண்டலம் 2-ல் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் மற்றும் சூழலியல் மண்டலம் 3-ல் முக்கியமான சூழலியல் பகுதிகள். இதில், முதல் இரண்டு சூழலியல் மண்டலங்களில் மொத்த மலைத்தொடரின் 75 விழுக்காடு பகுதி வருகிறது.
  • மண் அரிப்பிற்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் ஒற்றைப் பயிர் சாகுபடியைக் கைவிடவேண்டும்.
  • காலாவதியான அணைகள், அனல்மின் நிலையங்கள் தொடர்ந்து செயல்படுவதைத் தடுக்கவேண்டும்.
  • காட்டு நிலங்களை வேறு பயன்பாடுகளுக்குத் திருப்புதல், நதிகளின் போக்கை திசைதிருப்புதல் போன்றவற்றைச் செய்யக்கூடாது.
  • அகழ்விடங்கள், சுரங்கங்கள், அனல்மின் நிலையங்களை மேற்குத்தொடர்ச்சி மலைக்குள் அனுமதிக்கவே கூடாது.
  • கேரளாவில் பாயும் சாலக்குடி நதியில் மாநில மின் வாரியம் திட்டமிட்டுள்ள அதிரப்பள்ளி நீர்மின் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
  • மலைத்தொடரின் பாதுகாப்பு கருதி, மேற்குத்தொடர்ச்சி மலை சூழலியல் பாதுகாப்பு ஆணையம் அமைக்கவேண்டும்.
  • அந்த ஆணையம் மலைத்தொடரில் வாழும் மக்களையும் உட்படுத்தி, அவர்களின் ஆலோசனைகள், பங்கெடுப்புகளோடு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
  • பழங்குடி மக்களை காட்டிலிருந்து வெளியேற்றுவதைத் தவிர்த்து, காடுகள் பாதுகாப்பில் அவர்களுடைய பங்கெடுப்பை உறுதி செய்து அதற்கு ஊக்கத்தொகையும் வழங்கவேண்டும்.
  • இந்திய வன உரிமைச் சட்டத்தை மேற்கு மலைத்தொடர் முழுக்க முறையாக அமல்படுத்தவேண்டும்.

“கஸ்தூரி ரங்கன் குழுவின் அறிக்கை நீர்த்துப்போகச் செய்கிறது”

“மாதவ் காட்கில் குழுவினுடைய அறிக்கையை முற்றிலுமாக நீர்த்துப் போகச் செய்து உருவாக்கப்பட்டதே கஸ்தூரி ரங்கன் குழுவினுடைய அறிக்கை. அதில் சந்தேகமே இல்லை,” என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த கோ.சுந்தர்ராஜன்.

மேலும், “மாதவ் காட்கிலுடைய அறிக்கையில் மொத்த மலைத் தொடரையுமே சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்களாக அறிவிக்க வேண்டுமென்று கூறினர். கஸ்தூரி ரங்கன் அறிக்கை, 37 விழுக்காடு மலைத்தொடரை மட்டும் அறிவிக்கலாம் என்று கூறியது. காடுகளுக்குள் வாழும் மக்களை அவர்களுடைய வாழ்விடத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பது போன்ற பரிந்துரைகளை இரண்டு அறிக்கைகளுமே வழங்கியதாகத் தெரியவில்லை,” என்றும் கூறினார்.

ஆனால், அப்படி பெருமளவில் மலைத்தொடரின் பாதுகாப்பு குறித்த பரிந்துரைகளை நீர்த்துப்போகச் செய்த அறிக்கையைக்கூட மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள மறுப்பதாகச் சொல்லும் சுந்தர்ராஜன், “உதாரணமாக, ஒட்டுமொத்த மலைத்தொடரின் 40 விழுக்காடு கேரளாவில்தான் இருக்கிறது,” என்கிறார்.

“இருப்பினும், அவர்கள் இந்த இரண்டு அறிக்கைகளையுமே ஏற்றுக்கொள்ளாமல், தாங்களாக ஒரு குழு அமைத்தார்கள். அந்தக் குழு சுமார் 9,000 சதுர கி.மீ பகுதியை மட்டும் சூழலியல் மண்டலமாக அறிவிக்கச் சொன்னது. ஆனால், அந்தப் பகுதிகள் ஏற்கெனவே பாதுகாக்கப்பட்ட காப்புக்காடுகள் என்ற வரையறையின் கீழ்தான் வருகின்றன.”

“ஏற்கெனவே பாதுகாக்கப்பட்டு வரும் நிலப்பகுதியையே மீண்டும் அறிவிப்பது என்ன பலனைக் கொண்டுவரும்?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

இந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவது ஏன் அவசியம்?

“மேற்கு மலைத்தொடரைப் பாதுகாப்பது என்பது, வெறுமனே மலைகளைப் பாதுகாக்கும் செயல்முறை இல்லை. மூணாறில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் உயிரிழப்பதைத் தடுப்பதற்கும் இது அவசியம்.

மேற்குத்தொடர்ச்சி மலை

பட மூலாதாரம், Getty Images

நம்முடைய பருவமழை, நதிகளின் நீரோட்டம் என்று பலதரப்பட்ட சூழலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், இந்த மலைத்தொடர் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்,” என்று கூறுகிறார்.

“தமிழ்நாட்டிலுள்ள மேற்கு மலைத்தொடரின் பரப்பளவில் பெரும்பாலானவை தேயிலைத் தோட்டங்களாக உள்ளன. அதுபோகப் பல்வேறு கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”

“நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில் நதிகளின் பிறப்பிடமாக இருக்கும் சோலைக் காடுகளை அழித்து எஸ்டேட்டுகளை உருவாக்கியுள்ளோம். மழைக்காலங்களில் நிலச்சரிவுகளைப் பஞ்சமின்றி எதிர்கொள்கிறோம். அதனால், பல இழப்புகளையும் அனுபவிக்கின்றோம்.”

“இவற்றையெல்லாம் தடுக்கவேண்டும், இழப்புகளைத் தவிர்க்க வேண்டுமெனில், அதன் ஒட்டுமொத்த சூழலியல் கட்டமைப்பையுமே பாதுகாக்கவேண்டும்.”

“அதற்கு குறைந்தபட்சமாக, கஸ்தூரி ரங்கன் குழுவின் அறிக்கை வழங்கும் பாதுகாப்பிற்கான பரிந்துரைகளையாவது அமல்படுத்தவேண்டும்,” என்கிறார் கோ.சுந்தர்ராஜன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »