Press "Enter" to skip to content

கூகுள் நிறுவனம்: கொரோனா தடுப்பூசி போட மறுக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்

பட மூலாதாரம், Getty Images

நிறுவனத்தின் தடுப்பூசிக் கொள்கைகளுக்கு இணங்கத் தவறுவோர் இறுதியில் தங்கள் வேலையை இழப்பார்கள் என்று கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களிடம் தெரிவித்திருப்பதாக தெரியவந்திருக்கிறது.

CNBC செய்தி நிறுவனத்துக்கு கிடைத்திருக்கும் கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான சுற்றறிக்கையில், தடுப்பூசி போட்டுக்கொண்டதை நிரூபிக்கும் ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

அவ்வாறு வழங்காதவர்கள் ஊதியம் இல்லாத விடுப்பில் வைக்கப்பட்டு பின்னர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் ஊழியர்கள் தங்களது அலுவலகத்துக்கு வந்து வேலை செய்யுமாறு அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த முயற்சி மீண்டும் மீண்டும் தாமதமாகி வருகிறது. இப்படி அலுவலகத்துக்குத் திரும்புவோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூகுள் எதிர்பார்க்கிறது.

இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தை பிபிசி தொடர்பு கொண்டபோது, ​​அமெரிக்க செய்தி சேனலில் வெளியான அந்த செய்தியின் துல்லியத்தை கூகுள் மறுக்கவில்லை.

“முன்பே கூறியது போல், எங்கள் பணியாளர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், சேவைகளை இயங்க வைக்கவும் தடுப்பூசிக் கொள்கை மிக முக்கியமான ஒன்று” என கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

“தடுப்பூசியைப் பெற தகுதியான ஊழியர்களுக்கு உதவவும், எங்கள் தடுப்பூசி கொள்கையில் உறுதியாக நிற்கவும் முடிந்த அனைத்தையும் செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.” என்றார் அவர்.

சிஎன்பிசியின் செய்திப்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் அனுப்பப்பட்ட அந்த சுற்றறிக்கையில், தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தை கூகுளுக்கு அனுப்பவோ அல்லது மருத்துவ அல்லது மத அடிப்படையில் விலக்கு பெறவோ டிசம்பர் 3 வரை ஊழியர்களுக்கு அவகாசம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதிக்குள் அவ்வாறு செய்யாதவர்கள் 30 நாட்களுக்கு “ஊதியத்துடன் கூடிய நிர்வாக விடுப்பில்” அனுப்பப்படுவார்கள். அதைத் தொடர்ந்து ஆறு மாதங்கள் வரை ஊதியம் இல்லாத விடுப்பு வழங்கப்படும்.

“ஊதியமில்லாத தனிப்பட்ட விடுப்பு” காலத்திற்குப் பிறகு அவர்கள் வேலையை இழக்க நேரிடும்.

கட்டாய தடுப்பூசி

அலுவலகத்துக்கு வந்து பணியாற்றுவதற்கான அணுகுமுறை தொழில்நுட்ப நிறுவனங்களிடையே மாறுபட்டிருக்கிறது. மேலும் அமெரிக்க கட்டுப்பாடு மற்றும் விரைவாக மாறும் சூழ்நிலை ஆகியவற்றால் இது சிக்கலாகியிருக்கிறது.

100 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட அனைத்து நிறுவனங்களிலும், பணியாளர்கள் ஒவ்வொருவரும் கோவிட் தடுப்பூசி அல்லது, வாரத்திற்கு ஒருமுறை கோவிட்-19 பரிசோதனை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அமெரிக்க தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம் கூறியுள்ளது. இதையே கூகுள் நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.

corona vaccine (file)

பட மூலாதாரம், Getty Images

இது ஜனவரி 4 ஆம் தேதி நடைமுறைக்கு வர இருந்தது, ஆனால் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு, தீர்ப்புக்காக காத்திருக்கிறது.,

இருப்பினும், கூகுள் நிறுவனம் கோவிட் பரிசோதனை செய்து கொள்ளும் வாய்ப்பைத் தரவில்லை. அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று ஜூலை மாதம் கூறியது.

100% வீட்டிலிருந்தபடியே பணிபுரிபவர்களுக்கு இந்த விதி பொருந்தாது.

ஆனால் வீட்டிலிருந்து தொடர்ந்து வேலை செய்வதை விட வாரத்தில் குறைந்தது மூன்று நாட்கள் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூகுள் நிறுவனம் கூறியிருக்கிறது. வீட்டில் இருந்தபடி பணிபுரியும் அமெரிக்க ஊழியர்களுக்கான ஊதியத்தை குறைப்பதாகவும் அது கூறியுள்ளது.

மற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் வேறுபட்ட அணுகுமுறையை எடுத்துள்ளன.

ட்விட்டர் ஊழியர்கள் “என்றென்றும்” வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்று அந்த நிறுவனம் கடந்த மே மாதம் கூறியது

ஃபேஸ்புக் இதைப் பின்பற்றியது, கோவிட் விதிகள் நீக்கப்பட்ட பிறகு, ஊழியர்கள் வீட்டிலிருந்து தொடர்ந்து வேலை செய்யக் கோரலாம் என்று கூறியது. மைக்ரோசாப்ட் வீட்டில் இருந்து வேலை செய்வதை நிரந்தர விருப்பமாக மாற்றியுள்ளது.

கூகுளைப் போலவே ஆப்பிள் நிறுவனமும் ஊழியர்கள் வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளது. இந்த நடவடிக்கை சில ஊழியர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »