Press "Enter" to skip to content

‘பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்டது இஸ்லாமுக்கு அவமானம்’ – மதநிந்தனை வன்முறைக்கு எதிராக எழுந்த குரல்கள்

  • ஹெலி ஷுக்லா
  • பிபிசி மானிடரிங்

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் அடித்து துன்புறுத்தப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

அந்த சம்பவம் குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அது பாகிஸ்தானுக்கு “அவமானகரமான ஒரு தினம்” என தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பிரதமர் இம்ரான் கான் விசாரணையை தான் “மேற்பார்வையிட்டு” வருவதாக தெரிவித்தார்.

பாகிஸ்தான் ராணுவம், நாட்டிலிருந்து கடும்போக்குத்தன்மை மற்றும் பயங்கரவாதத்தை ஒழிக்க இம்மாதிரியான சம்பவங்களை “துளியும் சகித்துக் கொள்ளப்போவதில்லை” என தெரிவித்திருந்தது.

மதரீதியிலான கடும்போக்குவாதம் மற்றும் சட்டத்தை கையில் எடுக்கும் போக்கை முற்றிலும் ஒழிக்க அரசியல் மற்றும் ராணுவத் தலைமை ஒரு முழுமையான உத்தியை கொண்டு வர முடிவு செய்துள்ளது என தாராளவாத ஆங்கில செய்தித்தாளான டான் தெரிவித்துள்ளது.

“தீவிர கொள்கைகளை மக்கள் கொண்டிருக்க உரிமை உள்ளது ஆனால் பிறர் மீது அதைத் திணிக்க துப்பாக்கியை பயன்படுத்த யாருக்கும் அனுமதி இல்லை,” என நாட்டின் தகவல்துறை அமைச்சர் ஃபவாத் செளத்ரி, தாராளவாத கொள்கை கொண்ட ஜியோ நியூஸ் தொலைக்காட்சியின் ஆஜ் ஷாசெப் கான்சாதா என்ற உருது நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

மேலும் இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் சமூகம் மற்றும் அரசின் எதிர்வினையை செளத்ரி பாராட்டியுள்ளார். “அவர்களின் எதிர்வினை பாகிஸ்தான் இந்தியாவை போல அல்ல என்பதை நிரூபித்துள்ளது, அங்குதான் முஸ்லிம்கள் அவ்வப்போது தாக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்,” என அவர் கூறியதாக ஆங்கில செய்தித்தாள் தி நியூஸ் தெரிவித்துள்ளது.

மத நல்லிணக்கம் தொடர்பான பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு உதவியாளர் மெளலான டஹிர் அஷ்ரஃபி, “நாட்டில் வெறுப்பை பரப்ப யாருக்கும் அனுமதியில்லை என்ற ஒற்றை கருத்தை ஊக்குவிக்க வேண்டும் மற்றும் தனிப்பட்ட நோக்கங்களை அடைய தெய்வநிந்தனை குற்றத்தை பயன்படுத்துவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்றார். ராணுவத்திற்கு ஆதரவான நியோ நியூஸ் தொலைக்காட்சியில் ஆஜ் அயிஷா எஷ்டேஷாம் என்ற உருது மொழி நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

“இந்த கொலை இஸ்லாமிற்கு ஓர் அவமானம்”

“இந்த கொலை இஸ்லாமிற்கும் மனித மதிப்பிற்கும் ஓர் அவமானம்” என இஸ்லாமியவாத கட்சியான ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் தலைவர் சிராஜ் உல் ஹக் தெரிவித்துள்ளார். மேலும் இம்மாதிரியான சம்பவங்கள் இஸ்லாம் மற்றும் பாகிஸ்தான் விரோத சக்திகள் மேலும் “விஷத்தை உமிழ ஒரு வாய்ப்பை அளிக்கும்” என தெரிவித்திருப்பதாக டிசம்பர் 3ஆம் தேதியன்று கட்சியின் வலைதளத்தில் உருது மொழியில் வெளியான செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கும், இஸ்லாம் மற்றும் மத போதனைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த “காட்டுமிராண்டி செயலில்” ஈடுபட்ட குற்றவாளிகள் “இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானுக்கு அவமானத்தை தேடி தந்துள்ளனர்”. என பாகிஸ்தானின் உலேமா கவுன்சில் தலைவர் ஹஃபிஸ் தஹிர் மெஹ்மூத் அஷ்ரஃபி தெரிவித்துள்ளார் என தாராளவாத ஆங்கில செய்தித்தாளான தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனில் செய்தி வெளியாகியுள்ளது.

“வெறும் குற்றச்சாட்டை நம்பி சட்டத்தை கையில் எடுப்பது இஸ்லாமின் போதனைகளுக்கு எதிரானது” என புகழ்பெற்ற மதகுரு மெளலானா டாரிக் ஜமீல் தெரிவித்துள்ளார் என தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது.

“இந்த மோசமான சம்பவம் இஸ்லாமிய கட்டளைகளுக்கு எதிரானது மற்றும் பாகிஸ்தானுக்கு இது ஒரு அவமானம்,” என இஸ்லாமியவாத அமைப்பான டன்சீம் இ இஸ்லாமியின் தலைவர் ஷுஜாவுதின் ஷேக் தெரிவித்துள்ளதாக அதன் வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“மேலும் சட்ட அமலாக்க முகமைகளின் தோல்விகளையும், சட்ட அமைப்பு முறை அரிக்கப்படுவதையும் இது காட்டுகிறது; அதேபோல நமது நீதி அமைப்பின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது என்பதை இது காட்டுகிறது.” என அவர் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட நபர்

பட மூலாதாரம், RESCUE 1122

தன்சீம் இ இஸ்லாமியின் செய்தி தொடர்பாளர் முஃப்தி அபித்தும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோன்று இந்த சம்பவத்தை தன்சீம் இ இஸ்லாமியோடு தொடர்புபடுத்துவது “துரதிஷ்டவசமானது” என அவர் தெரிவித்துள்ளார் என உருது செய்தித்தாளான ஆசாஃப் தெரிவித்துள்ளது. மேலும் நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் இது நடந்திருக்காது என்றும் அவர் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் ஜிஎஸ்பி+ நிலை என்னவாகும்?

இந்த சம்பவம் பாகிஸ்தானின் ஜிஎஸ்பி+ நிலையை நிலையற்றதாக மாற்றியுள்ளது. FATF grey பட்டியலிலில் இருந்து பாகிஸ்தான் வெளியேறும் முயற்சியையும் இது பாதித்துள்ளது என அந்த செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

GSP+ என்பது ஏற்றுமதிகளை அதிகரிக்க வளர்ந்த நாடுகள், ஐரோப்பிய சந்தைகளை அணுகுவதற்காக வழங்கப்படும் சிறப்பு வர்த்தக வசதியாகும்.

பஞ்சாப் ஆளுநர் செளத்ரி முகமது சர்வார், “ஜிஎஸ்டி+ மற்றும் FATF grey ஆகிய இரண்டுக்கும் சிறுபான்மை மதத்தினரின் உரிமையை காப்பது மிக முக்கியம் என தெரிவித்துள்ளார்” என அந்த செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இருப்பினும் பாகிஸ்தான் 2022 – 2023ஆம் ஆண்டு வரை இந்த ஜிஎஸ்பி+ நிலையை வைத்துள்ளது. அதேபோன்று சமீபத்திய சம்பவத்தின் தாக்கத்தை நாடு கவனமாக கண்காணிக்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தித்தாளில் பிரதமருக்கான வர்த்தகம் மற்றும் வணிக ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத், “சம்பவத்தை ஆராய்ந்து வருவதாகவும், எனவே தற்போதைய நிலையில் FATF grey பட்டியலில் இருந்து விடுபட நாடு எடுக்கும் முயற்சியை பாதிக்குமா என்பதை கூற இயலாது என்றும் தெரிவித்தார்” என அந்த செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணம் கையாடல் அல்லது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி போன்ற செயல்களை கட்டுப்படுத்த போதைய கொள்கைகள் இல்லாத நாடுகளை இந்த FATF grey பட்டியலில் சேர்பார்கள்.

“தெய்வநிந்தனை சட்டத்தின் பெயரில் தனிப்பட்ட விரோதத்தை தீர்த்துக் கொண்ட இந்த கும்பல் கொலையால் வர்த்தகத்தின் மீது குறுகிய கால தாக்கம் ஏதும் இல்லை. ஆனால் ஜிஎஸ்பி+ மறுஆய்வு செய்யப்படும்போது இது நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தலாம்,” என டானில் பிரசுரமான தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

“அதேபோன்று பாகிஸ்தான் பொருட்களை புறக்கணிப்பது, தடை விதிப்பது, ஜிஎஸ்பி+ நிலையை நீக்குவது எல்லாம் தற்போதைய சம்பவத்தை காட்டிலும் அரசியல் காரணங்களுக்காகவே அதிகம் நடைபெறும்,” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »