Press "Enter" to skip to content

பிரேசின் காட்டுத் தீ சம்பவங்கள்: 1.7 கோடி உயிரினங்கள் பலி – மனித குலத்துக்கான எச்சரிக்கை

  • விக்டோரியா கில்
  • அறிவியல் செய்தியாளர்

பட மூலாதாரம், CENAP-ICMBIO

2020ஆம் ஆண்டின் இருளுக்கு மத்தியில் பிரேசிலில் உள்ள விஞ்ஞானிகள் ஒரு முக்கிய ஆய்வின் கவலை தரும் முடிவை அறிவித்துள்ளனர்.

பன்டானல் நீர்நிலை பகுதிகளில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவத்தால் எத்தனை உயிரினங்கள் அழிந்தன என்பதுதான் அந்த ஆய்வு.

இந்த ஆய்வில் ஊர்வன, பறவைகள் மற்றும் ப்ரைமேட் வகை விலங்களுகள் என மொத்தம் 1.7 கோடி உயிரினங்கள் உயிரிழந்துள்ளன என கண்டறியப்பட்டுள்ளது.

ஜனவரி மற்றும் நவம்பர் மாத இடைவெளியில் ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவங்களில் உலகின் மிகப்பெரிய நீர்நிலை பகுதியின் 30 சதவீதம் அழிந்துவிட்டது.

சுற்றுச்சூழலுக்கான உலகளாவிய நிதியமான டபள்யூ. டபள்யூ. எஃப். பிரேசிலின் ஹெட் ஆஃப் சயின்ஸ், மரியானா நபோலிடானா ஃப்ரைய்ரா 2020ஆம் ஆண்டு 22 ஆயிரம் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இம்மாதிரியான சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதைதான் இந்த ஆய்வு கோடிட்டு காட்டுகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பன்டானல் பகுதி தானாகவே எரியக்கூடியதுதான் ஆனால் 2020ஆம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் பேரழிவை “ஏற்படுத்தக்கூடியவை” என மான்செஸ்டர் மெட் ரோபாலிடன் பல்கலைக்கழகத்தின் சூழலியலாளர் அலெக்ஸ் லீஸ் தெரிவிக்கிறார் இவர் பன்டானால் பகுதி உட்பட மத்திய பிரேசிலில் பணியாற்றியவர்.

பன்டானல்

பட மூலாதாரம், AFP

“இந்த காட்டுத்தீ சம்பவங்கள் வழக்கமாக ஏற்படுவதை காட்டிலும் மிக வித்தியாசமானது. வழக்கமான காட்டுத்தீ சம்பவங்களில் சேதங்கள் ஏற்படும் பின் சூழல் தன்னை மீட்டுக்கொள்ளும்,” என லீஸ் விளக்குகிறார்.

“இந்த காட்டுத்தீ மிகப்பெரியது. மேலும் அந்த பகுதியில் ஏற்பட்ட வறட்சியுடன் இது தொடர்புடையது. பன்டானல் பகுதி இவ்வாறு தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் எரிந்து கொண்டிருந்தால் பல்லுயிர்பெருக்கம் மீளாது.” என்கிறார் லீஸ்

நீர்நிலை பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்ட 48 மணி நேரங்களுக்குள் ஆய்வாளார்கள் அங்கு சென்றனர். அங்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் நடந்து சென்று உயிரிழந்த ஒவ்வொரு விலங்கையும் சோதித்தனர். அவர்கள் கண்டறிந்ததில் 300 விலங்கினங்களை அவர்கள் அடையாளம் காண முடிந்தது. அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து வெளியேறி எத்தனை விலங்குகள் கொல்லப்பட்டன என்ற விவரத்தை வழங்கினர்.

மான்

பட மூலாதாரம், CENAP-ICMBIO

இந்த ஆய்வை வழி நடத்தியவர் பிரேசிலியாவில் உள்ள எம்ப்ரபா பன்டானல் என்னும் ஆய்வு இன்ஸ்டியூட்டை சேர்ந்த சூழலியலாளர் வால்ஃப்ரிடோ மோரஸ் டோமஸ். இந்த பேரழிவு அதிகப்பரப்பிலான நிலத்தில் ஏற்பட்டதால் இந்த எண்ணிக்கையை கண்டு அவரும் அவரின் குழுவும் ஆச்சரியமடையவில்லை என பிபிசியிடம் தெரிவித்தார்.

“இந்த காட்டுத்தீ சம்பவத்தில் பாம்புகள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்திருப்பதன் தாக்கம் குறித்து நாங்கள் கவலை அடைந்தோம். ஏனென்றால் பாம்புகள் பொதுவாக சிறிய பாலூட்டிகள் மற்றும் தவளைகளை உண்ணும். இது சுற்றுச்சூழல் அமைப்பில் நினைத்து பார்க்க முடியாத சமமின்மையை ஏற்படுத்தும்” என்கிறார் அவர்.

பிரேசில், பராகுவே மற்றும் பொலிவியாவில் உள்ள நீர்நிலை பகுதிகள், உலகிலேயே அதிகளவிலான பல்லுயிர்கள் வாழும் இடங்களின் பட்டியலில் உள்ளன. 1,40,000 – 1,60,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஜாக்குவார்கள், எறும்புத்திண்ணி மற்றும் இடம்பெயரும் பறவைகள் என ஆயிரக்கணக்கான உயிரினங்கள் அங்கு வாழ்கின்றன.

பன்டானல்

பட மூலாதாரம், CENAP-ICMBIO

இந்த ஆய்வு இன்னும் நடைபெற்று கொண்டிருப்பதாக இயற்கை பாதுகாப்பிற்கான உலகளாவிய நிதியமான டபள்யு டபள்யு எஃப் பிரேசின் ஃப்ரைய்ரா கூறுகிறார். “உடனடியான தாக்கங்கள் மிகவும் அதிர்ச்சி தரக்கூடியவை” என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இருப்பினும் இம்மாதிரியான காட்டுத்தீ சம்பவங்களுக்கு பிறகு சூழலியல் எப்படி, சில வாரங்களுக்கு பிறகோ, அல்லது மாதங்களுக்கு பிறகோ அல்லது வருடங்களுக்கு பிறகோ தன்னை மீட்டுக் கொள்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பருவநிலை மாற்றத்தின் விளைவு

நீர்நிலை பகுதி

பட மூலாதாரம், CENAP-ICMBIO

மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பருவநிலை மாற்றத்தின் கண்கூடான தாக்கங்களில் ஒன்றுதான் இந்த காட்டுத்தீ சம்பவங்கள் என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஆனால் இந்த ஆய்வு முடிவு எத்தனை மோசமானதாக இருந்தாலும், இது அந்த பகுதியில் காட்டுத்தீ மேலாண்மைக்கான புதிய யுக்திகளையும் கொள்கைகளையும் அறிமுகப்படுத்த வழிவகுக்கும் என டோமஸ் தெரிவிக்கிறார்.

பிற விஞ்ஞானிகள் இந்த ஆய்வில் சொல்லப்பட்டுள்ள எண்ணிக்கையின் துல்லியம் குறித்து கேள்வி எழுப்புகின்றனர். ஆராய்ச்சி குழுவினர் அவர்கள் கைப்பற்றிய விலங்குகளின் உடல்களின் எண்ணிக்கையை கொண்டு மொத்தமாக உயிரிழந்த விலங்குகளின் எண்ணிக்கையை மதிப்பிடுவதில் பிழை ஏற்பட்டிருக்கலாம்.

“ஆராய்ச்சியாளார்கள் அதிக பரப்பிலான உலகின் பெரிய நீர்நிலை பகுதியில் கணக்கெடுத்தனர். எனவே அந்த கணக்கெடுப்பில் பிழை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன,” என்கிறார் லீஸ்

“ஆனால் இந்த கணக்கெடுப்பு சரியாகவும் இருக்கலாம். ஏனென்றால் அங்கு லட்சக் கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.” என்கிறார்

ஃபெரைய்ரா இந்த பேரழிவை மனித குலத்திற்கான ஒரு செய்தி என்கிறார்.

“இயற்கை பாதிப்படைந்து கொண்டிருக்கிறது என்பதை இது காட்டுகிறது. அதே போல நாமும் சுத்தமான நீர் மற்றும் உணவு இல்லாமல் பாதிக்கப்படுகிறோம்,” என்கிறார்.

“எதிர்கால சந்ததியினர் இந்த பூமியில் வாழ வேண்டும் என்றால் நாம் இயற்கையை அணுகும் முறையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்” என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »