Press "Enter" to skip to content

கென்டக்கி சூறாவளி: 225 கிலோமீட்டருக்கு அப்பால் கிடைத்த, புயலால் தொலைந்து போது திருமணப் புகைப்படங்கள்

பட மூலாதாரம், MICHAELA COPELAND

அமெரிக்காவிலுள்ள கென்டக்கி மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளி பேரிடரில் மக்கள் பலரும் தங்கள் பொருட்களைத் தொலைத்தார்கள். அப்படிக் காணாமல் போன பொருட்கள் சில நாட்களுக்குப் பிறகு, மீண்டும் கிடைத்து வருகின்றன. அதிலும் சிலருடைய பொருட்கள் அவர்களுடைய இடத்திலிருந்து 140 மைல்களுக்கு (225 கி.மீ) அப்பாலும் கிடைத்துள்ளன.

கடந்த வார இறுதியில் வீசிய சூறாவளியால், கென்டக்கி மாகாணத்தில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அம்மாகாண வரலாற்றிலேயே மிகவும் மோசமான பேரிடர் இது என்கிறார்கள் கென்டக்கியில் உள்ள அதிகாரிகள்.

இல்லினாய், ஆர்கன்சாஸ், டென்னசி உள்ளிட்ட மாநிலங்களும் சக்தி வாய்ந்த புயல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.

புகைப்படங்கள், பைபிள் உட்பட சூறாவளியின்போது காணாமல் போன பல பொருட்களை, அவற்றின் உரிமையாளர்களிடம் சேர்ப்பதற்காக, கென்டக்கியின் சமூக ஊடகக் குழு முயன்று வருகிறது.

அப்படி காணாமல் போன புகைப்படங்கள் திரும்பக் கிடைத்தவர்களில் மைக்கேலா கோப்லேண்டும் ஒருவர். அவர் தன்னுடைய திருமணத்தின் புகைப்படங்களை மேஃபீல்டில் உள்ள அவருடைய மாமியார் வீட்டில் வைத்திருந்தார். மேஃபீல்ட், புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாகும்.

மாமியாரின் வீட்டில் ஏற்பட்ட கணிசமான சேதத்தின்போது காணாமல் போன பொருட்களில் அவருடைய திருமண ஒளிப்படங்களும் அடக்கம்.

“என் வாழ்க்கையின் சிறப்பான நாட்களைக் காட்டும் அந்த ஒளிப்படங்கள் எனக்கு மிகவும் முக்கியமானவை,” என்று பிபிசியிடம் பேசியபோது அவர் கூறினார்.

சில நாட்களுக்குப் பிறகு, “அவர் குவாட் ஸ்டேட் டொர்னாடோ ஃபவுண்ட் ஐடம்ஸ்” என்ற காணாமல் போன பொருட்களைக் கண்டுபிடித்துக் கொடுக்கும் குழுவின் ஒரு பதிவில் அவர் டேக் செய்யப்பட்டிருந்தார். அவர்கள் இவருடைய படங்களை 140 மைல் தொலைவில் பிரெக்கின்ரிட்ஜ் என்ற ஊரில் மூன்று வெவ்வேறு இடங்களில், கண்டுபிடித்தார்கள்.

“அவர்கள் கண்டெடுத்த ஒவ்வொரு ஒளிப்படத்திலும் என்னை டேக் செய்திருந்ததைப் பார்த்தபோது, உடல் சில்லென்று இருந்தது. அது மிகவும் வினோதமாக இருப்பதாக நினைத்தேன். தொலைந்த படங்களில் ஒன்றைக் கண்டுபிடிப்பது வேறு, ஆனால் மூன்றுமே கிடைத்துள்ளது ஆச்சர்யமாக இருந்தது,” என்று பிபிசியிடம் மைக்கேலா கூறினார்.

பிரெக்கின்ரிட்ஜில் உள்ள பமேலா காம்ப்டனின் கணவர், அவர்களுடைய பண்ணையில் கண்டுபிடித்துள்ளார். அதை அவர் இணையத்தில் வெளியிட்டார்.

“எங்கள் கால்நடைகள் நன்றாக இருக்கின்றனவா என்பதை உறுதிசெய்வதற்காக என் கணவர் நான்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாய்ந்த வீடுகளின் மத்தியில் சூறாவளியால் வீசப்பட்ட பொருட்கள், கன உலோகத் துண்டுகள் ஆகியவற்றுக்கு மத்தியில் ஒளிப்படம் தலைகீழாகக் கிடந்தன,” என்று காம்ப்டன் பிபிசியிடம் பேசியபோது கூறினார்.

கென்டக்கி சூறாவளி

அவருடைய கணவர் ஒளிப்படத்தை வீட்டிற்குக் கொண்டு வந்தபோது, அதன் உரிமையாளரைக் கண்டுபிடிப்பதற்காக, காம்ப்டன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், குவாட் ஸ்டேட் டொர்னேடோ குழுவில் பதிவிட்டார்.

“அந்த ஒளிப்படத்தில் இருந்த பெண்ணை கண்டுபிடிப்பேன் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை,” என்கிறார் காம்ப்டன். மேலும், “பேரழிவின் துக்கம் மற்றும் வலியால் அவர்கள் மிகவும் கனத்த இதயத்தோடு இருப்பார்கள் என்று எனக்குத் தெரியும். அதனால், அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியை நான் ஒருபோதும் கைவிடவில்லை,” என்றார்.

ஒளிப்படம் இப்போது மைக்கேலா கோப்லேண்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் நகரத்தின் தபால் அலுவலகமும் சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளது.

“மூன்று ஒளிப்படங்களும் மேஃபீல்டிற்கு வந்துகொண்டிருக்கின்றன. இங்கே வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதைப் பார்ப்போம்,” என்கிறார் கோப்லேண்ட்.

காம்ப்டன் தனது குடும்பத்தின் பண்ணையில் காணப்பட்ட மற்றுமோர் ஒளிப்படத்தின் உரிமையாளரைக் கண்டுபிடிக்க முடிந்தது. அதன் உரிமையாளர் தன்னுடைய பாட்டியை சூறாவளியில் இழந்தார். அவருடைய தாத்தா மருத்துவமனையில் இருக்கிறார்.

“என் இதயம் வலிக்கிறது. ஆனால், ஒவ்வோர் ஒளிப்படத்திற்கும் நல்ல விதத்திலோ கெட்ட விதத்திலோ ஒரு கதை உண்டு. அவர்கள் தனியாக இல்லை என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன்,” என்கிறார் கோப்லேண்ட்.

கென்டக்கி சூறாவளி

பட மூலாதாரம், Getty Images

காணாமல் போன உடைமைகளைக் கண்டறிவதற்காகவோ அல்லது கண்டுபிடித்த பொருட்களை அவற்றின் உண்மையான உரிமையாளர்களிடம் மீண்டும் சேர்க்கவோ முயலும் மக்களால் அந்த ஃபேஸ்புக் குழு நிரம்பியுள்ளது.

அதில் இடப்பட்டுள்ள பதிவுகளின் மூலம், மக்களை அவர்களுடைய வளர்ப்பு உயிரினங்கள், கோப்பைகள் மற்றும் படகுகளிடம் கூட மீண்டும் இணைக்க முடிந்தது.

அலபாமாவைச் சேர்ந்த கிம் டைலர் தான், இந்தக் குழுவின் நிர்வாகி. மேலும், கென்டக்கியில் ஏற்பட்ட அனுபவம், அவருடைய மாகாணத்தில் 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட சூறாவளியின் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்ததால் அந்தக் குழுவை அமைத்ததாகக் கூறினார்.

“நான் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 2011-ம் ஆண்டில், ஒளிப்படங்கள், நினைவுச் சின்னங்கள் போன்ற பொருட்கள் தொலைந்த இடத்திலிருந்து பல மைல் தொலைவில் எப்படி கண்டுபிடிக்கப்பட்டன என்று நினைவுக்கு வந்தது,” என்கிறார் கிம் டைலர்.

மேற்கொண்டு பேசிய டைலர், சூறாவளியின் வலிமையைப் பார்த்ததும், கென்டக்கியிலும் அப்படித்தான் நடந்திருக்கும் என்று கருதியுள்ளார்.

“பல குடும்பங்களுக்கு அவர்களுடைய பொருட்கள் மீண்டும் கிடைக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதே மனதுக்கு இதமாக உள்ளது.

“படங்கள், கூடைப் பந்துகள், நினைவுத் தலையணைகள், திருமண சான்றிதழ்கள், குயில்கள் என்று அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது,” என்று டைலர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »