Press "Enter" to skip to content

ஒமிக்ரான் திரிபு: சுமார் 85% அளவுக்கு பூஸ்டர் தடுப்பூசி சிறப்பாக செயல்படும்

  • மிஷெல் ராபர்ட்ஸ்
  • சுகாதார ஆசிரியர், பிபிசி நியூஸ் வலைதளம்

பட மூலாதாரம், Getty Images

ஒமிக்ரான் கொரோனா திரிபு மீது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் தாக்கம் குறித்து பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தொற்றினால் தீவிர உடல் நல பாதிப்புகள் ஏற்படும் போது, அதிலிருந்து சுமார் 85% அளவுக்கு பூஸ்டர் தடுப்பூசி காக்கும் என, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சதவீதம், கொரோனா தொற்றின் முந்தைய திரிபுகளுக்கு எதிராக தடுப்பூசிகள் வழங்கிய பாதுகாப்பைவிட சற்று குறைந்தது.

ஆனால், பூஸ்டர் தடுப்பூசி, தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் மருத்துவமனை செல்ல வேண்டியில்லாத நிலையை ஏற்படுத்தும் என, நம்பப்படுகிறது.

பிரிட்டனில் கடந்த வியாழக்கிழமை, 8,61,306 பூஸ்டர் தடுப்பூசிகளும், மூன்றாவது தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.

இது, லண்டனில் உள்ள இம்பெரியல் கல்லூரியில் உள்ள குழுவின் மூலம், ஒமிக்ரான் குறித்து அறியப்பட்ட குறைந்தபட்ச தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.

வேகமாக பரவி வரும் இந்த புதிய திரிபு குறித்து மேலதிக தகவல்கள் அறியப்படும் வரை, இதில் அதிக அளவு நிச்சயமற்ற நிலை இருப்பதாக, விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஒமிக்ரான் திரிபு எந்தளவுக்கு லேசான தொற்றாகவோ அல்லது தீவிரமாகவோ மாறும் என்பது குறித்து கண்டறிய நிபுணர்கள் இன்னும் முயற்சித்து வருகின்றனர்.

கொரோனா தொற்றிலிருந்து எதிர்த்துப் போராடுவது எப்படி என உடலுக்கு தடுப்பூசிகள் கற்பிக்க உதவுகின்றன. ஆனால், தற்போது பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகள், அதிகளவில் தன்னை தகவமைத்துக்கொள்ளும் ஒமிக்ரான் திரிபை எதிர்க்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. அவை சரியான பொருத்தம் இல்லை என்பதே இதன் அர்த்தம்.

எனவே, வைரஸை எதிர்க்கும் வகையில், உடலில் ஆண்ட்டிபாடிகளின் அளவுகளை அதிகரிக்க பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு பிரிட்டன் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிபாடிகள், வைரஸுடன் ஒட்டிக்கொண்டு, தொற்று உடலின் செல்களுக்குப் பரவுவதையும், அவை பிரதியெடுக்கப்படுவதையும் தடுக்கிறது.

இரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களில் இந்த ஆன்டிபாடிகள், வைரஸை வெளியேற்றும் திறனை 20-40 மடங்கு குறைப்பதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

இம்பீரியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட பணியில், ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக தடுப்பூசிகள் செயலாற்றும் திறன் குறையும் என கருதப்படுகிறது.

ஒமிக்ரான் திரிபால் ஏற்படும் தீவிர நோய்க்கு 80-85.9% அளவுக்கு பூஸ்டர் தடுப்பூசி செயலாற்றுகிறது. ஆனால், தற்போது பிரிட்டனில் அதிகளவில் உள்ள டெல்டா திரிபுக்கு எதிராக, பூஸ்டர் தடுப்பூசி 97% அளவுக்கு செயலாற்றுகிறது.

எனினும், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள மற்ற பகுதிகளான டி செல்கள் போன்றவையும் கொரோனா தொற்றை எதிர்க்கின்றன. ஆனால், அதன் தாக்கம் குறித்து கண்டறியப்படவில்லை.

இம்பீரியல் கல்லூரி குழுவில் உள்ள ஆய்வாளர் பேராசிரியர் அஸ்ரா கானி கூறுகையில், “கொரோனா தொற்றின் முந்தைய திரிபுகளால் ஏற்பட்ட நோயின் தாக்கத்தைவிட, எந்தளவுக்கு ஒமிக்ரான் திரிபின் தீவிரத்தன்மை இருக்கும் என்பதில், நிச்சயமற்றத் தன்மை நிலவுகிறது.

“இதுகுறித்து முழுமையாக புரிந்துகொள்ள இன்னும் பல வாரங்களாகும். இதன் தாக்கத்தை எப்படி குறைப்பது என்பதற்கான திட்டங்களை அரசுகள் செயல்படுத்த வேண்டும்.

“பரந்த பொது சுகாதார விளைவின் ஒரு பகுதியாக பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்குவதன் முக்கியத்துவத்தை எங்களின் முடிவுகள் நிரூபிக்கின்றன” என்றார்.

பிரிட்டன் தடுப்பூசி பணிக்குழுவின் முன்னாள் தலைவர் மருத்துவர் கிளைவ் டிக்ஸ் கூறுகையில், “இந்த முடிவுகளில் அதிக நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இன்னும் ஒரு மாத காலத்திற்கான மருத்துவமனை சேர்க்கைகள், ஐசியூ சேர்க்கைகள், இறப்புகள் குறித்த தரவுகள் கிடைத்தால் மட்டுமே, ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் தாக்கம் குறித்து மட்டுமே நாம் நம்பிக்கையுடன் இருக்க முடியும்.

“நாம் இன்னும் உலகம் முழுவதிலும், இப்போதும் எதிர்காலத்திற்குமான தடுப்பூசிகளை பெற வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

பகுப்பாய்வு – ராபர்ட் கப்

புள்ளியியல் பிரிவுத் தலைவர்

ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இன்னும் வருவதற்கு அதிகம் இருக்கின்றன.

பிரிட்டனில் ஒமிக்ரான் தொற்றினால் புதிதாக 3,201 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய எணிக்கையான் 1,691-ல் இருந்து இது அதிகரித்துள்ளது.

இதனால் பிரிட்டனில் ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 14,909 ஆக உள்ளது. எனினும், இதன் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஏனெனில், அனைத்து பரிசோதனை மையங்களும் ஒமிக்ரான் திரிபு குறித்து கண்டறிய முடிவதில்லை. மேலும், ஒமிக்ரான் திரிபு சோதனைக்கு அனைவரும் முன்வருவதில்லை

இன்னும் இது எத்தனை காலத்துக்குப் போகும்? அதுகுறித்து, ஆய்வாளர்களுக்கு இன்னும் நிச்சயமாகத் தெரியவில்லை.

புத்தாண்டுக்கு முன்னதாக இது உச்சம் தொடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து இரட்டிப்பானால், பிரிட்டனில் உள்ள மக்களைவிட அதிகமானோர் இதனால் பாதிக்கப்படுவர். எனவே, இதற்கு எல்லை உள்ளது.

ஒமிக்ரான் திரிபு எந்தளவுக்கு உடல்நலனை பாதிக்கும், சுகாதார கட்டமைப்புகளின் மீது எந்தளவுக்கு அழுத்தத்தை இது ஏற்படுத்தும் என்ற கேள்விகளுக்கு இன்னும் பதில் இல்லை.

பிரிட்டனில் கடந்த வியாழக்கிழமை, 8,61,306 பூஸ்டர் தடுப்பூசிகளும், மூன்றாவது தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. தினசரி எண்ணிக்கையில் இதுவே அதிகமாகும்.

தற்போது பிரிட்டனில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுள்ளனர் என, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »