Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): கிறிஸ்துமஸ் பயணங்களால் ஒமிக்ரான் பரவல் அதிகரிக்கலாம் – எச்சரிக்கும் அமெரிக்க நிபுணர்

பட மூலாதாரம், Getty Images

கிறித்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயணங்களை மேற்கொள்வது, இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் மத்தியில் கூட ஒமிக்ரான் திரிபு பரவுவதை அதிகரிக்கும் என அமெரிக்காவின் முக்கிய தொற்றுநோய் நிபுணர் ஆன்டனி ஃபெளட்சிஃபாசி கூறியுள்ளார்.

“ஒமிக்ரான் குறித்து எந்தவித சந்தேகமும் இல்லை, அந்தத் திரிபுக்கு அதீத பரவும் திறன்கள் இருக்கின்றன” என மருத்துவர் ஆன்டனி ஃபெளட்சி என்.பி.சி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளார்.

அமெரிக்க அரசாங்கத்துக்கு கொரோனா தொடர்பாக ஆலோசனைகளை வழங்கி வரும் மருத்துவர் ஆன்டனி, ஒமிக்ரான் திரிபு உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி வருவதாகவும் தெரிவித்தார்.

அதிக பிறழ்வுகளைக் கொண்ட ஒமிக்ரான் பரவலால் பல்வேறு நாடுகள் அவற்றின் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தி வருகின்றன.

ஐரோப்பாவில் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் பயண கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளன. நெதர்லாந்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வது, தீவிரமாக நோய்வாய்ப்படுவதிலிருந்து, கிட்டத்தட்ட 85% வரை பாதுகாப்பு தரும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதன் பிறகு பல நாட்டு அரசுகளும் பூஸ்டர் திட்டத்தைச் விரைவாக நடைமுறைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில்தான், அமெரிக்காவில் அதிவேகமாக பரவி வரும் ஒமிக்ரான் திரிபு, அமெரிக்க சுகாதார சேவைகள் மீது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என மருத்துவர் ஆன்டனி பெளட்சி கூறியிருக்கிறார்.

“இப்போது இருப்பதைப் போன்ற சூழல் தொடர்ந்தால், நமது மருத்துவமனைகள் மீது கடும் அழுத்தம் ஏற்படும்” என அவர் எச்சரித்தார்.

முக கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர் ஆன்டனி அறிவுறுத்தினார். மேலும், அமெரிக்க மக்கள் தங்களுக்கான தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ்களை செலுத்திக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)

பட மூலாதாரம், EPA

“இரு டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்ட ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கும், தடுப்பூசியே செலுத்திக் கொள்ளாத ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், நோயின் தீவிரத்தன்மை குறித்த அபாயம்தான்” என்று கூறினார்.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய ஆன்டனி ஃபெளட்சி, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், கொரோனா தொற்றால் தீவிரமாக பாதிக்கப்படும் அபாயம் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான அபாயம் அதிகம் என தெரிவித்தார்.

“முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்வது மிகவும் நல்லது… முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டு, பூஸ்டர் டோஸையும் செலுத்திக் கொள்வது முழு பாதுகாப்பை வழங்கும்” என்றும் அவர் கூறினார்.

அமெரிக்க மக்கள் தொகையில் 73 சதவீதத்தினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியையாவது செலுத்திக் கொண்டுள்ளனர் என அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய தரவு கூறுகிறது. மேலும் 30 சதவீதத்தினர் பூஸ்டர் டோஸைச் செலுத்திக் கொண்டுள்ளனர்.

தற்போது அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் சுமார் மூன்று சதவீதத்தினர் மட்டுமே ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் பெரும்பாலானோர் நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மதிப்பிட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று தொடங்கியது முதல் அமெரிக்காவில் இதுவரை ஐந்து கோடிக்கும் மேற்பட்டோர் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »