Press "Enter" to skip to content

மியான்மர்: பொதுமக்களை சித்ரவதை செய்து கொன்ற ராணுவம்

  • ரெபேகா ஹென்ஷ்கே, கெல்வின் ப்ரவுன் மற்றும் கோ கோ ஆங்
  • பிபிசி

பட மூலாதாரம், Getty Images

மியான்மர் நாட்டில்  கடந்த ஜூலை மாதம், ராணுவம் நடத்திய தொடர் படுகொலைகளில், பொதுமக்களில் குறைந்த பட்சம் 40 பேர் உயிரிழந்திருப்பதாக, பிபிசி புலனாய்வு கண்டறிந்துள்ளது.

ராணுவத்தினர், (அதில் சிலருக்கு 17 வயது) கிராமத்தினரை  சுற்றி  வளைத்து, அங்கிருக்கும் ஆண்களை தனியாக பிரித்து கொன்றனர் என்று  இந்த படுகொலையிலிருந்து தப்பியவர்களும் நேரில் பார்த்தவர்களும் கூறுகின்றனர்.  இச்சம்பவம் தொடர்பாக கிடைத்த காணொளி பதிவுகளும், புகைப்படங்களும், அவர்கள் முதலில் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டு, ஆழமற்ற புதைக்குழிகளில் புதைக்கப்பட்டதை காட்டுகிறது.

மத்திய மியான்மரில் சாகைங் (Sagaing) மாவட்டத்தில், ராணுவ எதிர்ப்பாளர்கள் வலுவாக உள்ள கனி (Kani) நகரத்தில்  நான்கு வெவ்வேறு சம்பவங்களில், இந்த படுகொலைகள் கடந்த ஜூலை மாதம் நடந்தன.

பிப்ரவரி மாதம் ராணுவம் ஆட்சிக்கு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயகத்தின் பாதையில் நாடு திரும்ப வேண்டும் என்று கோரி தாக்குதல் நடத்திய ஆயுதக் குழுவிற்கான தண்டனை இந்த கொலைகள் என்று கருதப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டுகளை ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் மறுக்கவில்லை.

கடந்த பிப்ரவரி மாதம், ஆங் சான் சூ ச்சியின் ஜனநாயக கட்சியின் ஆட்சியை கவிழ்த்து ராணுவம் அந்நாட்டை கைப்பற்றியது. அப்போது முதலே,  பொதுமக்களிடமிருந்து கடும் எதிர்ப்பை ராணுவம் சந்தித்தது.  

 இதுகுறித்து, கனியைச் சேர்ந்த சாட்சியங்கள் 11 பேரிடம்  பிபிசி பேசியது; அவர்கள் கூறியதை, மியான்மர் விட்னஸ் (Myanmar Witness) என்ற பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் அரசு சாரா அமைப்பு,  சேகரித்த அலைபேசி காணொளி பதிவுகள்,  புகைப்படங்களுடன்  ஒப்பிட்டு பார்த்தோம்.   

யின் கிராமத்தில் மிகப்பெரிய படுகொலை நடந்தது.  அங்கு குறைந்தபட்சம்  14  ஆண்கள் சித்ரவதைக்கு உட்படுத்தி, கொல்லப்பட்டுள்ளனர். பின்னர், காடுகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்கில் அவர்களின் உடல்கள் தூக்கி வீசப்பட்டுள்ளன.

யின் கிராமத்தில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் (பாதுகாப்பு கருதி அவர்களின் பெயர்களை மறைத்திருக்கிறோம்)- ஆண்களை  கயிறுகளில் கட்டி, கொல்வதற்கு முன் அடித்தனர் என்று கூறியுள்ளனர்.

 “எங்களால் அதைப் பார்க்க முடியவில்லை ; அதனால்,  அழுது கொண்டே தலை குனித்து நின்றோம்”, என்று பெண் ஒருவர் கூறினார்.  அவரது சகோதரர், உடன்பிறந்தவரின் மகன் மற்றும்  மைத்துனர் கொல்லப்பட்டுள்ளனர்.

“கொல்ல வேண்டாம் என்று கெஞ்சினோம்.  அவர்கள் கண்டுகொள்ளவில்லை. ” இங்கிருப்பவர்களின் உங்களின் கணவர்கள் இருக்கிறார்களா? அப்படியெனில் நீங்கள் இறுதி சடங்கை செய்யுங்கள்”, என்று பெண்களிடம் ராணுவத்தினர் கூறினர்.

அவர்கள் கொல்லப்படுவதற்கு முன், ராணுவத்தினர் பல மணி நேரங்கள் கொடூரமான சித்ரவதைகளை மேற்கொண்டனர்”,  என்று இந்த ராணுவத்திடமிருந்து தப்பிய  ஒருவர் கூறினார்.

 “அவர்கள் கட்டப்பட்டு, கற்களால் அடித்தனர்; நாள் முழுவதும் அவர்களை சித்ரவதை செய்தனர்”, என்று அவர் கூறுகிறார்.

 “ராணுவ வீரர்களில் சிலர் இளம் வயதினராக இருந்தனர்; 17 அல்லது 18 வயதிருக்கும், ஆனால், சிலர் மிகவும்  வயதானவர்கள். அவர்களுள் பெண் ஒருவரும் இருந்தார்”.

ஸீ பின் ட்வின் ( Zee Bin Dwin) என்ற கிராமத்தில், ஜூலை மாதம் பிற்பகுதியில்,  சிதைக்கப்பட்ட நிலையில் 12 சடலங்கள் ஆழமற்ற புதைக்குழிகளில் புதைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதில்  சிறிய  சடலம் ஒன்றும்  இருந்தது. பெரும்பாலும், அது ஒரு குழந்தையின் சடலமாக இருக்கலாம்.  மாற்று திறனாளியின் சடலமும் அங்கு இருந்தது.  சில சிதைக்கப்பட்ட நிலையில் இருந்தன.

மியான்மர்

பட மூலாதாரம், Getty Images

அருகிலிருந்த ப்ளம் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த உடல்,  அறுபது வயது மதிக்கதக்கவருடையது என்பது தெரிகிறது. அவரது சடலம்  காணப்படும்  காணொளி பதிவை பிபிசி ஆய்வு செய்தது. அவர் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார் என்பது அதில் தெளிவாக தெரிந்தது.   அக்கிராமத்தில் ராணுவம்  நுழைந்த போது, அவரது மகனும், பேரனும் தப்பி  சென்றனர் என்று அவரது  குடும்பம்  கூறுகிறது.  ஆனால், வயது காரணமாக அவர் பாதுகாப்பாக இருப்பார் என கருதி, அவர் அங்கேயே இருந்தார் என்று கூறினர்.

 அப்பகுதியில், ராணுவத்திற்கு எதிராக  போராடும் மக்கள் படை, ஜனநாயகத்தை மீட்டெடுக்க வலியுறுத்தி,  நடத்திய தாக்குதலுக்கான கூட்டுத்தண்டனையாக இந்த படுகொலைகள் நடந்திருப்பதாக தெரிகிறது.  இந்த படுகொலைகளுக்கு பல மாதங்கள் முன்,  அப்பகுதியில் மக்கள் பாதுகாப்புப் படைக்கும்  ராணுவத்திற்கும்  இடையே சண்டை வலுவடைந்தது. இதில்,  ஸீ பின் ட்வினில் நடந்த மோதல்களும் அடங்கும்.

பிபிசிக்கு கிடைத்த காணொளி ஆதாரம் மற்றும் சாட்சியங்களிலிருந்து ஆண்களே இலக்காக குறி வைக்கப்பட்டனர்  என்று தெளிவாக தெரிகிறது. மியான்மரில் சமீப மாதங்களாக கிராமத்தில்  வசிக்கும் ஆண்களை குறிவைத்து தாக்கும் நடைமுறை  உள்ளது.  இந்த நடைமுறை  மக்கள் பாதுகாப்பு படையினருக்கும் ராணுவத்திற்கும் இடையே நடந்த மோதல்களுக்கான கூட்டுத்தண்டனையை ஒத்திருக்கிறது.      

ராணுவத்திற்கு எதிரான தாக்குதல்களில் அவர்கள் ஈடுபடவில்லை என்று கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் கூறுகின்றன.  யின் கிராமத்தில்  நடந்த படுகொலையில், தனது சகோதரரை இழந்த பெண் ஒருவர்,  என் சகோதரர் ஒரு கவட்டை வீச்சைக்கூட தாங்க முடியாதவர் என்று கூறி வீரர்களிடம் கெஞ்சியதாக, கூறினார்.

“எதுவும் கூற வேண்டாம். நாங்கள்  களைப்படைந்திருக்கிறோம். உன்னையும் கொல்வோம்”, என்று ஒரு வீரர் கூறியதாக அவர் கூறுகிறார்.

அந்நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு, சர்வதேச பத்திரிகையாளர்கள் அங்கு செய்தி சேகரிக்க  தடை விதிக்கப்பட்டுள்ளது.  அங்கு பெரும்பாலான சர்வதேச ஊடகங்கள் மூடப்பட்டு விட்டன.  இதனால், களத்திற்கு சென்று செய்தி சேகரிப்பது இயலாத ஒன்றாக உள்ளது.

இந்த கட்டுரையில்  கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை, மியான்மிரின் தகவல்துறையின் துணை அமைச்சரும், ராணுவத்தின் செய்தி தொடர்பாளருமான  ஜெனரல் சாவ் மின் துன்னிடம்  பிபிசி முன்வைத்தது.  அவர்  ராணுவ வீரர்கள் படுகொலைகளை செய்திருக்கிறார்கள் என்பதை மறுக்கவில்லை.

“இது நடந்திருக்கலாம்.  அவர்கள் எங்களை எதிரிகள் போல் நடத்தினால், நாங்கள் எங்களை காத்துக்கொள்ள உரிமை இருக்கிறது”, என்று  அவர் கூறினார்.

மியான்மிர் ராணுவத்தினர் மனித உரிமை மீறல்கள் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஐக்கிய நாடுகள் தற்போது விசாரித்து வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »