Press "Enter" to skip to content

தாய்மை அச்சுறுத்துகிறதா? – குழந்தை பெற்றுக்கொள்ளத் தயங்கும் இளம் தலைமுறை

பட மூலாதாரம், Courtesy of Kate Morgan

நிச்சயமற்ற உலகில், குழந்தை பெற்றுக்கொள்வதா வேண்டாமா என்ற கேள்விக்கிடையே, இளம் சமுதாயத்தினர் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

முதல்முறை கர்ப்பமடைந்தபோது, தான் பெற்றுக்கொள்ளப்போகும் பல குழந்தைகளில் இது முதல் குழந்தை என, கனடாவின் ஆல்பர்ட்டாவில் வசிக்கும் ஹெதர் மார்கோவும் அவருடைய கணவரும் நினைத்தனர். அவர்களுடைய மகன் இப்போது தொடக்கப்பள்ளியில் படிக்கிறார்.

இப்போது, அத்தம்பதியர் தங்களது ஒரே மகனுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டும் என நினைப்பதால், அடுத்தடுத்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டாம் என முடிவெடுத்துள்ளனர்.

இது அவர்களின் பொருளாதார நிலைமையை சார்ந்த முடிவாகும். தம்பதியின் மொத்த வருமானத்தையும் சேர்த்தே, குழந்தையை கவனிப்பது போராட்டமாக இருக்கும் என அவர்கள் நினைக்கின்றனர்.

“இன்னொரு குழந்தையை பெற்றுக்கொள்வது பாரமாக இருக்கும் என எண்ணுகிறேன். இந்த முடிவு எங்கள் குடும்பத்தினரை அதிருப்தியடைய வைத்துள்ளது. ஆனால், உலகம் இப்போது மாறிவிட்டது,” என்கிறார் மார்கோவ்.

உலக பிறப்பு விகிதம் குறைந்துவருகிறது. 2021-ம் ஆண்டில் உலகளவில் கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு 2.3 ஆக உள்ளது. இது 1990-ல் 3.2 ஆக இருந்தது.

பியூ ஆராய்ச்சி மையம் வெளியிட்ட புதிய ஆய்வறிக்கையின்படி, 18 முதல் 49 வயதுக்குட்பட்ட குழந்தையில்லாத அமெரிக்கர்களின் வளர்ந்து வரும் சதவீதம் அவ்வாறே நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும், 2021-ல் கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு 2.1-க்கும் குறைவாகவே உள்ளது.

குழந்தை

பட மூலாதாரம், Getty Images

தங்களின் நிதிநிலைமையை சீராக வைத்திருப்பது கடினமாக இருப்பதாலேயே இளம் வயதினர் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட தங்களின் நிதி பற்றாக்குறை சரியாகாது என அமெரிக்கர்கள் தெரிவிக்கின்றனர். ஐரோப்பாவில் கணிசமான அளவுக்கு பணவீக்கம் ஏற்படலாம். பல பகுதிகளில் சொந்தவீடு என்பது கனவாக உள்ளது.

“குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட வீடுகளில் வசிப்பவர்களுக்கு நல்ல வேலைகள் கிடைப்பது குறைந்துள்ளது. குறைவான கல்வியறிவு கொண்டவர்களுக்கு நிலையான மற்றும் சிறந்த வேலைகள் என கருதப்படும் தொழிற்சங்க வேலைகள், கட்டுமானம், உற்பத்தி சார்ந்த வேலைகள் திரும்ப வரவில்லை,” என்கிறார், கெம்மில்.

உற்பத்தி உள்ளிட்ட சில துறைகளில் ஏற்படும் வேலை இழப்புகளால், மொத்த கருவுறுதல் விகிதத்தில் ஒட்டுமொத்த வேலையின்மையை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதாக, 2019-ம் ஆண்டின் அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

குழந்தை பெற்றுக்கொள்வதற்கு முன் சொந்த வீடு வாங்க வேண்டும் என, 2012 வரை தரவுகளின் அடிப்படையில் ஆதரிக்கப்பட்ட இந்த அனுமானத்தில் இனியும் உண்மை இல்லை என, பிரிட்டனில் உள்ள சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள சென்டர் ஃபார் பாப்புலேசன் சேஞ்ச் மையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

குழந்தை

பட மூலாதாரம், Getty Images

“அதன்படி, வீடு வாங்க நினைக்கும் தம்பதியர், குழந்தை பெற்றுக்கொள்வதை ஒத்திவைக்கலாம் அல்லது கைவிட நேரிடலாம்”, என இந்த ஆய்வை மேற்கொண்ட முன்னணி ஆய்வாளர் பேராசிரியட் ஆன் பெரிங்டன் தெரிவித்தார்.

போர்களும் அரசியல் பிரச்னைகளும் ஏறக்குறைய ஒவ்வொரு தலைமுறையினருக்கும் நிஜமாக இருந்தாலும், எல்லா இடங்களிலும், அவர்கள் தங்களின் தாய்-தந்தை, தாத்தா-பாட்டிகளின் காலத்தை விட மிகவும் பயங்கரமானதாகத் தோன்றும் ஒரு உலகத்தை எதிர்கொள்கின்றனர்.

முன்னெப்போதையும் விட உயர்ந்த ஆயுட்காலம், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் நவீன சுகாதாரத்திற்கான அணுகல் இருந்தபோதிலும், எங்கும் நிறைந்த ஊடகங்கள் காரணமாக, உணவுப் பற்றாக்குறை முதல் பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு வரை உலகின் அனைத்து திகிலூட்டும் நிகழ்வுகள் குறித்தும் நாம் மிகவும் அறிந்திருக்கிறோம்.

சிட்னியில் செயல்படும் பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட உலக அமைதி அட்டவணையின்படி, உள்நாட்டு அமைதியின்மை கடந்த தசாப்தத்தில் இருமடங்கு அதிகரித்துள்ளதாகவும், 2020-ல் அது உலகளவில் 10% என்ற அளவில் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மோதலை அனுபவித்த நாடுகளின் நாற்பது வருட தரவுகள், உறுதியற்ற காலகட்டங்களில் கருவுறுதல் விகிதம் பொதுவாக மூன்றில் ஒரு பங்கு வரை குறைவதைக் காட்டுகிறது.

2018-ம் ஆண்டின் ஓர் ஆய்வில், மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க மில்லினியல்கள் தங்கள் சமூகங்களிலிருந்து துண்டிக்கப்பட்டதாக உணர்கிறார்கள்.

பியூ ஆராய்ச்சி மையத்தின் ஆய்வறிக்கையின்படி, எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டோம் என கூறியவர்களிடம் காரணத்தைக் கேட்டபோது, 5 சதவீதத்தினர் சூழலியல் காரணங்களைக் கூறுகின்றனர். வணிகம் இன்சைடர் 2019-ல் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின்படி, 18 முதல் 29 வயதுடையவர்களில் கிட்டத்தட்ட 40% பேர் உட்பட மூன்றில் ஒரு பங்கு அமெரிக்கர்கள், “குழந்தை பெற்றுக்கொள்வதா, வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்கும்போது, காலநிலை மாற்றத்தின் விளைவுகளை கருத்தில்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

பூமியின் நிலை பற்றிய அவநம்பிக்கையான அறிக்கைகளை எதிர்கொள்ளும்போது, எத்தனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் அல்லது ஒரு குழந்தையையாவது பெற்றுக்கொள்ள வேண்டுமா என்பவை, முழு தலைமுறையினரையும் பாதிக்கும் கேள்விகளாக இருக்கின்றன.

கேட் மோர்கன்

பட மூலாதாரம், Courtesy of Kate Morgan)

நான் இதனை எழுதும்போது என்னுடைய முதல் குழந்தை எனக்குள் நெளிந்துகொண்டிருக்கிறது. நான் ஒரு சிக்கலற்ற கர்ப்ப காலத்தைப் பெற்றிருக்கிறேன். உடல் ரீதியாகப் பேசினாலும், மனரீதியாகவும் உணர்வு ரீதியாகவும், வரவிருக்கும் தாய்மையைப் பற்றிய இருண்ட கலவையான உணர்வுகளில் நான் ஆழ்ந்திருக்கிறேன்.

31 வயதில் நிதி ரீதியாக வேறு இடத்தில் இருப்பேன் என்று நினைத்தேன். ஆனால், என்னுடைய கல்விக்கடன்கள் செலுத்தப்படவில்லை. மேலும், எனது குழந்தை மழலையர் பள்ளியில் இருக்கும் வரை, நான் அதனை செலுத்துவேன் என நினைக்கிறேன். அமெரிக்காவின் பென்சில்வேனியாவின் ஊரகப்பகுதியில் நான் வசிக்கிறேன். அங்கு வாழ்வதற்கான செலவு குறைவு. மேலும், மலிவான விலையில் உள்ளூரில் கிடைக்கும் ஆரோக்கியமான உணவுகளை என்னால் பெற முடிகிறது.

ஆனால், நான் வாடகை வீட்டில் வசிக்கிறேன், என் குடும்பத்தை விட்டு தொலைவில் இருக்கிறேன். பெருந்தொற்று காலத்தில் குழந்தை பிறப்பதைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். மேலும், அரசியல் அமைதி பலவீனமாக உள்ள நாட்டில் குழந்தை பிறப்பது குறித்தும் கவலைப்படுகிறேன். நான் பல விஷயங்கள் பற்றி கவலைப்படுகிறேன்.

உலக பிரச்னைகள் குறித்து குழந்தையை பயமுறுத்தாமல் இருக்க நாங்கள் இயன்ற அனைத்தையும் செய்வோம். அதனை சரிசெய்ய முடியும் என்று நம்புவதற்கு அவர்களுக்கு அதிகாரம் அளிப்போம். தாய்மை பயமுறுத்துகிறது, ஆனால், எனக்கு அது சரியான தேர்வாக இருக்கிறது. எப்படியோ, இரண்டு விஷயங்களும் உண்மையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

கேட் மோர்கன், பிபிசி ‘வொர்க் லைஃப்-ல் எழுதியது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »