Press "Enter" to skip to content

பனாமா பேப்பர்ஸ் என்றால் என்ன? ஐஸ்வர்யா ராய் பச்சன் அமலாக்கத் துறை விசாரணைக்கு காரணமான ஆவணங்கள்

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES

இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகை மற்றும் முன்னாள் ‘மிஸ் வோர்ல்டு’ ஐஸ்வர்யா ராய் பச்சன், டிசம்பர் 20ஆம் தேதி திங்கட்கிழமை ‘பனாமா பேப்பர்ஸ்’ ஆவணங்களில் வெளியான பணச் சலவை மோசடி தொடர்பாக டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் ஆஜரானார்.

சுமார் ஐந்து மணி நேர விசாரணைக்குப் பிறகு, அமலாக்கத்துறை, அவர் மும்பை திரும்ப அனுமதித்ததாக ஏ.என்.ஐ முகமையில் செய்தி வெளியானது. இதற்கு முன்பே, ஐஸ்வர்யா ராய்க்கு இரு முறை அமலாக்கத் துறையிடமிருந்து பனாமா பேப்பர்ஸ் தொடர்பான விசாரணைக்கு அழைப்பு வந்த போது, நேரில் ஆஜராக முடியாமல் போனதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பனாமா பேப்பர்ஸ் என்றால் என்ன?

பனாமா நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் சட்ட நிறுமமான மொசக் ஃபொன்செகா (Mossack Fonseca), தன் வாடிக்கையாளர்களுக்கு எப்படி பணத்தை சலவை செய்யவும் (சட்டவிரோதமாக கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் முயற்சி), பொருளாதாரத் தடைகளை மீறவும், வரிகளிலிருந்து சட்டத்துக்கு விரோதமாக தப்பிக்கவும் உதவியது என்று கூறும் ஆவணங்கள்தான் பனாமா பேப்பர்ஸ்.

சர்வதேச விதிமுறைகளுக்கு விரோதமாக பனாமாவின் சட்ட நிறுமத்தின் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களைத் தொடங்குவது, நிறுவனங்களைக் கையகப்படுத்துவது, வெளிநாட்டில் சம்பாதித்த வருமானத்தை, வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்வது, குற்ற செயல்கள் மூலம் கிடைத்த பணத்தை வைத்திருப்பது, உடைட் போன்ற அமைப்புகளில் சட்ட விரோதமாக வந்த பணத்தைக் கொண்டு ரியல் எஸ்டேட் சொத்துகளை வாங்குவது என பனாமா பேப்பர்ஸ் பல சட்ட விரோத நிதிசார் விவரங்களை வெளிக்கொண்டு வந்தது.

பனாமா பேப்பர்ஸ் தொடர்பான போலி நிறுவனங்களில் பெரும்பாலானவை பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகள், பனாமா, பஹாமாஸ் ஆகிய நாடுகளில் இருப்பதாக தரவுகள் கிடைத்தன.

Panama Papers

பட மூலாதாரம், Getty Images

1. நிறுவனங்களின் உரிமையாளர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாகவே வைத்திருப்பது.

2. நிறுவனத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி வசூலிக்காமல் இருப்பது,

ஆகியவற்றை இந்த நாடுகள் தங்கள் நாட்டில் நிறுவனத்தைத் தொடங்கும் வாடிக்கையாளர்களுக்கு உறுதி செய்தன.

பனாமா பேப்பர்ஸ்-இல் யாருடைய பெயர்கள் இருந்தன?

பல்வேறு நாட்டின் பணம்

பட மூலாதாரம், Getty Images

2016ஆம் ஆண்டு வெளியான நிதி சார் மோசடி மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பான இந்த பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் உலகின் பல்வேறு முக்கிய புள்ளிகள், நிறுவனங்களின் பெயர்கள் வெளியாயின.

2016இல் இந்த ஆவணங்கள் கசிந்தபோது வெவ்வேறு நாடுகளின் இந்நாள் மற்றும் முன்னாள் ஆட்சியாளர்கள் 12 பேரின் பெயர்கள் இதில் இடம்பெற்றன.

இந்தியாவின் பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன், அஜய் தேவ்கன் தொடங்கி, கெளதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களான கே பி சிங், சமீர் கெலோட் என சுமார் 500 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றன.

சர்வதேச அளவில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினோடு நெருக்கமாக இருந்தவர்கள், சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் மைத்துனர், யுக்ரைன் நாட்டின் முன்னாள் அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ, அர்ஜெண்டினாவின் முன்னாள் அதிபர் மெளரிசியோ மக்ரி, முன்னாள் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனின் தந்தை, முன்னாள் பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீஃபின் நான்கு வாரிசுகளில் மூவர் என பட்டியல் நீண்டது.

விளாதிமிர் புதின் உட்பட பல அரசியல்வாதிகளும் பனாமா பேப்பர்ஸுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுத்தனர்.

இந்த பட்டியலில் 500 வங்கிகள் (அதன் துணை நிறுவனங்கள் மற்றும் கிளைகளும் இதில் அடக்கம்) 15,600 போலி நிறுவனங்களை மொசக் ஃபொன்செகாவோடு பதிவு செய்ததாகத் தரவுகள் கூறின. தங்கள் வாடிக்கையாளர்களின் வரிச்சுமையைக் குறைக்க இந்த போலி நிறுவனங்களைப் பதிவு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மறுத்தன.

உலகின் முன்னணி அரசியல்வாதிகள் மற்றும் அரசுகளுக்கு தலைமை வகிப்போரின் உறவினர்கள், நெருங்கிய உதவியாளர்கள் உள்ளிட்டோர் 60க்கும் மேற்பட்டோரின் பெயர்களும் இந்த ஆவணங்களில் இருந்தன.

பனாமா பேப்பர்ஸ் ஆவணங்களை வெளியிட்டது யார்?

பனாமா பேப்பர்ஸ்

பட மூலாதாரம், Getty Images

மொசக் ஃபொன்செகா நிறுமம் வைத்திருந்த 1.15 கோடி ஆவணங்களை ‘சுட்டாச்ச சைடங்’ (Sueddeutsche Zeitung) என்கிற ஜெர்மன் மொழி நாளிதளுக்கு பகிரப்பட்டது. பிறகு அப்பத்திரிகை, சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பிடம் பகிர்ந்தது.

பிபிசி உட்பட, 76 நாடுகளைச் சேர்ந்த 107 ஊடகங்கள் இந்த மாபெரும் சட்ட விரோத சொத்துகுவிப்பு தொடர்பான ஆவணங்களை பகுப்பாய்வு செய்தது. இதுவரை அதிகாரபூர்வமாக பனாமா பேப்பர்ஸை கசியவிட்டரின் பெயர் தெரியவில்லை. ஆனால் சில ஊடகங்களில் கசியவிட்டர் ‘ஜான் டோ’ என செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர் யார் என்பது குறித்தோ, அவரது உண்மையான பெயர் என்ன என்பது குறித்தோ உறுதிசெய்யப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

எண்களில் பனாமா பேப்பர்ஸ்

இதுவரை வெளியான விக்கீ லீக்ஸ், ஸ்விஸ் கோப்புகள், லக்செம்போர்க் கோப்புகள் போல, பொதுவெளியில் அம்பலப்படுத்தப்பட்ட ஆவணங்கள் எதுவும் 300 ஜிபி அளவு கூட தாண்டாது. ஆனால் இந்த பனாமா பேப்பர்ஸ் தரவுகள் சுமார் 2,600 ஜிபி அளவுடையது. வெளியான தரவுகள் அளவின் அடிப்படையில் பனாமா பேப்பர்ஸ் வரலாற்றிலேயே மிகப்பெரிய தரவுக் கசிவு.

பனாமா பேப்பர்ஸுடன் தொடர்பு இருப்பதாக 2,14,000 நிறுவனங்கள், உடைடுகள், அமைப்புகளின் பெயர்கள் வெளியாயின. 1977ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 2015 வரையான விவரங்கள், கசிந்த தரவுகளில் காணப்பட்டன என்பதும் நினைவுகூரத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »