Press "Enter" to skip to content

நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்ட சிறை செல் சாவியை ஏலம் விட முயற்சி: தென்னாப்பிரிக்கா எதிர்ப்பு

பட மூலாதாரம், CORBIS VIA GETTY IMAGES

தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிறவெறி அமைப்பை முடிவுக்குக் கொண்டுவரப் போராடியவரும், பிறகு அந்நாட்டின் அதிபராக இருந்தவருமான நெல்சன் மண்டேலா நீண்ட காலம் அடைக்கப்பட்டிருந்த ராபன் தீவுச் சிறைக் கூடத்தின் (செல்) சாவியை ஏலம் விட முயற்சி நடக்கிறது. இதை தடுத்து நிறுத்தக் கோருகிறது தென்னாப்பிரிக்கா.

இந்த ஏலம் ஜனவரி 2022-ல் நியூயார்க் நகரத்தில் கர்ன்சேஸ் (Guernsey’s) என்கிற ஏல நிறுவனத்தால் நடத்தப்பட உள்ளது. கிறிஸ்டோ பிராண்ட் என்பவர்தான் மண்டேலாவின் சிறைக்காவலராக இருந்தார். அவர்தான் இந்த சாவியை ஏலம் விட உள்ளார்.

தென்னாப்பிரிக்க கலாசார அமைச்சரான நாதி தெத்வா, தங்கள் அரசோடு இது குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று கூறினார்.

“இந்த சாவி தென்னாப்பிரிக்க மக்களுக்குச் சொந்தமானது.”

“அது யாருக்கும் சொந்தமான சொத்து அல்ல” என்று அமைச்சர் கூறினார்.

வரும் 2022 ஜனவரி 28ஆம் தேதி ஏலத்தை நடத்தி நிதி திரட்ட உள்ளதாகக் கூறுகிறது கர்ன்சேஸ். திரட்டப்படும் நிதியிலிருந்து மண்டேலா அடக்கம் செய்யப்பட்ட இடத்தை சுற்றி ஒரு நினைவுத் தோட்டம் மற்றும் அருங்காட்சியகம் எழுப்ப உள்ளதாகவும் இந்நிறுவனம் கூறுகிறது.

நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் சாவியை மட்டும் ஏலத்தில் விடப் போவதில்லை. அதோடு அவரே கைப்பட வரைந்த ‘தி லைட் ஹவுஸ்’ என்கிற ஓவியம், சிறையில் உடல் நலனுக்காக அவர் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட உடற்பயிற்சி மிதிவண்டி, டென்னில் ராக்கெட் போன்றவையும் ஏலத்தில் விடப்பட உள்ளன.

சிறை அறை

பட மூலாதாரம், AFP

தென்னாப்பிரிக்கா மட்டுமின்றி, உலகம் முழுக்க ஒரு நாயகராகக் கொண்டாப்படும் மண்டேலா தன் 27 ஆண்டு கால சிறைவாசத்தில் 18 ஆண்டுகளை ராபன் தீவுகளில் கழித்தார். அவர் இருந்த சிறையில் காவலராகப் பணியாற்றிய பிராண்ட் பிற்காலத்தில் அவரது நெருங்கிய நண்பரானார்.

1990ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார் நெல்சன் மண்டேலா. தென்னாப்பிரிக்கா மெல்ல நிறவெறி அமைப்பில் இருந்து வெளியேறத் தொடங்கியது. 1994ஆம் ஆண்டு பல இனத்தவர்களும் தேர்தலில் போட்டியிட்டனர். அத்தேர்தலில் நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த முதல் அதிபரானார்.

மண்டேலா ஒரே ஒரு முறைதான் பதவி வகித்தார். 1999ல் அவர் தானாக முன்வந்து பதவியிலிருந்து விலகிய வெகு சில ஆப்ரிக்கத் தலைவர்களில் ஒருவரானார் அவர். தென் ஆப்ரிக்காவின் அடுத்த அதிபர் மற்றும் ஏ.என்.சி கட்சியின் தலைவர் என்ற இரு பதவிகளுக்கும் மண்டேலாவுக்கு அடுத்தபடியாக வந்தார் தாபோ இம்பெக்கி. 2013ஆம் ஆண்டு தன் 95ஆவது வயதில் காலமானார் மண்டேலா.

காந்தியின் அகிம்சை கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அவ்வழியிலேயே தன் போராட்டங்களை முன்னெடுத்த நெல்சன் மண்டேலா 1993ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு, 1990ஆம் ஆண்டில் இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத் ரத்னா, பாகிஸ்தான் அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான நிஷான் இ பாகிஸ்தான் என பல பன்னாட்டு விருதுகளைப் பெற்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »