Press "Enter" to skip to content

பிரிட்டன் மக்களின் மரபணுவை மாற்றிய பழங்கால புலம்பெயர்வு: எலும்புக்கூடுகளின் டிஎன்ஏவை ஆராய்ந்ததில் வெளிவந்த சுவாரஸ்யம்

  • பால் ரிங்கன்
  • அறிவியல் ஆசிரியர், பிபிசி நியூஸ் இணையம்

பட மூலாதாரம், LDRS

செல்டிக் மொழிகளின் பரவலுடன் தொடர்புடையதாக இருக்கும் பிரிட்டனுக்குள் ஒரு பெரிய அளவிலான, வரலாற்றுக்கு முந்தைய புலம்பெயர்வுக்கான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த பெரும் புலம்பெயர்வு ஐரோப்பாவில் தோன்றியது. 1,400 கி.மு. முதல் 870 கி.மு. வரையிலான இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்தது.

இந்த கண்டுபிடிப்பு, பிரிட்டனில் உள்ள இன்றைய மக்களின் மரபணு அமைப்பை விளக்க உதவுகிறது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பிற்கால மக்கள்தொகையின் பாதி வம்சாவளியினர் இந்த குடியேறியவர்களிடமிருந்து வந்தவர்கள்.

இடைக்காலம் முதல் வெண்கலக் காலம் வரையிலான மக்கள் வருகைக்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், குடியேறியவர்கள் பிரிட்டனுக்கு புதிய சடங்குகளை அறிமுகப்படுத்தினர்.

நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட இம்முடிவுகள், 793 பழங்கால எலும்புக்கூடுகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட டிஎன்ஏவை அடிப்படையாகக் கொண்டவை.

இரும்புக்காலத்தில் பிரிட்டனில் சிலருக்கு பசும்பாலை ஜீரணிக்க அனுமதிக்கும் ஒரு மரபணு வேகமாக அதிகரித்தது. 1,000 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு ஐரோப்பாவில் இதேபோன்ற நிகழ்வு நடந்தது என்று ஆய்வு வெளிப்படுத்துகிறது. இதுவொரு மரபியல் பண்புக்கான இயற்கைத் தேர்வின் அசாதாரண உதாரணம், மேலும், அதன் பரவலுக்கான காரணங்கள் மர்மமாகவே உள்ளது.

கென்ட்டில் உள்ள கிளிப்ஸ் எண்ட் பார்ம் மற்றும் மார்கெட்ஸ் பிட் ஆகியவற்றின் தொல்பொருள் தளங்களில் நான்கு எலும்புக்கூடுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவை, ஐரோப்பாவிலிருந்து முதல் தலைமுறை குடியேறியவர்கள் அல்லது அவர்களின் சந்ததியினர்.

கேம்பிரிட்ஜ்ஷையரில் உள்ள மஸ்ட் ஃபார்மில் புலம்பெயர்ந்த காலத்தைச் சேர்ந்த நன்கு பாதுகாக்கப்பட்ட குடியிருப்பு

பட மூலாதாரம், CAMBRIDGE ARCHAEOLOGICAL UNIT

இது கி.மு. 1,400-க்கு முந்தைய கண்டத்தில் இருந்து இப்பகுதியின் முன்னோடி குடியேற்றத்திற்கான சான்று.

லண்டனில் உள்ள பிரான்சிஸ் கிரிக் இன்ஸ்டிட்யூட்டின் மருத்துவர் தாமஸ் பூத் கூறுகையில், புதிய, ஐரோப்பா கண்ட வம்சாவளியைக் கொண்ட மக்கள் “கிட்டத்தட்ட பிரத்யேகமாக கென்ட்டில் தோன்றுகிறார்கள்… ஆனால், நாம் அவர்களை வேறு எங்கும் பார்க்கவில்லை, பிரிட்டனின் ஒட்டுமொத்த வம்சாவளியில் மாற்றத்தைக் காணவில்லை.

ஆனால், இந்த புதிய டிஎன்ஏ ஏற்படுத்துகிற அடையாளம் விரைவில் பரவுகிறது: “கி.மு. 1,000 இல் இருந்து, திடீரென்று அந்த வம்சாவளியினர் குறிப்பாக தெற்கு பிரிட்டன் முழுவதும், சிதறடிக்கப்படுவதாகத் தெரிகிறது,” என அவர் விவரித்தார். மேலும், “ஸ்காட்லாந்தில் குறிப்பிட்ட மரபணு மாற்றம் எதுவும் இல்லை. ஆனால், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எல்லா இடங்களிலும் இந்த வம்சாவளியின் தாக்கம் உள்ளது”.

இந்த ஆய்வை வழிநடத்திய அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூலின் பேராசிரியர் டேவிட் ரீச் பிபியிடம் பேசுகையில், “பிரிட்டனில் இரும்புக் காலத்தில் உள்ளவர்களின் டிஎன்ஏவில் பாதி இந்த புதிய குடியேறியவர்களிடமிருந்து வருகிறது என்று நாங்கள் மதிப்பிடுகிறோம். இதன் பொருள் என்னவென்றால், இந்த இரும்பு வயது பிரித்தானியர்களின் மூதாதையர்களை அவர்கள் வாழ்ந்த காலத்திற்கு 20 தலைமுறைகளுக்கு முன்பே கண்டுபிடித்தால், அவர்களில் பாதி பேர் கிரேட் பிரிட்டன் தீவில் வசிக்க மாட்டார்கள்.” என தெரிவித்தார்.

ஆரம்பக் குடியேற்றக்காரர்கள் ஐரோப்பிய கண்டத்தில் எங்கிருந்து தோன்றினார்கள் என்பதைப் பொறுத்தவரை, பிரான்சில் உள்ள பழங்கால மக்களுடன் அவர்கள் மிகவும் பொருந்திப் போகின்றனர். ஆனால், பேராசிரியர் ரீச், “அதை நேரடியாக உறுதிப்படுத்தவோ அல்லது பிரான்சில் சரியாக அது இருக்கும் இடத்தைப் பார்க்கவோ போதுமான மாதிரிகள் இன்னும் எங்களிடம் இல்லை” என கூறுகிறார்.

புதியவர்கள் வந்தபோது, தற்போதுள்ள பிரிட்டிஷ் மக்கள் அதன் வம்சாவளியின் பெரும்பகுதியை கற்காலத்தின் முடிவில், ஸ்டோன்ஹெஞ்ச் கட்டப்பட்ட நேரத்தில் வந்த மக்களிடம் கண்டறிந்தனர். அவர்கள் பீக்கர் கலாச்சாரம் எனப்படும் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்தனர்.

பிந்தைய, மத்திய முதல் இறுதி வரையிலான மக்கள் இடம்பெயர்வு, புதிய கலாச்சார நடைமுறைகளை நாட்டுக்குக் கொண்டு வந்தது. பல வெண்கலப் பொருட்களை புதைப்பது போன்ற சடங்கும் இதில் இடக்கம். அவை, ஒருவேளை கடவுள்களுக்குப் படைக்கப்பட்டதாக இருக்கலாம்.

கென்ட்டில் உள்ள கிளிப்ஸ் எண்ட் பார்மில் கண்டெடுக்கப்பட்ட வெண்கல காலத்துக்குப் பிந்தைய சவக்குழி

பட மூலாதாரம், REPRODUCED WITH PERMISSION © WESSEX ARCHAEOLOGY

பிரிட்டனில் குடியேறியவர்களும் அவர்களின் சந்ததியினரும் செல்டிக் மொழிகளின் பரவலை செயல்படுத்தினர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் முன்மொழிகின்றனர்.

டுப்ளினில் உள்ள டிரினிட்டி கல்லூரியின் பண்டைய டிஎன்ஏ பற்றி ஆராயும் நிபுணரும் இந்த சமீபத்தில் ஆராய்ச்சியில் பங்கு கொள்ளாதவருமான மருத்துவர் லாரா கேசிடி, இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் “அற்புதமானவை” எனவும், “பிரிட்டன் தீவில் மொழி மாற்றத்திற்கான சாத்தியமான வாய்ப்பை வழங்குகிறது” எனவும் தெரிவித்தார்.

“செல்டிக் மொழிகள் முதன்முதலில் தீவுகளுக்குள் நுழைந்த புள்ளி இதுவாக இருக்க முடியுமா? இங்கே வழங்கப்பட்ட தரவு, விவாதத்தை முன்னோக்கி நகர்த்தியுள்ளது என்று நான் நினைக்கிறேன், இருப்பினும், அது முடிவானது அல்ல.”

புலம்பெயர்ந்தவர்கள் இந்த மொழிக் குழுவை பிரிட்டனுக்கு அறிமுகப்படுத்தினார்களா அல்லது ஒரு வகை செல்டிக் மொழியைப் பேசுகிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இன்று ஐரிஷ் மற்றும் ஸ்காட்டிஷ் கேலிக் பிரதிநிதித்துவப்படுத்தும் செல்டிக் மொழிகளின் கிளை கோய்டெலிக் என அறியப்படுகிறது. இது ஏற்கனவே உள்ள மக்களால் பேசப்பட்டிருக்கலாம். இந்தச் சூழ்நிலையில், புதிதாக வந்தவர்கள் வெல்ஷ் மற்றும் கார்னிஷ் தொடர்பான மொழிகளைப் பேசியிருக்கலாம். இவை செல்டிக் மொழியின் வேறு பிரிவைச் சேர்ந்த பிரைதோனிக் என்று அழைக்கப்படுகின்றன.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் ஆர்க்கியாலஜியின் பேராசிரியர் சர் பேரி கன்லிப் பிபிசியிடம் கூறுகையில், “வெண்கல காலத்தின் நடுப்பகுதியில் ஏற்பட்ட புலம்பெயர்வு, மொழியில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால் அது பிரைதோனிக்கை அறிமுகப்படுத்த அல்லது வலுப்படுத்துவதற்கான ஒரு காரணியாக பார்க்க வேண்டும் என்பதே எளிமையான அனுமானம்,”

“அப்படியானால், கோய்டெலிக் பீக்கர்களுடன் அல்லது அதற்கு முன்பே வந்திருக்க வேண்டும்.”

புதிய ஆய்வின் கண்டுபிடிப்பு, இரும்புக் காலத்தில், பசும்பாலை ஜீரணிக்க ஒரு மரபணு மாறுபாட்டில் விரைவான அதிகரிப்பு இருந்தது, இது பொதுவாக லாக்டோஸ் சகிப்புத்தன்மை என்று அழைக்கப்படுகிறது.

“இது, 2,500 ஆண்டுகளுக்கு முன்பு, இரும்புக்காலத்தின் நடுப்பகுதி வரை, பிரிட்டனில் அரிதாகவே இருந்தது. பரிணாம வளர்ச்சியில் இது நம்பமுடியாத அளவுக்கு சமீபத்தியது. அந்தக் காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட எல்லோருக்கும் அது ஒன்றுமில்லாமல் போய்விட, பசும்பாலை ஜீரணிக்கும் உங்கள் திறன் வாழ்வாகவோ அல்லது மரணமாகவோ இருந்திருக்க வேண்டும்,” என டோம் பூத் தெரிவித்தார்.

1969-ல் மஸ்ட் ஆர்மில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வெண்கல காலத்திற்கு இடைப்பட்ட மற்றும் பிந்தைய காலத்தைச் சேர்ந்த கத்தி போன்ற ஆயுதம்

பட மூலாதாரம், PA

“இது வடக்கு ஐரோப்பாவில் மற்ற இடங்களில் பொதுவான ஒன்றாக மாறுவதற்கு, 1,000 ஆண்டுகளுக்கு முன்பே பிரிட்டனில் பொதுவானதாகிவிட்டது என்பதுதான் வேடிக்கையானது.”

மேலும், “பஞ்சம் அல்லது சுத்தமான நீர் ஆதாரங்களைப் பெறுவதில் சிரமம் போன்ற பேரழிவுக் காலகட்டத்தை பிரிட்டன் கடந்து சென்றது முக்கிய சாத்தியக்கூறுகளில் ஒன்றாகும். பசும்பால் உங்களுக்கு ஒரே நேரத்தில் சுத்தமான நீரேற்றம் மற்றும் உணவை வழங்குவதாகும். உங்களுக்கு தேவையானது மாடுகள் அல்லது செம்மறி ஆடுகள். அவை இருந்தால் ஒரு பேரழிவை நீங்கள் சமாளிக்க முடியும்.” என்றார்.

பிரிட்டனுக்கு அதிகளவில் மக்கள் புலம்பெயர்ந்தது, கண்டத்தில் இதேபோன்ற எழுச்சியின் பின்னணியில் நடந்தது, இது ஓரளவுக்கு ஐரோப்பியர்களின் மரபணு அமைப்பை ஒரே மாதிரியாக மாற்றியது.

“இந்த காலகட்டத்தில் மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பா முழுவதும் வம்சாவளியின் ஒருங்கிணைப்பு உள்ளது” என்று பேராசிரியர் ரீச் கூறினார்.

“பொதுவாக, விதிவிலக்குகள் இருந்தபோதிலும், வடக்கு மக்கள் தெற்கு மக்களுடன் மரபணு ரீதியாக மிகவும் ஒத்ததாக மாறுகிறார்கள். மேலும் தெற்கு மக்கள்தொகை ஓரளவு மரபணு ரீதியாக வடக்கு மக்கள்தொகைக்கு ஒத்ததாக மாறுகிறது.”

ஸ்காட்லாந்து மற்றும் சார்டினியா தீவு, இந்த வடக்கு-தெற்கு பரிமாற்றத்தால் பாதிக்கப்படவில்லை என்பது விதிவிலக்காக உள்ளது என அவர் கூறினார்.

மருத்துவர் காசிடி, பிரிட்டன் மற்றும் அயர்லாந்தின் வரலாற்றுக்கு முந்தைய காலம் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்துள்ளது என்றும், ஒன்றையொன்று இல்லாமல் மற்றொன்றைப் புரிந்துகொள்வது கடினம் என்றும் கூறினார். இந்த ஆய்வின் மூலம் எழுப்பப்பட்ட வெளிப்படையான கேள்விகளில் ஒன்று, மத்திய-இறுதி வெண்கல யுகத்தின் போது அல்லது அதற்குப் பிறகு அயர்லாந்தில் இதேபோன்ற உள்நோக்கி இடம்பெயர்வுகள் ஏற்பட்டதா என்பதுதான்.

“ஆரம்பகால வெண்கல யுகத்தின் போது அயர்லாந்து மற்றும் பிரிட்டன் இடையே வம்சாவளியில் உள்ள வேறுபாடுகளை வகைப்படுத்துவது, அடுத்தடுத்த காலகட்டங்களில் இடம்பெயர்வின் அளவையும் திசையையும் நன்கு புரிந்துகொள்ள அனுமதிக்கும்.”

“அயர்லாந்து ஸ்காட்லாந்திற்கு ஒத்த வடிவத்தைக் காட்டினால், ஆரம்பகால வெண்கலக் காலத்தைத் தொடர்ந்து கணிசமாக உள்நோக்கி இடம்பெயர்ந்ததற்கான சிறிய ஆதாரங்களை நாம் கண்டால், அந்தத் தீவில் செல்டிக் மொழி எப்படி, எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது என்று நாம் கேட்க வேண்டும்.” எனவும் அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »