Press "Enter" to skip to content

காலநிலை மாற்றம்: விக்கிப்பீடியாவில் பொய் செல்வோருடன் போராடும் தனிப்படை

  • மார்கோ சில்வா
  • காலநிலை மாற்றம் தொடர்பான தவறான தகவலைக் கண்டறியும் நிபுணர்

பட மூலாதாரம், DAVID TETTA

விக்கிப்பீடியா முழுக்கவே நீண்டகாலமாக, காலநிலை மாற்ற மறுப்பாளர்களுடைய கருத்துளால் நிரம்பியிருந்தது. ஆனால், இப்போது உலகெங்கிலும் இருந்து பங்கெடுத்துள்ள தன்னார்வலர்களைக் கொண்ட குழு, காலநிலை மாற்றத்தை மறுப்பவர்களைத் தடுக்க தீவிரமாக முயன்று வருகிறது.

அண்டை வீடுகளைச் சேர்ந்தவர்கள், ஒருவர் மற்றவரின் வீடுகளுக்குள் சென்று வரும் வகையில் அமைந்திருக்கும் நெருக்கமான சமூக அமைப்பில் வடக்கு கலிஃபோர்னியாவில் வாழ்ந்துவரும் டேவிட் டெட்டா, நேர்காணலின்போது தன் வீட்டிற்குள் வந்தவர்களை வெளியே அனுப்பிக்கொண்டே பேசினார்.

டேவிட் அப்படியான சூழலில் தன்னுடைய அண்டை வீட்டாரோடு அரட்டையடித்துக் கொண்டிருந்தபோதுதான், விக்கிப்பீடியாவை திருத்த முன்வர வேண்டுமென முதலில் நினைத்தார். 2019-ம் ஆண்டு, கலிஃபோர்னியா மாகாணம் முழுவதும் காட்டுத்தீ பரவிய நேரத்தில், காலநிலை மாற்றம் ஒரு பேசுபொருளாக அடிக்கடி வந்துகொண்டிருந்தது.

“பல உரையாடல்கள் சுற்றுச்சுழலைப் பற்றிய தங்கள் கோபம் மற்றும் அச்சத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பரிணமித்தது போல் தோன்றியது. மக்கள் என்ன வகையான தகவல்களைப் பெறுகிறார்கள் என்று நான் யோசித்தேன்,” என்று அவர் கூறினார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பில் இதுகுறித்த ஆய்வுப் பணியில் டேவிட் ஈடுபட்டிருந்தார்.

அவர் காலநிலை மாற்றத் தகவலுக்கான மிகத் தெளிவான தொடக்கப் புள்ளியாக விக்கிப்பீடியாவை பார்த்தார். மேலும், அவருடைய வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், அவர், “அதில் மேம்படுத்தவேண்டிய சில பகுதிகளை,” கண்டறிந்தார்.

திருத்தங்களை முன்மொழிவதன் மூலமாகவும் மற்ற தன்னார்வலர்களோடு விவாதிப்பதன் மூலமாகவும் அதற்கான முயற்சியைச் சிறியதாகத் தொடங்கினார். ஆனால், அவரே விக்கிபீடியா எடிட்டிங்கில் நூற்றுக்கணக்கான மணிநேரங்களைச் செலுத்திக் கொண்டிருப்பதை உணர்ந்தார்.

“ஒரு வாக்கியத்தைத் திருத்துவதற்கு, நீங்கள் சுமார் 100 பக்க அறிவியல் தகவல்களைப் படிக்கவேண்டும்,” என்று அதுகுறித்துக் கூறுகிறார்.

ஆங்கில விக்கிப்பீடியாவில் மட்டும் அனைத்து பக்கங்கங்களுக்கும், ஒரு மாதத்தில் ஒன்பது பில்லியனுக்கும் அதிகமான வருகைகளை பதிவு செய்கின்றன. மேலும் அந்த எண்ணிக்கையின் அளவை டேவிட் குறைக்கவில்லை, “அந்த அளவை நீங்கள் சரியாகப் பெறுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துவதில், இது ஒரு குறிப்பிட்ட பொறுப்பை அளிக்கிறது,” என்கிறார்.

இணைய வசதி உள்ள எவரும் அதைத் திருத்த முடியும் என்பதே விக்கிப்பீடியாவில் உள்ள ஓர் அம்சம். ஆனால், அதே அம்சம் அதைத் தவறாகக் கையாளவும் முடிகிறது. இந்த வசதி, காலநிலை நெருக்கடியை மறுப்பவர்களுக்கும் தெரியும்.

அவர்கள் தங்களுடைய கருத்துகளை உலகம் முழுக்கக் கொண்டுசெல்ல, எடிட்டிங் போரை நடத்தி வருகிறார்கள்.

ஒரு சந்தர்ப்பத்தின்போது, உலகெங்கிலும் உள்ள காலநிலை விஞ்ஞானிகள் ஒரு ரகசிய கம்யூனிஸ்ட் அமைப்பின் பிடியில் இருப்பதாகப் பரிந்துரைக்கும் தவறானதொரு வாக்கியத்தை ஒருவர் சேர்த்தார்.

மற்றொரு பயனாளர், “குற்றம் சாட்டப்பட்டது,” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, அடிப்படை காலநிலை அறிவியல் நீங்கள் நினைப்பதைவிட மிகக் குறைவாகவே நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தவறாகப் பரிந்துரைக்கும் வாக்கியத்தை எழுதினார்.

இவற்றோடு, ஒரு முறை காலநிலை மாற்றம் குறித்த கட்டுரை முழுதுவுமே மிகப்படுத்துதல்பர்லிங்காக மாற்றப்பட்டது. அதில் ஏதேனும் ஒன்றை க்ளிக் செய்தாலும்கூட, பயனர்கள் உடனடியாக வதந்திகளைப் பற்றிய கட்டுரைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

இந்த மாதிரியான நடவடிக்கைகள் நீண்ட காலத்திற்கு நீடிக்காது.

“இவை சில நிமிடங்கள், சில மணிநேரம் இருக்கும். ஆனால் வழக்கமாக, இவற்றைச் சரிபார்க்கும் ஆசிரியர்களில் ஒருவர் கண்டுபிடித்துவிடுவார்,” என்கிறார் டேவிட்.

இதுபோன்ற திருத்தங்களை மேற்கொள்ளும் சிறிய ஆனால் மிகவும் அர்ப்பணிப்புள்ள தன்னார்வலர்கள் குழுவில் ஒருவராக இருக்கிறார் டேவிட். அவர்கள் ஆங்கில விக்கிபீடியாவில் காலநிலை மாற்றம் குறித்த கட்டுரைகளை சரிசெய்து பாதுகாப்பதைத் தங்கள் பணியாகக் கொண்டுள்ளார்கள். மேலும், இதற்காகச் சண்டையிட அஞ்ச மாட்டார்கள்.

“காலநிலை நெருக்கடியை மறுப்பவர்களுக்கு, நான் விக்கிப்பீடியாவில் அவர்களுடைய தனிப்பட்ட பக்கத்தில், ‘இது காழ்ப்புணர்ச்சி, இது விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்,’ என்று ஒரு குறிப்பை அனுப்புவேன். இத்தகைய சூழ்நிலைகளின்போது, சில நேரங்களில் அவர்கள் விக்கிபீடியாவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்,” என்று டேவிட் கூறுகிறார்.

குப்பை அறிவியல்

2001-ம் ஆண்டு தொடங்கப்பட்ட விக்கிப்பீடியா, உலகின் மிகவும் பிரபலமான இணையதளங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. மேலும், 300-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகிறது.

ஆங்கில விக்கிப்பீடியா மிகப்பெரிய பதிப்பாக உள்ளது. இந்தக் கட்டுரைக்காக நேர்காணல் செய்யப்பட்ட விக்கிபீடியா ஆசிரியர்களின் கூற்றுப்படி, அதில் காலநிலை மாற்றம் குறித்த மிகவும் நம்பகமான பதிவுகளை நீங்கள் காணலாம்.

“பெரியளவிலான எடிட்டர்கள் இருப்பது எங்கள் அதிர்ஷ்டம்,” என்கிறார் டச்சு தன்னார்வலர் ஃபெம்கே நிஜ்ஸே.

விக்கிபீடியா

பட மூலாதாரம், FEMKE NIJSSE

காலநிலை மாற்றத்தில் நிபுணத்துவம் பெற்ற விக்கிப்பீடியா ஆசிரியர்களின் அந்தச் சிறிய சமூகத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க குரல்களில் ஒருவராக ஃபெம்கே கருதப்படுகிறார்.

காலநிலை மாற்றம் குறித்த முக்கிய விக்கிப்பீடியா கட்டுரையை நீங்கள் எப்போதாவது பார்வையிட்டிருந்தால், ஃபெம்கேவின் சில வார்த்தைகளை நீங்கள் படித்திருக்க வாய்ப்புள்ளது. அதற்கு இதுவரை அதிகமாகப் பங்களித்த பயனர் இவர்தான்.

“விக்கிப்பீடியாவில் எனக்குள்ள பணியின் மூலமாக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்,” என்று அவர் கூறினார்.

ஃபெம்கே, எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக உள்ளார். அவர் பசுமை ஆற்றலுக்கு மாறுவது குறித்து ஆய்வு செய்கிறார். எனவே புவி வெப்பமடைதல் குறித்து அவர் குறிப்பிடத்தக்க காலமாகவே சிந்தித்து வருகிறார்.

அவர் ஏழு ஆண்டுகளாக விக்கிப்பீடியா கட்டுரைகளைத் திருத்துகிறார். இந்தக் காலகட்டத்தின்போது, அவர் குப்பை அறிவியல் என்பது எப்படியிருக்கும் என்பதைத் தெரிந்துகொண்டார்.

தவறான அறிவியல் கூற்றுகளை நீக்குவதில், விக்கிப்பீடியாவின் விதிகளைக் கடைபிடிப்பதில் கைதேர்ந்தவராக இருக்கிறார்.

அக்டோபர் மாதத்தில், ஒரு பயனர் காலநிலை மாற்றம் குறித்த கட்டுரையில் ஒரு வாக்கியத்தைச் சேர்க்க முயன்றார். புதைபடிம எரிபொருட்களைப் பயன்படுத்துவதை உலகம் நிறுத்துவது புவி வெப்பமடைதலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று அவர் தவறாகப் பரிந்துரைத்தார். அந்த வாக்கியத்தை ஃபெம்கே நிராகரித்தார். ஆனால், அத்தகைய பரிந்துரை நம்பகமான ஆதாரங்களால் ஆதரிக்கப்பட வேண்டும் என்பதை விளக்கிய பிறகே, அதை நிராகரித்தார்.

விக்கிபீடியாவில் காலநிலை மாற்ற மறுப்பைத் தடுக்கவேண்டும் என்ற கொள்கை இல்லை. ஆனால், நீங்கள் முன்வைக்கும் கூற்றுக்குத் தரமான ஆதாரங்களை மேற்கோள் காட்டவேண்டும் என்று வலியுறுத்தும் கொள்கைகள் உள்ளன. இது அறிவியலற்ற உள்ளடக்கத்தைக் களையும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது.

“அறிவியலுக்கு எதிரான ஒரு கண்ணோட்டத்தை நீங்கள் ஊக்குவிக்க விரும்பினால், அதற்கு விக்கிப்பீடியா சங்கடத்திற்குரிய இடமாக இருக்கும்,” என்று தொழில்நுட்ப எழுத்தாளராக இருக்கும் தன்னார்வலர் சு-லைன் பிராட்ஸ்கி கூறுகிறார். மேலும் அவர், “சமூக ஊடகங்களில் இது மிகவும் எளிது. அங்கு தான் நீங்கள் விரும்பியதைச் சொல்லலாம். அதற்கு, உண்மையில் பொறுப்பேற்க வேண்டியதில்லை.”

கனடாவில் உள்ள தனது வீட்டிலிருந்து, சு-லைன் 15 ஆண்டுகளாக விக்கிபீடியா பக்கங்களைத் திருத்துகிறார்.

மருத்துவத் தகவல்களைப் பகிர்வதில் தொடங்கியவர், கடல் நீர்நாய்கள், திமிங்கலங்களைப் பற்றி எழுதினார். அவர் சமீபத்தில்தான் காலநிலை பக்கங்களில் கவனம் செலுத்த முடிவு செய்தார்.

சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர்களின் மீது நான் எப்போதும் ஆர்வமாக இருந்தேன். அதோடு, காலநிலை மாற்றத்தில் பணிபுரியும் யோசனையில் நான் கொஞ்சம் மிரண்டேன். நான் காலநிலை மாற்றத்தை மிகவும் தொழில்நுட்பமானதாக, சர்ச்சைக்குரிய தலைப்பாக நினைத்தேன்,” என்கிறார் சு-லைன்.

ஆனால், ஒரு நாள் நிலைத்தன்மை வாய்ந்த ஆற்றல் குறித்த ஒரு கட்டுரை தவறுகள் நிறைந்து இருந்தது அவர் கண்ணில் பட்டது. “தங்களைத் தாங்களே விளம்பரப்படுத்திக் கொள்ளும் நிறுவனங்கள், தங்கள் திட்டங்களை ஊக்குவிக்கக்கூடிய ஆராய்ச்சிகளை மேற்கொள்பவர்கள் என்று பலவற்றின் சுய விளம்பரங்கள் நிறையவே அதில் இருந்தது,” என அதைப் பற்றிக் கூறுகிறார். சு-லைன் அதையெல்லாம் அகற்றத் தொடங்கினார்.

விக்கிபீடியா

பட மூலாதாரம், SU-LAINE BRODSKY

“தவறுகளைச் சரிசெய்யும் நபர்களே விக்கிபீடியர்கள்,” என்று கூறும் அவர், “தவறான ஒன்றை நீங்கள் கவனிக்கிறீர்கள். ‘அந்தத் தவறுகளை என்னால் கொஞ்சம் குறைக்கமுடியும்,’ என்று சொல்ல உங்களுக்குப் போதுமான நம்பிக்கை இருக்கவேண்டும்,” என்கிறார்.

சிலநேரங்களில் பிழைகள் வெளிப்படையாக இருக்கும். ஆனால், சில பயனர்கள் நுணுக்கமான வழிகளில், குறிப்பாக பார்வையாளர்கள் குறைவாக இருக்கும் கட்டுரைகளில் உண்மைகளைத் திரித்துக் கூறுவதை உணர்வதற்கு சு-லைனுக்கு அதிக நேரம் எடுக்கவில்லை.

“காலநிலை அறிவியல் மறுப்பாளரைப் பற்றிய ஒரு கட்டுரையில், ‘காலநிலை கொள்கை ஆய்வாளர்’ என்று சொல்வதன் மூலம் மென்மையாக்க முயல்வார்கள். அது அந்த நபரை மிகவும் நம்பகத்தன்மை உடையவராக்கும் ஒரு வழியாகும்,” என்று அவர் கூறுகிறார்.

விக்கிபீடியா சீரற்றது

விக்கிப்பீடியாவை இயக்கும் விக்கிஊடகம் அறக்கட்டளையைச் சேர்ந்த அலெக்ஸ் ஸ்டின்சன் கருத்துப்படி, காலநிலை குறித்த தவறான தகவல்கள் புறக்கணிப்பு முதல் காலாவதியான அறிவியல், சமநிலை இல்லாமை, தவறான தகவல் வரை அனைத்துமே இதில் அடக்கம்.

பிரச்னையைச் சமாளிப்பதற்குத் தேவையானதை அமைப்பு கொண்டுள்ளதாக அவர் நம்புகிறார்.

“காழ்ப்புணர்ச்சி மற்றும் தவறான தகவல்கள் பற்றிய அனைத்து ஆய்வுகளும், அதிகமான மக்கள் படிக்கும் விக்கிப்பீடியாவில் தவறான தகவல்களிடம் இருந்து 97% வரை தற்காப்பு செய்யப்படுவதாகக் கூறுகின்றன,” என்று அவர் கூறுகிறார்.

அதோடு தன்னார்வ ஆசிரியர்களுடன், இந்த அமைப்பு இணைந்து காழ்ப்புணர்ச்சியை எதிர்த்துப் போராட கணினி பாட்களையும் பயன்படுத்துகிறது. காலநிலை பற்றிய சில உயர்தரக் கட்டுரைகள், கூடுதல் பாதுகாப்பு அடுக்குகளில் இருந்தும் பயனடைகின்றன. அவற்றில் சிலவற்றைக் குறிப்பிட்ட அளவு திருத்தும் அனுபவமுள்ள பயனர்களால் மட்டுமே திருத்தமுடியும்.

ஆனால், சரிபார்ப்பதற்குக் கடினமாக இருக்கும் பகுதிகளும் இணையதளத்தில் எப்போதும் இருக்கும்.

“ஆங்கில விக்கிபீடியாவில் 63,00,000 கட்டுரைகள் உள்ளன,” என்று கூறும் அலெக்ஸ், “அவை அனைத்தும் சமூகத்தின் ஒரே வகையான உலகளாவிய ஆய்வுக்கு உட்பட்டவை அல்ல,” என்கிறார்.

சமீபத்திய பிபிசி புலனாய்வின்படி, மோசமன தகவல்கள், வெளிப்படையான சதிக் கோட்பாடுகள்கூட, காலநிலை பக்கங்களில் ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளில் மிகவும் பொதுவானவை.

இப்போதைக்கு விக்கிப்பீடியா என்னும் கோட்டையைக் காத்து நிற்பது முழுக்க முழுக்க தன்னார்வலர்கள் கையில்தான் உள்ளது.

“விக்கிப்பீடியா சீரற்றது. அதை இன்னும் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையுடன்தான் அணுக வேண்டும்,” என்கிறார் சு-லைன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »