Press "Enter" to skip to content

ஜிஹாதிகளுக்கு ஆதரவாக மதப் பிரசங்கம் செய்ததாக பிரான்ஸில் மூடப்பட்ட மசூதி

பட மூலாதாரம், AFP

பிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள போவே நகரத்தில் ஒரு மசூதியின் இமாம் (மசூதியின் வழிபாட்டை தலைமை தாங்கி நடத்துபவர்) செய்த மதப் பிரசங்கம் ஜிஹாதை ஆதரித்ததாகக் கூறப்படுகிறது. எனவே அம்மசூதியை பிரான்ஸ் அதிகாரிகள் மூடியுள்ளனர்.

இம்மசூதி அடுத்த ஆறு மாதங்களுக்கு மூடப்பட்டிருக்கும் என உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மசூதியில் நடந்த மதப் பிரசங்கத்தில் ஜிஹாதிகள் போராளிகள் என்றும், நாயகர்கள் என்று கூறியதாகவும், வெறுப்பையும் வன்முறையையும் தூண்டியதாகவும் போவே நகரின் ஒய்ஸ் பகுதியைச் சேர்ந்த ப்ரிஃபெக்ட் கூறினார்.

இஸ்லாமிய வழிபாட்டுத் தளங்களில் கடும்போக்குவாதத்தோடு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழும் இடங்களை பிரான்ஸ் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

போவே நகரத்தில் உள்ள பெரிய மசூதியை மூடுவதற்கான செயல்பாட்டைத் தொடங்க உள்ளதாக இரு வாரங்களுக்கு முன்புதான் பிரான்ஸின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மனின் கூறினார். அம்மசூதியில் உள்ள இமாம் கிறிஸ்தவர்களையும், ஒருபாலுறவுக்காரர்களையும், யூதர்களை தன் பிரசங்கத்தில் தவறாகப் பேசுவதாகவும் கூறினார்.

இந்த பிரச்னை குறித்து முறையான விளக்கம் கொடுக்க அதிகாரிகள் 10 நாட்கள் கால அவகாசம் கொடுத்துள்ளனர்.

அம்மசூதியின் இமாம் சமீபத்தில்தான் இஸ்லாத்துக்கு மதம் மாறியதாக ஏ.எ.பி செய்தி முகமை ‘கூரியர் பிகார்ட்’ என்கிற செய்தித் தாளை மேற்கோள் காட்டி கூறியுள்ளது.

தமது உரையால் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள இமாம் அந்த மசூதிக்கு தன்னார்வலராக வந்து மதப் பிரசங்கம் செய்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Pict Rider / getty images

இமாம் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என, மசூதி தரப்பு வழக்குரைஞர் கூறினார். மேலும் ‘தன்னார்வாளராக வந்து மசூதியில் மதப் பிரசங்கம் செய்யும்’ அந்த இமாம் அனைத்து பணிகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுவிட்டார் என்றும் கூறினார்.

அவ்வப்போது வந்து பேசுபவராகக் கூறப்படும் நபர்தான், அம்மசூதியில் அன்றாடப் பணிகளைச் செய்யும் இமாமாகச் செயல்பட்டு வருகிறார். தீவிரமாக இஸ்லாத்தை கடைபிடிப்பது, நாட்டின் குடியரசுச் சட்டங்களை விட உயர்ந்தது என வாதிட்டுள்ளார் என பிரான்சின் உள்துறை அமைச்சர் கூறினார்.

கடந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பல மசூதிகளில், கடும்போக்குவாதத்தோடு தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டால் சில மசூதிகள் மூடப்படும் என்றும் கூறினார் ஜெரால்ட் டார்மனின்.

ஆசிரியர் சாமுவேல் பேட்டியின் தலை துண்டிக்கப்பட்டது மற்றும் அக்டோபர் 2020 காலகட்டத்தில் நைஸ் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் மூன்று பேர் கொடூரமாக குத்திக் கொல்லப்பட்டதற்கு இஸ்லாமியவாத கடும்போக்குவாதம் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதன் விளைவாக மேற்கூறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

பிரான்ஸ் நாட்டில் உள்ள 2,620க்கும் மேற்பட்ட மசூதி மற்றும் வழிபாட்டு தளங்களில், கடும்போக்குவாதம் தொடர்பாக சமீபத்திய மாதங்களில் கிட்டத்தட்ட 100 மசூதிகள் மற்றும் பிரார்த்தனை கூடங்களில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »