Press "Enter" to skip to content

அடுத்த 100 ஆண்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் செவ்வாய் கிரகத்தில் சாத்தியமாகுமா?

  • க.சுபகுணம்
  • பிபிசி தமிழ்

பட மூலாதாரம், Getty Images

பூமியின் கடந்த நூறு ஆண்டுக் காலத்தையும் அடுத்து வரவுள்ள நூறு ஆண்டுக் காலத்தையும் ஒரு தொலைக்காட்சியில் படமாகப் பார்ப்பது போல் கற்பனை செய்துகொள்ளுங்கள்.

2122-ம் ஆண்டின்போது செவ்வாய் கிரகத்தில் ஒரு நகரத்தையே மனித இனம் நிர்மானிக்கத் திட்டமிட்டுள்ளது. அத்தகைய பரந்த, பிரம்மிக்கத்தக்க தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திட்ட கடந்த நூறாண்டுக்கால கண்டுபிடிப்புகளும் அடுத்த நூறு ஆண்டுகளில் வரப்போகும் தொழில்நுட்பங்களும் என்னென்ன என்று தெரிந்துகொள்ள வேண்டுமா!

முதலில் பின்னோக்கிச் சென்று 1922-ம் ஆண்டில் இருந்தமைக்கும் 2022-ம் ஆண்டுக்குள் காலடி எடுத்து வைக்கப்போகும் இப்போதுள்ள நிலைமைக்குமான வேறுபாடுகளைப் பார்ப்போம்.

பிறகு இப்படியாக, கடந்த நூறு ஆண்டுகளில் மனித வாழ்வியலில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்த தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் போல, அடுத்த நூறு ஆண்டுகளில் நம் வாழ்வியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தப் போகும் தொழில்நுட்பத் திட்டங்கள் என்னென்ன நம் கைவசம் இருக்கின்றன என்றும் பார்ப்போம்.

1921 – 2021: பேண்ட் எய்டு முதல் 3D பிரின்டிங் வரை

1921-ம் ஆண்டு, எர்லி டிக்சன் என்பவர் முதன்முதலாக பேண்ட்-எய்டை (Band-aid) கண்டுபிடித்தார்.

அதைத் தொடர்ந்து 1924-ம் ஆண்டில் ஹன்ஸ் பெர்ஜெர் தன்னுடைய மகனின் மூளையிலுள்ள மின்சார நடவடிக்கைகளை அளந்ததன் மூலம் இ.இ.ஜி (E.E.G) என்றழைக்கப்படும் எலெக்ட்ரோ என்செஃபாலோகிராம் என்ற கருவியைக் கண்டறிந்தார்.

1928-ம் ஆண்டு இரும்பு நுரையீரல் (Iron Lung) மருத்துவத் துறையில் பயன்பாட்டிற்கு வந்தது. போலியோ தாக்கிய ஒருவரைக் காப்பாற்றும் முயற்சியில் கண்டுபிடிக்கப்பட்ட இது அதன்பிறகு பல உயிர்களைக் காப்பாற்றியது.

1943-ம் ஆண்டு, மருத்துவர் வில்லியம் ஜோஹன் கோல்ஃப் (Dr. Willem Johan Kolff), நாஜிக்கள் பயன்படுத்திய பழைய குளிர்பான புட்டிகள், வாஷிங் மிஷின் பாகங்கள் போன்றவற்றை வைத்தே, டையாலிசிஸ் முறையைச் செயல்படுத்தும் டையாலைசர் (Dialyzer)என்ற கருவியைக் கண்டுபிடித்தார்.

1971-ம் ஆண்டு சி.டி ஸ்கேன் கண்டுபிடிக்கப்பட்டது. 1982-ம் ஆண்டு, வெற்றிகரமாக முதல் செயற்கை இதயம் முதல் நோயாளிக்குப் பொருத்தப்பட்டது. ‘ஜார்விக் 7’ என்று பெயரிடப்பட்ட செயற்கை இதயம் தான், இன்று மாற்று இதயம் கிடைக்கும் வரை நோயாளிகளுக்குப் பொருத்தப்படும் செயற்கை இதயத்திற்கான தொடக்கப்புள்ளி.

1987-ம் ஆண்டில் ரோபோடிக்ஸ் உதவியுடன் லேப்ரோஸ்கோபிக் எனப்படும் சிகிச்சை முறைகள் மருத்துவத் துறையில் கால் பதித்தன. அதேநேரம், லேசர் உதவியுடன் கண் பார்வை சிகிச்சை மேற்கொள்ளும் அளவுக்கு மருத்துவத் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்தது.

இப்படியாகக் கடந்து வந்த பாதையில், 2013-ம் ஆண்டில் உடல் உறுப்புகளை 3D பிரின்டிங் செய்யும் அளவுக்குத் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்தன. 2021-ம் ஆண்டில், செயற்கை நுண்ணறிவு உதவியோடு, வேகமாக நோயைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல் மட்டுமின்றி, அறுவை சிகிச்சையின்போது செயற்கை நுண்ணறிவு மருத்துவர்களுக்கு உதவும் அளவுக்கு மருத்துவத் துறை முன்னேற்றத்தைச் சந்தித்துள்ளது.

பேண்ட்-எய்டு விளம்பரம்

பட மூலாதாரம், Johnson & Johnson Archives

உலகை மாற்றிய, மாற்றுகின்ற தொழில்நுட்பம்

1876-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசி எப்படி மிகப்பெரிய புரட்சியை உண்டாக்கியதோ, அதேபோல் கடந்த நூறு ஆண்டுகளில் நடந்த சில முக்கியக் கண்டுபிடிப்புகள் புரட்சிகர முன்னேற்றங்கள், பல நூற்றாண்டுகளில் கடக்க வேண்டிய முன்னேற்றப் பாதையை ஒரே நூற்றாண்டில் கடக்கும் அளவுக்குச் சாத்தியப்படுத்தியது.

அத்தகைய புரட்சிகர கண்டுபிடிப்புகளில் ஒன்று, தொலைக்காட்சி. 1927-ம் ஆண்டில் முதல் தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, இன்றுவரையிலான கடந்த 95 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள முன்னேற்றங்கள் பிரமிக்கத்தக்கவை.

அதற்கு அடுத்ததாக, 1970-களில் தொடங்கிய தனிமனித கணினிப் பயன்பாடு மற்றும் ஜி.பி.எஸ் எனப்படும் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம். இவையிரண்டும் தான், இன்று ஒருவருடைய கைகளில் உலகையே கொடுக்கும் வண்ணம் பல தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு அடித்தளமாக விளங்கின.

படிப்படியாக, கருப்பு வெள்ளையில் இருந்த தொலைக்காட்சி வண்ணங்களுக்கு மாறியது. தொலைபேசி மொபைலாகவும் பின்னர் ஸ்மார்ட்ஃபோனாகவும் மாறி தற்போது ஸ்மார்ட் வாட்சாகவும் மாறிவிட்டது. கணினி பயன்படுத்த குளிர்சாதனம் பொருத்திய அறை தேவை என்பதிலிருந்து, போகிற இடங்களுக்கெல்லாம் கொண்டுசெல்லக்கூடிய கையடக்கக் கணினியாக திறன்பேசிகள் வந்துவிட்டன.

பயணங்கள் இன்றுபோல முன்னர் இருக்கவில்லை. சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னர், சென்னையிலிருந்து லண்டன் வரை செல்வதற்குக் குறைந்தபட்சம் 10 நாட்களாவது ஆகும். ஆனால், இன்று 10 மணிநேரங்களில் சென்றுவிடமுடியும்.

ரயில், விமானம், சொகுசு கார், இருசக்கர வாகனங்கள் என இன்று பயணங்கள் மிகவும் எளிதாகிவிட்டது.

அவை உட்பட இணையம், காணொளி கேம்கள், வண்ணத் தொலைக்காட்சி, கைபேசி போன்றவற்றை, கடந்த நூறாண்டுகளின் மிக முக்கியமான தொழில்நுட்ப வளர்ச்சியாகக் குறிப்பிடலாம்.

தொழில்நுட்ப வளர்ச்சி ஏன் நடக்கிறது?

“எதிர்காலத்தில் வரப்போகும் தொழில்நுட்பங்களோ, இதுவரை புழக்கத்திற்கு வந்துள்ள தொழில்நுட்பங்களோ, எதுவாக இருப்பினும் அவை குறிப்பாக, எவ்வளவு வேகமாகத் தொடர்புகொள்ள முடிகிறது, என்பதை அடிப்படையாகக் கொண்டே இருக்கின்றன.

பழைய தொலைக்காட்சிப் பெட்டி

பட மூலாதாரம், Getty Images

“இணையத்தைப் பொறுத்தவரை, 2G இருக்கையில் எழுத்து வடிவில் பேசிக்கொண்டோம், 3G-ல் படங்களை அனுப்பினோம், 4G-ல் காணொளி வழியாகப் பேசிக்கொள்கிறோம். அடுத்ததாக 5G என்னும்போது, அதைவிட வேகமாகவும் தெளிவாகவும் தொடர்புகொள்ள முடியும். இதுதான் தகவல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கான அடிப்படை,” என்கிறார் இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஸ்ரீராம்.

மனிதர்களுக்கு நடுவிலான இடைவெளியை நிரப்ப, நம் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள தொழில்நுட்பங்கள் கண்டறியப்படுகின்றன. அவற்றுடைய தேவையின் அடிப்படைக் காரணம் இதுதான்.

மெயில் மூலமாக, மாதக் கணக்கில் நேரம் எடுத்து ஒரு தகவலைக் கொண்டுபோய் பூமியின் இன்னொரு மூலையில் சேர்ப்பதைவிட வேகமாகத் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள வேண்டிய தேவை நமக்கு எழுந்தது.

அத்தகைய ஒரு புரட்சியை உண்டாக்கிய இணையம், இன்று உலகளவில் மக்கள் ஒன்றுபடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இப்படியாகத் தொடர்ந்து எழுந்த தேவைகளே தொழில்நுட்பங்களை உருவாக்கத் தூண்டியது.

கடந்த நூறு ஆண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்களால், இன்று நம்முடைய பயணம், பாதுகாப்பு, உணவு, சுகாதாரம், ஆரோக்கியம், சமூக இணக்கம், உற்பத்தி என்று அனைத்திலுமே அவற்றின் தேவை அபரிமிதமாக வளர்ச்சியைக் கண்டுள்ளது.

1921-ம் ஆண்டில் பொய் சொல்வதைக் கண்டறியும் கருவியான லை டிடெக்டரையும் 1923-ம் ஆண்டில் முதல் தானியங்கி கைக்கடிகாரத்தையும் கண்டுபிடித்தபோது, அவர்கள் 2022-ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கப்போகும் நம்மிடையே, தொழில்நுட்ப வளர்ச்சி இவ்வளவு பெரிய புரட்சியை உண்டாக்கும் என்றோ, முகவெட்டை வைத்தே மின்னணு சாதனங்களை இயக்க முடியும், ஸ்மார்ட்வாட்ச் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களைச் சாத்தியப்படுத்த முடியும் என்றோ கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

ஆனால், அத்தகைய பல தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மிகப்பெரிய மாற்றத்தைக் கடந்த நூறாண்டுகளில் செய்துவிட்டன. இப்படியாக இன்றுள்ள தொழில்நுட்பங்களைப் போல் அடுத்த நூறாண்டுகள் கழித்து 2122-ம் ஆண்டில் அவற்றின் வளர்ச்சி எப்படியிருக்கும்? எதிர்காலத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான திட்டங்களாக மனித சமூகத்தின் கைவசம் என்னென்ன இருக்கின்றன?

எதிர்கால வளர்ச்சிக்கான தொழில்நுட்ப திட்டங்கள்

95 ஆண்டுகளுக்கு முன்பு காணொளி கால் என்பதை யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்னர் காணொளி கால் என்றால் அதற்கு மிகவும் மெனக்கெட வேண்டியிருந்தது. ஆனால், இன்று நினைத்த நொடியில் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், காணொளி கால் மூலம் ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசிக்கொள்ள முடியும்.

திறன்பேசி பயன்பாடு

பட மூலாதாரம், Getty Images

இதேபோல, ஹாலோகிராம் என்ற அதிநவீன தொழில்நுட்பம் இனி எதிர்காலமாக இருக்கலாம். அடுத்த பத்து ஆண்டுகளிலேயே அது சாத்தியப்படும் என்று எதிர்காலவியல் வல்லுநரான (Futurologist) ஜேம்ஸ் பெல்லினி கணித்துள்ளார். மேலும், எம்.ஐ.டி-யைச் சேர்ந்த ஆய்வாளரான லியாங் ஷியும் 2032-ம் ஆண்டுக்குள் ஹாலோகிராம் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று உறுதியாக நம்புகிறார்.

ஆனால், அத்தகைய தொழில்நுட்பம் உடனடியாகச் சாத்தியப்படாது என்று கூறும் இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஸ்ரீராம், “எளிமையாகச் சொல்லவேண்டுமெனில், சுவற்றில் அடிக்கும் புரொஜெக்‌ஷன் பிரதிபலிப்பதைப் போலவே, ஆனால் காற்றிலேயே பிரதிபலிக்கும் விதமாக உருவாக்குவதே ஹாலோகிராம்.

இந்தத் தொழில்நுட்பத்தை நடைமுறையில் சாத்தியப்படுத்தும் முயற்சிகள் நீண்ட காலமாக நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், காற்றில் ஒளியைப் பிரதிபலிக்கச் செய்வது மிகவும் கடினம். காற்றின் அடர்த்தி மிக அதிகமாக இருந்தால் அல்லது காற்றில் அதிகளவிலான தூசு, துகள்கள் இருந்தால் சாத்தியப்படலாம்.

ஹாலோகிராம் தொழில்நுட்பம் அவ்வளவு விரைவில் சாத்தியப்படாது. இருப்பினும், 2122-ம் ஆண்டின் போது இது நடைமுறையில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதோடு, இப்போது ஏதேனும் குழப்பமான மனநிலையோ, வருத்தமோ இருந்தால் கைபேசியை அணைத்துவிட்டு இருந்துவிடுவது போல் எதிர்காலத்தில் இருக்கமுடியாது. ஏனெனில், உங்களைச் சுற்றியிருக்கும் அனைத்துமே இணையத்தோடு தொடர்பில் இருக்கும்,” என்றும் கூறுகிறார்.

எதிர்காலவியல் வல்லுநரான இயன் பியர்சன், அடுத்த நூற்றாண்டில் ஒருவருக்கு ஒருவர் வாய் திறந்து பேசாமல், தம் மூளையிலிருந்து இன்னொருவர் மூளைக்கு நேரடியாகக் கருத்துப் பரிமாற்றம் செய்யும் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.

அவருடைய கூற்றின்படி, டெலிபதி என்று நாம் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களில் பார்த்திருப்போம். அந்தத் தொழில்நுட்பம் விரைவில் நிஜ உலகில் சாத்தியப்படக்கூடும்.

ஒருவருக்கு ஒருவர் தொடர்புகொள்ளும்போது வெளியாகும் வார்த்தைகள் ஒருவகையான மின்சார சிக்னல்களே. நம் உடலின் இயக்கம் அனைத்துமே மூளையின் அந்த சிக்னல்களை அடிப்படையாகக் கொண்டவைதான். அதை அடிப்படையாகக் கொண்டு கவனிக்கும்போது, டெலிபதி மூலமாகத் தொடர்புகொள்வதும் சாத்தியமாகும் என்று டெலிபதி குறித்து பிபிசியிடம் 2012-ம் ஆண்டு பேசியபோது எதிர்காலவியல் வல்லுநர் பேட்ரிக் டக்கர் கூறினார்.

அதைப் பற்றிப் பேசிய இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஸ்ரீராம், “மனிதர்களுக்கு இடையில் பேசாமலே தொடர்புகொள்ளும் டெலிபதி தொழில்நுட்பம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆனால், அதற்கும் முன்பாக மின்னணு சாதனங்களோடு மனிதர்களுக்குள்ள உறவுமுறையே மாறுபடும்.

உதாரணமாகச் சொல்லவேண்டுமெனில், முதலில் நாம் பட்டன்களைக் கொண்ட சாதனங்களைப் பயன்படுத்தினோம். பிறகு தொடுதிரை கொண்ட சாதனங்கள் வந்தன. அதைத் தொடர்ந்து கைரேகை, குரல், முகவெட்டு போன்றவற்றைக் கொண்டு இயங்கும் சாதனங்கள் வந்தன.

இவற்றைப் போலவே, நாம் ஒரு சாதனத்தைத் தொடாமலே, பேசாமலே இயக்க முடியும். ஒருவர் நினைப்பதை வைத்தே, இயங்கக்கூடிய வகையிலான தொழில்நுட்ப சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை எதிர்காலத்தில் இன்றைய தொடுதிரைகளைப் போல் பொதுப் பயன்பாட்டிற்கு வரலாம்.

மருத்துவத் துறையில் ஹாலோகிராம்

பட மூலாதாரம், Getty Images

சமீபத்தில் மூளையில் பொருத்தப்பட்ட சிப் உதவியோடு, தான் நினைத்ததை ட்வீட்டாகப் பதிவு செய்தார் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 62 வயதான ஒரு முதியவர். இந்தத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மிகவும் சாதாரணமாகப் பயன்படும் அளவுக்கு வளரலாம்,” என்று கூறியவர் டெலிபதி குறித்து மேலும் பேசினார்.

“நரம்புகளின் வழியே மூளை மெல்லிய மின்சாரத்தைப் பாய்ச்சுகிறது. அதற்கு ஏற்றாற்போல் கை வேலை செய்கிறது. அந்தக் குறிப்பிட்ட நாடியை மீட்டுருவாக்க முடிந்தால் மூளையின் உதவியின்றியே கையை இயக்கமுடியும்.

நியூராலிங்க் மூலமாக எந்த அளவில் என்னென்ன செயல்பாடுகள் உடலில் நடக்கின்றன என்பதைப் பதிவு செய்து, அதைப் பயன்படுத்தி ஒருவர் சிந்திக்கும்போது என்ன அளவில் மூளை உடலை இயக்குகிறது என்பதைக் கண்டறியும்போது டெலிபதி சாத்தியப்படும்.

கணினியில் எப்படி 0,1 என்ற பைனரி மொழிதான் அடிப்படையோ, அதேபோல மனித மூளையில் நியூரான் இணைப்புகளில் உண்டாகும் மின்சாரமே அடிப்படை. நாம் எந்த மொழியைப் பேசுபவராக இருந்தாலும், அனைவரின் அடிப்படை மொழி அந்த நியூரான் இணைப்பில் உண்டாகும் மின்சாரம் தான்.

மூளையில் சிப் பொருத்துவதன் மூலம், அந்த மொழியைப் புரிந்துகொள்ள முடிந்தால் டெலிபதி விரைவில் சாத்தியப்படும். அதுமட்டுமின்றி அதைப் பயன்படுத்தி, மேட்ரிக்ஸ் படத்தில் வருவதைப் போல, நாம் கற்றுக்கொள்ள நினைப்பவற்றை ஒரு கணினியில் தகவலை ஏற்றி வைப்பதைப் போல மூளையில் ஏற்றி வைக்கவும் முடியலாம்.

ஆனால், இதில் சிக்கல்களும் அதிகம். மூளையில் அறுவை சிகிச்சை செய்து, நியூராலிங்க் என்ற இணைப்பிற்காக சிப் பொருத்தப்படும். அது முழுமையாகப் பாதுகாப்பானது அல்ல. இன்றைய சூழலில் எதுவுமே 100% பாதுகாப்பானதாக இல்லையென்னும் போது, இதில் வரக்கூடிய பாதுகாப்பு பிரச்சனைகளையும் களைய வேண்டியிருக்கும்,” என்கிறார் இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஸ்ரீராம்.

2122- மரணமில்லா பெருவாழ்வு

1967-ம் ஆண்டு, ஜேம்ஸ் பெட்ஃபோர்ட் என்ற கலிஃபோர்னியாவை சேர்ந்த மனோவியல் பேராசிரியர், புற்றுநோயினால் இறப்பதற்கு முன்னர், இறப்பிலிருந்து மீண்டுவர முயன்றார். மரணத்திற்குப் பிறகு தன் உடலை -321 டிகிரி தட்பவெப்பநிலையில், திரவ நைட்ரஜனில் உறைய வைத்துக்கொண்ட முதல் நபர் பேரா.பெட்ஃபோர்ட் தான்.

பரிசோதனை கூடத்தில் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் ஆய்வில் ஈடுபடும் ஆராய்ச்சியாளர்

பட மூலாதாரம், Getty Images

மைக்கேல் ஷெர்மெர் எழுதிய ஹெவன்ஸ் ஆன் எர்த் (Heavens on Earth: The Scientific Search for the Afterlife, Immortality, and Utopia) என்ற நூலில் அவரைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பார். ஆனால், மரணமில்லா பெருவாழ்வை அடைய முயன்ற அறிவியலாளர்களில் அவரே கடைசி நபர் இல்லை.

அதேநேரம், அந்த மரணமில்லா பெருவாழ்வு 22-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாத்தியப்படவும் கூடும் என்று எதிர்காலவியல் வல்லுநர்கள் நம்புகின்றனர். பல சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களில் பார்த்திருப்பதைப் போலவே, மூளையிலுள்ள நம்முடைய நினைவுகளை எல்லாம் ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்குத் தகவல் பரிமாற்றம் செய்வதைப் போல் செய்து, மனித மூளையையும் எதிர்காலத்தில் கணினியில் பதிவேற்றலாம். அதன்மூலம், மனித இனம் மரணமில்லா பெருவாழ்வு வாழமுடியும் என்று கூறப்படுகிறது.

மரபணு ஆய்வு, உயிரி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, இந்த ஆய்வு நடந்து வருவகிறது. இந்த ஆய்வுகளின் விளைவாக அடுத்த நூற்றாண்டில், நம்மால் ஆயுட்காலம் முடிந்த பிறகும் கூட, கணினியில் வாழமுடியும் என்று கூறியுள்ளார் எதிர்காலவியல் வல்லுநர் பேட்ரிக் டக்கர்.

செவ்வாய் கிரகத்தில் புதிய நகரம்

1922-ம் ஆண்டுக்கு முன்புவரை இருந்த கார்களில் மேற்கூரை இருக்காது. 1922-ம் ஆண்டிலிருந்து தான் மேற்கூரை பொருத்திய கார்கள் பயன்பாட்டிற்கு வரத் தொடங்கின. அதிலிருந்து 100 ஆண்டுகள் கழித்து தற்போது 2022 தொடங்கவுள்ள இன்றைய சூழலில் மனிதர்கள் இயக்காத, தானியங்கி மின்சார கார்களே சந்தைக்கு வந்துவிட்டன.

மெகா சிட்டி பிரமிட்

பட மூலாதாரம், Getty Images

கூகுள், உபர், ஓலா போன்ற நிறுவனங்கள், தானியங்கி மின்சார கார்களைப் பரிசோதிக்கத் தொடங்கிவிட்டன. விரைவில், ஓட்டுநரே இல்லாத ஓலா, உபர் மின்சார டாக்சிகளை நாம் எதிர்பார்க்கலாம் என்று நிறுவனங்கள் கூறி வருகின்றன.

இந்நிலையில், அடுத்த நூறு ஆண்டுகளில் ஜப்பான் ஒரு புதிய நகரத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. 2122-ம் ஆண்டின்போது, ஜப்பானின் அந்தப் புதிய நகரத்தில் இன்றைய கார்கள் இருக்காது. மெகா சிட்டி பிரமிட் என்ற அந்த நவீன நகரக் கட்டமைப்பு, சுமார் 750,000 மக்கள் வாழக்கூடிய அளவுக்கு இருக்கப்போவதாக தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நகரத்தில் மாசுபாடு, புதைபடிம எரிபொருள் சார்ந்த வாகனங்கள் போன்றவற்றுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றும் அந்தத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இவைபோக, முடக்குவாதத்தைச் சரிசெய்யும் தண்டுவட உள்வைப்புகள் (Spinal cord Implants), தூங்கும்போதுகூட தகவல்களைச் சேகரிக்கக்கூடிய மூளையில் பொருத்தப்படும் சிப், மறை உலகத்தை முழுமையாக அனுபவிக்க உதவும் ப்ரோகிராம்கள், புதைபடிம எரிபொருளில் ஓடும் கடைசி தேர் சந்தையிலிருந்து வெளியேறுதல் போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்களும் ஏற்படும் என்று எதிர்காலவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

உச்சகட்டமாக, அபிபூ (ABIBOO Architecture Studio) என்ற நிறுவனம், 2054-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கென ஒரு புதிய நகரத்தை நிர்மானிக்கத் திட்டமிட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கென ஒரு புதிய நகரம்

பட மூலாதாரம், Getty Images

அவர்களுடைய திட்டத்தின்படி, 2054-ம் ஆண்டின்போது செவ்வாய் கிரகத்தில் நுவா (The City of Nüwa)என்ற நகரத்தை நிர்மானிக்கத் தொடங்குவார்கள். 2100-களின் தொடக்கத்தில் அந்த நகரக் கட்டுமான வேலைகளை முடித்து, 250,000 மக்களை செவ்வாய் கிரகத்தில் குடியேற்றுவார்கள்.

அபிபூவின் திட்டப்படி பார்த்தால், அடுத்த 100 ஆண்டுகளில் மக்கள் செவ்வாய் கிரகத்தில் வாழ்வார்கள். அந்தத் திட்டம் சாத்தியமானால், இன்றிலிருந்து சரியாக 100 ஆண்டுகள் கழித்து, 2122-வது புத்தாண்டு செவ்வாய் கிரகத்திலும் கொண்டாடப்படும்.

அது சாத்தியப்படுமா என்பதை அடுத்த நூறு ஆண்டுகளில் மனித இனம் காணப்போகும் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் மட்டுமே கூறமுடியும்.

மனித சமூகத்தின் வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு மிக முதன்மையான பங்கு உண்டு. மக்களுடைய, இந்தப் பூமியினுடைய சமூகவியல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், அறிவியலைப் பயன்படுத்தும் மனித சமூகத்தின் எதிர்வினை அமையவேண்டும்.

கடந்த நூறு ஆண்டுகளில் அத்தகைய எதிர்வினைகளோடு செயல்பட்ட அறிவியலாளர்களின் வெற்றி, தோல்விகளே இன்றைய சமூகத்தைக் கட்டமைத்துள்ளது. அதுவே எதிர்காலத்திலும் நிகழும். அறிவியலைப் பொருத்தவரை நியூட்டனின் மூன்றாம் விதி தான்.

எந்தவொரு செயலுக்கும் அதற்கேற்ற எதிர்வினை உண்டு. அந்த செயலும் அதற்கான எதிர்வினையும் எப்படிப்பட்டது, என்பதைப் பொருத்தே மனித சமூகத்தின் எதிர்கால வளர்ச்சியும் அமையும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »