Press "Enter" to skip to content

கொரோனா தொற்றின் நான்காவது அலையை கடந்துவிட்டதாக தென் ஆப்ரிக்கா அறிவிப்பு

பட மூலாதாரம், Getty Images

தென் ஆப்ரிக்காவில் கொரோனா தொற்றின் நான்காவது அலையை கடந்துவிட்டதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே அங்கு இரவு நேரத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் விலக்கப்பட்டுள்ளன.

தென் ஆப்ரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் ஒமிக்ரான் திரிபு கண்டறியப்பட்டது. இது அதிகவேகமாக பரவினாலும், முந்தைய அலைகளை காட்டிலும் தற்போது குறைவான நபர்களே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் ஒமிக்ரான் தொற்றால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை சிறியளவு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதன்முதலாக தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த திரிபு தற்போது உலகம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது.

டெல்டா மற்றும் ஒமிக்ரான் திரிபுகள் சேர்ந்து கொரோனா தொற்றின் பேரலையை உருவாக்கிக் கொண்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் தென் ஆப்ரிக்காவை பொறுத்தவரை சில கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து கூட்டப்பட்ட சிறப்பு அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘ஏறக்குறைய அனைத்து மாகாணங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது,’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி வரை அங்கு தொற்று எண்ணிக்கை 89 ஆயிரத்து 781ஆக இருந்தது. இதுவே அதற்கு முந்தைய வாரம் தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 753 ஆக இருந்தது.

இந்த அறிக்கையில் இரவு நேரத்தில் கடைபிடிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், AFP

அதேபோன்று இரவு 11 மணிவரைதான் மதுபானங்கள் விற்கப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 2020 மார்ச் மாதம் கொரோனா தொற்று அங்கு பேரழிவை ஏற்படுத்தி கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்ட பிறகு இரவு நேரங்களில் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

தற்போது அங்கு ஒமிக்ரான் பாதிப்பு இருந்தாலும், வழக்கமான உடல்நல பரிசோதனைகளுக்கு மக்களை அனுமதிக்கும் திறனில் மருத்துவமனைகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் அங்கு தொடர்ந்து தடுப்பு மருந்து குறித்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் அரசால் அறிவிறுத்தப்பட்டுள்ள சுகாதார கட்டுப்பாடுகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

முகக் கவசம் அணிவது போன்ற விதிகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

உள் அரங்கில் அதிகப்படியாக 1000 பேருக்கு மேல் கூட்டம் சேரக்கூடாது. திறந்தவெளி அரங்குகளில் 2000 பேர் வரை கூடலாம். அல்லது 50 சதவீத அளவில் இருக்கைகளை நிரப்பலாம். சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

தற்போது நிலைமையை தேசிய கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கண்காணிப்பு கவுன்சில் கண்காணித்து வருவதாகவும், தேவைப்பட்டால் விதிமுறைகள் மாற்றப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் இதுவரை 3.5 மில்லியன் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 90 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »