Press "Enter" to skip to content

33 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட மகன்: தாயுடன் இணைத்து வைத்த வரைபடம்

பட மூலாதாரம், BEIJING NEWS / WEIBO

33 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட சீன நபர் ஒருவர் தாம் குழந்தை பருவத்தில் வளர்ந்த கிராமத்தின் படத்தை, நினைவுகூர்ந்து வரைந்த பின்னர், தன்னை பெற்ற தாயுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

லி ஜிங்வேய்க்கு நான்கு வயதாக இருந்தபோது, அவரது வீட்டிலிருந்து கடத்தி செல்லப்பட்டு, குழந்தை கடத்தல் கும்பல் ஒன்றுக்கு விற்கப்பட்டார்.

அவர் டிசம்பர் 24ஆம் தேதியன்று, அவர் கையால் வரையப்பட்ட ஒரு வரைபடத்தை , ‘டெளயின்’ (டிக்டாக்கின் சீன பெயர்) என்ற காணொளி பகிர்வு செயலியில் பகிர்ந்துள்ளார்.  இது ஒரு சிறிய கிராமத்துடன் பொருந்தி போவதை காவல்துறை கண்டறிந்துள்ளனர். மேலும், அவர்கள் அங்கு  தனது மகன் தொலைத்த பெண் ஒருவர் இருப்பதையும் கண்டறிந்தனர்.

டி.என்.ஏ பரிசோதனைக்குப் பிறகு, அவர்கள் சனிக்கிழமையன்று யுனான் மாகாணத்தில் மீண்டும் ஒன்று சேர்ந்தனர்.

மூன்று தசாப்தங்களுக்கு பிறகு, இருவரும் முதல்முறையாக சந்திப்பதை காணொளி பதிவு காட்டியது.  அதில், லி ஜிங்வேய் தனது தாய் அணிந்திருந்த கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) முகமூடியை கவனமாக அகற்றி, அவரது முகத்தை பார்த்தார். அதன் பின்,கண்ணீருடன் உடைந்து அவரை அணைத்துக்கொண்டார்.

“முப்பத்து மூன்று வருட காத்திருப்பு, எண்ணற்ற இரவுகள் ஏங்கிய ஏக்கம், இறுதியாக நினைவுக்கூர்ந்து வரையப்பட்ட வரைபடம்.  இந்த வரைபடம் வெளியிடப்பட்ட 13 நாட்களுக்குப் பிறகு, நடக்கும் சரியான தருணம்”, என்று லி தனது டெளயின் கணக்கில் இந்த சந்திப்புக்கு முன்னதாக குறித்து எழுதியுள்ளார்.

“எனது குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி,” என அவர் தெரிவித்துள்ளார்.

லி கடந்த 1989ஆம் ஆண்டு யுன்னான் மாகாணத்தின் தென்மேற்கு நகரமான ஜாடோங் அருகே கடத்தப்பட்டார்.  பின்னர், அங்கிருந்து 1,800 கி.மீ தொலைவில் உள்ள ஒரு குடும்பத்திற்கு விற்கப்பட்டார்.

Li Jingwei drew a map of his childhood village from memory and shared it online

பட மூலாதாரம், JIMU NEWS / WEIBO

இப்போது தெற்கு சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் வசிக்கும் அவர், அவரது வளர்ப்பு பெற்றோரிடம் கேட்டதிலோ, அவரது தோற்றம் குறித்து டிஎன்ஏ தரவுகளை ஆராய்ந்ததிலோ எந்த வெற்றியும் அடையவில்லை. எனவே அவர் இணையத்தை நாடினார்.

“நான் எனது வீட்டை கண்டுபிடிக்கும் ஒரு குழந்தை. 1989ஆம் ஆண்டில், எனக்கு நான்கு வயதாக இருந்தபோது, ஒரு பக்கத்து வீட்டுக்காரர் என்னை ஹெனானுக்கு அழைத்துச் சென்றார்,” என்று அவர்  ஒரு காணொளியில் கூறியுள்ளார்.  இது ஆயிரக் கணக்கான முறை பகிரப்பட்டது.

“இது நான் நினைவுகூர்ந்து வரைந்த எனது வீட்டு இருக்கும் பகுதியின் வரைபடம்”, என்று கூறினார். அவர் கிராமத்தின் தோராயமான வரைபடத்தை கையில் பிடித்திருந்தார். அதில் பள்ளி என்று அவர் நம்பிய கட்டடம், மூங்கில் காடு மற்றும் ஒரு சிறிய குளம் போன்றவை இருந்தன. 

ஆண் குழந்தை இருப்பதை முக்கியமாக கருதும் சமூகமான சீனாவில் குழந்தை கடத்தல்கள் வழக்கமான ஒன்று.  

பல குழந்தைகள் இளம் வயதிலேயே கடத்தப்பட்டு வேறு குடும்பங்களுக்கு விற்கப்படுகின்றனர். சீனாவில் ஒவ்வோர் ஆண்டும் 20,000 குழந்தைகள் கடத்தப்படுவதாக, 2015ஆம் ஆண்டில் கணக்கிடப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டில், நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு, இளைஞர்கள் தங்களை பெற்ற பெற்றோருடன் மீண்டும் இணைந்ததற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »