Press "Enter" to skip to content

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பல இடங்களின் பெயர்களை சீனா ஏன் மாற்றுகிறது?

பட மூலாதாரம், Getty Images

இந்திய மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 15 இடங்களின் பெயர்களை சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம்  வியாழக்கிழமையன்று  (டிசம்பர் 30) மாற்றியுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தை ‘தெற்கு திபெத்’ என்று கருதும் சீனா, இப்போது இந்த பெயர்களை தனது அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும், வரைபடங்களிலும்  பயன்படுத்துகிறது.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ‘பெயர் மாற்றுவது’ கள நிலவரத்தின் உண்மைகளை மாற்றாது என்றும், ‘அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும்; எப்போதும் அப்படியே இருக்கும்’ எனவும் இந்தியா கூறியுள்ளது.

சீனா தனது புதிய ‘நில எல்லைச் சட்டத்தின்’ கீழ் இந்தப் பெயர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த புதிய சட்டம்  2022ம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.  

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் செயல்படும் முக்கிய ஆங்கில பத்திரிகையான குளோபல் டைம்ஸ், இது தொடர்பான  செய்தியை வெளியிட்டது.

அதன்படி, ‘ஜங்னானின் (அருணாச்சலப் பிரதேசத்துக்கு சீனா அளித்த பெயர்)  15 இடங்களின் பெயர்களை சீன, திபெத்திய மற்றும் ரோமானிய மொழிகளில்  வெளியிட்டுள்ளதாக சீனாவின் குடியியல் விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது’ என்று அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் நோக்கம் என்ன?

 இது தொடர்பாக, இந்தியாவின் வெளியுறுவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வியாழக்கிழமையன்று பேசுகையில், “நாங்கள்  அதைப் பார்த்தோம்.  இது முதல் முறையாக நடப்பது அல்ல; சீனா அருணாச்சலப் பிரதேசத்தின் பெயரை  மாற்ற முயற்சி செய்து கொண்டு இருக்கிறது. சீனா கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமும் இப்படி செய்தது”, என்று தெரிவித்துள்ளார்.

Arunachal Pradesh

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2017 ஆம் ஆண்டு, முதல் முறையாக, அருணாச்சல பிரதேசத்தின் ஆறு ‘அதிகாரப்பூர்வ’ பெயர்களை சீன நிர்வாகம் வெளியிட்டது.  அப்போது, சீனாவின் இந்த நடவடிக்கை தலாய் லாமா அந்நாட்டுக்கு வருகை தருவதை எதிர்க்கும் விதமாகப் பார்க்கப்பட்டது.  

இருப்பினும்,  இந்த புதிய பட்டியல்  முந்தைய பட்டியலை விட நீளமானது.  இது எட்டு நகரங்கள், நான்கு மலைகள், இரண்டு ஆறுகள் மற்றும் ஒரு மலைப்பாதை உட்பட 15 இடங்களின் பெயர்களை உள்ளடக்கியது. இதில் மேற்கில் தவாங் முதல் கிழக்கில் அஞ்சோ வரை அருணாச்சல பிரதேசத்தின் 11 மாவட்டங்களைக் கொண்டுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தின் 90 ஆயிரம் சதுர கிலோமீட்டர்கள் தங்களுக்குச் சொந்தமானது என சீனா உரிமை கோருகிறது.

இந்தப் பெயர்கள் வெளியான பிறகு, இந்த இடங்கள் அனைத்து அதிகாரப்பூர்வ சீன வரைபடங்களிலும் அதே பெயரில் காணப்படுகின்றன. இது ஒரு குறியீட்டு நிலைப்பாடுதான் இதனால்  உண்மை நிலப்பரப்பில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், இது பிராந்திய பிரச்னையில், சீனாவின் ஒரு புதிய அணுகுமுறையைக் குறிக்கிறது.

இது தொடர்பாக, சீன சமூக அறிவியல் அகாடமியின் எல்லை விவகாரங்கள் குறித்த சீன நிபுணர் சாங் யாங்பாங் செய்தி ஊடகங்களிடம் கூறுகையில், “தேசிய இறையாண்மையைப் பாதுகாக்க நாடு இந்த முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. இது பிராந்தியங்களில் பதட்டமான சூழல் நிலவும் வேளையில்,  தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டத்திட்டங்களை மேம்படுத்துவதற்கு அவசியமானது. இந்தியாவுடனான  மோதல் உள்ளிட்ட  எல்லை தொடர்பான விஷயங்களுக்கும் இது முக்கியமானது.”, என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரங்களிலிருந்து, இந்திய நிலப்பரப்பில் தனது உரிமை கோரலை அடிக்கோடிட்டுக் காட்டவே சீனா மீண்டும் இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. அருணாச்சலப் பிரதேசத்திற்கு சீனா பெயரிட்டதும் அத்தகைய முயற்சியில் ஒரு பகுதியே.  

Modi and Xi

பட மூலாதாரம், Getty Images

என்ன சொல்கிறது புதிய சட்டம்?

இந்தியாவுடனான எல்லை  கட்டுப்பாட்டுக் கோடு தொடர்பாக நிலவும் மோதலுக்கு மத்தியில், சீனா 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு புதிய எல்லைச் சட்டத்தை இயற்றியது. இது ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு  வந்துள்ளது.

இந்தச் சட்டத்தில், குடிமக்களுக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் ‘தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக’ பல பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த சட்டத்தில்,  ஏழு அத்தியாயங்களில் 62 பிரிவுகள் உள்ளன.  இதில், எல்லை வரையறுத்தல், குடியேற்றம், எல்லைப் பாதுகாப்பு, எல்லை மேலாண்மை  வர்த்தகம் ஆகியவை உள்ளன.  அதில் ஏழாவது அத்தியாயத்தில், இந்த புதிய பெயரின் வெளியீடு சேர்க்கப்பட்டுள்ளது.  அதில், அரசின் அனைத்து மட்டத்திலும் எல்லை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்த ஓர் “ஆக்கிரமிப்பு, அத்துமீறல் மற்றும் தூண்டுதல்” ஆகியவற்றை “வலுவாகத் தடுக்கவும் எதிர்க்கவும்”  ராணுவப் பயிற்சிகளை சீன ராணுவம் மேற்கொள்ளுமாறு 22ஆம் பிரிவில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

இந்தியா- சீனா எல்லை பிரச்னையின் தாக்கம் என்ன?

Arunachal Pradesh 2

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் பார்வையில், 2020 ஆம் ஆண்டில் சீன ராணுவம், மெய்யான கட்டுப்பாடு கோட்டின் (எல்.ஏ.சி) வழியாக அத்துமீறுயதை சட்டப்பூர்வமாக்குவதே சீனாவின் இந்த புதிய எல்லைச் சட்டத்தின் நோக்கம் என்று ஆங்கில பத்திரிகையான ‘தி இந்து’வில் செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு, எல்லையில் கிராமங்களை அமைக்க சீனா திட்டம் வகுத்தது.  அதன் கீழ் இந்தியா, பூடான், நேபாளம் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதிகளில் ‘முதல் வரிசை –  இரண்டாவது வரிசை’ என 628 கிராமங்களை சீனா அமைத்தது. அங்கு வசிக்க, சீனா ஆடு மேய்ப்பவர்களையும் அனுப்புவது  உண்டு.  

2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், சீனா 60 புதிய கட்டடங்களை கட்டியிருப்பதாக செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. இது அருணாச்சல பிரதேசத்தின் ஒரு பகுதி என இந்தியா கூறுகிறது.  இந்த கட்டடங்கள் 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் குடியேறிய கிராமத்தின் கிழக்கே 100 கி மீ தொலைவில் உள்ளன.

இந்த பகுதி 1959 ஆம் ஆண்டு முதல் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. முன்பே, சீன ராணுவம் இங்கு தனது கட்டடங்களை கட்டி வருகிறது. ஆனால், சீனா தனது உரிமையை இன்னும் வலுவாக முன்வைக்கும் வகையில் பொதுமக்கள் வசிக்கக்கூடிய  கட்டடங்களையும்  எழுப்பி வருகிறது.  இந்நிலையில், இந்த பகுதி குறித்து சர்ச்சை ஏற்பட்டு, இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்,  இந்தியா சீனாவின் புதிய சட்டம் குறித்து கவலை தெரிவித்தது.  ‘சீனாவின் ஒருதலைப்பட்சமான சட்டத்தை அறிமுகப்படுத்துவது எல்லை மேலாண்மையில் எங்களின் தற்போதைய இருதரப்பு ஏற்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இது எங்களுக்கு கவலையளிக்கும் விஷயம்”,  என்று கூறியுள்ளது.

அருணாச்சலப் பிரதேசம் குறித்து சீனாவின் நிலைப்பாடு

அருணாச்சலப் பிரதேசம் குறித்து சீனா முந்தைய காலங்களில் தொடர்ச்சியாக உரிமை கோருவதும்,  ஒவ்வொரு முறையும் இந்தியா அதனை கடுமையாக மறுத்தும் வருகிறது.

அருணாச்சலப் பிரதேசத்தை சீனா தனது பகுதி என்று கூறி அதை ‘தெற்கு திபெத்’ என்று அழைக்கிறது.

தனது நிலைப்பாட்டிற்கு  வலு சேர்க்கும் வகையில், அருணாச்சலப் பிரதேசத்திற்கு இந்தியாவின் மூத்த தலைவர்களும், அதிகாரிகளும் வருகை தரும் போது, சீனா தனது எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், துணை குடியரசுத்  தலைவர் வெங்கையா நாயுடுவின் வருகைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. மேலும்,  எல்லைப் பிரச்னையை அதிகரிக்கும் எந்த ஒரு செயலையும் இந்தியா செய்யக் கூடாது என்று தெரிவித்தது.

சீனாவின் இந்த எதிர்ப்புக்கு, இந்தியத் தலைவர்கள் அருணாச்சலப் பிரதேசத்துக்கு வருகை தந்ததற்கு ஆட்சேபனை தெரிவிக்க எந்த அடிப்படையும் இல்லை என்று இந்தியா பதிலடியளித்தது.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோதியும்,  பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அருணாச்சலப் பிரதேசத்திற்கு 2019 ஆம் ஆண்டு வருகை தந்ததற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்திருந்தது.  2020ஆம் ஆண்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா அருணாச்சலப் பிரதேசத்துக்குச் செல்வதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »